பெண்ணின் பாதுகாப்பு அவளின் நம்பிக்கையில் உள்ளது!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 7 Second

“என்னை தெரிந்தவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். தெரிந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தெரியாதவர்கள் என்ன பேசினாலும் அது அர்த்தமற்றது” என்று பளிச்சென்று கூறும் பவித்ராவிற்கு அறிமுகம் தேவையில்லை. சன் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான ‘சன் சிங்கரின்’ தொகுப்பாளினியாகவும், ‘நிலா’ தொடரின் நாயகியாகவும் உலா வரும் இந்த நிலா, ஊடகத் துறைக்கு வந்த கதையை பகிர்கிறார்.

“மீடியாக்குள் வர வேண்டுமென்பது சிறு வயதிலிருந்தே ஆசை. அதை எப்படி அணுகுவது என்பதற்கான அடித்தளம் அமையவில்லை. எம்.பி.ஏ படித்து முடித்த பின் மூன்று ஆண்டு காலம் வேலை பார்த்து வந்தேன். அந்த நேரத்தில் பகுதி நேரமாக எம்.சி-யும் செய்திட்டு இருந்தேன். ஒரு மாடலிங் நிகழ்ச்சியில் மாடல் ஒருவர் வரவில்லை. அவரின் இடத்தில் அவருக்கு பதிலாக நான் மாடலானேன். இதைத் தொடர்ந்து பல மாடலிங் ஷோக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இதில் என்னைப் பார்த்த ஊடக நண்பர் ஒருவர் சுட்டி டி.வி யில் வேலை இருப்பதாகக் கூறினார்.

நாம் எதை நினைக்கிறோமோ அதுதான் நிகழும் என்ற விஷயத்தை அப்போது நம்பினேன். சிறு வயது கனவான ஊடக வேலையும் கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக என்ைன மெருகேற்றிக் கொண்டேன். அதன் காரணமாக சன் டிவி யில் ‘சூரிய வணக்கம்’ தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று கூறும் பவித்ரா, 2017ம் ஆண்டின் சைமா விருது விழாவின் ரெட் கார்ப்பரேட் ஹோஸ்ட் பண்ணியதோடு, பல வெளிநாட்டு நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்வுகளின் தொகுப்பாளராகத் தன்னை பிசியாக வைத்துள்ளார்.

“விரல்விட்டு எண்ணக் கூடிய நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு சிலருக்குத்தான் தமிழை ஆங்கில கலப்பில்லாமலும், சரளமாகவும் பேச வரும்” என்று கூறும் பவித்ரா, “அந்த இரண்டு மூன்று பேரில் தமிழ் பொண்ணாக நானும் இருக்கிறேன் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன்” என்கிறார்.நட்சத்திர கபடி, சொப்பன சுந்தரி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கும் பவித்ரா, ‘வணக்கம் தமிழா’, ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் அனுபவங்களை பகிர்ந்தார். ‘‘எனக்குத் தெரிந்து எந்த ஒரு கமர்ஷியல் தமிழ் சேனலிலும் லைவ் பிரேக் ஃபர்ஸ்ட் ஷோ போனது கிடையாது. வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மெயின் ஆங்கராக இருக்கிறேன்.

முக்கியமான கன்டென்ட் இருந்தால் என்னைப் பேச சொல்வாங்க. அந்த அளவு தயாரிப்பாளரும், இயக்குநரும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது அவ்வளவு சாதாரணம் கிடையாது. அதற்கான உழைப்பு அதிகம். மற்றவர் பேசும் போது அதை உள் வாங்கினாலே அதன் ஆழம் புரியும். புரிந்ததை எந்த அளவு மற்றவர்களிடம் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இதற்கு மொழியைக் கையாள்வது அவசியம். அது எனக்கு இயல்பிலேயே வருவதால், சன் சிங்கருக்கு தொகுப்பாளினியாக இன்று உயர்ந்திருக்கிறேன்” என்று கூறும் பவித்ரா நிலா தொடரில் இணைந்ததை பற்றிக் கூறினார்.

“எனக்கு மற்ற சேனலில் டி.வி சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. இது குறித்து சொன்ன போது, உங்களை விட முடியாது அதனால், நாங்களே ஒரு சீரியல் தர்றோம் என்று நிலா சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க. அந்த சீரியல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. சிட்டியில் நம்மை அடையாளம் கண்டு கொண்டாலும் யாரும் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாங்க. ஆனால் கிராமப்புற பக்கம் சென்றால், ‘நீங்க சன் டி.வி ஆங்கர்தானே, இப்போ நிலா சீரியல் நடிக்கிறீங்க. சீக்கிரம் உங்க அப்பாவைத் தேடி கண்டுபிடிங்க’ என்று ரொம்ப வெள்ளந்தியா, ஈகோ இல்லாமல் சொல்றாங்க” என்றார்.

ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளுக்குப் போட்டி மனப்பான்மை உருவாக்குகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் பவித்ரா, ‘‘இந்த மாதிரி விமர்சனம் வைப்பதே தவறு. போட்டி மனப்பான்மை தேவையான ஒன்று. ஆனால், அதே அளவு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். ஒரு குழந்தை ஒரு துறையில் சிறப்பாக இருக்கிறது என்றால், அந்த குழந்தையோடு தன் குழந்தையை ஒப்பிடாமல் தன் குழந்தைக்கு என்ன வரும் என்பதை கண்டுபிடித்து அதில் சிறந்தவராக உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

இந்த மாதிரியான போட்டிகளைத்தான் ஊக்குவிக்க வேண்டுமே தவிர ஒப்பிட்டு அதையே செய்யச் சொல்வது அந்த குழந்தை மீது நிகழ்த்தப்படும் வன்முறை. மொத்தத்தில் குழந்தையைக் குழந்தையாக இருக்க விட்டாலே போதும் என்று நினைக்கிறேன்” என்றார். ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் மீதிருக்கும் பார்வை தற்போது மாறியுள்ளது என்கிறார் பவித்ரா. ‘‘பிடித்த துறையான மீடியாக்குள் நுழையும் போது உணர்ச்சிவசப்பட்டவளாக இருந்தேன். இரண்டு மூன்றாண்டுகள் கடந்த பின் ஒரு பயம் வந்தது.

மீடியாவிலிருக்கும் பெண்கள் மீதான தேவையில்லாத வார்த்தைகள் வரும் போது, நம்மை பற்றியும் இப்படித்தான் பேசுவாங்களோ என்று ஓவரா யோசிச்சு மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கேன். பிறகு இதை பற்றி யோசித்து பார்க்கும் போது நூறு சதவீதம் நாம உண்மையாக இருந்தாலும், எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது என்று புரிந்து ெகாண்டேன். கெட்டது பேசுபவர்கள் மத்தியில்தான் நல்லது பேசுபவர்களும் இருக்கிறார்கள். நமக்கான நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நம் பாதையை நோக்கி செல்ல வேண்டும்.

முன்பைவிட தற்போது மீடியாவில் உள்ள பெண்கள் மீது இருந்த தப்பான பார்வை மாறியுள்ளது. மக்களுக்கும் விழிப்புணர்வு வந்துள்ளது. தெரியாத துறைக்கு போறாளே என்று ஆரம்பத்தில் அம்மா, அப்பா கூட பயந்தாங்க. இப்போது அவ அவளை பார்த்துக்குவா என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது. ஒரு பெண்ணின் பாதுகாப்பு அந்த பெண்ணின் நம்பிக்கையில்தான் இருக்கிறது. நேர்மையா, வெளிப்படையா, தைரியமா இருக்கும் போது அதுவே நமக்கான பாதுகாப்பாக மாறுகிறது. இதை மற்றவர்களிடத்திலும் கற்றுக் கொடுத்து நாமும் பின்பற்றும் போது எதற்கும் கவலை இல்லை” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெடித்துச் சிதறிய BIO- BUBBLE !! (கட்டுரை)
Next post வாழ்வென்பது பெருங்கனவு! கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்…!! (மகளிர் பக்கம்)