வாழ்வென்பது பெருங்கனவு! கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்…!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 32 Second

வெளிநாட்டு வாழ்க்கை என்பதே சிலருக்கு பெருங்கனவாய் இருக்கும். ஆனால் கிடைத்த அமெரிக்க வாழ்க்கையை புறந்தள்ளி, “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, ஒருங்கிணைந்த விவசாயம் ஒரு புறம், நகர்ப்புற குறுங்காடுகள் மறுபுறம் என்று கும்பகோணத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஆனந்தியின் கனவுகள் இதோ… ‘‘ஒரு ஆசிரியக் குடும்பத்தின் மகள் நான். என் பிள்ளைப் பருவத்தை எண்ணிப் பார்க்கையில் கண்முன் நிற்பது, என்னை ஒரு பெண் பிள்ளை என்று எள்ளளவும் பிரித்துப் பார்க்காமல், என் இரு அண்ணன்களுக்கு இணையாக, தைரியம் கொடுத்து வளர்த்த என் தந்தைதான்.

தருமபுரி ஔவையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற எனக்கு, முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற அழுத்தம் ஒரு போதும் இல்லையென்றாலும், நல்ல தோழிகளின் பழக்கத்தில், தேர்வுகளில் எப்படியாவது முதல் மூன்று இடங்களில் போட்டி போட்டு வந்துவிடுவேன். பல் மருத்துவப் படிப்பிற்கு போதுமான மதிப்பெண்கள் இருந்தும், என் தந்தையின் சம்மதத்துடன், நான் கால்நடை மருத்துவத்தை தேர்வு செய்து, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். பள்ளிப்பருவம் முதலே தடகள போட்டிகளில் பரிசுகளை வென்ற நான், கல்லூரியிலும் தொடர்ந்து கலந்து கொண்டு கல்லூரி சாம்பியன் பட்டத்தையும் பெற்றேன். ஐந்து வருட பட்டப் படிப்பில் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நானும் என் சக மாணவன், நண்பன், ஆனந்தும் வாழ்க்கை முழுதும் இணைந்திருக்க முடிவு செய்தோம். இரு வீட்டாரும் எங்களின் அன்பை ஏற்றுக் கொண்டனர்.

அதே நேரத்தில், அரசு கால்நடை மருத்துவராகிவிடலாம் என்ற கனவுடன் பயின்று வந்த எங்களுக்கு, அரசின் விதிமுறைகள் மாற்றத்தால், அந்த கனவு பகல் கனவாகியது. பணியிடங்கள் காலியாக இருந்தபோதும் நான்கைந்து ஆண்டுகளாக அவை நிரப்பப்படாமல், மருத்துவர்கள் சொற்ப சம்பளத்திற்கு தனியார் கோழிப் பண்ணைகளிலும், மருந்துக் கம்பெனிகளிலும் தஞ்சம் புகத் தொடங்கியிருந்தனர். மேற்படிப்பா, இந்திய ஆளுமைப் பணிக்கான தயாரிப்பா, இல்லை தனியார் வேலையா என்று ஆலோசித்துக் கொண்டிருந்த போது, ஆனந்துக்கு அயல் நாட்டில் மேல் படிப்பிற்கான வாய்ப்பு கிட்டியது. பயணம் மேற்கொள்வதற்கு இருந்த கொஞ்ச நாட்களில், எங்கள் திருமணம் முடிந்து அமெரிக்காவில், சிக்காகோ அருகில் உள்ள இலினாய்
பல்கலைக்கழகத்திற்கு நாங்கள் தம்பதிகளாகவே சென்றோம்.

புதிய நண்பர்களுடன் அமெரிக்கப் பார்வையில் மீண்டும் கல்லூரி நாட்களை சில ஆண்டுகள் கழித்தோம். எங்கள் முதல் பிள்ளை, பொன்னி, பிறந்த சில மாதங்களில், இந்தியா திரும்பும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் ஓராண்டுக்குள் மறுபடியும் அமெரிக்கா திரும்பினோம். அந்த சூழ்நிலையில்தான், “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என்பது போல, நம் தமிழ்ச் சமுதாயத்தில் இருந்து விலகி இருப்பதன் தாக்கத்தை உணர்ந்தோம். ஒரு தலைமுறை விட்டுப் போன விவசாயமும், நமது கிராமங்களும் எங்கள் கனவுகளையும், நினைவுகளையும் நிறைத்தன. அது மட்டுமன்றி, தமிழ் நாட்டில், தாத்தா, பாட்டிகளுடனே எங்கள் குழந்தைகள் வளரவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

இந்தக் குறிக்கோளுடன், விவசாய நிலம் வாங்க திட்டமிட்டோம். அந்த காலகட்டத்தில், பலரும் “விவசாய நிலம் வாங்குவது முட்டாள்தனம், பேசாமல் கட்டட நிலம் (பிளாட்) அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்குங்கள்” என்று அறிவுரை கூறினர். ஆனால், எங்கள் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு ஆனந்தின் பெற்றோர் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்து சரியான நிலத்தை கண்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையில், நான் எங்கள் இரண்டாவது பெண், நிலாவை பெற்றெடுத்தேன். அங்குள்ள பிள்ளைகளை கவனிக்கையில், பள்ளி சென்றதும் பிள்ளைகள் அந்தக் கலாச்சாரத்தோடு மிகவும் ஒன்றிப் போய்விடுகிறார்கள். அதன் பின் அவர்களை பிரிப்பது மிகவும் கடினமாகி விடுகிறது. எனவே, நான் மட்டும் பிள்ளைகளுடன் தாயகம் திரும்பினேன்.

வசதிகள் மிக்க, இலகுவான அமெரிக்க வாழ்க்கை முறையில் இருந்து பழகிப் போனதால், எனக்கு முதலில் சில தடங்கல்கள், சிக்கல்கள் இருந்தன. இருப்பினும், என் மாமனாரோடு இணைந்து தேடி, கும்பகோணத்தை அடுத்த தில்லையம்பூர் கிராமத்தில், பண்ணை நிலம் ஒன்றை வாங்கினேன். விவசாயம் என்பது கனவே தவிர, எனக்கு முற்றிலும் பழக்கமில்லாத ஒன்று. முதல் இரண்டு ஆண்டுகள், எனது மாமனார் வழிநடத்த, பண்ணையத்தின் கோட்பாடுகளை கற்றுக் கொண்டேன். பின், உடல்நலக் குறைவால், மாமனார் தன் பணிகளை குறைத்துக் கொள்ள, முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொண்டேன்.

‘ஆனந்தம் பண்ணை’ என்ற பெயரில் தொடங்கிய எங்கள் அங்ககப் பண்ணை முறையை, ஊரில் ஏற்கனவே ஏளனமாகப் பேசி வந்தார்கள். “விவரம் தெரியாத ஆட்கள்” “பணம் வச்சிருக்கதால, தலைக்கால் புரியாம ஆடறாங்க, டவுன்காரங்களுக்கு விவசாயம் பத்தி என்ன தெரியும்…” என்றெல்லாம் திசைக்கு திசை வர்ணனைகள். அதிலும் ஒரு பெண் முன்னெடுத்து செய்வது என்றால், சொல்லவே வேண்டாம். முதுகுக்குப் பின் பேசியவர்கள் பலர் என்றால், சிலர் நேரடியாகவே, “உனக்கு ஏம்மா இந்த பொழப்பு? பேசாம நிலத்தை குடுத்துட்டு, வெளிநாட்டுல போய் நிம்மதியா இரு” என்று அறிவுரைத்தனர்.

சிறு வயது முதலே என் தந்தை சொல்லி வளர்த்தது, “நீ மனசு வச்சா, முடியாதது ஒன்னுமே இல்ல” என்பதுதான். அதற்கிணங்க, “முடியாது முடியாது” என்று பிறர் சொல்ல சொல்ல, எனக்கு இதில் வென்று காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் கூடியது. இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை நம்மாழ்வாரின் பேச்சுகளில் இருந்தும், இணையத்திலும், பத்திரிகைகளிலும் தேடியும் தெரிந்து கொண்டேன். எதிர்ப்புகளை மீறி அவற்றை செயல்படுத்தினேன். பஞ்சகவ்யம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம் என உரங்களையும், அக்னி அஸ்திரம், 3G கரைசல் என பூச்சி விரட்டிகளையும் நானே தயார் செய்தேன். களைக் கட்டுப்பாட்டு உத்திகளை பயன்படுத்தினேன்.

சில ஆண்டுகளில், எங்கள் பண்ணையில் நான் நினைத்த மாற்றங்கள் நிகழ்ந்து, விவசாயம் லாபகரமாக மாறியது, ஊருக்குள் ஒரு அங்கீகாரமும் கிடைத்தது. அத்தோடு நிற்காமல், வெறும் நெல் வயலாக இருந்த நிலத்தில், குழாய் வழி நீர், வேலிப் பாதுகாப்பு, உயிர் வேலி அமைத்தல், வரப்புகளை அகலப்படுத்துதல், வரப்புகளில் பனை விதைத்தல், கீரை, காய்கறி வளர்த்தல், பண்ணை குட்டை வெட்டுதல், மீன் வளர்த்தல் என ஆண்டுதோறும் பண்ணையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறேன். இந்த வருடம், பல வகை மரங்களை நட்டதோடு, இரண்டு தாரா வாத்துகளையும்
பண்ணையில் இணைத்துள்ளேன்.

ஆனந்தம் பண்ணை, தற்சார்பு வாழ்க்கை பற்றிய எங்கள் தேடலில் பிறந்தது. ஆனால், நம் தமிழ்ச் சமூகத்திற்கு, எவ்வாறு உதவலாம் என்ற தேடல் முதலிலிருந்தே எனக்கு உண்டு. அதன் ஒரு விடையாக, தஞ்சாவூர் மாவட்டத்திலேயே குறுங்காட்டை “அழியாக் காடுகள்” என்ற பெயரில் சீனிவாசநல்லூர் அருள்மிகு அய்யனார் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சென்ற வருடம் நிறுவினோம்.

7000 சதுர அடியில் நடப்பட்ட, 30க்கும் மேற்பட்ட நம் நாட்டு ரகங்களைச் சேர்ந்த 1000 மரக்கன்றுகள் செழித்து வளர்ந்து வரும் நிலையில், இந்த வருடம் அக்டோபர் மாதம், மேலும் 1400 மரக்கன்றுகளை, சுற்றியுள்ள 10000 சதுர அடியில் நட்டுள்ளோம். இந்த முயற்சியை தொடர்ந்து விரிவுபடுத்தி, நம் தாய் மண்ணை பசுமைப் போர்வையால் மூட வேண்டும் என்பதே என்னுடைய இப்போதைய பெரிய கனவு.

என் கனவுகள் உருவெடுப்பது, என் தனி முயற்சி அல்ல – “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதெற்கு” என்றெண்ணாமல் என்னை படிக்க வைத்த என் பெற்றோர், கல்லூரி படிப்பில் உறுதுணையாக இருந்த அண்ணன்கள், மனைவி என்றான போதும், இன்றுவரை என்னை இணையான நண்பனாகவே பாவித்து ஊக்குவித்து வரும் என் வாழ்க்கை துணை ஆனந்த், என்னை மகளாகவே பார்த்து, எங்கள் பிள்ளைகளை பேணி வளர்த்து, பின்புலமாக நிற்கும் ஆனந்தின் பெற்றோர் என பலரின் கூட்டு வெற்றியே.

கனவு என்பது நிலையானதல்ல. வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்விலும் கனவுகள் உருமாறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு கனவு கைவிட்டுப் போனால் துவண்டு போகத் தேவையில்லை. வாழ்க்கை நமக்களிக்கும் சவால்களை, சந்தர்ப்பங்களாக்கி, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் முழு செய்யுளுக்கிணங்க, சுற்றத்தோடு மகிழ்ந்திருப்பதே பெருங்கனவின் மெய்ப்பாடு’’ என்றார் இயற்கை ஆர்வலர் ஆனந்தி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணின் பாதுகாப்பு அவளின் நம்பிக்கையில் உள்ளது!! (மகளிர் பக்கம்)
Next post அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!! (அவ்வப்போது கிளாமர்)