By 11 September 2021 0 Comments

பாரம்பரியத்தின் அடுக்குகள்!! (மகளிர் பக்கம்)

இப்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தாண்டி எந்த கொண்டாட்டமாக இருந்தாலுமே அதில் கண்டிப்பாக கேக் இருக்கும். குறிப்பாக அனைத்து திருமண நிகழ்ச்சிகளிலும் மணமக்கள் கேக் வெட்டித்தான் தங்கள் புதுமண வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். அந்த கேக்குகளை விதவிதமாக அலங்கரித்து குறைந்த விலையில் தயார் செய்கிறார் பிந்து. ஆனால் அவர் தயாரிக்கும் கேக்குகளை வெட்டி சாப்பிடத்தான் நமக்கு மனசு வரவில்லை. காரணம் ஒவ்வொரு கேக்கையும் அவ்வளவு கலைநயத்துடன் அழகாக வடிவமைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பிந்து ஹெப்சிபா, எம்பிஏ பட்டதாரி. பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தவர். அப்போது அத்துறையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக் காரணமாக அவ்வேலையைவிட்டு சென்னைக்கு திரும்பினார். ‘‘அது ஸ்மார்ட்போன் அறிமுகமாகியிருந்த காலம். ஸ்மார்ட்போன் கையில் கிடைத்ததும், உலகமே அதனுள் அடங்கிவிட்டது. எனக்கு பிடித்த கலைஞர்களின் பேட்டிகளை, எழுத்துக்களை புத்தகக் கடைகளில் பல ஆயிரம் கொடுத்துதான் வாங்கி படிக்க முடியும்.

ஆனால் கூகுளில் அவர்கள் பற்றிய விவரங்களை இலவசமாகவும் உடனுக்குடனும் அறிந்து கொள்ள முடிந்தது. சமூக வலைத்தளத்தில் அவர்களை நேரடியாக பின்தொடரவும் முடிந்தது. அப்போதுதான் ‘ஹோம்பேக்கர்ஸ் கிள்ட்’ எனும் ஃபேஸ்புக் குழுவில் ஒரே க்ளிக்கில் இணைந்தேன். அதில் வீட்டிலிருந்தே விதவிதமான கேக் தயாரிப்பவர்களின் அறிமுகம் கிடைத்தது.

யூடியூப் பார்த்துதான் கேக் செய்ய கற்றுக்கொண்டேன். பொதுவாகவே கேக் குக்கீஸ் போன்ற உணவு வகைகளை மேல்தட்டுப் பெண்கள்தான் சமைக்க முடியும் அல்லது இதை செய்வதற்கு நுணுக்கமான சமையற்கலை தெரிய வேண்டும் என்றெல்லாம் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் கேக் செய்வது மிகவும் எளிதானதுதான். மைதா, முட்டை, சர்க்கரைதான் இதன் அடிப்படை பொருட்கள்.

அதை சரியான அளவில் சரியான முறையில் சமைத்தால் சுவையான கேக் ரெடியாகிவிடும். இதை யார் வேண்டுமானாலும் சுலபமாக செய்யலாம். என் குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நானே கேக் தயாரித்தேன். அதில் கிடைத்த மகிழ்ச்சிதான் என்னைத் தொடர்ந்து இதில் ஈடுபடுத்தியது’’ என்றவர் ‘கேக்கணும்’ எனும் ஆன்லைன் பக்கத்தை சமூக வலைத்தளத்தில் உருவாக்கி அதில் கேக் விற்க ஆரம்பித்துள்ளார்.

‘‘எனக்கு பொதுவாகவே கலையில் ஆர்வம் உண்டு. இதனால் கேக் செய்யும் போதும் அதில் தனித்துவமாக அலங்காரங்கள் செய்யத் தொடங்கினேன். நான் செய்த மெட்ராஸ் தீம் கேக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்போதுதான் கேக் மூலம் மக்களுக்கு அர்த்தமுள்ள செய்திகளை கூறலாம் என்ற எண்ணம் உருவானது. சுமார் மூன்று மாதங்கள் கடுமையான திட்டமிடலும் உழைப்பிற்கும் பின்னர், இருபத்தி ஐந்து நாட்களில் 17 அடுக்கு செந்தமிழ்நாடு கேக்கை உருவாக்கினேன். அது சமூக வலைத்தளத்தில் உடனே வைரலாகி பலரின் பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்த்தது. 17 அடுக்கும் 17 வகையான அலங்காரத்தில், நமது தமிழகத்தின் சிறப்பம்சங்களை கூறும் விதத்தில் அமைந்திருக்கும்.

அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, மெட்ராஸ் உருவாகி 380 ஆவது ஆண்டு கொண்டாட்டத்திற்கு ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்ற தலைப்பில் 9 அடுக்கு கேக்கை உருவாக்கினேன். கீழே இருக்கும் ஒன்பதாவது அடுக்கு சோழ பல்லவ விஜயநகர ஆட்சியில் அப்போதிருந்த நம் சென்னை மாநகரத்தை மையப்படுத்தி வடிவமைத்திருந்தேன். எட்டாம் அடுக்கு சென்னையின் பரிணாம வளர்ச்சியை வரைபடமாக நமக்கு காட்டும். ஏழாம் அடுக்கு நம் மக்களைக் கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் உருவாக்கிய பழைய கட்டிடங்களின் கட்டமைப்புகளை பதிவு செய்துள்ளது.

ஆறாம் அடுக்கு, சென்னையில் வாழ்ந்த மக்களின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளது. ஐந்தாம் அடுக்கு, மதராசப் பட்டினத்தில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களான ஹிக்கின்பாதம்ஸ், மிகப்பழமையான பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட தேவாலயமான செயின்ட் மேரிஸ் சர்ச், உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நிதித்துறை வளாகமான சென்னை உயர்நீதிமன்றம் போன்ற நினைவுச் சின்னங்களை ஏந்தி நிற்கிறது.

நான்காம் அடுக்கு, சுகாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் தலைநகரமாகவும், முன்னணி கார் தயாரிப்புகளுடன் ஆட்டோமொபைல் துறையில் சிறந்து விளங்கி ’ இந்தியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படும் சென்னையை பெருமிதத்துடன் காட்சிப்படுத்துகிறது. மூன்றாம் அடுக்கு சென்னையின் அதிசயங்களான 450 ஆண்டுகள் பழமையான அடையாறு ஆலமரம், ஆமைகள் முட்டையிட்டு செல்லும் ஆலிவ் ரிட்லி கடல், நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் வந்து செல்லும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற சென்னை நகரத்திற்குள் அமைந்திருக்கும் ஆச்சரியமான இயற்கையின் அழகியலை இந்த மூன்றாம் அடுக்கு வெளிப்படுத்துகிறது.

இதன் இரண்டாம் அடுக்கு, சென்னை ஒரு காலத்தில் எப்படி கடலோர மக்கள் வாழும் மீனவர் கிராமமாக இருந்து பல ஆயிரம் குடும்பங்களை காப்பாற்றியது என்பதை குறிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் வாழும் பல ஆயிரம் மீனவ குடும்பங்களின் உண்மையான உழைப்பில் உருவானதுதான் இந்த சென்னை என்றும், இது உண்மையில் அவர்களுடைய நகரம்தான் என்றும் பதிவு செய்ய விரும்பினேன்.

இந்த கேக்கின் முதல் அடுக்கு வந்தாரை வாழவைக்கும் சென்னை, பல ஊர்களிலிருந்து எப்படியாவது பிழைக்க வேண்டும் என வரும் மக்களை கரம் விரித்து அரவணைத்து பாதுகாக்கிறது என்பதை கூறுகிறது. இந்த கேக்கின் கிரீடமாக சென்னையின் தொழிலாளர் சிலையை வைத்து உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த சென்னை சொந்தமானது என்பதை கூறியுள்ளேன்” என்று கூறும் பிந்து சென்னையை பற்றிய தகவல்களை சேகரிக்கும் போது, அதன் வரலாற்றை அறிந்து வியந்துள்ளார்.

மெட்ராஸை தொடர்ந்து ஆடிப் பெருக்கு திருவிழாவை சிறப்பிக்கும் 11 அடுக்கு ஆடி கேக்கையும் பிந்து உருவாக்கியுள்ளார். ‘‘ஆடி பதினெட்டாம் பெருக்கை எந்த வேற்றுமையும் இன்றி தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் இயற்கை திருவிழாவாகத் தான் நான் பார்க்கிறேன். விவசாயிகள் நிலங்களில் விதைகளை விதைத்து நாற்று நடும் மாதமாகும். இந்த திருவிழா, மதங்களைத் தாண்டி இயற்கையையும் இயற்கை வளங்களையும் நாம் பாதுகாத்து போற்ற வேண்டும் என்பதை குறிக்கிறது. தமிழ் இலக்கியத்தில் ஆடி மாதத்தை எப்படி போற்றி உள்ளார்களோ அதன் அடிப்படையிலேயே இந்த கேக்கை நான் உருவாக்கியுள்ளேன். பதினோரு அடுக்கும் ஆடிப்பெருக்கின் போது கடைபிடிக்கப்படும் ஒவ்வொரு பழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் குறிக்கிறது.

தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் அமைந்திருக்கும் தெப்பக்குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விளக்குகளை ஏற்றி அனுப்பும் காட்சி, கிராமங்களின் கடவுளும் ஹீரோவுமான அய்யனாரும் அவரின் குதிரையும், ஆடிப்பெருக்கின் ஆரம்பத்தையும் முடிவையும் குறிக்கும் நாட்காட்டி, எளிமையான ஆரோக்கியமான உணவுகள், ஆடித் திருவிழாவில் முக்கியமான அங்கம் வகிக்கும் வேப்பிலை, ஆடி திருவிழாக்கள், வீட்டையும் அலங்கரிக்கும் விளக்குகள், பூ கோலங்கள், பூசணிப் பூ அலங்காரம், முளைப்பாரி சடங்கு இது போன்ற ஆடிப் பெருக்கை முன்னிட்டு நடைபெறும் அனைத்து விசேஷங்களையும் கேக்கின் ஒவ்வொரு அடுக்கிலும் கொண்டு வந்திருக்கிறேன். கடைசியாக அடுக்குகளின் மேலே கலசம். அதில் தேங்காய்க்கு பதிலாக உலகமும் இலைக்கு பதிலாக மரங்களும் வைத்து சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பதிவு செய்திருக்கேன்’’ என்றவருக்கு தமிழ் மேல் இருக்கும் மரியாதை காரணமாக தமிழ் சார்ந்த கேக்குகளை உருவாக்கி வருகிறாராம்.

‘‘எனக்கு எப்படி தமிழ் பிடிக்குமோ, அதே போல சென்னையும் பிடிக்கும். சென்னையின் சிறப்பே இங்கு வாழும் மக்கள்தான். உழைத்து சம்பாதித்து முன்னேற வேண்டும் என நினைப்பவர்களை சென்னை எப்படியாவது காப்பாற்றிவிடும். சாதி, மத அடையாளங்களை மீறி திறமைகளுக்கும் மனிதத்திற்கும் மதிப்பளிக்கும்’’ என்றவர் திருமண நிகழ்ச்சிகளுக்கும், பிற கொண்டாட்டங்களுக்கும் டிசைனர் கேக்குகளை தயாரித்து, பல மணமக்களின் ஃபேவரைட் பேக்கராக இருக்கிறார். இவருடைய கேக்குகளை, சென்னையைத்தாண்டி தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடக்கும் திருமணத்துக்கும் மக்கள் வாங்கிச் செல்கிறார்கள்.

மணமக்களின் பொம்மையை வைத்து திருமண மண்டபம் போன்ற அமைப்புகளில் பிந்து உருவாக்கும் கேக்குகள்தான் இப்போது திருமணங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. மிக வேகமாக வளர்ந்து வரும் இத்துறையில் சுயமாக சம்பாதிக்க முடியும் எனக் கூறும் பிந்து, ‘‘கேக் செய்வது சுலபம்தான். அதன் அடிப்படை அறிவியலை அறிந்து கொண்டால் மிக எளிமையாக யார் வேண்டுமானாலும் கேக் செய்யலாம். அதனால் இப்போது கேக் தயாரிப்பதற்கான அடிப்படை வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறேன்’’ என்றார்.Post a Comment

Protected by WP Anti Spam