ஆளுமைப் பெண்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 59 Second

பள்ளி பாடங்கள் சொல்லித் தாருங்கள் என்பதை பொழுது போக்குக்கான விஷயமாகவும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமாக கருதாமல் இளைய சமுதாயம் பல தலைமுறைகளுக்கும் கல்வியை சீரிய தொண்டாக கருத வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது தான் கிழக்கு தாம்பரத்தின் சியோன் பள்ளி. கால் நூற்றாண்டை கடந்து வெள்ளி விழா கொண்டாட்டத்தில் இருக்கும் இந்த பள்ளியின் இயக்குநர் ரேச்சல் ஜார்ஜியானாவை சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. கல்வித் தொண்டு என்பது அவரது பரம்பரை பரம்பரையாக தொடருகிறது. கல்வி துறையில் அவர் செய்து வரும் தொண்டுகள் மற்றும் அதன் வளர்ச்சிக் குறித்து பகிர்ந்து கொள்கிறார் ரேச்சல்.

அடிப்படையில் எங்க குடும்பம் ஆசிரியர் குடும்பம்ன்னு சொல்லலாம். அரசு பள்ளி தலைமையாசிரியராக ஓய்வு பெற்றவர் என் தந்தை. அவர் ஆங்கில மொழி பயிற்றுநர் எனும் சிறப்பு அந்தஸ்தை மாநில அளவில் பெற்றவர். அம்மா அதைக் காட்டிலும் ஒரு படி அதிகம் என்று தான் கூற வேண்டும். படித்தால் இங்கு தான் படிக்க வேண்டும் எனும் மாணவிகளின் கனவு சொர்க்கமான சிங்காரச் சென்னையின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியராகவும், பின்னர் குருநானக் கல்லூரியில் அதே துறை தலைவராகவும் பிரகாசித்தவர். ரத்தத்தில் ஊறியதாலோ அல்லது அறியாப் பருவத்தில் பெற்றோர் ஊக்குவித்ததாலோ என்னவோ, கல்வி எனும் கற்கண்டு சிறு வயதிலேயே என்னுள் ஒரு அபார பிடிப்பை உருவாக்கி இருந்தது. கல்வியில் ஏதாவது சாதிக்கணும் எனும் லட்சியம்… வெறி என்று தான் சொல்ல வேண்டும். அந்த வெறி எனக்கு விவரம் தெரிய வந்த பருவத்தில் இருந்தே பற்றிக் கொண்டது.

இடைநிலை கல்வி கற்றுக் கொண்ட காலத்தில் பள்ளி நாடகங்களில் ஆசிரியர் வேடத்தை தான் நான் தேர்வு செய்வேன். அதன் பின்னர் மேல்நிலை பள்ளிக்கு மாறிய கட்டத்தில் பேராசிரியராக சோபிக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். அதே வேளையில் தகவல் தொழில்நுட்பத்துறை எனும் ஐ.டி., கல்வியும் அறிமுகம் ஆகியிருந்ததால், சாஃப்ட்வேர் இன்ஜினியர் எனும் கனவும் ஒரு பக்கம் என்னை உலுக்கியது. அதற்கேற்றாற் போல ஐ.டி., பாடத்தில் பி.டெக் பட்டம் பெற்றேன். சாஃப்ட்வேர் இன்ஜினியராக கேம்பஸ் இன்டர்வியுவில் தேர்வும் செய்யப்பட்டு பணியில் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து கமர்ஷியல் மேனேஜ்மென்ட் பாடப் பிரிவில் முதுநிலை பட்டம். இதற்கிடையில் எங்க வீட்டில் எனக்கு திருமணமும் பேசி முடித்தார்கள்’’ என்றவருக்கு கல்வியில் சாதனை எனும் எனது லட்சிய வெறிக்கான பயணத்தின் முதல் படிக்கட்டாக அவரின் திருமண வாழ்க்கை அமைந்தது.

‘‘எங்க வீட்டில் என் பெற்றோர் இருவரும் ஆசிரியர் துறையோ அதற்கு நிகராக என்னுடைய புகுந்த வீடும் கல்வி துறையில் கொடி கட்டிப் பறந்த குடும்பம். இளம் வயதிலேயே பள்ளியின் துணைத் தலைவராக இருந்தவர் எனது கணவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி. முனைவர் பட்டம் பெற்றவர். என் மாமனார், ஆய்வுப் பிரிவில் பட்டம் பெற்றிருந்தும், பணி ரீதியாக இந்திய விமானப்படையில் சேவை புரிந்தவர். பணி ஓய்வுக்குப் பின்னர் இந்த பள்ளியை சிறிய அளவில் தொடங்கினார். தொடங்கிய சில ஆண்டுகளில் அந்த சுற்று வட்டாரத்தின் 5 கி.மீ அளவுக்கு சிறந்த பள்ளி என மக்களால் பெரிதும் பேசப்பட்டது. அந்த சிறப்பை இன்றளவும் தக்க வைத்து கல்வியில் புதுமைகள் புகுத்தி தொண்டு புரிந்து வருவதில் அவருக்கு மிகவும் பெருமை.

முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் ஐயா அவர்கள் கரங்களில் இருந்து நல்லாசிரியர் விருதை பெற்றவர். மேலும் சில்வர் ஸ்டார் எனும் விருதை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அவர்கள் வழங்கி உள்ளார். இப்படி என்னைச் சுற்றி இருந்த அனைவரும் கல்வித்துறை சார்ந்து பல சாதனைகளை செய்துள்ளனர். அவர்கள் மத்தியில் நான் எப்படி வேறு தளத்தில் பணியாற்ற முடியும். அதனால் நானும் என்னை அந்த குடும்பத்திற்குள் இணைத்துக் கொண்டேன்.

கல்வித் தொண்டுக்கு நான் மாறிய விதம் ரொம்ப சுவாரசியமானது. கல்வி பாரம்பரியத்தில் இருந்து விலகி ஐ.டியில் பணிபுரிந்து வந்த என்னை, தங்களது வழிக்கு திருப்ப கணவரோ அல்லது மாமனாரோ ஒரு போதும் நினைக்கவில்லை. மாறாக ஐ.டி துறையில் தனியாக நிறுவனம் தொடங்கலாம் என்று என்னை ஊக்குவித்து உற்சாகப்படுத்தினர். எனினும், என்னுள் உறங்கிக் கிடந்த கல்வி உணர்வுகள் என்னை உலுக்கின. கல்வித் துறையில் சாதிக்க வேண்டும் என்பது என்னுடைய லட்சியக் கனவு. அந்த கனவு தூக்கத்தில் வருவது மட்டுமல்ல.. நம்மை தூங்கவிடாமல் செய்வதும் அதுவே. அந்த கனவு தான் என்னை மாணவர் நலன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று இடைவிடாமல் உழைக்க தூண்டியது. அதற்கு பலன் எங்கள் பள்ளியில் காலடி எடுத்து வைக்க வாய்ப்பு ஏற்படுத்தியது.

எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் கல்வி செல்வத்துக்கு ஈடிணையில்லை. வழக்கமான கற்பித்தல் மட்டுமன்றி பொது அறிவிலும் மாணாக்கர் சிறந்து விளங்க வேண்டுமெனக் கருதினேன். மேலும் ஆலமரமாக ஆறு கிளைகளுடன் பரந்து விரிந்திருந்த எங்களது பள்ளியில் 20,000க்கும் குறையாத மாணவர்கள் இருந்தாலும், அதில் 40% மாணவர்களின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். எனவே கல்வியின் அவசியத்தை அந்த மாணவர்கள் முற்றிலும் புரிந்து கொள்ளும் விதமாக பல்வேறு புது யுக்திகளை புகுத்தி அந்த மாணவர்களின் பயிற்சித்திறனை மேம்படுத்தினேன்.

பள்ளி உள்பட எந்த ஒரு நிறுவனத்துக்கும் வலுவான அடித்தளம் அமைத்தால் தான் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். அடித்தளம் தான் வலுவாக அமைத்து விட்டோமே இனி என்ன கவலை என அசால்ட்டாக இருந்தாலும், செல்லரிப்பது போல நிறுவனம் பெரும் சரிவுக்குச் சென்றுவிடும். எனவே இயக்குநர் என்ற முறையில், புதிய தொழில்நுட்பங்களுக்கு நிகராக எங்களது குழுமத்தையும் மாநிலத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக உருவாக்கும் பணியில் இப்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். இதில் ஒரு முன்னோடி என்ன என்றால், பி.டெக் படித்தவர்கள் பள்ளி முதல்வராக முடியாது எனும் சட்டம் அப்போது இருந்தது. இது குறித்து எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, அனுமதி வழங்க அரசு அறிவித்த பிறகே பள்ளியின் முதல்வராகி இப்போது இயக்குநராக உயர்ந்துள்ளேன்.

எங்கள் பள்ளி மாணவர்களின் கல்வி ஆற்றல் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் தனித்துவமாக நாங்கள் ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கி பயன்படுத்தி வருவது தான். அந்த சாஃப்ட்வேரைக் கொண்டு ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்து கற்பிக்கிறோம். அனிமேஷன் டெக்னாலஜியுடன் பயன்பாட்டில் உள்ள இந்த சாஃப்ட்வேரால், பாடத்தின் பொருள் மற்றும் உட்பொருளை மாணவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.

அதுவே அவர்களின் சிந்தனை மற்றும் ஆற்றல் திறனை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. அது போல, ஆசிரியர்கள் அனைவருக்கும் Inservice Training எனும் பயிற்சியையும் முறைப்படி நடத்தி அவர்களையும் மெருகேற்றி வருகிறேன். எங்களின் பள்ளியை குறித்து ஆய்வு செய்த ஆங்கில நாளிதழ் ஒன்று எங்க பள்ளியை தேசிய அளவில் முதல் இடத்தில் உயர்த்தி மகுடம் சூட்டியுள்ளது என்று நினைக்கும் ேபாது ரொம்பவே பெருமையாக உள்ளது.

இந்த உற்சாகத்துடன் ‘‘இந்தியாவின் தலை சிறந்த பள்ளிகளில் இதுவும் ஒன்று’’ எனும் லட்சியத்துடன் அடுத்தகட்ட உச்சத்துக்கு என்னைத் தயார் செய்து கொண்டு வருகிறேன். இறுதி கட்டம் இதுதான் என நமக்கு கிடைக்கும் வெற்றியை நிர்ணயம் செய்ய முடியாது. ஒரு வெற்றியால் கிடைக்கும் ஊக்கத்தை தொடர்ந்து நாம் மேலும் பயணிக்கும் போது தான் பல வெற்றியினை சுவைக்க முடியும். இதனை பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் கவனத்தில் கொண்டு சென்று அவர்களையும் ஊக்குவித்து வருகிறேன்” என்றார்.

கடமையைச் செய்தோம்… கல்லா கட்டினோம் என்றில்லாமல் கல்வி எனும் அரிய தொண்டில் முழு மூச்சாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ஓய்வு இன்றி பாடுபடும் ரேச்சல் ஜார்ஜியானாவை வெற்றிகள் மென்மேலும் கட்டியணைக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை!.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்களும் கவி பாடும்! கூந்தலும் குழலூதும்! (மகளிர் பக்கம்)
Next post குதித்த அடுத்த வினாடியே கல்லாய் மாற்றும் மர்ம ஏரி ! (வீடியோ)