சேமிப்பு வழிகாட்டி -வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)

Read Time:19 Minute, 35 Second

‘வெய்யிற்கு ஒதுங்க உதவ உடம்பின் வெறு நிழல்போல் கையில் பொருளும் உதவாது’… இது அருணகிரிநாதரின் கூற்று. இதற்கு மரத்தின் நிழல் உதவுவதைப் போல மனிதனின் நிழல் உதவாது. அதுபோல தன் கையில் உள்ள பொருளும் உதவாது. பிறர்க்குக் கையில் உள்ள பொருளை வழங்கி உதவவேண்டும் என்பது இந்தக் கூற்றின் பொருள். நாம் இதனைப் புதிய கோணத்தில் பார்த்தால் உடனடிப் பயனுக்குத் தேவைப்படாமல் கையிலே வைத்துள்ள பணத்தினால் என்ன பயன். அந்தப் பணத்தைச் சேமித்து வைத்தால் வட்டியோடு அந்தப் பணம் வளருமே என்னும் சிந்தனைதான் நீண்டகால வைப்பு என்னும் நிலைவைப்பைப் (Fixed Deposit) பற்றி நம்மை எண்ணத் தூண்டுகின்றது.

‘சிறுகக் கட்டி பெறுக வாழ்’ என்று சேமிப்புக் கணக்கைத் தொடங்கி சிறிது சிறிதாகச் சேமிக்கும் குடும்பங்களில் சில சமயங்களில் ஒரு கணிசமான தொகை கைக்கு வருவதுண்டு. மாத ஊதியம் வாங்குபவர்களுக்குப் ‘போனஸ்’ என்றோ, சொத்து அல்லது நகைகள் போன்றவற்றை விற்றுக் கிடைக்கும் தொகையோ, இன்சூரன்ஸ் பாலிசி அல்லது சீட்டுக்கட்டி முதிர்வடைந்து பெறும் தொகை மற்றும் இவற்றைப்போன்று பெருந்தொகை பெறும்பொது அதை என்ன செய்வது என்னும் குழப்பம் பலருக்கு உள்ளது.

ஒரு சிலர் இது போல் கிடைக்கும் பெருந்தொகையினை வட்டி விடலாம் என்று நினைப்பார்கள். அசலும் இருக்கும் அதே சமயம் அதற்கான வட்டியாக ஒரு தொகையும் சேரும். வட்டிக்கு விடுவது கொஞ்சம் ரிஸ்க்கான காரியம். அதற்கு பதில் வங்கியில் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் நிலைவைப்பாகப் (Fixed Deposit) போட்டு வையுங்கள்.

முதிர்வு காலத்தில் வட்டியுடன் சேர்த்து பணம் பெருகிக் கிடைக்குமென்று சொன்னாலும், பலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முழு தொகையையும் வழங்கிவிடுகின்றனர். சொந்தமாக தொழில் செய்கிறார், நம்பகமானவர். அவரது ரேஷன் கார்டு நகல், காசோலையில் கையெழுத்து மற்றும் மாதா மாதம் வட்டியும் வந்திடும் என்ற நம்பிக்கையில் தான் வட்டிக்கு பணம் தருகிறார்கள். ஆனால் மூணே மாசத்தில் காசைப் பெற்றுக் கொண்டது மட்டுமில்லாமல், வீட்டையும் காலி செய்துவிட்டு போய்விடுகிறார்கள். வட்டிக்கு ஆசைப்பட்டு கையில் இருந்த வைப்பு பணமும் போனது தான் மிச்சம். இவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?!. அதிக வட்டிக்கு ஆசைப்படுவதை விட்டுவிட்டு பணம் பாதுகாப்பாக நமக்குத் திரும்பக் கிடைக்கவேண்டும் என்ற சிந்தனையே நம்மை மிகச்சரியான வழியில் செல்லத் தூண்டும். இப்பொழுது நாம் அதை பற்றிச் சிந்திப்போம்.

அதிக வட்டி + பாதுகாப்பு வங்கி எவ்வாறு நாம் செலுத்தும் பணத்தின் ஒரு பகுதியை தேவைப்படும் தகுதி வாய்ந்தவருக்கு அல்லது நிறுவனத்திற்குக் கடனாக வழங்கி வட்டி பெற்றுக்கொண்டு நமது வைப்புக் கணக்கிற்கு வட்டி தருகின்றது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். வங்கிகளை மேற்பார்வையிடும் பாரத ரிசர்வ் வங்கி , மத்திய அரசின் வங்கி மேற்பார்வைத்துறை அவ்வப்போது வகுக்கும் நெறிமுறைகளின்படியும் சட்ட ரீதியாகவும் வங்கிகள் குறிப்பிட்ட வரம்புக்கு மேல் தாம் வழங்கும் கடன்களுக்கு வட்டி வசூலிக்க முடியாது.

அப்படி வசூலிக்கும் வட்டி விகிதத்திற்கும் குறைவாகத்தான் நாம் செலுத்தி வைக்கும் வைப்புத் தொகைக்கு வங்கியால் வட்டி வழங்க முடியும். எனவேதான் வங்கி வழங்கும் வட்டிவிகிதம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் வங்கியில் போடும் பணத்திற்கு பாதுகாப்பு உள்ளது. எப்படி என்றால் வங்கியில் உள்ள டெபாசிட்டுக்கு இன்சூரன்ஸ் என்னும் காப்பீடு உள்ளது. வங்கி ‘திவால்’ ஆனாலும் குறிப்பிட்ட வரம்புவரை நாம் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது.

வங்கியில் பணத்திற்குப் பாதுகாப்பு நூறு சதவிகிதம் இருந்தாலும் வட்டி தரும் சதவிகிதம் குறைவாக உள்ளதே? இன்றைய காலகட்டத்தில் அரசு வங்கிகளும், புதிய தனியார் வங்கிகளும் வருடத்திற்கு நூறு ரூபாய்க்கு ஆறு சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் பிக்சட் டிபாசிட் என்னும் நிலைவைப்பிற்கு வட்டி தருகின்றன. சிறுநிதி வங்கிகள் (Small Finance Banks) அதிகபட்சமாக ஏழு சதவிகிதம் வரை வட்டி தருகின்றன. ஆனால் எங்களுக்கு குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்து சதவிகிதம் வட்டி வேண்டும் என்று கேட்பவர்கள் அதிகம். இவர்களுக்கு நாம் சொல்லும் பதில் நாம் டிபாசிட் போடவுள்ள தொகை பெருந்தொகையாக இருந்தால் அந்தப் பணத்தின் ஒரு பகுதியை வங்கியிலும், இன்னொரு பகுதியை அதிக வட்டிதரும் சில அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலும் (சிட்பண்ட்) சேமிக்கலாம். மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதியத்திலும் ஒரு பகுதித் தொகையை சேமிக்கலாம்.

இவ்வாறு நாம் பகிர்ந்து சேமிக்கும்போது கிடைக்கும் பயன் பின்வருமாறு :

*சேமிப்பின் ஒருபகுதி, குறைந்த வட்டி கிடைத்தாலும், மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

*தேவைப்படும்போது செலுத்திய பணத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாக அதற்குரிய குறைக்கப்பட்ட வட்டியுடன் எடுத்துக் கொள்ளலாம்.

*பணமிழப்பு நேரலாம் என்று தெரிந்தும் அதிக வட்டி தரும் நிறுவனத்தில் செலுத்தப்படும் தொகை குறைவு என்பதால் அந்த நிறுவனம் நொடிந்து போனால் நாம் இழக்கும் பணம் குறைவாக – நாம் அதை ஏற்கும் நிலையில் அமையலாம்.

வங்கி நிலைவைப்பு (Bank Fixed Deposit):பாதுகாப்பும், அதிக வட்டி வருமானமும் நமது பார்வையாக இருக்கும்போது நமது பணம் என்னும் ‘கண்ணே’ பிரதானமானது. ‘கண்களை இழந்தபின் காணும் பொருள் ஏதுமில்லை.’ சேமிப்புக் கணக்கில் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் பணம் கட்டலாம், தேவையின்போது போட்ட பணத்தை, குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) என்னும் தொகையை சேமிப்புக் கணக்கிலேயே விட்டுவைத்துவிட்டு, எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் நிலைவைப்பில் ஒருகுறிப்பிட்ட காலத்திற்கு என்று நிர்ணயித்து, அதாவது ஆறு மாதங்கள், ஒரு வருடம், இரண்டு வருடங்கள் என பத்து வருடங்கள் வரையிலான வைப்புக் காலத்தை கணக்கிட்டு சேமிப்பதே வைப்புக் கணக்கு என்னும் நிலைவைப்பாகும். இதனை சில வங்கிகள் ‘தவணை வைப்பு’ என்றும் சொல்வர். இவ்வாறு சேமிக்கும் கணக்கிற்கு சேமிப்புக் கணக்கைவிட அதிக வட்டி கிடைக்கும். முதிர்வு காலத்திற்கு (Maturity Period) எவ்வளவு வட்டி வழங்குவது என்பதை அந்தந்த வங்கியே முடிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கலாம் என்பது ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையாகும்.

குறைந்தபட்சம் ரூ.1000/- சேமிக்கலாம். அதிகபட்ச நிர்ணயம் இல்லை. ஆனால் சேமிக்கும் பணமும் அதிலிருந்தே ஈட்டும் வட்டியும் வருமான வரிச்சட்டத்திற்கு உட்பட்டதாகும். நாம் செலுத்தும் தொகைக்கான வட்டியை ஒவ்வொரு மாதமோ, காலாண்டிற்கு ஒருமுறையோ, வருடம் ஒருமுறையோ அல்லது வைப்புக் கணக்கின் முதிர்வு காலத்திலோ பெற்றுக்கொள்ளலாம்.

முதிர்வு காலத்தில் பெறலாம் என்று அதற்கேற்றாற்போல் சேமித்தால் நாம் செலுத்தியுள்ள தொகையின் வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் அசல் தொகையோடு சேர்ந்து வட்டிக்கு வட்டி கிடைக்கும். இவ்வாறு வழங்கப்பெறும் வட்டியை கூட்டு வட்டி (Compound Interest) என்பர். பணம் செலுத்துவதற்குமுன் வங்கியாளரிடம் வட்டிவிகிதங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு குறிப்பிட்ட காலத்தில் வட்டி வேண்டும் என்றால் அந்தவங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில் அந்தந்த காலக்கட்டத்தில் வரவு டெபாசிட் செய்யப்படும். அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு இல்லை என்றால் வங்கியாளர் உதவியுடன் துவங்க வேண்டும்.

ஆவணங்கள்

நிலைவைப்புக் கணக்கைத் துவங்க நாம் வழங்க வேண்டிய ஆவணங்கள்

*தனிநபர் புகைப்படம் (Passport -size Photo)
*தனிநபர் புகைப்பட அடையாள அட்டையின் நகல்
*கணக்குத் துவங்குபவரின் இருப்பிடச் சான்று நகல்
*பான் கார்டு (அ ) படிவம் எண் 60 / 61

ஏற்கனவே அதே வங்கியில் கணக்குத் துவங்குபவருக்குச் சேமிப்புக் கணக்கிருந்தால் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை தரவேண்டாம். நிலைவைப்புக் கணக்குக்கான விண்ணப்பப் படிவத்தினையும், பணம் செலுத்தும் சீட்டினையும் பூர்த்தி செய்து வங்கி அலுவலரிடம் வழங்கவேண்டும். நாம் நிலைவைப்பாகச் செலுத்தவேண்டிய தொகை நம் சேமிப்புக் கணக்கிலிருந்து மாற்றவேண்டும் என்றால் நம்மிடம் அதற்காண பணமாற்றப் படிவத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு சேமிப்புக் கணக்கில் மாற்றுவர்.

நிலைவைப்புக்காக ரூ.50000/- மற்றும் அதற்குமேல் நேரடியாகப் பணமாகச் செலுத்த முடியாது. வருமானவரிச் சட்டத்தின்படியும், ரிசர்வ் வங்கியின் வங்கிகள் இயக்க நெறிமுறைகளின்படி ரூ. 50000/- மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கின் வழியாகத்தான் செலுத்தமுடியும். இந்தக் கணக்கை தனிநபர் கணக்காகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து கூட்டுக் கணக்காகவோ தொடங்கலாம். நிலை வைப்பிற்கும் வாரிசு நியமன (Nomination) வசதி உள்ளது. சேமிப்புக் கணக்கிற்கு வாரிசுதாரர் நியமனம் அனைத்தும் நிலைவைப்பிற்கும் பொருந்தும்.

வைப்பின் முதிர்வு காலத்திற்கு முன்னரே பணம் எடுக்கும் வசதி உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளலாம். பகுதி, பகுதியாகப் பிரித்தும் பணம் எடுக்கலாம். முதிர்விற்கு முன்னரே பணம் எடுக்கும் போது வைப்புத்தொகை எத்தனை நாட்கள் மாதங்கள் இருந்ததோ அந்த காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி சதவிகிதத்தில் 0.50% அல்லது 1.00% அபராத வட்டியாக குறைத்துக் கொண்டு வட்டி கணக்கிட்டு வழங்கப்படும். இயன்றவரை வைப்புத் தொகையின் முதிர்வு காலத்தில் பணமெடுப்பதே நலம்.

முதிர்வு காலத்திற்குப்பின் பணத்தேவை இல்லையென்றால் முதிர்வு நாளிலிருந்தே நிலைவைப்பினை மேலும் நாம் நிர்ணயிக்கும் காலத்திற்கு நீட்டிக்கொள்ளலாம். வைப்புத் தொகையை முதிர்வு காலத்திற்குப் பிறகு தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும் என்று விண்ணப்பம் எழுதித் தரலாம். மேலும் நிலைவைப்பு ரசீதினை நாம் வங்கியிலேயே பாதுகாப்பில் வைத்துக்கொள்ளச் சொல்லலாம். அத்தகைய பாதுகாப்பு வசதி அனைத்து வங்கிகளிலும் நடைமுறையில் உள்ளது. சில வங்கிகளில் நாம் பாதுகாப்புப் பெட்டக (Safe Deposit Lockers) வசதி பெறும்போது நமக்கு நிலைவாய்ப்பு இருந்தால் பாதுகாப்புப் பெட்டக வாடகையில் சலுகைகள் கிடைக்கும். அதேபோல் நாம் அடுத்தவருக்கோ, ஏதாவது நிறுவனத்துக்கோ வரைவோலை (Draft) எடுக்க நேர்ந்தால் நாம் பெருந்தொகையை நிலைவைப்பாக வங்கியில் செலுத்தியிருந்தால் வரைவோலையை எந்த கட்டணம் இன்றி பெறலாம்.

வாடிக்கையாளர் இறப்பு வைப்புத் தொகை செலுத்தியுள்ள வாடிக்கையாளர் இறந்துவிட்டால் நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் முதலில் வாடிக்கையாளரின் அரசுத் துறை வழங்கியுள்ள இறப்பு சான்றிதழை வங்கிக்குச் சமர்ப்பிக்க வேண்டும். நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் அவரின் தனிநபர் புகைப்பட அடையாள அட்டையின் நகல், இருப்பிடச் சான்று நகல், பான் கார்டு (அ ) படிவம் எண் 60 / 61 ஆகியவற்றைச் சமர்ப்பித்து பணம் கோரும் படிவத்தைப் பூர்த்திசெய்து நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் கையொப்பமிட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

பணம் பெற்றபின் பெற்றதை உறுதிப்படுத்தும் ரசீதிலும் நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் கையொப்பமிடவேண்டும். பணம் ரூ.5000/-த்திற்கு மேல் எனில் படிவத்தில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி அதன்மேல் கையொப்பமிட்டு வங்கி அலுவலரிடம் வழங்கி பெற்றுக் கொள்ளலாம்.. வாடிக்கையாளர் யாரையும் வாரிசுதாரர் என்று நியமிக்கவில்லை (No Nomination) என்றால், வைப்பாளரின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வாரிசுகள் அனைவரின் தனிநபர் புகைப்பட அடையாள அட்டையின் நகல், இருப்பிடச் சான்று நகல், பான் கார்டு (அ ) படிவம் எண் 60 / 61 ஆகியவற்றைச் சமர்ப்பித்து பணம் கோரும் படிவத்தைப் பூர்த்தி செய்து வாரிசுதாரர்கள் கையொப்பமிட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். பணம் பெற்றபின் பெற்றதை உறுதிப்படுத்தும் ரசீதிலும் பணம் பெறும் வாரிசுதாரர்கள் கையொப்பமிடவேண்டும்.

பணம் ரூ.5000/-த்திற்கு மேல் எனில் படிவத்தில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி அதன்மேல் கையொப்பமிட்டு வங்கி அலுவலரிடம் வழங்கவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வாரிசுதாரர் என்றால் அவர்கள் அனைவரும் அவர்களில் ஒருவருக்கு இறந்த வாடிக்கையாளரின் கணக்கிலுள்ள பணத்தை வழங்குமாறு ஒப்புதல் கடிதம் எழுதி கையொப்பமிட்டுத் தந்தால் அந்த குறிப்பிட்ட நபர் பணத்தைப் பெறலாம்.

சேமித்தலின் சிறப்பு

‘தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை ஒருவன் எங்கும் பெற முடியாது’ என்கிறார் நபிகள். ‘வியர்வையின் விளைச்சலையே ஒருவன் உணவாகக் கொள்ள வேண்டும்’ என்கிறது பரிசுத்த வேதாகமம். ‘இரவில் பசியில்லாமல் தூங்குவதற்குத் தேவையானதை, பகலில் ஈட்ட வேண்டும். மழைக்காலத்தில் செலவழிக்க, மற்ற மாதங்களில் சேமிக்க வேண்டும். முதுமையில் நிம்மதியாக வாழ்வதற்கு இளமையில் பொருள் தேடவேண்டும். உயிருள்ளவரை மனிதர்கள் உழைத்துக்கொண்டு இருக்கவேண்டும். முயற்சி இல்லையேல் மகிழ்ச்சி இல்லை’ என்கிறது மகாபாரதம். இவ்வாறு உழைத்துத் தேடும் பணத்தை பாதுகாப்பாகச் சேமிக்க வங்கிகளில் மேலும் பல திட்டங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இன்னும் விளக்கமாகப் பேசுவோம் அடுத்த இதழ்களில்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனைத்து முதுகுவலிக்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை!! (மருத்துவம்)
Next post குழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்!! (மகளிர் பக்கம்)