விரும்பிய தொழிலில் ஈடுபட்டால் வாழ்க்கை சொர்க்கமாகும்!! ( மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 30 Second

‘‘பெண்கள் வீட்டை விட்டு வெளியில் போகக் கூடாது என்று கட்டுப்பாடுடைய குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்லாமல் அதே கட்டுப்பாடுடைய குடும்பத்தின் மருமகளும் நான். குடும்பம், பசங்கன்னு பிசியாகவே இருந்தேன். பசங்க படிப்பிற்காக வெளியூர் சென்ற பிறகு என்ன செய்வதுன்னு தெரியல.

பொழுதுபோகாமல் கஷ்டப்பட்டேன். எம்பிராய்டரி தெரியும் என்பதால், நேரத்தை கழிக்க ஒரு புடவையில் எம்பிராய்டரி போட்டு சென்னையில் உள்ள என் தங்கைக்கு கொடுத்தேன். அதைப்பார்த்த அவள் ஃப்ரண்ட்ஸ் தங்களுக்கும் இதுபோல் போட்டுத் தரமுடியுமா என கேட்டார்கள். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கான ஒரு தொழிலை அமைத்துக் கொண்டேன்’’ என்று பேச ஆரம்பித்தார் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பார்வதி கோவிந்தராஜ்.

‘‘ஒரு கட்டத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தது. ஆனால் எங்க ஊரில் எம்பிராய்டரி செய்ய தரமான நூல்கள் கிடைக்காது. என் தங்கையிடம் சென்னையில் இருந்து வாங்கி அனுப்ப சொல்வேன். இதற்கிடையில் டீன் ஏஜ் பெண்கள் பலர் எம்பிராய்டரி அவர்களுக்கு கற்றுத் தரச்சொல்லி கேட்டார்கள். அவர்களுக்காக பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன்.

அவர்களின் கலகல பேச்சும், காரணமற்ற சிரிப்பும் என்னை உற்சாகமாக வைத்துக்கொண்டது. மேலும் அவர்களையும் தனியாக வகுப்பெடுக்கவும் ஊக்குவித்து வந்தேன்’’ என்றவர் எம்பிராய்டரி மட்டுமல்லாமல் பெண்கள், சிறுமிகளுக்கான உடைகளில் ஸ்டோன், மிரர், ஜர்தோசி வேலைப்பாடுகளுடன் தைக்க ஆரம்பித்துள்ளார்.

‘‘நாம் ஒரு வேலை செய்ய துவங்கிவிட்டால், அதை சார்ந்து வேறு என்ன செய்யலாம்ன்னு சிந்திக்க ஆரம்பிச்சிடுவோம். தையலைத் தொடர்ந்து… புடவை வியாபாரமும் செய்ய துவங்கினேன். அடுத்த கட்டமாக இடியாப்ப மாவு, சத்து மாவு, தாளிப்பு வடகம், கூழ் வத்தல்களை தயாரித்து ‘பார்வதி ஹோம் புராடக்ட்’ என்ற பெயரில் சில பெண்களை வைத்து தயாரித்து விற்பனை செய்யத் துவங்கினேன்.

தரமான பொருட்கள் உபயோகித்து தயாரிக்கப்பட்டதால் ஆர்டரும் குவிந்தது, வருமானமும் அதிகரித்தது. எப்போதுமே காற்று தென்றலாகவே வீசாதல்லவா… சிறு சூறாவளியும் வரும்தானே. அதுபோல் என் வாழ்விலும் பெரிய சூறாவளி வீசியது. முதுகுத்தண்டு வடத்தில் பிரச்னை ஏற்பட்டு நடக்க முடியாமல் போனது.

அதனால் பார்த்திருந்த அனைத்தையும் தொடர முடியாமல் போனது. டாக்டர்கள் படுத்தே இருக்கணும்ன்னு சொல்லிட்டாங்க. சில மணி நேரம் உட்காரும் போது ஏதாவது எழுதலாம்ன்னு பேப்பர் பேனாவை கையில் எடுத்தேன். சமையல் குறிப்பு, கவிதை, வீட்டுக்குறிப்புகள், கதை கட்டுரைகள்ன்னு மாத இதழ், வார இதழ்களுக்கு எழுதி அனுப்பினேன்.

பிரசுரமும் ஆனது. அதனை தொடர்ந்து எனக்கு தெரிந்த சின்னச் சின்ன கலைப் பொருட்களை செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்தேன். ஆசிரியை பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் படிப்பு குறித்தும் சில கலை வேலைப்பாடுகளை செய்து கொடுத்தேன். இதன் மூலம் ஒரு வருமானம் வந்தது. நான் ஒடிந்த போதும் என்னை உற்சாகம் அளித்து ஊக்குவித்தவர் என் கணவர்.

நம் எல்லோருக்கும் வாழ்க்கை ஒருமுறைதான். அதை தினம் தினம் அனுபவித்து வாழணும். கடவுள் எல்லோருக்கும் ஒரு திறமையை கொடுத்திருக்கிறார். அந்த திறமையே நமக்கான ஒரு வருமானத்தை ஏற்படுத்தி தரும் என்பது என் நம்பிக்கை. என்னைக் கேட்டால், பெண்கள் வீட்டு வேலைகள், டி.வி, மொபைல் போன் என்று நேரத்தை வீணாக்காமல், விரும்பிய தொழிலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்கலாம்’’ என்றார் பார்வதி கோவிந்தராஜ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறு தொழில் – ஆன்லைனில் ஆடைகள் விற்கலாம் !!! ( மகளிர் பக்கம்)
Next post Empty nest syndrome: முதியோரே கவனம் அவசியம்!! (மருத்துவம்)