வெளித்தெரியா வேர்கள் 22-டாக்டர் சுனிதி சாலமன் !! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 15 Second

அது 1986ம் ஆண்டு! இந்தியாவில் எய்ட்ஸ் நோய் இருக்கிறது… மெல்ல அது பரவியும் வருகிறது.. என்று மெல்லிய குரலும், சிறிய உருவமும் கொண்ட அந்தப் பெண் மருத்துவர் முதன்முதலில் அந்தத் தகவலை கூறியபோது நாடே அதிர்ந்தது… நம்பவும் மறுத்தது..!மேற்கத்திய நாடுகளில், முக்கியமாக அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளில், பாலியல் தொழிலாளர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் போதை மருந்து உபயோகிப்பவர்களிடையே மட்டுமே அதுவரை கண்டறியப்பட்டுவந்த எய்ட்ஸ் எனும் கொடிய நோய், கட்டுப்பாடான இந்திய சமூகத்திற்குள் நுழைய வாய்ப்பே இல்லை என்று நம்பப்பட்ட நிலையில், இந்தியாவில், அதுவும் முதன்முதலாக சென்னையில் கண்டறியப்பட்டபோது தேசமே அதிர்ந்து தான் நின்றது.

20 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகளுடன், இன்று உலகிலேயே மூன்றாவது அதிக எச்ஐவி தொற்று உள்ள நாடாக இந்தியா இருக்கும் போதிலும், அதன் பரவுதல் விகிதம் 0.2ஐ தாண்டாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர்களில் ஒருவர், எய்ட்ஸ் நோய் பரவும் முன்னரே அதைக் கண்டறிந்து, தேசத்திற்கே எச்சரிக்கை செய்த மருத்துவரான டாக்டர் சுனிதி சாலமன். சுனிதி கைதொன்டே. 1939ம் ஆண்டு, அக்டோபர் 14ல், யஸ்வந்த் ஆர்.

கைதொன்டே எனும் தோல் வியாபாரியின் எட்டு குழந்தைகளில், ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர். மகாராஷ்டிர இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், குடும்பத்துடன் இவர்கள் நிரந்தரமாக வசித்ததும், தொழில் புரிந்ததும் சென்னையில் தான் என்பதால் சுனிதி படித்ததும் சென்னையில் தான். சிறுவயதில், தனக்கும் தன்னுடைய சகோதரர்களுக்கும் இல்லம் தேடி வந்து, அம்மை நோய், காலரா போன்ற தடுப்பூசிகளை செலுத்திய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களைப் பார்த்த சுனிதிக்கு, மருத்துவம் மீது பேரார்வம் ஏற்பட்டது. இயல்பிலேயே புத்திசாலிப் பெண்ணான சுனிதி பள்ளிப் படிப்பை முடித்தவுடன், தான் விரும்பியது போலவே எம்எம்சியில் மருத்துவம் பயின்று, தொடர்ந்து தனது மேற்படிப்பிற்காக பொது மருத்துவப் பிரிவைத் தேர்ந்தெடுத்தார்.

பிறந்தது பாரம்பரிய இந்து மராத்தியக் குடும்பம் என்றாலும் மதம் தனி மனித முன்னேற்றத்தைத் தடுப்பதாக இருக்கக்கூடாது என்று கருதிய சுனிதி, தன்னுடன் மருத்துவம் பயின்ற விக்டர் சாலமன் என்ற தமிழ் கிறிஸ்துவருடன் காதல் திருமணம், பின்னர் மேற்படிப்பிற்காக கணவருடன் இங்கிலாந்து பயணம் என்று தன் வாழ்வில் பல அதிரடி முடிவுகளை அப்போதே எடுத்தார். 1967ல் இங்கிலாந்தில் சுனிதி பொது மருத்துவத்தையும், சாலமன் இருதய நோய் அறுவை சிகிச்சையையும் பயின்று வந்த நிலையில், அதீத வேலை பளுவின் காரணமாக, சுனிதி
நோயியல் துறைக்கு தன்னை மாற்றிக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து இருவரும் அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் மேற்படிப்பை தொடர்ந்த சமயத்தில், 1971ல் கணவர் விக்டர் சாலமனுக்கு சென்னை எம்எம்சியின் இருதய அறுவை சிகிச்சை துறையை எடுத்து நடத்தும் பணி ஆணை வாய்ப்பு கிடைக்க, கணவரின் முன்னேற்றம் கருதி கணவரோடு தாயகம் திரும்பினார் சுனிதி. அப்போது எம்எம்சியில் பொது மருத்துவம் மற்றும் நோயியல் துறைகள் இல்லாத காரணத்தால், நுண்ணுயிரியல் துறையைத் தேர்ந்தெடுத்த சுனிதி, அதில் மேற்படிப்பையும் முடித்து, 1980களில் எம்எம்சியில் நுண்ணுயிரியல் பேராசிரியராகவும் பணியாற்றத் துவங்கினார்.

1982ல் மேற்கத்திய நாடுகளில் எய்ட்ஸ் நோய் வேகமாகப் பரவி வந்தாலும், ஒழுக்கக்கேடு சார்ந்ததொரு நோயாக இருக்கும் எய்ட்ஸ், கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தியாவிற்குள் வர வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் அப்போது பலரிடையே இருந்தது. இந்தியாவின் மக்கள்தொகையும், மற்ற பாலியல் நோய்களின் விகிதமும் டாக்டர் சுனிதி சாலமனை மாற்றி யோசிக்கச் செய்தது. அதேசமயம், அவரது மாணவியான டாக்டர் நிர்மலா, நுண்ணுயிரியல் துறையில் தன்னுடைய ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தலைப்பைத் தேடிக் கொண்டிருப்பதை அறிந்து, அவரை எய்ட்ஸ் நோய் ஆய்வில் ஈடுபடுத்தினார் சுனிதி. 1985ம் ஆண்டின் முடிவில் பாலியல் தொழிலாளர்கள், ஓரின சேர்க்கையாளர்கள், ஆப்ரிக்க மாணவர்கள் (போதை ஊசி செலுத்துபவர்கள்) என 200 பேருக்கு ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த அந்த ஆய்வை நினைவுகூறும் டாக்டர் சுனிதி சாலமன்,‘‘எனது மாணவியான டாக்டர் நிர்மலா செல்லப்பன் செய்த அரும்பணியை என்னால் மறக்கவே முடியாது.

32 வயதேயான அவர் சென்னையில் பாலியல் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள் தனியாக இல்லாத நிலையில், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பாலியல் தொழிலாளர் ஓரிவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் இருக்கும் இடங்கள், காப்பகங்கள் போன்ற இடங்களுக்குத் தனியாகச் சென்று, அங்கிருந்த பெண்களிடையே பேசி, அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்ததுடன், பரிசோதனை முடிவுகள் வரும்வரை காத்திருந்து, திரும்பவும் அடுத்த மாதிரிகளை கொண்டு சேர்க்கும் பணியை, கடமையுணர்ச்சியுடன் மேற்கொண்டார். ஒருநாள் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, ‘‘மேடம்.. எனக்கு நடுக்கமா இருக்கு.. இன்னிக்கு சாம்பிள்ஸ்ல ஆறு பாசிடிவ்” என்ற தகவலைக் கூறினார்.

இந்தியர்கள் இயல்புமாறா வேற்றுப்பாலின உணர்வு கொண்டவர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்பவர்கள், கடவுளுக்கு அஞ்சுபவர்கள், அதனால் எய்ட்ஸ் இங்கு வர வாய்ப்பேயில்லை என்று பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், இதனை உறுதி செய்ய தனது அமெரிக்கத் தொடர்புகளைப் பயன்படுத்தி, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில், ‘‘வெஸ்டர்ன் ப்ளாட்” பரிசோதனை மூலம் ஒன்றுக்குப் பத்து முறை ஊர்ஜிதம் செய்த பிறகே தகலை வெளியிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார் டாக்டர் சுனிதி சாலமன்.

ஐசிஎம்ஆர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் இது குறித்துப் பகிர்ந்த மறுநாள் நாளேடுகளில், ‘‘இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி. கண்டறிந்த பெண் மருத்துவர்கள்” என்று டாக்டர் சுனிதி மற்றும் டாக்டர் நிர்மலாவின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதற்குப்பின் பல சவால்களை, கண்டனங்களை சந்திக்க நேர்ந்ததையும், ‘‘எங்களுக்கும் எய்ட்ஸ் தொற்றியிருக்கலாம் என்று விலகியவர்களும் இருந்தனர்” என்று புன்னகைக்கிறார் சுனிதி.

அடுத்து அவரெடுத்த முடிவுகள் மிக முக்கியமானது. 1986ல், ‘‘தமிழகத்தில் எய்ட்ஸ் நோய்நிகழ்வு ஆராய்ச்சி” என்ற ஒன்றை ஆரம்பித்து, அதில் தான் பணிபுரிந்த எம்எம்சி அரசு மருத்துவக் கல்லூரியில் எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையத்தை ஏற்படுத்தியதோடு, கல்லூரிகளிலும், விடுதிகளிலும், கருத்தரங்குகளிலும், பத்திரிகைகளிலும் தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் டாக்டர் சுனிதி. 1987ல் இந்தியாவில் மேலும் 135 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அதிகரித்த எய்ட்ஸ் பாதிப்பு 2009ம் ஆண்டில் 23.95 லட்சம் என்ற உச்சக்கட்டத்தை அடைந்தது. ஒருசமயத்தில் 13 வயதே நிரம்பிய சிறுமி கடத்தப்பட்டு, மகாநதி படம் போல பாலியல் தொழில் சார்ந்த விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதோடு, அந்தச் சிறுமி எய்ட்ஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதையும் கண்ட சுனிதி, அதுவரை அந்த நோய் ஒழுக்கமற்றவர்களுக்கானது என்ற எங்கள் மனநிலையையும் மாற்றியது. அச்சிறுமிக்கு சிகிச்சை அளித்ததுடன், அவள் போல பாதிப்படைந்த மற்றவர்களுக்கும் உதவ முடிவெடுத்தேன் என்கிறார்.

1993ல் தனது இல்லத்தில் ‘‘ஒய்ஆர்ஜி கேர்” எனும் தன்னார்வ அமைப்பை எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்காகத் துவக்கினார். இந்த எய்ட்ஸ் நோய் மருத்துவமனை இந்தியாவில் தொடங்கப்பட்ட முன்மாதிரி என்பதுடன், ஒரு சிறந்த முழுமையான எய்ட்ஸ் நோயாளிகளுக்கான தன்னார்வ அமைப்பாக தரமணியில் இயங்கத் தொடங்கியது. நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள், முறையான சிகிச்சைகள், நிதியுதவி, மாணவர்களுக்கு போதை நீக்கப் பயிற்சிகள், எதிர்காலத்திற்கான தொழிற்பயிற்சிகள் என, ஹெச்ஐவி தொற்றை நாடு எதிர்கொள்ளாத ஆரம்ப கட்ட காலத்தில், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பெரும் வழிகாட்டியாக விளங்கினார் டாக்டர் சுனிதி சாலமன்..

“தன் கணவர் மூலம் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகி கதறும் பெண்களைக் கண்டு நானும் அழுதிருக்கிறேன்” எனும் டாக்டர் சுனிதி, ஆயிரக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகளின் அச்சத்தையும், அழுகையையும், துயரத்தையும் போக்கினார் என்பதே நிதர்சனம். பாதிப்புக்குள்ளான பெண்களை மனதளவில் தைரியப்படுத்துதல், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் கருவில் வளரும் குழந்தை நோய் பாதிப்பின்றி பிறக்க சிகிச்சை, ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வு, எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமணப் பொருத்தம் எனத் தொடர்ந்து எச்ஐவி சார்ந்து இயங்கிக் கொண்டேயிருந்தார்.

தினம் 80 எய்ட்ஸ் நோயாளிகளை சந்திக்க நேர்ந்தது குறித்து வருந்தியவர், ஒருகட்டத்தில் தான் ‘‘எய்ட்ஸ் டாக்டர்” என்றே அறியப்பட்டதையும் நினைவுகூறுகிறார். எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தால் தனிமைப்படுத்தப்படுவதைக் கண்ட சுனிதி, மனிதர்களைப் போல மிருகங்கள் முகம் சுழிக்காது என்று கூறியுள்ளதுடன், தனிமையில் அவதிப்படும் நோயாளிகளுக்கு animal assisted therapy முறையில் மிருகங்களின் துணையை அறிமுகப்படுத்தினார்.

சர்வதேச நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்டர் சுனிதி, எச்ஐவிக்கான சிடி-4 எண்ணிக்கை எனும் முக்கியப் பரிசோதனையையும் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தினார். அத்துடன் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO), சர்வதேச எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (UNAIDS) ஆகியவற்றுடன் இணைந்து, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மருந்துகள் இலவசமாகக் கிடைக்க வழி செய்தார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள், தொடர்ந்து உழைத்த டாக்டர் சுனிதி சாலமன், தனது ஒய்ஆர்ஜி அமைப்பின் மூலம், எய்ட்ஸ் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, 300க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச அரங்குகளில் சமர்ப்பித்தார். இவற்றிற்கிடையே தனது கணவர் டாக்டர் சாலமன் விக்டர் இருதய அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கவும், மகன் டாக்டர் சுனில் சாலமன் பொது மருத்துவத்தில் சிறக்கவும் பெரிதும் துணை புரிந்தார் சுனிதி.

‘‘பணி ஓய்வு என்பதே எனக்கில்லை..” என்று பலமுறை பேட்டிகளில் கூறிய டாக்டர் சுனிதி, பணிபுரிந்து கொண்டிருந்த போதே, அவரது 76 வயதில், ஜூலை 28, 2015ல் கணையப் புற்றுநோய் காரணமாக இயற்கை எய்தினார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவருக்கு பத்ம விருதை மத்திய அரசு வழங்கி அவரின் மருத்துவப் பணியை கவுரவித்த அதேவேளை, டாக்டர் சுனிதி சாலமனின் அரும்பணிகள், ‘‘லவ் சிக்” எனும் ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. எச்ஐவி தொற்று என்பது மரணத்தைக் குறிக்கும் சொல் என்ற நிலையை முற்றிலும் மாற்றி, நோய் பரவலைக் கட்டுப்படுத்திய இன்றைய நிலைக்கு, டாக்டர் சுனிதி சாலமனின் பங்கு மிகவும் பெரியது என்பதை மறுக்கவே முடியாது..!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் பட்ஜெட்டில்… தீபாவளி ஃபேஷன் ஆடைகள்! (மகளிர் பக்கம்)
Next post பிரசவ கால வலிப்பு!! (மருத்துவம்)