உங்கள் பட்ஜெட்டில்… தீபாவளி ஃபேஷன் ஆடைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 48 Second

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கே நாட்கள் இருக்கும் நிலையில்… நம் பட்ஜெட்டுக்கு என்ன ஆடை இருக்கிறது என்று அனைவரும் கடைக் கடையாக ஏறி இறங்க ஆரம்பித்திருப்போம். நீங்க எந்த கடைக்கும் போக வேண்டாம், உங்களுக்கான பட்ஜெட் ஆடைகளை உங்களுக்கு என்றே ஃபேஷன் ஆடைகளை பிரத்யேகமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார், சௌந்தர்யா கணேசன். 23 வயது நிரம்பிய இவர் இந்தியா முழுவதும் இந்த பட்ஜெட் ஆடைகளை விற்பனை செய்து வருகிறார்.

‘‘நான் தில்லியில் படித்துக்கொண்டிருக்கும் போது, கல்லூரிக்கு விதவிதமான உடைகள் அணிய வேண்டும் என்று விரும்புவேன். ஆனால் நான் விரும்பும் உடைகள் அநியாய விலையில் விற்பனைக்கு இருக்கும். ஃபேஷனான ஆடைகள் அணிய வேண்டும் என்றால், அதற்கு அதிகமான விலை கொடுக்க வேண்டும். பட்ஜெட் உடைகளை வாங்க நினைப்பவர்கள் பழைய டிசைன் உடைகளைத்தான் வாங்க முடியும் அல்லது தரமற்ற உடைகளை வாங்க வேண்டி இருக்கும்.

இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று அலசிய போது, உற்பத்தியாளரிடமிருந்து ஆடைகளை எடுத்து, அதை விற்பனை செய்யும் போது, நடுவில் விற்பனை செய்பவருக்கு மட்டும் 70-80% லாபம் கிடைப்பது தெரிந்தது. இதில் எந்த தவறும் இல்லை என்ற போதும், இந்த பெரிய லாபத்திற்கு தான் மக்களின் பணம் செல்கிறது என தெரிந்தது. இந்த நடுவில் வரும் லாபத்தை கொஞ்சம் குறைத்தாலே உடை தயாரிப்பவருக்கும், வாங்குபவருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும். எனவே ‘வஸ்த்ரா பை செளந்தர்யா’ என்ற பெயரில் ஆன்லைன் ஃபேஷன் ஆடை விற்பனை தொழிலை 2018ல் தொடங்கினேன். இதில் நெசவாளரிடமிருந்து துணியை வாங்கி, டிசைன் செய்து ஆடைகளாக்கி விற்பனை செய்யும் போது அதிகபட்சமாக 12-14.5% லாபம் மட்டுமே நான் எடுத்துக்கொள்கிறேன். இதனால் குறைந்த விலைகளில் என்னால் உடைகளை விற்பனை செய்ய முடிகிறது” என்கிறார்.

ஜம்ப்சூட், கவுன், லெஹங்கா, குர்தி என பெண்களுக்கு அனைத்து விதமான ஆடைகளையும் சௌந்தர்யா விற்பனை செய்கிறார். இது தவிர ஆண்களுக்கென கார்ட்டூன் மற்றும் நகைச்சுவை டிசைன்களில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளையும் வடிவமைத்து வருகிறார். நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து இப்போது பண்டிகைகள் வருவதால், பெண்களுக்கான பல உடைகளை தினமும் தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

‘‘என்னுடைய நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அனைவருமே மாற்றுத்திறனாளிகள் அல்லது கணவனை இழந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெண்கள். இவர்களுக்கு ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஃபேஷன் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மலிவு விலை ஆடைகளை நான் அறிமுகப்படுத்தியுள்ளேன். பொதுவாகவே ஃபேஷன் நம் வாழ்க்கைக்கு ஒரு புது வெரைட்டியைக் கொடுத்து மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் பலரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ற ட்ரெண்டியான உடைகளை கல்லூரிக்கும் அலுவலகத்திற்கும் இனி அணிந்து செல்லலாம். நல்ல உடைகள் நம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்’’ என்று கூறும் சௌந்தர்யா சி.ஏ படித்து வருகிறார்.

‘‘என்னுடைய ஆடைகளை பெரும்பாலும், நான் இன்ஸ்டாவில் தான் பதிவு செய்கிறேன். அதில் அந்த ஆடையைப் பற்றி முழு விவரம் மற்றும் விலை அனைத்தும் இருப்பதால், அவரவரின் பட்ஜெட்டிற்கு ஏற்ப தேர்வு ெசய்து வாங்கலாம். ஒருவர் தன் பிறந்தநாளுக்கு, பல கடைகள் தேடி அவரின் பட்ஜெட் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற உடையினை எங்க இணையத்தில் பார்த்து வாங்கியது குறித்து நன்றி தெரிவித்திருந்தார். இன்னொருவர் தன் அம்மாவிற்கு குறைந்த விலையில் தரமான ஆடைகளை பரிசாக கொடுக்க முடிந்ததை எண்ணி மனம் நெகிழ்ந்தார். இது போன்ற சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றுவது தான் எங்களின் நோக்கம். எல்லாவற்றையும் விட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம் என்று நினைக்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது’’ என்கிறார் சௌந்தர்யா.

‘‘எனக்கு மேல்தட்டு மக்களிடம் வியாபாரம் செய்ய விருப்பம் இல்லை. அவர்களுக்கென ஏற்கனவே பல விற்பனையாளர்கள் மார்க்கெட்டில் இருக்கிறார்கள். சில ஆயிரங்கள் அதிகம் கொடுத்து ஒரு உடையை வாங்குவதால் பெரிய லாபமோ இழப்போ இல்லை. ஆனால் நம் நடுத்தர மக்களுக்கு ஒவ்வொரு 100 ரூபாயும் முக்கியம். எனவே, அவர்களை மனதில் கொண்டே இந்த ஆடைகளை உருவாக்குகிறோம். பலர், தாங்கள் தொழிலாளிகளுக்கு அதிக லாபம் கொடுப்பதால் அதிக விலையில் விற்பதாக கூறுவார்கள். ஆனால் கடைசியில் லாபம் தொழிலாளியைவிட முதலாளியையே போய் சேரும்.

ஃபேஷனான உடைகளை அணிய வேண்டும் என்றால் அதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டும் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. பலர் எப்படி இவ்வளவு குறைந்த விலையில் உங்களால் உடைகளை கொடுக்க முடிகிறது என்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே நீங்கள் விரும்பும் ட்ரெண்டியான ஃபேஷன் உடைகளை உங்கள் பட்ஜெட்டிற்குள் வாங்க முடியும். மக்களுக்கு இந்த உண்மையைதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக புரிய வைக்க முயற்சித்து வருகிறேன்.

நான் பொதுவாக பிளாக் பிரின்டிங் அல்லது மெஷின் பிரின்டிங் உடைகளைதான் டிசைன் செய்து வந்தேன். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு, நேரடியாக நெசவு செய்பவர்களை சந்தித்து, அங்கேயே அவர்களிடம் துணியை வாங்கி அதை வடிவமைத்துள்ளோம். இதனால் ஒரு கணிசமான தொகை நேரடியா நெசவாளர்களுக்கு செல்வதால் அவர்களுடைய வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும்.

இந்த இரண்டு ஆண்டுகளில் எங்களுக்கு சவாலாய் இருக்கும் ஒரே விஷயம் நேரம்தான். நாங்கள் குறைந்த அளவில் துணிகளை வடிவமைப்பதால், ஒரு முறை வாடிக்கையாளர் ஆர்டர் கொடுத்த பின்புதான் அவர்களின் தேவைக்கேற்ப டிசைனிலும், அளவிலும் ஆடையை தயாரிப்போம். மேலும், எங்களுடைய ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகளாகவோ அல்லது கற்றல் திறன் குறைந்தவர்களாகவோ இருப்பார்கள். அவர்களால் மற்றவர்களைப் போல வேலை செய்வதில் சாத்தியம் இல்லை. இதனாலும் உடையை டெலிவரி செய்வதில் பத்து நாட்கள் சில சமயம் இருபது நாட்கள் கூட ஆகலாம். அப்படி இருக்கும் போது அதை முன் கூட்டியே தெரிவித்தும் விடுவோம். இருந்தாலும் வாடிக்கையாளர்களை அவ்வளவு நாட்கள் காக்க வைப்பது சரியில்லை என்பதால் குறைந்தது ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் ஆடைகளை டெலிவரி செய்ய முயற்சித்து வருகிறோம்.

இது இன்ஸ்டாகிராம் தொழிலாக இருந்தாலுமே தினமும் 10-7 மணி வரை வாடிக்கையாளர் சேவைகளையும் வழங்கி வருகிறோம். என்னிடம் இருபது டெய்லர்கள் இருக்கிறார்கள். அனைத்து உடைகளையும் இது வரை நான் மட்டுமே வடிவமைத்து வருகிறேன். எங்களுடைய நோக்கமே பட்ஜெட் விலையில் ஃபேஷன் உடைகளை வழங்க வேண்டும் என்பதால், தொடர்ந்து ட்ரெண்டிங்கிலிருக்கும் உடைகளை அறிமுகப்படுத்தி எங்களுடைய டிசைன்களை புதுப்பித்துக்கொண்டே வருகிறோம்.

தினமும் ஒரு புதிய டிசைன் ஆடையை அறிமுகப்படுத்துவதுதான் என் குறிக்கோள். என்னுடைய தயாரிப்பு நிலையம் ஜெய்ப்பூரில்தான் இருக்கிறது. நான் சேலத்தில்தான் தங்கியுள்ளேன். என்னுடைய லட்சியம் சி.ஏ முடிப்பதுதான், நடுவில் ஆரம்பித்த வஸ்த்ரா திடீரென வளர்ந்து இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 72 ஆயிரம் ரசிகர்களை கொண்டுள்ளது. இதனை ஆன்லைனிலிருந்து அப்படியே ஆஃப்லைனில் ஒரு சிறிய கடையாக கொண்டுவருவதைப் பற்றி பேச்சு வார்த்தையும் நடந்துகொண்டிருக்கிறது” என்கிறார் செளந்தர்யா.

செளந்தர்யா நடுத்தர மக்களை நோக்கி தன்னுடைய தொழிலை ஆரம்பித்திருந்தாலும், பல நட்சத்திரங்களும் இவரது ஆடைகளை விரும்பி வாங்குகிறார்கள். ஏற்கனவே ஆண்களுக்கும் பெண்களுக்குமான உடைகளை விற்பனை செய்து வரும் இவர், விரைவில் குழந்தைகளுக்கான உடைகளையும் முழு வீச்சில் அறிமுகப்படுத்த உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரண காமெடி வயிறு குலுங்க சிரிங்க 100 % சிரிப்பு உறுதி!! (வீடியோ)
Next post வெளித்தெரியா வேர்கள் 22-டாக்டர் சுனிதி சாலமன் !! (மகளிர் பக்கம்)