எண்டோமெட்ரியோசிஸ் என்னும் கருப்பை அகப்படலம் நோய்!! (மருத்துவம்)

Read Time:16 Minute, 35 Second

பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் இயற்கை நிலைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் நாம் ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியம் என்ற தலைப்பில் பார்த்துக் கொண்டே வருகிறோம். அத்தகைய பெண்களுக்கான நோய்களில் மிகவும் முக்கியமான ஒன்று எண்டோமெட்ரியோசிஸ். இது தமிழில் கருப்பை அகப்படல நோய் என்று அழைக்கப்படுகிறது.இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் முதலில் எண்டோமெட்ரியம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்எண்டோமெட்ரியம் என்பது மெல்லிய சவ்வு போன்ற கருப்பையின் உள்பகுதியில் இருக்கக்கூடிய வளரும் திசு.

இது மாதவிடாய் சுழற்சியின் போது வளர்ந்து அங்கு ஒரு கரு உருவாகாத சமயத்தில் அது உடைந்து துண்டுகளாக மாதவிடாய் ரத்தப் போக்கின் மூலம் மாதா மாதம் வெளியேறிவிடும். பெண் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிரஸ்டிரோன் ஆகியவை இந்த எண்டோமெட்ரியல் திசு வளருவதற்கு உதவுகிறது. ஆக, ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் எண்டோமெட்ரியம் உருவாகுவதும் செயல்படுவதும் ஹார்மோன்களின் உதவியால் தான் நடக்கிறது, பல மாற்றங்களை சந்திக்கிறது.

மாதவிடாய் சுழற்சியிலும் சினைமுட்டை உருவாகும் போதும் ஹார்மோன்களின் அளவு மாறும் போதும் கருமுட்டை கர்ப்பப்பையில் பொருந்தும் போதும் எண்டோமெட்ரியம் திசுவின் அளவும் செயல்பாடும் மாறிக்கொண்டே இருக்கும். கருமுட்டையும் விந்தணுவும் சேராத நிலையில் இந்த மாற்றங்கள் உதிர்ந்து ரத்தப் போக்காக வெளியேறும்போது இந்த திசுக்களும் ரத்தப் போக்கில் வெளியேறிவிடும்.

சில நேரங்களில் சில பெண்களுக்கு இந்த எண்டோமெட்ரியல் திசுவானது கருப்பையின் உள் சுவரில் வளராமல் பிற பகுதிகளான கருப்பை குழாய் (ஃபெலோப்பியன் குழாய்), கருமுட்டை (ஓவரிகளிலும்) அல்லது மற்ற இடங்களிலோ அடிவயிற்றிலோ வளரும்போது அதை நாம் எண்டோமெட்ரியோசிஸ் என்று அழைக்கிறோம். சில நேரங்களில் மிகச் சிலருக்கு மூளை, இடுப்பு, கல்லீரல் ஆகிய இடங்களிலும் இந்நோயானது உருவாகின்றது. மிகவும் அரிதாக செரிமானப் பாதை, நுரையீரல் மற்றும் இதயத்தை சுற்றி கூட இது வளர்ந்து பல்வேறுவிதமான உபாதைகளை பெண்களுக்கு தரலாம்.

எண்டோமெட்ரியோசிஸ் வியாதியில் கருப்பைக்கு வெளியே வளரும் எண்டோமெட்ரியல் திசுவானது மாதந்தோறும் மாற்றம் அடைவதால் பல்வேறு தொல்லைகளை தருகிறது. பொதுவாக, கருப்பையில் வளரும் எண்டோமெட்ரியல் திசுவானது மாதவிடாய் ரத்தப் போக்கின் மூலம் வெளியேறிவிடும். ஆனால் எண்டோமெட்ரியோசிஸ் நோயின் காரணமாக உருவாகும் இந்தத் திசுவானது, உடலிலேயே தங்கி, வீக்கத்துக்கு வழிவகுத்து சிதைவடையும் வாய்ப்பையும் உருவாக்குவது உண்டு.

இன்று இந்தியாவில் மட்டும் 20 சதவீதம் வரையிலான பெண்கள் இந்த நோயால் அவதிக்குள்ளாகிறார்கள். இது பொதுவாக 25 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்படுகின்றது. வெள்ளை இனப் பெண்களையே அதிகம் பாதிக்கின்றது, வெள்ளை நிறத்தை ஒப்பிடும்பொழுது கருப்பினத்தவரான ஆப்பிரிக்க, அமெரிக்க மற்றும் ஆசிய பெண்களுக்கு குறைவாகவே ஏற்படுகின்றது. உடல் எடை மெலிந்து காணப்படும் பெண்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பெண்களுக்கும் இந்நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. மாதவிடாய் நின்ற, வயதான பெண்களுக்கு இந்நோயின் தாக்கம் குறைவாகவே உள்ளது. மேலும், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களில் 20 முதல் 50 சதவீதத்தினர்களுக்கு அதற்கான காரணமாக பெரும்பாலும் எண்டோமெட்ரியோசிஸ் நோயாக இருக்கிறது.

காரணங்கள்

எண்டோமெட்ரியோசிஸ் நோய் உருவாக பல காரணங்கள் உண்டு என்று அறிவியல் கூறுகிறது. அவை ;

*பிற்போக்கு மாதவிடாய் – மாதவிடாயில் ஏற்படும் ரத்தப்போக்கு ஃபலோபியன் குழாய்க்குள்ளோ (Fallopian tube) அல்லது ஓவரிக்குள்ளோ (தலைகீழ் திசையில்) பின்னோக்கி பாயும் போது, எண்டோமெட்ரியல் செல்கள் ஃபலோபியன் குழாய்க்குள்ளோ அல்லது ஓவரிக்குள்ளோ இடம்பெயரலாம்.

*அறுவைசிகிச்சையின் மூலம் உட்பொருத்துதல் – சிசேரியன் பிரசவத்தின் போதோ அல்லது ஹிஸ்டெரோஸ்கோபியின் (Hystereroscopy) போதோ எண்டோமெட்ரியல் திசுக்கள் இடுப்பு உறுப்புகளுக்குள் இடம்பெயரலாம்.

*பெரிடோனியல் செல் மாற்றம்(Peritoneal cell transformation) – சில நோயெதிர்ப்பு சிக்கல்கள் அல்லது ஹார்மோன்களின் காரணமாக, பெரிடோனியல் செல்கள் எண்டோமெட்ரியல் திசுக்களாக மாறுதல்.

*எண்டோமெட்ரியல் செல் போக்குவரத்து – (Endometrial cell transport) எண்டோமெட்ரியல் செல்கள் ரத்தத்தினாலோ அல்லது நிணநீர் வழியாகவோ மற்ற உறுப்புகளுக்குள் தங்குதல்.

*எம்பிரியோனிக் செல் மாற்றம் (Embryonic cell transformation)- பருவமடைதலின் போது, ஈஸ்ட்ரோஜன் காரணமாக, எம்பிரியோனிக் செல்கள் எண்டோமெட்ரியல் செல்களாக மாற்றம் பெறுதல்.

எண்டோமெட்ரியோசிஸின் அறிகுறிகள்

*எண்டோமெட்ரியோசிஸின் அறிகுறிகள் எண்டோமெட்ரியல் திசு வளரும் பகுதியையும் சார்ந்திருக்கின்றது.

எண்டோமெட்ரியோசிஸின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

*இந்நோயின் அறிகுறிகள் ஆரம்ப காலங்களில் தெரிவதில்லை. வலி என்பது மிகவும் பொதுவான அறிகுறியாகும், ஆனால் வலியின் தீவிரம் எப்போதும் நோயின் அளவோடு தொடர்
புடையதாக இருக்காது.

*மாதவிடாயின் போது அடிவயிற்றிலோ அல்லது இடுப்பு பகுதியிலோ ஏற்படும் கடுமையான வலி (டிஸ்மெனோரியா – Dysmenorrhea).

*உடலுறவின் போது ஏற்படும் வலி (டிஸ்பாரூனியா Dyspareunuia)

*மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசாதாரணமான அதிக அளவு ரத்தப்போக்கு (மெனோரோகியா – Menorrhagia) அல்லது நீண்டநாள் (மெட்ரோராஜியா -Metrorrhagia) ரத்தப்போக்கு.

*நீண்ட கால முதுகு மற்றும் இடுப்பு வலி

*மலட்டுத்தன்மை.

*வலியுடன் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல்.

*குமட்டல் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல்

*மலம் அல்லது சிறுநீரில் ரத்தம்

*களைப்பு (குறிப்பாக மாதவிடாய் காலத்தில்)

*மன அழுத்தம்.

எண்டோமெட்ரியோசிஸ் ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கும். கர்ப்பம் அறிகுறிகளிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும். ஒத்த அறிகுறிகளுடன் கூடிய நோய்கள் எண்டோமெட்ரியோசிஸைக் கண்டறிவது கடினம். இதற்கு ஒரு காரணம், மற்ற மருத்துவ நிலைகளிலும் இதே போன்ற அறிகுறிகள் இருப்பதுதான்.

*இடுப்பு அழற்சி நோய்
*கருப்பை நீர்க்கட்டிகள்
*கருப்பை புற்றுநோய்எண்டோமெட்ரியோசிஸினால் வரும் சிக்கல்கள் பின்வருமாறு
*கருவுறாமை
*கருப்பை புற்றுநோய்
*கருப்பை நீர்க்கட்டிகள்
*வீக்கம்
*ஒட்டுதல் வளர்ச்சி (Adenomyosis)
*குடல் மற்றும் சிறுநீர்ப்பை சிக்கல்கள்.

அறிகுறிகளைக் கண்காணித்தல் மற்றும் மருத்துவ உதவியை நாடுவது நீண்டகால சிக்கல்களைத் தடுக்க உதவும். கடுமையான வலி அல்லது எதிர்பாராத ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

எண்டோமெட்ரியோசிஸ் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறதுஆயுர்வேதத்தின் படி நம் உடம்பில் உள்ள அனைத்து அசைவுகளும் வாத தோஷத்தால் ஏற்படுகிறது. அதில் அபான வாதமானது சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், வாய்வு, மாதவிடாயின் போது ரத்தத்தை வெளியேற்றுவது, பிறக்கும் போது கருவை வெளியேற்றுவது, ஆண்களுக்கு விந்தணுவை வெளியேற்றுவது ஆகியவையாகும். அதன் இயல்பு நிலை திசை கீழ்நோக்கி உள்ளது.

ஒரு பெண் தன் உணவில், வாழ்க்கை முறையில் அபான வாதத்தை குறைக்கும் சில விஷயங்களை செய்யும்போது அது கீழ்நோக்கி செல்வதற்குப் பதிலாக மேல்நோக்கி நகரத் தொடங்குகிறது. இதனால் மாதவிடாயின் போது ரத்தம் யோனி வழியாக வெளியே வருவதற்கு பதிலாக இடுப்பு குழியில் மேல்நோக்கி நகர்கிறது. இதன் விளைவாக, எண்டோமெட்ரியம் என்று அழைக்கப்படும் திசுவானது, குடல் மற்றும் இடுப்பு புகளை அடைந்து பாதிப்புக்களை உண்டாக்குகிறது. இறுதியில்எண்டோமெட்ரியம் அசாதாரண இடங்களில் வளரத் தொடங்கி மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு உண்டாகும்போது இது ஒட்டுதல், வீக்கம் மற்றும் கடுமையான வலியை உருவாக்குகிறது.

ஆயுர்வேதத்தின் படி காரணங்கள்

*நீண்ட நேரம், குறிப்பாக மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் அல்லது வாய்வுக்கான இயற்கை தூண்டுதல்களை அடக்குதல்
*அடிக்கடி அல்லது நாள்பட்ட மலச்சிக்கல்
*நீண்ட உழைப்பு
*உலர்ந்த, கசப்பான, குளிர்ந்த உணவுப் பொருட்களை உண்ணுதல்
*இரவு வெகுநேரம் விழித்திருத்தல், அதிகாலையில் எழுந்திருத்தல் மற்றும் பகல்நேர தூக்கம்
*உடற்பயிற்சியின்மை
*சாப்பாட்டு நேரத்தை முறையாக வழக்கப்படுத்தாமை.

ஆயுர்வேதத்தில் இந்நோயானது ஆசைய அபகர்ஷ கதி என்று அழைக்கப்படுகின்றது. இந்நோய்க்கு வாதரோக சிகிச்சை, ரத்த பிர சாதன சிகிச்சை, குல்ம சிகிச்சை
ஆகியவற்றை செய்யலாம்.

சிகிச்சை

நவீன அறிவியல் பெரும்பாலும் எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகளிலிருந்து விரைவாக நிவாரணம் அளிக்கக்கூடிய சிகிச்சைகளை மட்டுமே பரிந்துரைக்கிறது. ஆனால் இந்த கோளாறுக்கான மூல காரணத்தை அது அகற்றாது.எனவே…. எண்டோமெட்ரியோசிஸ், பிசிஓடி, நீரிழிவு, ஆஸ்துமா அல்லது கீல்வாதம் போன்ற நவீன காலக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேதம் உலகின் மிகச் சிறந்த மருத்துவ விஞ்ஞானமாக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆயுர்வேத மூலிகைகள் எந்த நோயின் ஆழமான மூல காரணத்தையும் நீக்குகிறது மற்றும் இயற்கையாக உடலில் உயிரியல் சமநிலையை மீட்டெடுக்கிறது.

இந்த நோய்க்கு ஆயுர்வேத முறையின்படி உள் மருந்துகளும் வெளிப்புற பஞ்சகர்மா சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. கசாய மருந்துகளான பாரங்கியதி கசாயம், சித்ரக கிரந்த்யாதி கசாயம், சப்த சார கசாயம், சுகுமாரம் கஷாயம் இவற்றில் ஏதாவது ஒன்றை வெந்நீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம். காஞ்சனார குக்குலு, சிவ குளிகா, சந்திரபிரபா வடி, மானச மித்ர வடகம், குக்குலு பஞ்சபல சூர்ண மாத்திரை, ஹிங்கு வசாதி சூரண மாத்திரை இவற்றில் ஏதேனும் ஒன்றை காலை, மாலை உணவிற்குப்பின் எடுத்துக் கொள்ளலாம்.

தைல மருந்துகளான ஹிங்கு திரிகுண தைலம், தான்வந்தர தைலம், சதக்வாதி தைலம் , பலா தைலம் ஆகியவற்றை எடுத்து பாலுடன் சேர்த்து காலை, மாலை உணவிற்கு பின் எடுத்துக்கொள்ளலாம். நெய் மருந்துகளான தாடிமாதி நெய், கல்யாணக கிருதம் ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

ரத்தப்போக்கு உள்ள காலங்களில் திராயந்தியதிக்ருதம் நல்ல பலன் அளிக்கின்றது. தந்திஹரிதகி லேகியம், சுகுமார லேகியம் ஆகியவற்றை தினமும் காலை மாலை உணவிற்குப் பின் எடுத்துக்கொள்ளலாம். அரிஷ்ட மருந்துகளான லட்சுமண அரிஷ்டம், ஜீரகாரிஷ்டம், குமாரி ஆசவம், லோகாசவம், தான்வந்தர அரிஷ்டம் முதலானவற்றை உணவிற்குப் பின் காலை, மாலை எடுத்துக் கொள்ளலாம்.

பஞ்சகர்ம சிகிச்சையாக வஸ்தி, விரேசனம், நஸ்யம், பிச்சு முதலான சிகிச்சைகள் அளிக்கலாம். மதுதைலிக வஸ்தி இந்நோயில் மிகவும் நல்ல பலனளிக்கும். ஏரண்டதைலம் அல்லது மலைவேம்பு தைலம் தினமும் 10 மில்லி அளவு பாலுடன் கலந்து விரேசனமாக கொடுக்கலாம். யோனி பிச்சு சிகிச்சையானது தான்வந்தர தைலம் அல்லது பலா அஸ்வகந்தாதி தைலம் கொண்டு செய்ய நல்ல பலன் அளிக்கும்.மேற்சொன்ன ஆயுர்வேத மருந்துகளை முறையாக ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்வதே உகந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் தீம்களில் காபி கோப்பைகள்! (மகளிர் பக்கம்)
Next post உள்ளாடை நனைகிறதே… உறக்கம் குறைகிறதே..! (மருத்துவம்)