உள்ளாடை நனைகிறதே… உறக்கம் குறைகிறதே..! (மருத்துவம்)

Read Time:14 Minute, 10 Second

வயதான காலத்தில் மூப்பின் காரணமாக ஆண், பெண் இருபாலருக்கும் உடலிலும் சரி, மனதிலும் சரி சிரமம் தரும் பிரச்னைகள் வருவது இயற்கை. அதில் ஒன்று, சிறுநீர்க் கசிவு. இந்தப் பாதிப்பின் காரணமாக அடிக்கடி உள்ளாடை நனைந்து, உறக்கம் குறைந்து அவதிப்படுவோர் அதிகம். இவர்களின் உடலில் சுத்தமும் சுகாதாரமும் பாதிக்கப்படுவதால் அருகில் இருப்பவர்கள் இவர்களை ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அப்போது இவர்கள் அவமானப்பட்டு அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சரியாக வளர்ச்சி அடைந்த ஒரு சிறுநீர்ப்பை அதிகபட்சமாக 850 மில்லி சிறுநீரைத் தாங்கும்.வழக்கத்தில், சிறுநீரானது 450 மில்லியைத் தாண்டியதும் சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும். அப்போது பலரும் சிறுநீர் கழித்துவிடுவார்கள். அல்லது அடக்கிக்கொள்வார்கள். சிலருக்கு சிறுநீரை அடக்க முடியாது. அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே சிறுநீர் சொட்டடிக்கும். இதைத்தான் ‘சிறுநீர்க் கசிவு’ (Urinary incontinence) என்கிறோம்.

என்ன காரணம்?

சிறுநீர்ப்பையில் ‘ஸ்பிங்க்டர்’ (Sphincter) எனப்படும் இரு வால்வுகள் உள்ளன. இவை பலவீனம் அடைவது சிறுநீர்க் கசிவுக்கு ஒரு முக்கியக் காரணம். கோட்டைக் கதவுபோல் வால்வுகள் வலுவாக இருக்க வேண்டுமானால், அவற்றைச் சுற்றியுள்ள சிறுநீர்ப்பை தசைகளும், இடுப்புக்குழித் தசைகளும் துவளாமல் இருக்க வேண்டும். வயோதிகம், ஸ்ட்ரெஸ், நோய் போன்ற பல சங்கதிகள் இந்தத் தசைகளின் விறைப்புத் தன்மையைப் பாதித்து பலவீனமாக்குகின்றன.

இதனால் சிறுநீர்ப்பை வால்வுகளும் வலுவிழந்து, விரிசல்விட்ட தொட்டியில் தண்ணீர்க் கசிவு ஏற்படுவதுபோல சிறுநீர்க் கசிவுக்கு வழிவிடுகிறது. கர்ப்பம், குடல் கட்டிகள், மலச்சிக்கல் என ஏதாவது ஒரு காரணத்தால் சிறுநீர்ப் பையில் அழுத்தம் அதிகரிப்பதாலும் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. சர்க்கரை நோய், சிறுநீர்த் தொற்று, சிறுநீர்த் துவாரத்தில் பிறவிக்கோளாறு, முதுகு மற்றும் மூளை தொடர்புடைய நோய்கள், அல்சைமர் எனும் ஞாபக மறதி போன்ற காரணங்களாலும் இது ஏற்படலாம்.

சிறுநீர்க் கசிவில் பல வகைகள் உண்டு. பெண்களிடம் காணப்படும் சிறுநீர்க் கசிவுக்கு ‘ஸ்ட்ரெஸ் கசிவு’ (Stress incontinence) என்று ஒரு தனிப்பட்ட பெயரே உண்டு. பெயரில் ‘ஸ்ட்ரெஸ்’ இருப்பதால், இது மன அழுத்தத்தால் வருகிறது என நினைத்துவிடாதீர்கள். இரண்டுக்கும் தொடர்பில்லை. இது பெண்களுக்கு ஏற்படுவது தனி வழி. மிகக் குறைந்த இடைவெளியில் அடிக்கடி குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு இடுப்புக்குழித் தசைகள் பலவீனம் அடைந்து சிறுநீர்க் கசிவு ஏற்படுவது ஒரு வழி. இதே காரணத்தால் இரண்டுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்களுக்கு ஏற்படுவது அடுத்த வழி.

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு சில ஹார்மோன்களின் செயல்பாடு குறைவதும், அதனால் சிறுநீர்ப்பைத் தசைகளும் இடுப்புக்குழித் தசைகளும் வலு இழந்துபோவதும் இயல்பு. இதன் விளைவாக இவர்களுக்குசிறுநீர்க் கசிவு ஏற்படுவது மரபு. உடற்பருமன் உள்ள பெண்களுக்கு வயிற்றில் அழுத்தம் அதிகரிப்பதால், அது சிறுநீர்ப்பையை அழுத்தி இதே பிரச்சினையை உண்டாக்குகிறது. கனமான பொருட்களைத் தூக்கும்போது, அடிவயிற்றில் ஏற்படும் அழுத்தம் காரணமாக, சிறுநீர்ப்பை அழுத்தப்பட்டு சிறுநீர் கசியவும் வாய்ப்பு உண்டு.

ஆண்களில் புராஸ்டேட் வீக்கம் / புற்றுநோய் இருப்பவர்களுக்கு சிறுநீர்ப்பை வால்வுகள் அழுத்தப்பட்டு சிறுநீர் கசியும். முதுகில் ஏற்படும் விபத்து மற்றும் பிறவிக் கோளாறு காரணமாக சிறுநீர்ப்பைக்கு வரும் நரம்பு பாதிக்கப்பட்டாலும் இந்தத் தொல்லை தொடரும். சில சர்ஜரிகளாலும் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் கருப்பை அகற்றும் சர்ஜரி, ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் புராஸ்டேட் நீக்கம் ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

நண்பர் ஒருவருக்கு ஆஸ்துமா அலர்ஜி உண்டு. காலையில் எழுந்ததும் குறைந்தது 100 தும்மல் போடுவார். பகல் முழுவதும் இருமுவார். சித்தா, ஆயுர்வேதம் என மாதம் ஒரு சிகிச்சை எடுப்பார். ‘இதற்கு சரியான சிகிச்சை எடுங்கள்’ என்று பலமுறை ஆலோசனை சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் தும்மும்போதும் இருமும்போதும் அவருக்கு சிறுநீர் சொட்டு விட்டதும் என்னிடம் வந்தார். ‘செயற்கை ஸ்பிங்க்டர்’ பொருத்திய பிறகுதான் அவருடைய பிரச்னை சரியானது.

வாட்ஸ் அப்பில் வடிவேல் ஜோக்கைக் கேட்டு விலா நோக சிரிக்கும்போதும், ஜிம் போன்ற கடுமையான உடற்பயிற்சிகள் செய்யும்போதும், ஏன்… தாம்பத்திய உறவின்போதுகூட இது ஏற்படுவதை அனுபவத்தில் கண்டிருப்பீர்கள். ஆனால், இந்தப் பிரச்னையை வெளியில் சொல்ல வெட்கப்படுவதால், ஆரம்பநிலையில் சிகிச்சைக்கு வருபவர்கள் மிகவும் குறைவு.அதிலும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லவே இல்லை. இதனால், மாத்திரைகளிலும் பயிற்சிகளிலும் குணமாக வேண்டிய பிரச்சினை சர்ஜரியில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது என்பது கசப்பான உண்மை.

சரி, இதற்கு என்ன பரிசோதனை?

வயிற்றை அல்ட்ரா சவுண்ட் எடுத்துப் பார்த்து சிறுநீர்ப்பையில் உள்ள பிரச்னையை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். இதில் காண முடியாத பிரச்னைகளை ‘சிஸ்டோஸ்கோப்பி’ மூலம் நேரில் காணலாம். அடுத்து, வளைகுழாய் ஒன்றின் வழியாக ஒரு சாயத்தை சிறுநீர்ப்பைக்குள் செலுத்தி, தொடர்ச்சியாக சில எக்ஸ்-ரே படங்கள் எடுத்துப் பார்க்கும் பரிசோதனை ஒன்றும் (Voiding Cysto-urethrography) இருக்கிறது. இதன் மூலம் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் எவ்வளவு தங்கினால் பிரச்சினை வருகிறது என்பதைத் துல்லியமாகத் தெரிந்து அதற்கேற்ப சிகிச்சை தர முடிகிறது.

என்ன சிகிச்சை?

ஆரம்பநிலையில் உள்ள சிறுநீர்க் கசிவுக்கு உங்கள் குடும்ப மருத்துவரே சிகிச்சை தர முடியும். காரணங்கள் ‘கனமாக’ இருந்தால், சிறுநீரகச் சிறப்பு மருத்துவரிடம் அனுப்புவார். பெண்களிடம் இந்தப் பிரச்னை அதிகமாகக் காணப்படுவதால், இப்போது ‘யூரோ கைனகாலஜிஸ்ட்’ (Urogynaecologist) என்று அழைக்கப்படும் சூப்பர் மகளிர் சிறப்பு மருத்துவரிடம் இவர்களை அனுப்புகிறார்கள்.

மூளை நரம்பு தொடர்பான நோய்கள் மற்றும் அல்சைமர் நோயுள்ளவர்களுக்கு அவ்வளவாக சிகிச்சை இல்லை. இவர்கள் ‘டைபர்’ பயன்படுத்திக்கொள்ளலாம். அடுக்குத் தும்மல் மற்றும் தொடர் இருமல் இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே அவற்றுக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பிரசவத்துக்குப் பிறகும் இடுப்புக்குழித் தசைகளும் சிறுநீர்ப்பைத் தசைகளும் துவண்டுவிடாமல் இருக்க பெண்களுக்கென ‘கேஜெல்’ (Kegel exercises) போன்ற தனிப் பயிற்சிகள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ‘வஜைனல் பெசரி’ (Vaginal pessary) என்று ஒரு சிறு வளையம் இருக்கிறது. இதை பெண்களின் சிறுநீர்த் துவாரத்தைச் சுற்றி வெளிப்பக்கத்தில் பொருத்திவிடுகிறார்கள். இது சிறுநீர்ப்பை வால்வைத் தாங்கிக்கொள்ள, வால்வு சிறுநீரை ஒழுகவிடாமல் பார்த்துக்கொள்கிறது.

இதை அடிக்கடி வெளியில் எடுத்து சுத்தப்படுத்த வேண்டியது முக்கியம். தவிர கொலாஜென் ஊசி மருந்துகளும், ஈஸ்ட்ரோஜன் சிகிச்சையும் சிலருக்குப் பலன் தருகின்றன. ஆனால், இவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டி வரும். இவற்றுக்கெல்லாம் சரியாகாதவர்களுக்கு சில சர்ஜரிகள் கைகொடுக்கின்றன. அவற்றை மேற்கொள்வதற்கு ‘யூரோ கைனகாலஜிஸ்ட்’களிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.சர்ஜரி செய்ய முடியாதவர்களுக்கும், வயோதிகம் மற்றும் நாட்பட்ட நோய்கள் காரணமாக மாதக்கணக்கில் படுக்கையில் கிடப்போருக்கும், மற்ற சிகிச்சைமுறைகளில் சிறுநீர்க் கசிவு சரியாகாதவர்களுக்கும் ‘கெதீட்டர்’ என்ற ரப்பர்குழாயைச் சிறுநீர்ப் பைக்குள் நிரந்தரமாக நுழைத்துவிடுவதுண்டு. இதை 2 வாரத்துக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால், பயனாளிக்கு சிறுநீர்த் தொற்று ஏற்படும். அது மறுபடியும் சிறுநீர்க் கசிவை ஏற்படுத்தும். ஆகவே, கெதீட்டர் விஷயத்தில் அதிக கவனம் தேவை!

தடுக்கும் வழிகள்!

* நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* உடல் எடையைப் பேணுங்கள்.
* புகை, மது இரண்டுக்கும் ‘நோ’ சொல்லுங்கள்.
* அளவோடு காபி அருந்துங்கள்.
* சிறுநீர் கழிக்கும் நேரத்தை முறைப்படுத்துங்கள்.
* தண்ணீர் மற்றும் திரவ உணவுகளின் பயன்பாட்டை சீர்படுத்துங்கள்.
* கனமான பொருட்களைத் தூக்காதீர்கள்.
* யோகா / தியானம் மூலம் மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* நீரிழிவு இருந்தால் ரத்த சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்துங்கள்.

உதவிக்கு வரும் செயற்கை ஸ்பிங்க்டர்!

சிறுநீர்க் கசிவு உள்ள ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் நவீன சர்ஜரி இது. இதில் பயன்படுத்தப்படும் கருவிக்குப் பெயர் TMOD (Tape Mechanical Occlusive Device). இதிலிருக்கும் செயற்கை ஸ்பிங்க்டரை சிறுநீர்ப்பையின் அடியில், உட்பக்கமாக, சிறுநீர் வெளியேறும் குழாயைச் சுற்றிப் பொருத்துகிறார்கள். இதனுடன் இணைந்த சுவிட்சை விரைப்பையில் (Scrotum) பொருத்துகிறார்கள்.
சாதாரணமாக இந்த ஸ்பிங்க்டர் மூடியபடி இருக்கும். பயனாளியின் சிறுநீர்ப்பை நிரம்பியதும், சிறுநீர் கழிக்கத் தோன்றும். அப்போது சுவிட்சை அழுத்திப்பிடித்துக் கொள்ளவேண்டும். ஸ்பிங்க்டர் திறந்து சிறுநீர் பிரியும். சிறுநீர் முழுவதும் வெளியேறி முடிந்ததும், சுவிட்சை அழுத்துவதை நிறுத்திவிட வேண்டும். இதனால் ஸ்பிங்க்டர் மீண்டும் மூடிக்கொள்ளும்; சிறுநீர்க் கசிவு ஏற்படாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எண்டோமெட்ரியோசிஸ் என்னும் கருப்பை அகப்படலம் நோய்!! (மருத்துவம்)
Next post உணவாலும் உறவு சிறக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)