கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 27 Second

மேக்ரோபயாட்டிக் டயட் என்ற பெயர் புதிதாக இருந்தாலும் இந்த டயட் பல்லாயிரம் வருடப் பழையது. ஆம்! ஜப்பானின் ஜென் புத்தமதச் சிந்தனைகளின் அடிப்படையில் உருவான உணவியல் முறை இது. ஜென் சிந்தனை மரபில் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளையும் பொருட்களையும் யின் மற்றும் யாங்க் என இரண்டாக நோக்கும் இருமை சிந்தனைமுறை உள்ளது. நமது வைச சித்தாந்தத்தின் சக்தி-சிவம் போன்றதொரு இருமை சிந்தனை முறை. யின் என்பது இருட்டு, எதிர்மறை, தேய்வு, பெண்மை என்ற குணங்களையும் யாங்க் என்பது வெளிச்சம், நேர்மறை, வளர்ச்சி, ஆண் தன்மை என்ற குணங்களையும் கொண்டதாகப் பார்க்கும் வழக்கம் ஜப்பானிலும் சீனாவிலும் உள்ளது. மனித உடல் உட்பட இப்பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் யின் மற்றும் யாங்க் குணங்கள் கொண்டவைதான். எனவே, இந்த இருமை குணங்களின் அடிப்படையில் உணவுப் பொருட்களையும் பிரித்து அவற்றை சரியான விகிதத்தில் கலந்து உண்ணும் முறையே மேக்ரோபயாட்டிக் டயட் எனப்படுகிறது.

இந்த மேக்ரோபயாட்டிக் டயட் அடிப்படையில் யின் மற்றும் யாங்க் 5:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்கிறார்கள். ஜப்பானின் புகழ்பெற்ற உணவியல் நிபுணரான மிஷியோ குஷி இந்த யின் மற்றும் யாங்க் உணவியலை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் முழுதும் பிரபலப்படுத்தினார். அவரின் மாணவரான ஜார்ஜ் ஓக்‌ஷாவா தனது ஆசானின் உணவுக் கொள்கையின் அடிப்படையில் இந்த மேக்ரோபயாட்டிக் டயட்டை வடிவமைத்தார். ஐரோப்பாவில் வசிக்கும் ஜப்பானியரான இவர் தனது ஃப்ரெஞ்ச் ஐரோப்பிய அடையாளத்தையும் குறிப்பிடும்விதமாக தனது பெயரின் முன்னொட்டில் ஜார்ஜ் என்ற பெயரை இணைத்திருக்கிறார்கள். ஜப்பானிய மொழியிலும் ஃப்ரெஞ்சிலும் சேர்த்து இதுவரை இரு நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் உருவாக்கிய மேக்ரோபயாட்டிக் டயட்டில் யின் மற்றும் யாங்க் ஆற்றல்களை 5:1 என்ற விகிதத்தில் சிறப்பாகப் பராமரிக்க பத்து அடிப்படை விதிகளை வகித்துள்ளார்.

அவற்றை முறையாகச் செயல்படுத்தினால், உடலின் ஆற்றல்கள் சமநிலையோடு இருப்பதோடு, உடல் ஆரோக்கியமடையும், நோய்கள் நெருங்காது, எடை சிறப்பாகப் பராமரிக்கப்படும் என்கிறார்கள். வெறுமனே எடைக்குறைப்புக்கான டயட்டாக மட்டும் இல்லாமல், முழுமையான ஆரோக்கியத்துக்கான வாழ்வியல் டயட் இது என்கிறார்கள். இருதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள்கூட இதனால் கட்டுப்படும் என்கிறார்கள். ஆனால், அமெரிக்க புற்றுநோய் மையம், ஐரோப்பிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் சொல்லியிருக்கின்றன. மறுபுறம் சில மருத்துவர்கள் உட்பட இதைப் பயன்படுத்தியவர்கள் சொல்லும் அனுபவ உண்மைகளிலிருந்தே சொல்வதாகச் சொல்கிறார்கள். புற்றுநோய், இருதய நோய் போன்ற பெரிய நோய்களைக் கட்டுப்படுத்துகிறதோ இல்லையோ இந்த டயட் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான அடிப்படைகளை உருவாக்குகிறது என்பதை பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த டயட்டின் அடிப்படைகள் என்னென்ன? இதில் உண்ண வேண்டிய, ஒதுக்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.

எக்ஸ்பர்ட் விசிட்

கொரோனா என்ற கொடூர அரக்கனுக்கு எதிராக மனித குலம் போராடிக்கொண்டிருக்கும் காலம் இது. மக்களுக்கு உணவு தொடங்கி பல விஷயங்களிலும் குழப்பங்கள், சந்தேகங்கள். இப்படியான சூழலில் ‘‘பிரிட்டிஷ் டயடீஷியன் அசோசியேஷன்” இந்த கொரோனா காலத்தில் உணவு தொடர்பான சில சந்தேகங்களுக்கு விளக்கங்களை அளித்துள்ளது. அவை இங்கே…

உணவின் மூலமாகவே என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்ள இயலுமா?

பொதுவாக, வெறுமனே உணவு அல்லது ஊட்டச்சத்து மாத்திரைகளால் நமது நோய் எதிப்பு சக்தியை அப்படி திடீரென உயர்த்திக்கொள்ள இயலாது. மேலும்,
அப்படி உயர்த்தினாலும் கொரோனா போன்ற நோய்க் கிருமிக்கு எதிரான ஆண்டிஜன் நம் உடலில் இல்லாத நிலையில் அதற்கு பெரிய பலன் இருக்காது. எனவே, கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, வசிப்பிடத்தை சுத்தமாகப் பராமரிப்பது போன்ற சுகாதார நடவடிக்கைகள் அவசியம். அதேசமயம், ஊட்டச்சத்து மிக்க உணவுகள் நம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் என்பதால் ஊட்டச்சத்து மிக்க அத்தகைய உணவுகளை தேடி உண்ண வேண்டியது அவசியம். தாமிரம், ஃபோலேட், இரும்புச்சத்து, செலீனியம், துத்தநாகம் ஆகிய தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஏ, பி6,பி12, சி மற்றும் டி ஆகியவை நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துவந்தாலே உடலில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.

அதற்காக, இவை இருக்கும் காய்கறிகள், பழங்கள் மட்டுமே உண்ண வேண்டும் என்பதில்லை. இந்த சத்துக்கள் அளவுக்கே மற்ற சத்துக்களும் அவசியம் என்பதால் எல்லா சத்துக்களும் கிடைக்கும்படியாக கலவையாக உண்பதே நல்லது. அதே சமயம் மேலே சொன்னவற்றைத் தவிர்க்காமல் சாப்பிடலாம். முதியவர்கள், நோயாளிகள் உங்கள் மருத்துவரிடம் கேட்டு உங்களுக்கான மெனுவைப் பெறலாம். பொதுவாக, தேவையற்ற செயற்கையான உணவுப் பொருட்களைத் தவிர்த்து, சர்க்கரை, உப்புக் குறைத்து, மஞ்சள், மிளகு, லவங்கம், இஞ்சி, பட்டை, கிராம்பு, வெங்காயம், மிளகாய், பூண்டு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் டி சப்ளிமென்ட்டை நான் தனியாக எடுப்பது நல்லதா?

குவாரண்டைன் காலத்தில் வீட்டிலேயே இருப்பவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களில் பிரதானமானது. வெயிலில் போகாமல் இருந்தால் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுமே அதற்காக வைட்டமின் டி ஊட்டச்சத்து மாத்திரை எடுக்கலாமா என்பதுதான். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாக எந்தவிதமான வைட்டமின் மாத்திரைகளையும் முயற்சிக்காதீர்கள். மேலும், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி என்பது சூரிய ஒளியின் மூலம் மட்டுமே கிடைக்கும். உலகின் வேறு எந்தப் பொருட்களிலும் அந்த வைட்டமின் கிடையாது. அப்படியான அந்த சத்து மாத்திரைகளில் இருப்பது என்ன? அது வேறு வகையான வைட்டமின் டி அவ்வளவுதான்.

வைட்டமின் டியுடன் சேர்ந்து கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவைதான் ஆரோக்கியமான எலும்புகள், தசைகளுக்கு அடிப்படை. எனவே அவற்றை உடலில் சேர்க்க வீட்டின் மொட்டை மாடியில் தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரமாவது நிற்கலாம். காலை ஆறு மணி முதல் ஒன்பது மணிக்குள் நிற்கலாம். மாலை நான்கு முதல் ஆறு மணி வரை நிற்கலாம். காலை ஒன்பதுக்கு மேல் மதியம் நான்கு மணி வரை சுடுவெயிலில் நிற்க வேண்டாம். அதன் புற ஊதாக் கதிர்கள் உங்கள் சருமத்தைப் பாதிக்கக்கூடும். வைட்டமின் டி ஊட்டச்சத்து மாத்திரைதான் எடுக்க வேண்டும் என்றில்லை. அந்தச் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் நிறைய உள்ளன அவற்றை எடுத்தால்கூட போதும். சால்மோன் மீன்கள், வஞ்சர மீன்போன்றவற்றில் கணிசமான அளவு வைட்டமின் டி உள்ளது. கார்ட் லிவர் எண்ணெயிலும் இந்தச் சத்து நிறைந்துள்ளது. ஆனால், கர்ப்பிணிகள் தவிர்க்கவும். முட்டை, யோக், மாமிசங்கள், பால் ஆகியவற்றில் சிறிதளவு வைட்டமின் டி உள்ளது.

பதார்த்தகுண சிந்தாமணி கூறும் பருவத்துக்கு ஏற்ற உணவுகள்

பதார்த்தகுண சிந்தாமணி குறித்து ஏற்கெனவே கிச்சன் டைரீஸில் எழுதியிருக்கிறோம். தமிழரின் உணவு சார்ந்த மரபில் உள்ள அறிவியல் நோக்கை ஆதாரத்துடன் பேசும் நூல்களில் ஒன்று அது. இதோ ஒவ்வொரு பருவகாலத்துக்கும் ஏற்ற உணவுகள் எதுவென அதில் குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள்.

மார்கழி – தை (முன் பனி காலம்)

கொண்டல் காற்று அதாவது கிழக்கில் இருந்து காற்று வீசும். இக்காலத்தில் எளிதில் செரிக்கக் கூடிய உணவு வகைகளாகவும், அறுசுவைகளில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவு வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் வெந்நீர் பருக உடலும் வளமும், நலமும் தரும்.

மாசி – பங்குனி (பின்பனி காலம்)

நெய் சத்து, மிதமான கொழுப்பு சத்து நிறைந்த உணவு பதார்த்தத்தை உண்ண வேண்டும். எளிதில் ஜீரணமாகாத உணவு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பகல் தூக்கம், எண்ணெய் பசை, உப்பு, புளிப்பு, இனிப்புச் சுவைகள் சேர்ந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மூலிகைகள் கலந்து காய்ச்சிய தண்ணீர் அல்லது சந்தனம், கருங்காலி சேர்த்துக் காய்ச்சிய நீர் இவற்றைப் பருகலாம்.

சித்திரை – வைகாசி (இளவேனிற் காலம்)

பொதுவாக தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெரும்பான்மையான மக்கள் இளவேனிற் காலங்களில் தான் புத்தாண்டாக தொடங்குகின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் இந்த சமயத்தில் தான் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். எண்ணெய் பசை இல்லாததும், கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு சுவை உட் கொள்ளலாம்.

ஆனி – ஆடி (முதுவேனிற் காலம்)

வெயிலின் தாக்கம் கூடுதலாக இருக்கும். எனவே இக்காலங்களில் கொழுப்பு சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சுவைகளில் இனிப்பு, கசப்பு சுவையை எடுத்துக் கொள்ளலாம். இக்காலங்களில் கார்ப்பு அதிகமுள்ள உணவை தவிர்த்தல் நல்லது. குளிர்ச்சியான நீராகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். திருவிழாக்களை நடத்தியதற்கும், கூழ் விநியோகித்ததன் பின்னணியில் இருந்த காரணங்கள் இவையே ஆகும். மண்பானைகளில் வெட்டிவேர், சந்தானம் போன்ற மூலிகைகள் இட்டு பருகலாம்.

ஆவணி – புரட்டாசி (கார் காலம்)

மழை காலம் என்பதால் மந்தமாகவும் ஜீரண சக்தி குறைந்தும் காணப்படும். எனவே உடலில் வாயு சம்பந்தமான நோய்கள் தோன்றும். முட்டி வலி, கால், இடுப்பு பகுதிகளில் வலி உண்டாகும். எனவே அரிசி, கோதுமை, சிறுதானியங் களினால் செய்த கஞ்சியை அருந்த வேண்டும். தண்ணீரைக் நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

ஐப்பசி – கார்த்திகை (குளிர் காலம்)

குளிர் காலம் என்பதால் பசி அதிகமாகத் தோன்றும். எனவே உடலுக்கு வலுவூட்டும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவு எளிதில்
ஜீரணிக்கக் கூடியதாகவும், பசியை போக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இனிப்பு, உப்பு, புளிப்புச் சுவையுள்ள உணவை உட் கொள்ள வேண்டும். வெல்லம், மாவுப் பொருட்கள், உளுந்து, கரும்புச் சாறு, பால், மாமிசம் இவற்றால் செய்த பொருட்கள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை எடுத்துக்
கொள்ளலாம்.

ஃபுட் மித்ஸ்

பச்சையான கேரட்டில்தான் அதிக ஊட்டச்சத்து உள்ளது. சமைத்தால் ஊட்டச்சத்து கெட்டுவிடும் என்றுதானே பொதுவாக சொல்வார்கள். ஆனால், ஜர்னல் ஆஃப் அக்ரிகல்ச்சர் அண்ட் ஃபுட் கெமிஸ்ட்ரி என்ற ஆய்விதழில் இந்தத் தகவல் மறுக்கப்பட்டுள்ளது. அதாவது, கேரட்டில் உள்ள முக்கியமான வைட்டமின் என்பது கரோட்டினாய்டுதான். இதை சமைத்துச் சாப்பிட்டால் சுமார் 14 சதவீதம் வரை அதிகமாகக் கிடைக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், இதனை வறுத்து பொறியலாகச் சாப்பிடாமல் சாம்பாரிலோ தண்ணீரிலோ வேகவைத்துச் சாப்பிட்டால்தான் இப்படி பலன் கிட்டுமாம். வறுத்துச் சாப்பிட்டால் பச்சையாகச் சாப்பிடுவதைவிடவும் பலன் குறைவாகத்தான் கிடைக்குமாம்.

உணவு விதி #48

உடல் உழைப்பு குறைந்த காலங்களில் குறைவான கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளையும் அதிக நார்ச்சத்துக்கொண்ட காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாகவும் உண்ணுங்கள். இது இன்றைய காலத்துக்கு அவசியமான விதி. குவராண்டைனால் வீட்டிலேயே முடங்கியிருப்
பவர்கள் வழக்கமான கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் விகிதங்களை உடலில் சேர்ப்பதால் உடல் பருமன் அதிகரிக்கும். அதற்கு பதிலாக காய்கறிகள், பழங்களை அதிகமாக உண்ணலாம். கொழுப்புச்சத்துதான் சாப்பிட வேண்டும் எனில் மீன் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

ஃபுட் சயின்ஸ்

ஊட்டச்சத்துக் குறைபாடு என்பதை பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம். பொதுவாக, நாம் ஊட்டச்சத்துக் குறைபாடு என்றால் உடலில் ஊட்டச்சத்து சேர்வதில் ஏற்படும் தட்டுப்பாடு என்று மட்டுமே புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், ஊட்டச்சத்துக் குறைபாடு (Malnutrition) என்ற பதம் இன்னமும் விரிவானது. ஊட்டச்சத்துப் போதாமை, அளவுக்கு அதிகமாக மிகுதலால் ஏற்படும் உடற்பருமன் இரண்டுமே ஊட்டச்சத்துக் குறைபாடுதான். இன்று உலகின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று ஊட்டச்சத்துக்குறைபாடுதான். கோடிக் கணக்கான மனித வளம் உள்ள நம் நாட்டின் தலையாய பிரச்சனை அத்தனை கோடி மக்களில் பெரும்பகுதியினர் தொடர்ந்து உழைக்கும் அளவுக்கு உடல் பலம் இல்லாதவர்கள் என்பதுதான். அதிலும் குறிப்பாக குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அடையும் உடல் நலப் பிரச்சனைகளும் அதிகம்.

பொதுவாக புரத ஆற்றல், ஊட்டச்சத்து இன்மை, இரும்புச்சத்து இன்மை, அயோடின் குறைபாடு, வைட்டமின் ஏ குறைபாடு, உடல் பருமன் ஆகியவையே இந்தியாவை ஆட்டிப் படைக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள். ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்குவது, சத்தான உணவுகளை வழங்குவது, ஃபுட் ஃபோர்ட்டிபிகேஷன் போன்ற கோட்பாடுகள் மூலமாக இன்னொரு உணவோடு சேர்ந்து சத்துக்களை வழங்குவது போன்றவை இதற்கான தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால், நம் நாட்டில் இன்னமும் ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல வசதியான வீடுகளில், உயர்குடிகளில் வசிக்கும் பெண்களில்கூட கணிசமானவர்கள் ஊட்டச்சத்துப் போதாமையோடு இருக்கிறார்கள். ஸ்டைல், ஃபேஷன் என்று பர்கர், பீஸா, கோலா போன்ற எந்த சத்துமற்ற உணவுகளை உண்பது, குண்டாகிவிடுவோம் என்ற பயத்தில் குறைவாக உண்பது ஆகியவை இதன் காரணம் என்கிறார்கள். நன்கு படித்தவர்களிடமே ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றி இவ்வளவு மோசமான விழிப்புணர்வுதான் இருக்கிறது என்ற நிலையில், கஞ்சிக்கு வழியற்ற எளிய மக்களிடம் இது எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் !! (அவ்வப்போது கிளாமர்)