தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 19 Second

என்ன தேவை?

பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகம், கொரியர் என அனைத்தும் முக்கிய பெருநகரங்களில் முடங்கிவிட்ட நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இவ்வேளையில் உடைகள் கூட இருப்பதைக் கொண்டு ஓட்டிவிடலாம். ஆனால் உணவுக்கான சேமிப்பு மற்றும் தேவையில்தான் இன்னும் பல பெண்கள், ஆண்கள் மத்தியில் குழப்பங்கள் நீடிக்கின்றன. அதில் ஒரு தெளிவு கிடைப்பதற்குள் இதோ மீண்டும் ஆங்காங்கே ஊரடங்கு. இந்த ஊரடங்கு மட்டுமல்ல, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றக் காலங்களில் கூட தேவையானவை எவை என்பதில் சில திட்டங்கள் இருந்தால் ஒருமுறை நாம் வெளியே சென்றாலும் குறைந்தபட்சம் பத்து நாட்களுக்கான உணவை நம்மால் சேமிக்க முடியும். அதற்கான சின்ன திட்டம்தான் இந்த தோழி சாய்ஸ்…
முதற்கட்ட தேவைகள்

அரிசி & மாவு வகைகள்

என்ன அரிசி சாப்பிடுவோமோ அதை அதிகம் சேமிப்பதோடு உடன் கோதுமை மாவு, கேழ்வரகு, மைதா போன்ற மாவு வகைகளை வாங்குவதுதான் பிரதானத் தேவை. அவசர காலத்தில் வெறுமனே சோறும், ஊறுகாயும் அல்லது மாவில் கஞ்சியும் கூட வைத்து ஓட்டி விடலாம். வாங்குவதுடன் நில்லாமல் கோடைகாலம் எறும்புகள் அதிகம் வரும் என்பதால் இவற்றை சரியான காற்றுப்புகாத டப்பாக்கள் கொண்டு சேமிப்பதும் முக்கியம்.

பருப்பு & பயறுகள்

பாசிப் பருப்பு, துவரம் பருப்பு இவ்விரண்டும் மிக அவசியம். வெறுமனே வேக வைத்து கொடுத்தால் கூட குழந்தைகளுக்கான போதிய ஊட்டம் ஓரளவுக் கிடைக்கும். பாசிப் பயறு, கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு, தட்டப்பயறு, உளுந்தம் பருப்பு போன்ற அத்தியாவசிய பயறு வகைகளை அதிகம் வாங்கி வைத்துக்கொள்ளலாம். அரிசி, பருப்பு என அதிகம் கார்போஹைட்ரேட் உணவுகள் சேர்க்கையில் பயறு, தானியங்கள் புரதச் சத்தைக் கொடுத்து ஈடு செய்யும்.

உப்பு & சர்க்கரை

வீட்டில் இருப்போருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் கூட உடன் மருந்து இவ்விரண்டுதான். மேலும் உப்பும், சர்க்கரையும் கூடினாலும், குறைந்தாலும் ஆபத்துதான். எனினும் அவை இல்லாமலும் ஓட்ட முடியாது. மசாலா மருந்து பொருட்கள்பூண்டு, இஞ்சி, மிளகு, சுக்கு, சீரகம், கிராம்பு, பட்டை, பெருங்காயம் இவைகள் எப்போதும் எக்காலத்திலும் வீட்டில் இருக்க வேண்டிய மசாலா மருத்துவ பொருட்கள். மிளகும், சீரகமும் இணைந்தால் எப்பேற்பட்ட காய்ச்சலும், கபமும் கூட ஓடிவிடும், உடன் இஞ்சி, பூண்டு பெருங்காயம், செரிமானத்திற்கும், எதிர்ப்பு சக்திக்கும் பயன்படும்.

இரண்டாம் கட்ட தேவைகள்

இதில்தான் பலரும் கோட்டை விட்டு எது எளிதில் கெட்டு விடும், எவை நாட்கள் கணக்கில் தாங்கும் என தெரியாமல் வாங்கி அடுக்கி வீணாக்குவதுண்டு.

காய்கறிகள்

வெங்காயம், தக்காளி இவை இரண்டும் அவசியம். அதில் வெங்காயம் எவ்வளவு வாங்கினாலும் எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது. தக்காளி பழமாக முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு, பின் காயாக அடுத்த மூன்று நாட்களுக்கு என வாங்கிக் கொள்வது அவசியம். கிழங்கு வகைகளில் உருளைக் கிழங்குதான் குருமா, வறுவல் துவங்கி, மசாலா, மாலை நேர சிப்ஸ் என எத்தனை வகையாகவும் செய்யலாம், சீக்கிரம் கெடவும் செய்யாது. வெட்டுப்படாத கீரல் இல்லாத , பச்சை அடிக்காத கிழங்காக வாங்குதல் நலம். அதை குளிர்ச்சியான அதிகம் காற்றுப்படாத இடத்தில் வைத்தால் பல நாட்கள் அப்படியே இருக்கும். மேலும் சேனை, கருணைக் கிழங்கு போன்றவையும் நாட்கள் செல்லச் செல்லதான் சுவையே என்பதால் அவற்றை சேமிக்கலாம்.

பழங்கள்

வாழைப்பழம் ஒன்று போதும் ஒரு நேர சாப்பாடே கூட அதில் ஓட்டிவிடலாம். சக்தியை அதிகரிக்கச் செய்வதில் வாழைக்கு நிகர் வாழையே. அடுத்து ஆரஞ்சு காய்ச்சல், வைரஸ் பிரச்னைகளுக்கு அருமருந்தான வைட்டமின் சி கொடுப்பதில் ஆரஞ்சை அடித்துக்கொள்ளவே முடியாது. மேலும் சில நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் தாக்குப்பிடிக்கும் பழவகையான ஆப்பிள், மாதுளை இவற்றையும் முதல் மூன்று நாட்கள் வீதம் சேமிக்கலாம்.

எண்ணெய்

அவசரமான காலங் களில் முடிந்தவரை எவ்வித எண்ணெய்கள் மேலும் மனம் செல்லாமல் நல்லெண்ணெய் வாங்கி வைப்பது மிகச் சிறந்தது. சுவைக்கு மட்டுமல்லாமல் மருத்துவ குணமும் அதிகம் நிறைந்தது நல்லெண்ணெய்தான். சின்ன வயிற்றுக் கடுப்பிற்கும் ஒரு விரல் எண்ணெயை தொப்புளில் தடவினால் பிரச்னை தீரும். பின்னர் சுத்தமான நெய் எதிர்ப்பு சக்திக்கு உதவும். மேலும் நெய் நல்ல கொழுப்பு வகை சேர்ந்தவை. அதன் பின் உங்களின் எப்போதுமான தேவை எண்ணெயையும் சேமிக்கலாம்.

பால் பொருட்கள் மற்றும் உடனடி சமையல் தேவைகள்

சிலர் சாப்பிடாமல் கூட இருப்பார்கள். ஆனால் டீ, காபி இல்லையெனில் வேலை நடக்காது. எனில் பால் பவுடர்கள் , காபி, டீ தூள் சேமிப்பு அவசியம். ரவை, சேமியா உள்ளிட்டவைகள் ஒரு வேளை சுலபமான டிபன்களை கொடுப்பதில் சிறப்பானவை. அடுத்து கடைகளில் இன்ஸ்டென்டாக கிடைக்கும் எதையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. எனினும் சில இக்கட்டான காலங்களில் தவிர்க்க முடியாது என்பதால் நூடுல்ஸ், கார்ன் பிளேக்ஸ், பாஸ்தா, சூப் மிக்ஸ்கள், உடனடி வெரைட்டி ரைஸ் கலவைகள் இவற்றை சேமிக்கலாம். பெரும்பாலும் சீக்கிரம் கெட்டுப்போகும் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சமையலறையில் மட்டும் ஒரு பொருள் கெட்டுவிட்டால் உடன் சேர்ந்து மற்ற நாள்பட்டு தாங்கும் பொருட்களையும் கெட்டுப்போன பொருளில் இருந்து வரும் பாக்டீரியா அல்லது வண்டுகள் கெடுத்துவிடும். எனவே தேவைக்கு அதிகம் இல்லாமலும், மேலும் ஆயுள் நீடித்த பொருட்களையும் அவசர காலங்களில் சேமியுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் குழந்தைகள் சரியாக உட்காருகிறார்களா? (மருத்துவம்)
Next post கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)