By 1 December 2021 0 Comments

ஆர்கானிக் அப்பளம் தயாரிப்பு! அருமையான வருமான வாய்ப்பு..! (மகளிர் பக்கம்)

சிறு தொழில்

அப்பளம்… குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஓர் உணவுப்பண்டம் என்று சொன்னால் மிகையாகாது. அப்பளம், அப்பளா, பப்படம், பப்பட் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த இணை உணவுப்பண்டம் இல்லாமல் பலருக்கு உணவு ருசிக்காது. மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும் என்று ஒரு பழமொழி உண்டு. இதை கொஞ்சம் வேடிக்கையாக… அந்த மாம்பழமும் ஊட்டாத சோற்றை அப்பளம் ஊட்டும் என்று சொல்வார்கள். அரிசி, மரவள்ளிக்கிழங்கு, பருப்பு மட்டுமன்றி வேறு பல தானியங்களில் அப்பளம் செய்தாலும் உளுந்திலிருந்து செய்யப்படும் அப்பளத்தின் ருசியே தனிதான்.

மொறு மொறுவென சாப்பிடச் சுவையான இந்த உளுந்து அப்பளத்துக்கென பேர்போனது சில நிறுவனங்களின் அப்பளம். அப்பளத்துக்கு மவுசு இருந்தாலும் வெவ்வேறு சுவையில், வெவ்வேறு மணத்தில், வெவ்வேறு விலையில் அப்பளம் விற்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க தரமான பொருள்களை வாங்கிச் சாப்பிடும் மக்களும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நம்பகமான, தரமான உணவுப்பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன. இதற்கிடையே சமீபகாலமாக மக்கள் மத்தியில் இயற்கை, ஆர்கானிக் உணவுப் ெபாருட்கள் மீது மக்களின் பார்வை திரும்பியிருக்கிறது. அதிலும் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்தச்சூழலில் பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவுப்பொருள்களை மக்களுக்கு வழங்கிவரும் ‘மண்வாசனை’ நிறுவனம் இயற்கை விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட உளுந்திலிருந்து அப்பளம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

கறுப்பு கவுனி அரிசியில் ஐஸ்கிரீம் தயாரித்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்த மண்வாசனை மேனகா தற்போது நீண்ட ஆராய்ச்சிக்குப்பிறகு இயற்கை விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட தரமான உளுந்தில் அப்பளம் தயாரித்திருக்கிறார். “இன்றைய சூழலில் இயற்கை, பாரம்பரியம் மீது மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

நோய்கள் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் சத்தான அதேநேரம் தரமான உணவுப்பொருள்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களை விற்பனை செய்துவரும் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் பலர் அப்பளம் பற்றி பேசுவார்கள். பல இடங்களில் நம்பி வாங்கி ஏமாந்துபோனதாக ஆதங்கப்பட்டவர்கள் பலர் உண்டு.

அப்பளத்துக்கு பேர்போன ஊரிலிருந்து நேரடியாக அப்பளம் வாங்கும் பலர் தரமான, சுவையான அப்பளத்தை நீங்கள் தயாரித்துக் கொடுங்கள் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கடமையில் இறங்கலாம்னு முடிவு செய்தேன். முதலில் தரமான உளுந்தைத் தேடினேன். இதற்காக பல இயற்கை விவசாயிகளைத் தேடி அலைந்தேன். அதேநேரம் பக்குவமாகத் தயாரித்து விற்பனைக்கு அனுப்பும் முயற்சியில் மும்முரமாக இறங்கினேன். பலரது ஒத்துழைப்புடன் இன்றைக்கு தரமான உளுந்து அப்பளம் தயாராகியிருக்கிறது.

கல்யாண வீடுகளில் அளிக்கப்படும் விருந்தில் ஏதாவது ஒரு இணை உணவு சுவையாக இல்லையென்றாலும் அந்த விருந்து சுவைக்காது. சுவை மட்டுமல்ல நிறைவான ஒரு உணவுப்பண்டத்தை சாப்பிட்ட திருப்தி கிடைத்தால் திருமண வீட்டாரும், உற்றார் உறவினர்களும் மனதார வாழ்த்துவார்கள். திருமணம் மட்டுமல்ல மொறுமொறு சுவையில் அப்பளம் இருந்தால் சாப்பிடாத குழந்தைகளும்கூட உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதையெல்லாம் மனதில்கொண்டு இந்த அப்பளத்தைத் தயாரித்திருக்கிறேன்.

இயற்கை முறையில் விளைந்த உளுந்தில் தயாரிக்கப்பட்ட இந்த அப்பளத்தை வெறும் வியாபார நோக்கத்துடன் தயாரிக்கவில்லை. இயற்கை, ஆர்கானிக் என்ற பெயரில் கைகளில் கிடைத்த பொருள்களை விற்பவர்கள் மத்தியில் தரமான பொருள்களை கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். நான் எப்போதும் என்னைப்பற்றி மட்டுமே சிந்திப்பதில்லை.

என்னைச் சுற்றி இருப்பவர்களும் பலன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படக்கூடியவள். நான் தனி மனுஷி என்றாலும் என்னுடைய பாரம்பரிய, இயற்கை பொருள்களால் பலரும் பயன்பெறுகின்றனர். அந்தவகையில் நான் தயாரித்துள்ள இந்த அப்பளத்தை விற்க நிறைய விநியோகஸ்தர்களும் தேவைப்படுகின்றனர். எல்லோரும் பயன்பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்.

இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களை வாங்கி சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது. அவை எங்கு கிடைக்கும் என்பது தெரியாமல் அருகில் உள்ள கடைகளில் எந்த பொருள் விற்கப்படுகிறதோ அதை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

அந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே, இயற்கையாக உணவுப் பொருள் விளைவிக்கும் விவசாயிகளை தேடிக்கண்டுபிடித்து இந்த இயற்கை உணவு தானியப் பொருள்கள் அங்காடியை நடத்திக் கொண்டிருக்கிறேன். அவரவர் பகுதிகளில் விற்பனை செய்து வருமானம் ஈட்ட நினைக்கும் இல்லத்தரசிகளுக்கு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறேன்” என்ற மேனகாவின் முகத்தில் நம்பிக்கை ஒளியைக் காண முடிந்தது. கலப்பட உணவுகள் விற்கப்படும் இன்றைய சூழலில் தரமான, சுத்தமான உணவுப்பொருளை அவர் மக்களுக்கு கொடுக்கிறார் என்பதில் நமக்கும் மனநிறைவே.Post a Comment

Protected by WP Anti Spam