கதவை தட்டினேன்… வாழ்க்கைக்கான பாதை விரிந்தது! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 42 Second

மிகவும் சாதாரண குடும்பம். சிறு வயதிலேயே திருமணம். வாழ்க்கையில் பல போராட்டங்கள்… அனைத்தும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் உழைப்பை மட்டுமே ஊன்றுகோளாக தன் மனதில் பதித்து தற்போது குன்னூரில் தனக்கென்று ஒரு சிறிய சாம்ராஜ்யம் அமைத்து அதன் மூலம் கேரளா, வட இந்தியா என தன் அழகு சாதனப் பொருட்கள், மூலிகைப் பொடிகள் என தன் வட்டத்தினை விரிவுபடுத்தியுள்ளார் ஆண்டாள். தான் கடந்து வந்த பாதையினை தோழி வாசகிகளுக்காக பகிர்ந்து கொள்கிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை. படிச்சதும் அங்க தான். இரண்டு அக்கா, இரண்டு தங்கை, ஒரு அண்ணன் என நாங்க மொத்தம் ஆறு பேர். அப்பா ரேயான் நூல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நான் ஒன்பதாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். அதன் பிறகு 15 வயசிலேயே கல்யாணம் செய்து கொடுத்திட்டாங்க. என்னுடைய தாய் மாமாவை தான் கல்யாணம் செய்து கொண்டேன். அந்த அறியா வயசில் கல்யாணம் என்றாலே என்னென்று தெரியாது.

சொந்தக்காரங்க வீட்டில் விருந்துக்கு போகலாம். தலை நிறைய பூ வச்சுக்கலாம். புதுப்புது புடவை கட்டிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு பிறகு தான் வாழ்க்கை என்று திருமணமான பிறகு தான் புரிந்தது. இதில் என் கணவருக்கோ வேலை ஏதும் கிடையாது. இதுநாள் வரை அம்மா வீட்டில் இருந்தாச்சு. இனி இது என்னுடைய வாழ்க்கை. நான் தான் அதை நகர்த்தியாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அதனால் என் அம்மாவின் ஆலோசனையோடு மசாலா பொடிகள் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.

ரசப்பொடி, சாம்பார் பொடி என வீட்டிலேயே செய்து கடை மற்றும் கேட்பவர்களுக்கு விற்பனை செய்து வந்தோம். ஆனால் அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. அதனால் துணி வியாபாரம் செய்ய ஆரம்பிச்சோம். ஊட்டியில் படுகர் என பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு புடவை மற்றும் துணிகளை விற்பனை செய்து வந்தோம். நானும் என் கணவரும் அங்கு நேரடியாக சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எல்லாம் விற்பனை செய்ய ஆரம்பித்தோம். ஓரளவு வருமானம் வந்தது’’ என்றவர் தன் மகனுக்கு கொடுக்கப்பட்ட பாட்டி வைத்தியத்தால் ஈர்க்கப்பட்டு இயற்கை மருத்துவம் குறித்த ஆய்வில் இறங்கியுள்ளார்.

‘‘என் மகனுக்கு ஒன்பது மாசம் இருக்கும். பிரைமரி காம்ப்ளக்ஸ் பிரச்னையால் அவதிப்பட்டான். அந்த சமயத்தில் பிரைமரி காம்ப்ளக்ஸ் மிகவும் மோசமான நோய். சரியாக கவனிக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாக கூட முடியும். நாங்களும் போகாத மருத்துவமனை இல்லை பார்க்காத வைத்தியம் இல்லை. ஆனாலும் நிலைமை சீராகவில்லை. அந்த சமயத்தில் எங்க பக்கத்து வீட்டில் உள்ள பாட்டி ஒருவர் கை வைத்தியம் செய்தார். பச்சிலை ஒன்றில் உப்பு சேர்த்து அரைத்து பாலில் கரைத்து கொடுத்தார்.

குழந்தை வாந்தி எடுத்தான். இரண்டே நாள் சளி எல்லாம் வெளியே வந்து குழந்தை நல்லாயிட்டான். அப்பதான் எனக்கு மூலிகை குறித்த ஆர்வம் ஏற்பட்டது. அது பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன். ஆனால் இதற்கிடையில் தொடர்ந்து எங்களால் துணி பிசினஸ் செய்ய முடியவில்லை. அதனால் ஒரே இடமாக கடை ஆரம்பிக்கலாம்ன்னு துவங்கினோம். அதுவும் நஷ்டமானது. அதனால் நாங்க ஊட்டியில் இருந்து குன்னூருக்கு வந்துட்டோம். இங்கு வேறு தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம்ன்னு முடிவு செய்தோம்.

அந்த சமயத்தில் மாத இதழில் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் காஸ்மடாலஜி குறித்து பயிற்சி அளிப்பது பற்றி செய்தி வெளியானது. கையில் இருந்த பணத்தைக் கொண்டு நான் சென்னைக்கு அந்த பயிற்சி எடுக்க வந்தேன். ஊரில் குழந்தைகளை கணவர் பார்த்துக் கொண்டார். கையில் இருந்த சேமிப்பு என் படிப்புக்கே சரியானது. ஆனாலும் கையில் ஒரு தொழில் இருக்கு சம்பாதிச்சிடலாம்ன்னு ஒரு தைரியம் இருந்தது’’ என்றவர் பெரிய போராட்டங்களுக்கு பிறகு ஒரு அழகுக் கலை நிலையத்தை ஆரம்பித்துள்ளார்.

‘‘படிச்சு முடிச்சு குன்னூருக்கு வந்த போது எங்க கையில் எதுவுமே இல்லை. நான் படிச்ச படிப்பு மட்டும் தான் என் குழந்தைக்கு ஒரு வேளை பால் வாங்க உதவியது. ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாட்டமா இருந்தது. கையில் ஒரு கலை இருக்கு. சும்மா வீட்டில் இருந்தால், ஏதும் நடக்காதுன்னு முடிவு செய்தேன். அக்கம் பக்கத்து வீட்டு கதவை தட்டினேன்.

அவர்களிடம் அழகுக் கலை படித்து இருக்கேன். உங்களுக்கு புருவம் தீட்டி விடுகிறேன்னு சொன்னேன். அந்தக்காலத்தில் அழகு நிலையம் வசதி படைத்தவர்களுக்கானது என்று தான் இருந்தது. நான் வீடு வீடாக போன போது தான் மற்ற பெண்களும் அதில் ஆர்வம் காட்ட ஆரம்பிச்சாங்க. பத்து வீட்டு கதவை தட்டினா இரண்டு பேர் செய்ய முன் வருவாங்க. இருபது ரூபாய் கிடைச்சாலும் அவ்வளவு சந்தோஷமா இருக்கும். காரணம் அதில் என் குழந்தைக்கு ஒரு பிஸ்கெட் மற்றும் பால் வாங்கித் தரலாமேன்னு தோணும்.

நான் செய்வதை பார்த்து நிறைய பேர் செய்துக்கிட்டாங்க. அப்ப எங்க வீட்டு பக்கத்தில் ஒரு வங்கி நிர்வாகி இருந்தார். அவர் நான் கஷ்டப்படுவதைப் பார்த்து, 25 ஆயிரம் ரூபாய் வங்கியில் லோன் வாங்கிக் கொடுத்தார். அதை வச்சுதான் ‘ஸ்ருதி’ என்ற பெயரில் அழகு நிலையம் அமைச்சேன்’’ என்றவர் யோகா மற்றும் சித்தா மருத்துவம் குறித்தும் பயிற்சி எடுத்துள்ளார்.

‘‘ஒரு முறை தொலைக்காட்சி ஒன்றில் சித்தா மருத்துவர் பேட்டி பார்த்து அவரை அணுகினேன். அவர் தான் இயற்ைக முறைப்படி எப்படி மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார். மேலும் மருத்துவ துறையை சாராதவர்கள் இது போன்ற மருந்துகளை தயாரித்து விற்பனை செய்ய சான்றிதழ் பெறவேண்டும் என்றார். அதன் பிறகு தான் இதனை விற்பனை செய்ய முடியும் என்று அறிவுரை கூறினார். அவரின் ஆலோசனைக்கு பிறகு தான் நான் ஒவ்வொரு மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்களையும் இயற்கையான முறையில் தயாரித்து உரிய சான்றிதழ்களையும் பெற்றேன்.

மேலும் நிறைய புத்தகங்கள் படிச்சேன். பல ஆய்வுகளுக்கு பிறகு தான் ஒவ்வொரு பொருட்களும் ஒரு வடிவம் பெற்றது. இன்னும் சொல்லப்போனால் 250 ரூபாய் முதலீடு போட்டுத்தான் நான் தலைக்கு பூசும் எண்ணெயை தயாரிச்சேன். அதன் பிறகு படிப்படியாக பூசு மஞ்சள், ஃபேஸ் பேக், கிரீம், மூலிகைப் பொடிகள் என 200க்கும் மேற்பட்ட பொருட்களை ‘ஸ்ருதி ஹெர்பல்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வருகிறேன்’’ என்றவரின் மகள் ஆயுர்வேத மருத்துவம் படித்துவிட்டு இவருக்கு உதவியாக செயல்பட்டு வருகிறார்.

‘‘என்னுடைய பலமே என் இரண்டு குழந்தைகள்தான். மகன் பைலட் துறையில் பட்டம் பெற்றாலும், இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். என் கணவர் சிறிய மனஸ்தாபத்தால் எங்களை விட்டு பிரிந்து இப்போது அவர் தனியாக இதே தொழிலை செய்து வருகிறார். ஒரே இடத்தில் இருவரும் பிசினஸ் செய்வது நன்றாக இருக்காது என்பதால், நான் என்னுடைய பொருளை கேரளா, சென்னை மற்றும் வட இந்தியா போன்ற இடங்களுக்கு மட்டுமல்லாமல் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கிறேன். ஆன்லைன் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வருகிறோம்.

எங்க பொருட்கள் அனைத்தும் மூலிகைக் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. இதற்காகவே பெண்களை குழுவாக அமைத்து பயிற்சி அளித்து இருக்கிறோம். அவர்களுக்கு ஒவ்வொரு பச்சிலை குறித்தும் பயிற்சி கொடுத்திருக்கிறோம். ஜவ்வாது மலை, வில்லிப்புத்தூர் மற்றும் குன்னூர், ஊட்டியில் உள்ள மலைகளில் இது போன்ற மூலிகை இலைகள் கிடைக்கும். அவர்களின் வேலையே நாங்க கேட்கும் பச்சிலையினை காட்டில் இருந்து கொண்டு வந்து அதை சுத்தம் செய்து காய வைத்து கொடுக்க வேண்டும்’’ என்றவர் தன்னுடைய பொருட்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆர்கானிக் அப்பளம் தயாரிப்பு! அருமையான வருமான வாய்ப்பு..! (மகளிர் பக்கம்)
Next post வாழ்வென்பது பெருங்கனவு – கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!! (மகளிர் பக்கம்)