வாழ்வென்பது பெருங்கனவு – கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 42 Second

இளம் தொழில்முனைவோர் கருணாம்பிகை

சாதிக்க துடிப்பவர்களுக்கு பல்வேறு வகையான கனவுகள் இருக்கும். அதிலிருந்து சற்று மாறுபட்டவர் கருணாம்பிகை. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே வினோபா நகர் எனும் கிராமத்தில் இருந்துகொண்டு ஆன்லைன் மூலம் ஒரு நேரடி விற்பனை தொழில்முனைவில் ஈடுபட்டு வருகிறார். ‘‘ஒரு பெண்ணாலும் கஷ்டப்பட்டு தொழில் துறையில் சாதிக்க முடியும் என்பதை சமூகத்திற்கு உணர்த்த வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம்’’ எனக்கூறும் கருணாம்பிகை, தனது வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

‘‘பொள்ளாச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் (ஐடி). படித்தேன். நான் இன்ஜினியராக வேண்டும் என்று என்னை பொறியியல் கல்லூரியில் அப்பா சேர்த்தார். ஆனால் சிறுவயதில் இருந்தே கவிதை எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். கல்லூரி 2ம் ஆண்டு படிக்கும் போது திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதியிடம் சிறந்த கவிதைக்கான விருது வாங்கினேன். அதை தொடர்ந்து இரண்டு கவிதை புத்தகங்களை வெளியிட்டேன்’’ எனக் கூறும் கருணாம்பிகை தன்னுடைய ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘நாமும் ஒரு தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற உந்துதலில் 2017ம் ஆண்டு ‘அத்தனூர் டெக்ஸ்’ என்ற பெயரில் துணி உற்பத்தி நிறுவனத்தை துவங்கினேன். வீட்டில் தறி உண்டு என்பதால், வீட்டிலும் துணியினை நெய்வோம் மற்றும் வெளி தரிகளிலும் நூல் கொடுத்து நெசவு செய்து வாங்குவோம். இன்றைக்கு பத்து பேர் வேலை செய்கிறார்கள்.

தையல் மிஷின்களும் உள்ளது. சூரத்தில் இருந்து துணிகளை வாங்கி திருப்பூர், கோவை, ஊட்டி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் டீலராக கடந்த 2 வருடங்களாக விநியோகம் செய்து வருகிறேன். அவ்வாறு செய்யும்போது தொழில் சார்ந்த நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அப்போது கற்றுக் கொண்டது தான் சமூக வலைத்தளத்தில் தொழில் செய்யவும், ஆன்லைன் ஷாப்பிங் ஆப் உருவாக்கவும் உறுதுணையாக இருந்தது’’ என்கிறார் கருணாம்பிகை.

கொரோனா ஊரடங்கால் பல்வேறு சிறு தொழில் நிறுவனங்கள் முடங்கியதை போன்று இவருடைய நிறுவனமும் பாதிப்பை சந்தித்துள்ளது. “கொரோனா காலத்தில் எங்களுடைய சிறு தொழில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. நூல் விலை ஏறியது. உற்பத்தி தடைபட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு அமலாவதற்கு ஒரு வாரம் முன்பு எனக்கு விபத்து ஏற்பட்டது. மூன்று மாதம் ஓய்வு தேவைப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்த தொழிலையே விட்டு விடலாம் என்ற முடிவிற்கு கூட வந்துவிட்டேன்.

ஆனால் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என்னை துரத்திக் கொண்டே இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான், சமூக வலைத்தளம் எனக்கு கை கொடுத்தது. விளையாட்டாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எங்க நிறுவனத்தின் பேரில் வீடியோவாக வெளியிட்டு துணி விற்பனை செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஊரடங்கு காலத்தில் ஸ்டாக் இருந்த பொருட்களை மட்டும் சமூக வலைத்தளங்களில் சந்தைப்படுத்த முதலில் திட்டமிட்டேன்.

பெரிய அளவு லாபத்தை எதிர்பார்க்க மாட்டோம் என்பதால், குறைந்த விலையில் பொருட்களை சந்தைப்படுத்தினோம். முதலில் மக்கள் மத்தியில் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. என் கணவர் உட்பட என்னை சார்ந்தோர் அனைவரும் நம்பிக்கை இழந்தனர். நான் விடாமல் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு எங்கள் பொருட்களை சந்தைப்படுத்திக் கொண்டே இருந்தேன். தொடர் முயற்சியால் மக்களின் பார்வை என் மேல் பட்டது. நியாயமான விலையில் தரமான பொருட்கள் கொடுத்ததால், அனைத்து தரப்பு மக்களும் ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள்.

இதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக அத்தனூர் டெக்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் ஷாப்பிங் செயலியை உருவாக்க திட்டமிட்டேன். ஆன்லைன் ஷாப்பிங்கில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் அதில் நிகழும் தொடர் மோசடிகள் பற்றி தெரிந்தது. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த நிறைய விஷயங்களை கடைப்பிடிக்க ஆரம்பிச்சோம். ஈரோடு, சென்னி மலையை சேர்ந்த சிறு உற்பத்தியாளர்களின் பொருட்களை உலகமெங்கும் சந்தைப்படுத்தினோம். நம் பாரம்பரிய உணவுமுறையை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக ரசாயன உரமிடாத காய்கனி விதைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தேன்’’ என்றவர் செயலி உருவான விதம் பற்றி கூறினார்.

‘‘குறைந்த விலையில் தரமான பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும் என்ற என்னுடைய தேடலின் முடிவு தான் இந்த ஏஎன்டி ஆப். அமேசான், பிளிப்கார்ட் முதலிய ஆன்லைன் ஷாப்பிங்கில் கோலோச்சும் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் கமிஷன் அடிப்படையில் தான் செயல்பட்டு வருகின்றன. அப்படி இல்லாமல், நாமே பொருட்களை பேக் செய்து ஏன் விநியோகம் செய்யக்கூடாது என்ற யோசனை தோன்றியது.

பலருக்கு வேலைவாய்ப்பும் வழங்க முடியும். எங்க ஆப் மூலம் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நிறைய திட்டங்கள், சலுகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் சிறு முதலீட்டாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பொருட்களை உலகம் முழுதும் சந்தைப்படுத்த முடியும். இடைத்தரகர்களை தவிர்த்து உற்பத்தியாளர்களின் பொருட்கள் மக்களிடம் நேரடியாக செல்வதால், அவர்களும் கணிசமான லாபம் பார்க்க முடியும்’’ எனக்கூறும் கருணாம்பிகை, தொழில் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.

‘‘சமூக வலைத்தளங்களில் தொழில் செய்யும் பெண் என்பதால் தேவையில்லாத போன் அழைப்புகள், மெசேஜ்கள் வருவது வழக்கமாக இருந்தது. அது வெறுப்பையும், தொழில் செய்ய வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளியது. அந்த தருணங்களில் என் கணவர் தான் பக்கபலமாக இருந்தார். இப்போதும் தேவையில்லாத அழைப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளன.

ஆனால் அதை கடந்து செல்லும் பக்குவத்தை அடைந்து விட்டேன். தான் மரணிக்கும் போது தனக்காக சுமார் 100 பேராவது கண்ணீர் விட வேண்டும் என்பது தான் என் பெருங்கனவு. நம்முடைய தேவைகளை நிறைவேற்றினால் தான் நம்மை சார்ந்தவர்களுக்கான தேவையை நிறைவேற்ற முடியும். அதை மனதில் வைத்து தான் என்னுடைய தொழிலை நடத்தி வருகிறேன். உதவி செய்வது குறித்து வெளியில் சொல்லக்கூடாது. செயலில் காட்ட வேண்டும் என்பதுதான் என் எண்ணம்” என நிறைவாக பேசி முடித்தார் கருணாம்பிகை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதவை தட்டினேன்… வாழ்க்கைக்கான பாதை விரிந்தது! (மகளிர் பக்கம்)
Next post அப்பளம் இன்றி விருந்து சிறக்காது!! (மகளிர் பக்கம்)