ஆட்டிஸம் குழந்தைகளை கையாள்வது எளிதுதான்!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 33 Second

வழிகாட்டுகிறார் ஆசிரியை சாந்தி ரமேஷ்

ஐக்கிய நாடு பொதுச்சபையின் தீர்மானத்தின்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதியை உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடித்து வருகிறோம். ஆட்டிஸம் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்களிடமும், சமூகத்திலும் கொண்டு வருவதோடு, ஆட்டிஸ குறைபாடுள்ளவர்களை சுயசார்புடன் வாழ முனைப்படுத்துவதுதான் இந்த வருடத்தின் மையக்கருத்து.சென்னை மாடம்பாக்கத்தில் ஆட்டிஸம் குழந்தைகளுக்காக இயங்கி வரும் விருக்‌ஷ் பள்ளிக்கு திடீர் விசிட் அடித்தோம். அப்பள்ளியின் நிறுவனரும் தலைமை ஆசிரியையுமான சாந்தி ரமேஷ், ஆட்டிஸம் குழந்தைகளைக் கையாளும் வழிகள் பற்றி நம்மிடம் பேசினார்.

‘‘சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் முதலில் அந்தக் குழந்தையின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தெந்த விஷயங்களுக்கு குழந்தை பயப்படுகிறது, எந்த சூழ்நிலையில் அதன் நடவடிக்கை மாறுகிறது, எப்போதெல்லாம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறது என்பது போன்ற குழந்தையின் நுணுக்கமான ஒவ்வொரு செயலையும் கவனிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களைப் பயமுறுத்தும் சூழல்கள் வராமல் தவிர்க்க முடியும். சிறப்பு மனநல மருத்துவரை அணுகி, தன் குழந்தை மனரீதியாக எந்த வயதில் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்ற காலக்கிரமமான வயதை(Chronological age) தெரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் அவர்களை கையாள வேண்டும்.

முக்கியமாக சிறப்பு குழந்தைகளைக் கையாள பெற்றோர் இருவருக்குமே அதிக பொறுமை தேவை. எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரிடமே இதைக் கவனிக்கிறேன். தம்பதியரில் ஒருவர்தான் பொறுமையாக இருக்கிறார்கள். இது தவறு. பெற்றோர் இருவரின்அரவணைப்பும் குழந்தைக்குத் தேவை.அவர்களுடன் தாத்தா, பாட்டி, உடன் பிறந்தவர்கள் என குடும்பத்தினர் அனைவருமே பொறுமையோடு குழந்தைகளை கையாளும்போதுதான் ஆட்டிஸ வட்டத்தில் இருக்கும் குழந்தைகளை வெளியே கொண்டுவர முடியும்.சிறப்பு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டால், வீட்டில் விடுதலை கிடைக்கிறது என்று பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

சிறப்பு குழந்தைகளை பாரமாகவோ, மனநோயாளி யாகவோ நினைக்கும் எண்ணத்தை மாற்றுவதற்காகவே எங்கள் பள்ளியில் நடைபெறும் விழாக்கள், கூட்டங்களில் குழந்தையின் குடும்பத்தினரை கலந்துகொள்ள வைக்கிறோம். குறிப்பாக, பெற்றோர் இருவரும் சேர்ந்து அந்த குழந்தையை எப்படி கையாள வேண்டும் என்பதற்காக மனநல நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங்கும் கொடுக்கிறோம்.அதேபோல, சிறு குழந்தைகளாய் இருக்கும்போது எடுத்துக்கொள்ளும் அக்கறை, ஒரு 15, 20 வயது உள்ளவர்களிடம் காண்பிப்பது குறைந்துவிடுகிறது. இந்த வயதில் இருப்பவர்கள் தன்னுடைய சொந்தக் காலில் நிற்கும் வகையில் ஒரு கைத்தொழிலை கற்றுக் கொடுத்து அவர்களை தயார்படுத்த வேண்டும்’’ என்பவர், அதற்கான பயிற்சிகளை சிறப்பு பள்ளிகளிலேயே கற்றுத்தருகிற கடமை ஆசிரியர்களுக்கும் உண்டு என்கிறார்.

‘‘சிறப்பு குழந்தைகளுக்கு தங்கள் தேவைக்கு மற்றவர்களைச் சார்ந்திராத வகையிலும், வீட்டில் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையிலும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களை கற்றுத் தருவதும் முக்கியம். அதன் அடிப்படையிலேயே பெண் குழந்தைகளுக்கு அலங்கார நகைகள் செய்வது, மணிகள் கோர்ப்பது, செயற்கைப் பூக்கள் தயாரிப்பது போன்ற கலைகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். விழாக்களில்அன்பளிப்பு பொருட்களாக கொடுப்பதற்காக பொதுமக்கள் இவற்றை வாங்கிக் கொள்கிறார்கள். இதில் வரும் வருமானத்தை மாணவிகளிடமே கொடுத்துவிடுவோம்.வேலைக்குப் போகும் பெண்கள் உபயோகிக்கும் வகையில், சமையலுக்குத் தயாராக வெட்டப்பட்ட காய்கறிகள், கீரைகளின் வேரினை நீக்கி தனித்தனியாக அரிந்து பாக்கெட் செய்யும் பணியை இரு பாலருக்கும் கற்றுக் கொடுக்கிறோம்.மாணவர்களைப் பொறுத்தவரையில் ஸ்டாம்ப் ஒட்டுவது, மாத்திரைகள் கவர், குப்பை சேர்க்கும் கவர் உருவாக்கும் பயிற்சிகளை அளிக்கிறோம்.

இவர்கள் தயாரிக்கும் பொருட்களை அருகிலுள்ள மெடிக்கல் ஷாப், காய்கறிக்கடைகள் மற்றும் பொதுமக்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் குழந்தைகளுக்கே ஊதியமாக கொடுத்துவிடுகிறோம்.சிறப்பு குழந்தைகளைக் கையாள்வது சற்று சவாலான வேலைதான். கொஞ்சம் தாமதமாகத்தான் கற்றுக்கொள்ள ஆர்வம் காண்பிப்பார்கள். ஆனால், அவர்களுக்குப் பிடித்த பயிற்சிகளை பிடித்த விதத்திலும், ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு விதத்தி–்ல் மாற்றி பயிற்சியளிக்க வேண்டும். ஒரே விஷயத்தில் தொடர்ந்து அவர்களால் கவனம் செலுத்த முடியாது. விரைவிலேயே ஆர்வம் குறைந்து அடம்பிடிப்பார்கள். அதனால், அவ்வப்போது புதுப்புது உத்திகளை கையாண்டும் அவர்களுக்கு பிடித்த வர்ணங்களில் உபகரணங்களைக் கொண்டும் சொல்லிக் கொடுக்கும்போது எளிதில் ஒத்துழைப்பார்கள்’’ என்கிறார்.

ஒரு குழந்தைக்கு பெரிய பலூனில் படுக்க வைத்து பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் பிஸியோதெரபி ஆசிரியை ஒருவர். இது எதற்கான சிகிச்சை என்று கேட்டோம்.‘முதுகு தோள்பட்டை எலும்புகள், தசை போன்றவற்றை வலுவாக்கும் பயிற்சி இது. எலும்பு தசை வலுவிழந்து இருக்கும் குழந்தைகளால் தொடர்ந்து 5 நிமிடம்கூட நேராக நிமிர்ந்து உட்கார முடியாது. அதற்கான பயிற்சிதான் இது. இதுபோல் அவரவர் பிரச்னைக்கேற்றவாறு 3 மணிநேரம் வரை குழந்தைகளுக்கு பிஸிரோதெரபி பயிற்சிகள் கொடுப்போம்’ என்றார்.பள்ளியின் ஒரு பக்கத்தில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்றும் வைத்திருக்கிறார்கள். இதில் பொருட்களை முறையாக அடுக்குவது, எடை போடுவது, பிராண்ட்களை பார்த்து தேர்ந்தெடுப்பது என எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். எடை போட்டு பாக்கெட் செய்து மளிகைப் பொருட்களை தாங்களாகவே அவற்றை இனம் கண்டு எடுத்து எம்.ஆர்.பி தொகையைக் கண்டுபிடித்து மொத்த தொகையை கால்குலேட்டரில் கணக்கிடுவது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. அவர்களுக்கு சுயமாக வாழ முடியும் என்ற தற்சார்பை அளிக்கும் என்பதால் இதிலிருந்து கிடைக்கும் வருமானமும் ஊக்கத் தொகையாக மாணவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுகிறதாம்.

பள்ளிக்குச் செல்லும் முன் இறை வணக்கத்துடன் ஆரம்பித்து, அவரவர் வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். சற்றே கற்கும் திறன் உள்ள குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்குகளை சொல்லிக் கொடுக்கிறார்கள். குழந்தைகளின் கவனத்தை ஒருமுகப்படுத்தும் வகையிலான ஒரே வண்ணத்திலான வளையங்களை அடுக்குவது, உருவங்களைச் சேர்ப்பது போன்ற பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது.மதியம் 2 மணிக்கு உணவு இடைவேளை. தானாகவே சாப்பிடத் தெரியாத குழந்தைகளுக்கு ஆசிரியைகளே அம்மாவைப்போல் ஊட்டும் காட்சி நெகிழ்ச்சி.உணவுக்குப்பின் பாட்டு, நடனம், விளையாட்டு என குழந்தைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்பதைப் பார்க்கும் போது நம்மையும் அம்மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது.சேவை செய்ய வருகிற ஒவ்வொருவரின் பின்னாலும் ஏதாவது ஒரு கதை இருக்கும். சாந்தி ரமேஷுக்கும் அப்படி ஒரு கதை உண்டு.

‘‘என் மகன் ஒரு சிறப்புக் குழந்தை. விமானப்படையால் நடத்தப்படும் சிறப்பு குழந்தைகளுக்கான Umeed பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்காகவே நானும் தன்னார்வலராக அங்கு சேவை செய்து கொண்டிருந்தேன். கூடவே சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தேன். திடீரென ஒருநாள் விமானப்படையில் வேலை செய்பவர்களுக்கு மட்டும்தான் இந்தப் பள்ளி.மற்றவர்களுக்கு 3 ஆயிரம் வரை கட்டணம் மற்றும் பிஸியோதெரபிக்கு கூடுதல் கட்டணம் என்று சொல்லி என் மகனையும் சேர்த்து சுமார் 10, 15 குழந்தைகளை வெளியேற்றி விட்டார்கள். என்ன செய்வதென்று பெற்றோர் அனைவரும் திகைத்துக் கொண்டிருந்தபோது, ‘நாமே ஒரு பள்ளி ஆரம்பித்தால் என்ன?

இங்குள்ள 10 குழந்தைகளைக் கையாளும் நீங்கள் ஒரு பள்ளியை நடத்த முடியும்’ என்று மற்றவர்கள் ஆலோசனை சொன்னார்கள். அப்படி 10 குழந்தைகளுடன் ஆரம்பித்த இந்தப்பள்ளி இன்று எண்ணிக்கையில் 45 குழந்தைகளுடன் விருக்‌ஷமாக தழைத்திருக்கிறது’’ என்றவரிடம், ஒரு சிறப்புக் குழந்தையின் அம்மாவாக பெற்றோருக்கு கூறும் அறிவுரை என்னவென்று கேட்டோம்.‘‘ஆரம்பத்திலேயே தன் குழந்தை ஒரு மாறுபட்ட குழந்தை என்பதை பெற்றோர் கண்டுபிடித்துவிட வேண்டும். ஆண் குழந்தை என்றால் தாமதமாகத்தான் பேச ஆரம்பிப்பார்கள் என்று கவனக்குறைவாக விட்டுவிடுகிறார்கள். இரண்டு, மூன்று மாத குழந்தையாக இருக்கும்போதே தாயின் கண்ணோடு கண் பார்ப்பது, திடீரென்று சத்தம் கேட்டாலோ, வெளிச்சம் வந்தாலோ அதற்கு பதில் சமிக்ஞைகள் கொடுப்பது, சுறுசுறுப்பாக இருப்பது போன்றவற்றை தாய் உற்று கவனிக்க வேண்டும்.

சில குழந்தைகள் அளவு தெரியாமல் பால் குடித்துக் கொண்டே இருப்பார்கள். காரணம் இல்லாமல் அழுது கொண்டே இருப்பார்கள். கை, கால்களை அசைக்காமல் படுக்க வைத்தபடியே இருப்பார்கள். இவையெல்லாம் அறிகுறிகள். அவர்களோடு பேச்சுக் கொடுத்து, அந்தந்த பருவத்துக்கேற்ற விளையாட்டுகளை குழந்தைகள் செய்கிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.நடக்கத் தொடங்கிவிட்ட குழந்தைகள் அடிக்கடி தடுமாறி கீழே விழுவார்கள். எச்சில் விழுங்கத் தெரியாமல் வாயில் வடிய ஆரம்பிக்கும். இதையெல்லாம் பெற்றோர் கவனிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உடனடியாக மூளையைத் தூண்டும் சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் வெகுவிரைவில் குழந்தையை நார்மலுக்கு கொண்டு வந்துவிடலாம்’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? (அவ்வப்போது கிளாமர்)
Next post நான்கில் ஒரு குழந்தைக்கு ரத்தசோகை!! (மருத்துவம்)