நான்கில் ஒரு குழந்தைக்கு ரத்தசோகை!! (மருத்துவம்)
இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை ரத்த சோகையுடன் பிறப்பதாக National family health survey ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் கூறியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் ரத்த சோகையால் 51 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.குழந்தைகளிடம் அதிகரித்திருக்கும் ரத்தசோகையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கனிமொழியிடம் கேட்டோம்…
‘‘ஆரோக்கியமான தாயால்தான் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். இதுதான் அடிப்படையான பிரச்னை. கருவுற்றவுடன் மருத்துவரை அணுகுவதில் தாமதம், தக்க சிகிச்சை மற்றும் பரிசோதனை எடுத்துக்கொள்வதில் இருக்கும் தொய்வு, சத்து மாத்திரைகளை சாப்பிடுவதில் அலட்சியம் காட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்பட்டு ரத்தசோகையுடன் குழந்தை பிறக்கிறது.குழந்தை குறை மாதத்திலும் பிறக்கும். எடை குறைவாகவும், அதாவது 2 கிலோவுக்குக் குறைவாக இருக்கும். பிறந்த பிறகு பால் குடிக்கும் திறனும் பாதிக்கப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதற்கும் இது அடிப்படையான காரணமாக இருக்கிறது. தவழ்வது, நடப்பது போன்ற செயல்பாடுகளிலும் இந்த பாதிப்பு எதிரொலிக்கும்.
அதனால், கருவுற்ற முதல் நாளிலிருந்து மருத்துவரின் ஆலோசனையின்படி உணவு பழக்க வழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் தேவையான ஆலோசனையையும் சிகிச்சையையும் சரியாகப் பின்பற்ற வேண்டும். ஊட்டச்சத்து மாத்திரைகள் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது. இதை கருவுற்ற தாய்மார்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார்.
Average Rating