இயற்கை சோப் தயாரிப்பு இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 24 Second

முகத்தை நல்லா சோப்பு போட்டு கழுவு, எப்படி எண்ணெய் வடியுது பார்ன்னு வீட்டில் அம்மா சொல்ல கேட்டு இருப்போம். முகம் மட்டுமல்ல, நம் உடலையும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள உதவுவது சோப். இது போட்டு குளிக்கலைன்னா குளிச்ச மாதிரியே இருக்காது என்பது நிதர்சனமான உண்மை. தற்போது மார்க்கெட்டில் பல நறுமணம் மற்றும் ஹெர்பல் சோப்புகள் இருந்தாலும் இயற்கை முறையில் தயாரிக்கும் எந்த பொருட்களுக்கும் மக்கள் மத்தியில் டிமாண்ட் அதிகம். இப்படி உடல் தூய்மைக்கும், தூய ஆடைகள் அணிந்து பளிச்சென விளங்கவும் உறுதுணையாக இருப்பது சோப்பு. கார்ப்பரேட் நிறுவனங்களின் போட்டிகளின் மத்தியில் விளம்பரமே இல்லாமல் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது சித்ரா மணிவண்ணனின் ‘சின்மேக்ஸ் குளோபல் புராடக்ட்ஸ்’ (Cinmax Global Products) சோப் உற்பத்தி நிறுவனம்.

இவர்கள் ஹேண்ட் மேட் சோப் தயாரித்து வருகிறார்கள் என்பது தான் சிறப்பு. இவரது படைப்புகளில் கஸ்தூரி மஞ்சள், கற்றாழை, வேம்பு போன்ற இயற்கைப் பொருட்களின் நறுமணம் நிரம்பி வழிகிறது. திருச்சியில் வசித்து வரும் சித்ரா, கோயமுத்தூர், கேரளாவின் பாலக்காடு மட்டுமன்றி சிங்கப்பூரிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சோப் விற்பனையில் தூள் கிளப்பி வருகிறார். “குடிசைத் தொழிலாக சோப்பு உற்பத்தி நாடு முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளது. கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்கள் செல்பவர்கள், மலைவாழ் பெண்கள் சங்கம் தயாரித்த மூலிகை அம்சங்கள் கொண்ட இயற்கை நறுமண சோப் அங்கு கிடைப்பதை பார்த்து, விலைக்கு வாங்குவது சகஜம். ஆனால், ரசாயன பொருட்கள் கலக்காமல் சோப்பு தயாரிக்க முடியாது என்பதால், மத்திய அரசின் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டப்படி, சோப்பு உற்பத்திக்கு லைசென்ஸ் பெற்றாக வேண்டும்.

குடிசைத் தொழிலாகவும், இயற்கை நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகை கலந்த சோப், ரசாயனம் இல்லாதது என ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்,
உரிமம் இல்லாமல் உற்பத்தி செய்யக்கூடாது. உரிமம் பெற லட்சக்கணக்கில் செலவிட வேண்டும் என்பதால், யாரும் அந்த ரிஸ்க் எடுப்பதில்லை. எடுத்தாலும், விற்பனை படுத்துவிட்டால், மீண்டு எழ முடியாது என்பதால், குடிசைத் தொழிலாக உரிமம் இல்லாமலே சோப்பு உற்பத்தியில் பலரும் ஈடுபட்டு, கணிசமான லாபம் பார்த்து வருகின்றனர்’’ என்றவர் தன் நிறுவனத்திற்கு மத்திய அரசின் உரிமம் பெற்று, ரசாயனம் கலக்கப்படாத, மூலிகை மணத்துடன், இயற்கை முறையில் சோப்பு உற்பத்தி செய்து வருகிறார். ‘‘நாங்க உற்பத்தி மட்டுமன்றி பெண்களுக்கு சுயமாக தொழில் தொடங்க பயிற்சியும் அளித்து வருகிறோம். நூற்றுக்கும் அதிக பெண்கள் இதுவரை பலன் அடைந்துள்ளனர். சொல்லப்போனால், உரிமத்தின் அவசியம் உணர்ந்து, அதனை பெற்று ஹேண்ட்மேட் உற்பத்தியில் ஈடுபட்டு என்னிடம் பயிற்சி பெற்ற பெண்கள் பலரும் தொழில்முனைவோர் ஆகியுள்ளனர்.

பயிற்சியை முற்றிலும் இலவசமாக நடத்துகிறேன். அது மட்டுமன்றி முதல் முறையாக உதவி எண் அறிவித்து, வாரத்தில் ஒரு நாள் குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் அந்த நம்பரை தொடர்பு கொள்பவர்களுக்கு, செல்போன் மூலமாகவும் சோப்பு உற்பத்தி குறித்து விளக்கம் அளித்து வருகிறேன். இந்த முயற்சிக்கு
ஆதரவு பெருகி வருகிறது. திருச்சியின் இச்சிக்காமாலைப்பட்டி கிராமத்தில் தான் முதல் முறையாக இயற்கை முறை சோப்பு உற்பத்தியில் ஆர்வம் செலுத்தினேன். தயாரித்த பொருள் நல்ல வடிவம் பெற, கணவரிடம் எனது ஆர்வத்தை தெரிவித்து, கொஞ்சம் பெரிய அளவில் கொண்டு சென்றால் வருமானமும் பார்க்கலாம் என்றேன். தயங்காமல் என்னை ஊக்குவித்து, உடனிருந்து வியர்வை சிந்தி உழைத்தார். தொடக்க காலத்தில் கிராமத்தினருக்கு மட்டுமே சப்ளை செய்தோம். அப்போது லைசென்ஸ் வாங்கவும் இல்லை. கம்பெனிக்கும் பெயர் இல்லை.

சோப்புக்கும் பெயர் சூட்டவில்லை. தரமான சரக்காக இருந்ததால், எனது உற்பத்திக்கு அக்கம், பக்கத்து கிராமங்களிலும் டிமாண்ட் அதிகரித்தது. அடுத்த கட்டம், ஒரு நிறுவனமாக கொண்டு செல்ல முடிவெடுத்து, கணவரின் ஒப்புதல் மற்றும் நிதியுதவியுடன் வியாபாரத்தை விரிவு செய்தேன். அப்போது தான் சின்மேக்ஸ் குளோபல் புராடக்ட்ஸ் என நிறுவனத்திற்கு பெயரிட்டு, 10 பெண்களையும் பணிக்கு அமர்த்தி முழு நேர தொழில் என்ற கோதாவில் தீவிரமாக ஈடுபட்டேன். சோப்பின் முக்கிய மூலப்பொருள் தேங்காய் எண்ணெய். ஆனால் திருச்சியில் தரமான தேங்காய் எண்ணெய் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. அதே சமயம் கணவரின் நண்பருக்கு கோயமுத்தூரில் 20 ஏக்கர் பரப்பில் தேங்காய் தோப்பு இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமலும், உரமிடப்படாமலும் இருந்தாலும், மண் வளம் மற்றும் சத்து காரணமாக தோப்பில் தென்னை மரங்கள் நல்ல காய்ப்புடன் இருந்தன. நண்பரிடம் கணவர் பேச, அவரும் சும்மா தான் கெடக்கு. நீங்களே பராமரிச்சுக்குங்க என விட்டுக் கொடுத்தார்.

அதையடுத்து கோயமுத்தூரில் எங்க நிறுவனத்தின் மற்றொரு கிளை உருவானது. இந்த சமயத்தில், இன்டர்நெட்டில் அடிக்கடி சோப்பு குறித்து தகவல் திரட்டி வந்த எனக்கு தேங்காய்ப்பாலில் இருந்து எண்ணெய் எடுப்பதை காட்டிலும் கொப்பரையில் இருந்து எண்ணெய் எடுத்து பயன்படுத்தினால், அந்த எண்ணெய் உயர் தரத்தில் இருக்கும் என தெரிய வந்தது. அதன்படி, நாங்களாக பறிக்காமல், தானாக உதிரும் காய்களை உரித்து, தேங்காய் பருப்பை வெயிலில் உலர்த்தி கொப்பரையாக்கி பொடி செய்து, மரச்செக்கில் அரைத்து எண்ணெய் எடுக்கிறோம். மரச்செக்கு எண்ணெயில், கொப்பரை துருவலுக்கு இயற்கையிலேயே நல்ல அழுத்தம் கிடைப்பதால், 100 சதவீதம் சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுக்க முடிகிறது. இது தான் சோப்பின் தரத்துக்கு மிகவும் முக்கியம். பொதுவாக கடைகளில் வாங்கும் சோப்பில் டி.எப்.எம் (கொழுப்புச் சத்து) 65 என குறிப்பிடப்பட்டு இருக்கும். எங்களது தயாரிப்பில் 76 டி.எப்.எம் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியமானது.

இந்த நேரத்தில் கொப்பரையை அரைக்க கோயமுத்தூர் தோதுப்படவில்லை. மேலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய பாலக்காடும் அருமையான மையமாக இருந்தது. எனவே அங்கு ஒரு உற்பத்தி பிரிவு அமைத்து அதனை பிரதான உற்பத்தி மையமாக நிறுவினேன். ஐஸ் ஃபேக்டரியில் பிரமாண்ட கட்டிகளாக எவ்வாறு, ஐஸ் உருவாகிறதோ, அதே முறையில் சோப்பும் பெரிய பாராக உருவாகும். பிறகு கைக்கு அடக்கமான சைசில் துண்டு போட்டு, டிரேசிங் பேப்பரில் சுற்றி, அட்டை பெட்டியில் பேக் செய்து விற்பனைக்கு அனுப்புகிறோம். கஸ்தூரி மஞ்சள், கற்றாழை, வேப்பிலை, முருங்கை இலை, பூக்களின் நறுமணத்துடன் கூடிய சோப் என குறிப்பிட்ட வகைகளுக்கு மட்டுமே லைசென்ஸ் பெற்றுள்ளேன். சந்தனம், மல்லி, நன்னாரி, வெட்டிவேர் என பல மூலிகை எண்ணெய்களிலும் சோப்பு தயாரிக்க உரிமம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்.

வியாபார தொடர்புகள் விரிவடைந்ததை அடுத்து சிங்கப்பூரில் ஒரு கிளை அமைக்க பலரும் அழைப்பு விடுத்தனர். அங்கும் இப்போது தடம் பதித்துள்ளோம்.
சோப்பு தயாரிப்பு தொழிலில் பெண்கள் ஈடுபடுவது சுலபம். உழைப்பு, பொருட்களின் தரம், வியாபாரத்தில் நாணயம் மற்றும் நேர்மை இருந்தால் தொழில்முனைவோராக நீங்கள் உருவாகி சாதனை படைப்பதை யாராலும் அசைக்கவே முடியாது என்பது உறுதி.

சோப்பு தயாராகும் விதம்

தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், மூலிகை எண்ணெய் ஆகிய மூன்றையும் குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து அதனுடன் காஸ்டிக் சோடா கரைசலை (சோடியம் பை கார்பனேட்) சேர்த்து, நறுமணத்திற்கு தேவைப்படும் எண்ணெயை அதற்கான அளவில் கலந்து மோல்டில் ஊற்றி வைத்தால் சோப்பு கட்டி தயார். 25 சோப்பு தயாரிக்க செலவு… எண்ணெய் பொருட்கள் ரூ. 400, காஸ்டிக் சோடா ரூ.20, மூலிகை எண்ணெய் ரூ.20. ஆக, ரூ.500 இருந்தால் மூலப்பொருட்கள் தயார். அடுத்ததாக வாடகை, மின்சார கட்டணம், ஆட்கள் கூலி மற்றும் லாபம் என கணக்கிட்டால், இயற்கை சோப் என்பதால் உத்தேசமாக ஒரு சோப் ரூ.50 தான் ஆகும். ஒரு நாளைக்கு 300 சோப் என்றாலும், 15,000 ரூபாய் கிடைக்கும். இதில் பேக்கிங் மற்றும் லாஜிஸ்டிக் செலவுகளை குறைத்து நிகர லாபமாக பார்த்தால் எப்படியும் ரூ.3,000 பார்க்கலாம். அப்படியானால் மாதக் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான்கில் ஒரு குழந்தைக்கு ரத்தசோகை!! (மருத்துவம்)
Next post நவராத்திரி ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்!! (மகளிர் பக்கம்)