எச்சரிக்கை… குழந்தையைத் தூக்கிப் போடாதீங்க…!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 43 Second

“குழந்தைகளை வேகமாக குலுக்குவதாலும், தலைக்குமேல் தூக்கிப்போட்டு விளையாடுவதாலும் குழந்தை அதிர்ச்சி நோய்(Shaken Baby Syndrome) என்றழைக்கப்படும் மூளைக்காயம் ஏற்படுகிறது. நம்மை அறியாமல் குழந்தைக்கு நாம் ஏற்படுத்தும் மிகப்பெரிய கொடூரம் இது. 5 வயது வரை உள்ள குழந்தைகள் பாதிப்படைய நேர்ந்தாலும், ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளே அதிகம் பாதிப்படைகிறார்கள்.

குழந்தைகளை தூக்கிப்போட்டு விளையாடும்போது, வெளிப்படையான பாதிப்புகள் நமக்கு தெரிய வராவிட்டாலும், தீவிரமான நீண்டகால பிரச்னைகளில் கொண்டுவிட்டுவிடும்.

ஏன்… சிலநேரங்களில் மரணம்கூட சம்பவிக்கலாம். மூளை அதிர்ச்சி அடைந்த குழந்தை நிறுத்தாமல் அலறும். குழந்தையின் அலறலைக் கண்டு செய்வதறியாது நாம் டென்ஷன் ஆவோம். காரணம் கண்டுபிடிக்க முடியாமல் வீடே அமர்க்களப்படும். பதற்றமோ, கோபமோ படாமல் குழந்தைகள் பராமரிப்பில் கைதேர்ந்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு உடனடியாக முதலுதவி செய்வது நல்ல பலன் தரும்.

பச்சிளம் குழந்தைகளின் தலை உடலைவிட பெரியதாகவும், தலையின் பாரத்தை தாங்க முடியாத வகையில் கழுத்து தசைகள் பலவீனமாகவும் இருக்கும். மேலும், குழந்தைகளின் மூளையில் உள்ள ரத்த நாளங்கள் மயிரிழை போன்று மிகவும் மெல்லியதாகவும் இருப்பதால் குழந்தையை குலுக்கும்போதும், தூக்கி போடும்போதும் தலை திரும்பிக் கொள்ளவோ அல்லது முன்னும்
பின்னுமாக முறுக்கிக்கொள்ளவோ செய்யும். இதனால் மூளையில் உள்ள திசுக்கள், ரத்தநாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு அதிகப்படியான அழுத்தம் ஏற்படும். தலை அதிர்கையில், குழந்தையின் மூளையானது மண்டை ஓட்டில் சென்று தடாலென மோதிக் கொள்ளும். அப்போது மூளையில் ரத்தக்கசிவும், வீக்கமும் உண்டாகும்.

இதனால்தான் ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் அதிகமாக பாதிப்படைகிறார்கள். மற்றபடி தூங்கும் குழந்தைகளை மடியில் மெதுவாக ஆட்டுவது, முழங்கால், தோள்களில் போட்டு ஆட்டுவது போன்ற செய்கைகளால் பெரிதாக பயம் ஒன்றும் இல்லை’’ என்றவரிடம், குழந்தை பாதிக்கப்பட்டிருப்பதன் அறிகுறிகளைத் தெரிந்துகொள்ள முடியுமா என்று கேட்டோம்.

‘‘பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வயது, உபயோகிக்கப்பட்ட வேகம், எண்ணிக்கை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு Shaken baby syndrome அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தையின் பாதிப்பிற்கு தகுந்தபடி மாறுபடும். சிறிது அதிர்ச்சி அடைந்த குழந்தைகளுக்கு சிறு மயக்கம், வாந்தி, பசியின்மை மற்றும் சோர்வு ஏற்படும். ஆனால், அதிகம் அதிர்வு ஏற்பட்ட குழந்தைகளுக்கு வலிப்பு, குறைவான இதயத்துடிப்பு, கேட்கும் திறன் குறைதல், ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலுமோ ரத்தக்கசிவு, மூச்சு விடுவதில் சிரமம், சில குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் குறைவதால் உடல் நீலநிறமாக மாறிவிடும்.

குழந்தைகளை தூக்கிப் போடும் சமயங்களில் அருகிலுள்ள சுவரிலோ அல்லது மற்ற ஏதேனும் கடினமான பொருட்களிலோ மோத நேரிடும். அப்போது பலத்த காயங்கள், எலும்பு முறிவுகள் கூட ஏற்பட வாய்ப்புண்டு. தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் உடனே தெரியவராது. பகுதியாகவோ, முழுவதுமாகவோ பார்வைக்குறைபாடு, காதுகேளாமை, தாமதமான வளர்ச்சி, பேச்சு மற்றும் கற்றல் குறைபாடு, கவனம் மற்றும் நினைவாற்றல் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு மற்றும் பெருமூளை வாதம் போன்ற குறைபாடுகள் நீண்டகாலங்களுக்கு பிறகு கூட தெரிய வரலாம்.

சில பெற்றோர்கள் குழந்தை தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று தூங்க வைத்துவிடுவார்கள். அது மிகப்பெரிய தவறு. ஏனெனில், குழந்தை கோமா நிலையை அடைந்துவிடக்கூடும். அது பேராபத்தில் கொண்டுபோய் விடும். உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று உள்காயம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துவிடுவது நல்லது. தெளிவான அறிகுறிகள் தெரிய வராத சூழலில் குழந்தைக்கு நன்றாக பசி எடுக்கிறதா? வாந்தி ஏதேனும் எடுத்ததா? காய்ச்சல் வந்ததா என குழந்தையின் முழுமையான மருத்துவ வரலாற்றை பெற்றோர்களிடம் கேட்டு அறிவோம்.

மூளைக்குள் ஏதேனும் அடிபட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிய சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், தோள்பட்டை இணைப்பு எலும்பு கள் இடம் மாறுதல் மற்றும் எலும்பு முறிவுகளை அறிய எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை செய்து அவ்வாறு ஏதேனும் பாதிப்பிருந்தால் உடனடியாக சிகிச்சையை தொடங்கிவிடுவோம். சில குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்பட்டு மரணம் நேரிடும் என்பதால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.”

இதேபோல் ராட்சத ராட்டினம், ரோலர் கோஸ்டர் போன்ற விளையாட்டுகளில் குழந்தைகளை அனுமதிப்பதும் தவறு என்கிறார் ரெக்ஸ் சற்குணம். ‘‘இந்த விளையாட்டுகளில் மேலிருந்து தலைகீழாக புரட்டப்படுவதால் ரத்த ஓட்டம் எதிர்த்திசையில் பாய நேரிடும். இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு வாந்தி, மயக்கம் வரும். சில குழந்தைகளுக்கு வலிப்பும் வந்துவிடும்.
குழந்தையின் உடல் பூப்போன்றது. அவர்களை மலரினும் மெல்லியதாக கையாள வேண்டும். அவர்கள் ஒன்றும் வாலிபாலோ, பேஸ்கட் பாலோ இல்லை தூக்கிப்போட்டு விளையாட…’’ என்கிறார்
இறுதியாகவும் உறுதியாகவும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளைக் கெடுக்கும் டெக்னாலஜி வில்லன்!! (மருத்துவம்)
Next post பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்? (அவ்வப்போது கிளாமர்)