சோலா வுட் கலைப்பொருட்கள் தயாரிக்கலாம்..நல்லதொரு வருமானம் ஈட்டலாம்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 36 Second

இன்றைய உலகில் பெண்கள் வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய ஏராளமான சிறுதொழில்கள் புதிது புதிதாக வரத் துவங்கியுள்ளன. அந்த வகையில் சோலா வுட் என்று சொல்லப்படும் மரக்குச்சியைக் கொண்டு கலைப்பொருட்கள் மற்றும் பிரேம் தயாரித்து நல்லதொரு வருமானம் ஈட்டலாம் என்கிறார் சென்னை வளசரவாக்கத்தில் ஸ்ரீ நிகிதா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் என்றப் பெயரில் கலைப்பொருட்கள் பயிற்சி அளித்து வரும் பி.வி.லட்சுமி.

‘‘பெண்கள் வீட்டில் இருந்தபடியே நல்லதொரு வருமானத்தை ஈட்ட முடியும். அவர்களுக்கு என ஒரு வருமானம் கிடைக்க ஊக்குவிக்கும் வகை
யில் பலவிதமான கைவினைப் பொருட்கள் குறித்த பயிற்சியை கடந்த இருபது ஆண்டுகளாகவே கொடுத்து வருகிறேன்.

உதாரணமாகத் தஞ்சாவூர் பெயின்டிங், ஜரோக்கா பெயின்டிங், 3D மற்றும் 4D சுவர் சித்திரம், கேரளா சுவர் சித்திரம், கத்தி முனையில் வரையப்படும் பெயின்டிங், அக்ரிலிக் பெயின்டிங், ராஜஸ்தான் சக்கர சுவர் சித்திரம், ரசாயன சுவர் சித்திரம், கேன்வாஸ் அட்டை பெயின்டிங், மரத்தூள் பெயின்டிங் மற்றும் பலவிதமான மண் ஜாடிகளில் களிமண் சித்திரம் போன்ற வேலைப்பாடுகள் குறித்து பயிற்சி அளித்து வருகிறேன்.

இவை மட்டுமல்லாது நூல்களைக் கொண்டு அணிவகுத்து வரும் மாலைகள், பூங்கொத்துக்கள், மேக்ரம் என்று சொல்லக்கூடிய நூலில் எண்ணற்ற கைவினைகள், பட்டுப்பூச்சியின் கூட்டை கொண்டு மாலைகள், விதவிதமான கை எம்பிராய்டரிகள், கண்கவர் வடிவமைப்புகளை கொண்ட தலையணைகள், மணிகளில் ஏராளமான கைவினைப்பொருட்கள் (உதாரணமாக மணிகளைக் கொண்டு திருமண பெண்களுக்கு ஜடைகள் அலங்காரம், கோவில்களில் உள்ள அம்மனுக்கு ஜடை அலங்காரம், வண்ண வண்ண தோரண அலங்காரங்கள்), குந்தன் கற்களைக் கொண்டு திருமண வரவேற்பறையில் ஆரத்தி தட்டுகள் தயாரிப்பது மற்றும் அலங்காரமாக குங்குமச்சிமிழ், பரிசளிப்பு பொருட்கள் போன்ற கைவினைப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சி அளித்து வருகிறேன். செயற்கை நகைகளும் இதில் அடங்கும். பஞ்சு தாள்களைக் கொண்டு பூக்கள், பொம்மைகள் மற்றும் மென்மையான தாள்களைக் கொண்டு பொம்மைகள்’’…. என மூச்சுவிடாமல் அடுக்கிக்கொண்டே சென்ற அவர் மேலும் சில கலைப்பொருட்கள் தயாரிப்பு குறித்து விளக்கினார்.

‘‘பட்டு நூல்களை வைத்து வளையல், கம்மல், நகைகளை செய்கிறேன். ஃபோம் (foam) பொருளை கொண்டு மணப்பெண் அலங்காரத்தை ஆர்டரின் பேரில் என்னிடம் பயிற்சி பெறும் பெண்களை வைத்துச் செய்து கொடுக்கிறேன். சணல் கயிறுகளை வைத்துப் பல கைவினைகளையும் செய்து வருகிறேன்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக கேக் வகைகளான ஸ்பான்ஜ் கேக், ஃபாண்டன்ட் கேக், பிளாக்ஃபாரஸ்ட் கேக், டீ கேக் பலவிதமான கப் கேக்ஸ், குக்கீஸ், பிஸ்கட் வகைகள், சாக்லேட் வகைகள் இவை அனைத்தும் ஆர்டரின் பேரில் செய்து கொடுக்கிறேன். ஐஸ்கிரீம் செய்வதற்கான பயிற்சிகளும் கொடுக்கிறேன். இந்த அனைத்து வேலைப்பாடுகளையும் என்னிடம் பயிற்சி பெற்ற பெண்களை வைத்தே செய்து கொடுக்கிறேன்’’ என்றவர், சோலா வுட் கொண்டு செய்யும் கலைப்பொருட்கள் குறித்து விளக்கினார்.

‘‘தற்போது சோலா வுட்டில் (Sola Wood) விதவிதமான கைவினைப்பொருட்கள் செய்வதை கற்றுத் தருகிறேன். இது மிகவும் மென்மையான மரத்தாளால் ஆனது. ஒரு பாக்கெட்டில் 6 கட்டுகள் இருக்கும். ஒரு கட்டைக் கொண்டு 10 பூக்கள் செய்யலாம். ஒரு கட்டின் விலை சுமார் 50 ரூபாய் ஆகும். இந்த மரத்தாள் சென்னையில் கைவினைப்பொருட்கள் தயாரிப்புக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்.

இதனைக்கொண்டு பல்வேறு வகையான கலைப்பொருட்களை வடிவமைக்கலாம். இந்தக் கலைப்பொருட்கள் சுவர் அலங்காரத்துக்கானது. பெரும்பாலான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இந்த அலங்காரங்களை விரும்புகின்றனர். புதிதாக கட்டிய வீடுகளில் இந்த சோலா வுட் (Sola Wood) கலைப்பொருள் அலங்காரம் நம் மனங்களில் பாசிட்டிவ் எண்ணங்களைக் கொண்டு வருவதாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு இரண்டு வெண் புறாக்களைக் கொண்ட கலைப்பொருளைக் கொடுக்கும்போது அவர்கள் அதனை வீட்டில் அலங்காரம் செய்து வைக்கும்போது ஒருவருக்
கொருவர் அன்பின் வெளிப்பாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இதுமட்டுமல்லாது இந்த சோலா வுட்டில் பலவித வண்ணங்கள் கொண்டு அலங்கரிக்கலாம். வெள்ளை நிறம் கொண்ட இந்த வகை சோலா உட்டில் கைவேலைகளை முடித்ததும், நன்கு காய்ந்தவுடன் அதன் மேல் அக்ரலிக் பெயின்ட் கொண்டு பல வண்ணங்களால் அலங்கரிக்கலாம். தற்போது விற்பனையில் பலவித வண்ணங்களால் பூசிய ‘‘சோலா வுட்’’ பொருட்கள் நேரிடையாகவே கிடைக்கிறது.

ஒரு கலைப்பொருள் தயாரிப்பு வேலைப்பாடு முடிந்தவுடன் அதில் விழும் கழிவுகளை கொண்டு மல்லிப்பூக்களை உருவாக்கி இறைவனுக்கு மாலைகளாக தொடுக்கலாம். அதன் மூலம் இன்னொரு இதர வருமானமும் கிடைக்கும். மல்லிப்பூவின் காம்பில் மட்டும் பச்சை நிற வண்ணத்தைப் பூசினால் அசல் மல்லிப்பூவைப் போல் தோற்றமளிக்கும்.

நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து மடலை அனுப்பி ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்த மறந்த இந்த காலத்தில். நான் குழந்தைகளுக்கு சோலா உட்டை கொண்டு வாழ்த்து மடலை தயாரிக்க சொல்லிக் கொடுக்கிறேன். இந்தப் பொருட்கள் தயாரிப்பின் மூலம் குறைந்தபட்சமாக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க வாய்ப்புள்ளது.

நமது மார்க்கெட்டிங் யுக்தியைப் பொறுத்து கூடுதல் வருமானம் ஈட்டலாம். இக்கலைப்பொருட்கள் தயாரிப்பு மனதுக்கு மகிழ்வளிப்பதுடன் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க ஒரு நிரந்தர வருமானத்தையும் ஈட்டித்தரும். பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவ, மாணவிகள் வரை இன்றைக்கு கிராப்ட் ஒர்க் தேவைப்படுகிறது. அவர்களுக்கு செய்துகொடுத்தும் வருமானம் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். என்னுடைய இருபது ஆண்டு சிறுதொழில் பயிற்சி மற்றும் கலைப்பொருட்கள் தயாரிப்பு பயணத்தில் என்னுடைய கணவர் எனக்கு ஊக்கம் அளிப்பவராக இருந்துவருகிறார். நேற்று செய்ய வேண்டியதை இன்று செய்தால் சோம்பேறி. இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால் சுறுசுறுப்பானவர். நாளை செய்ய வேண்டியதை இன்று செய்தால் வெற்றியாளர் என்பதை ஒவ்வொரு பெண்ணிற்கும் சொல்லிக் கொடுக்கிறேன். ஏனெனில், இன்றைய உலகம் பெண்களுக்கானது’’ என பெருமிதத்துடன் முடித்தார் லட்சுமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 60 ரூபாய்க்கு புஃபே சாப்பாடு!! (மகளிர் பக்கம்)
Next post மெழுகில் அழகிய பொருட்கள் தயாரிக்கலாம்… மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)