மெழுகில் அழகிய பொருட்கள் தயாரிக்கலாம்… மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 36 Second

நவீன காலத்தில் நம் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை ஞாபகத்தில் வைத்திருக்க ஒவ்வொரு வகையிலும் அடையாளப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் வீட்டில் அலங்காரப் பொருளாகவோ அல்லது விசேஷங்களில் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை மெழுகில் அழகழகாக வடிவமைத்து வருகிறார் சென்னை காரம்பாக்கத்தில் SS ARTS AND CRAFTS தொழில் பயிற்சிக்கூடம் நடத்திவரும் சுதா செல்வகுமார். இச்சிறுதொழில் குறித்து அவர் நம்மிடம் விளக்கியபோது…

‘‘எத்தனை நாட்கள் ஆனாலும் வீணாப் போகாத இட்லி, ஊசல் அடிக்காத வடை, நமத்துப் போகாத காரம், அழுகிப் போகாத பழங்கள் வேண்டுமா சென்னை காரம்பாக்கத்தில் உள்ள என்னுடைய SS ARTS AND CRAFTS தொழில் பயிற்சி கூடத்திற்கு வாருங்கள். இக்கலையை கற்றுக்கொண்டால் நீங்களும் மாதம் ஒரு கணிசமான வருமானம் பார்க்கலாம்’’ என்கிறார் சுதா.

‘‘நான் சொன்ன அனைத்து பலகாரங்களும் மெழுகினால் செய்யப்பட்டவை. பார்க்க அப்படியே நிஜமான உணவுகள் போல் தோன்றும். இதில் நார்த் இண்டியன் ஸ்வீட், காரம், தென் இந்திய ஸ்வீட், காரம், இட்லி, வடை, சட்னி, ஹல்வா, ஐஸ்கிரீம் என டிபன் காம்போ செட், கேக், மில்க் ஷேக் என கலந்து கட்டி அடிக்கலாம் (கற்றுக் கொள்ளலாம்). மெழுகில் பழங்கள், காய்கறிகள் மட்டும் அல்லாமல் ஊஞ்சல், பூக்கொத்து என அலங்கார பொருட்களும் செய்யலாம்.

ஆரம்பத்தில் நானும் மெழுகில் விதவிதமான மெழுகுவர்த்திகளான மிதக்கும் மெழுகுவர்த்தி, வாசனை மெழுகுவர்த்தி, ஜெல் கேண்டில் (candle) என மற்றவர்களை போன்றுதான் செய்து வந்தேன். இதை எல்லாரும் தான் செய்து வருகிறார்கள். அதனால் எல்லாரையும் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் என்று யோசித்தேன். பொதுவாக மெழுகுவர்த்தி செய்ய மோல்டு அவசியம். சில மோல்டுகளின் விலை அதிகம். மேலும் அச்சில் ஊற்றி அது ஆறியதும் இறக்கி செய்வது என்பது அவ்வளவு கடினமில்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

அதனால் யோசித்து மோல்டு இல்லாமல், அதே சமயம் அனைவரையும் கவரும் வகையில் கற்பனையில் உருவானதே இந்த மெழுகு க்ராஃப்ட். இதற்கான பயிற்சியினை நான் கோயம்புத்தூருக்கு சென்று எடுத்தேன். பிறகு காலத்திற்கு ஏற்ப நூடுல்ஸ், பீட்சா, டோனட்ஸ் எல்லாம் என் கற்பனையே’’ என்றவர் இதை ஒரு அழகு பொருட்களாகவும் பயன்படுத்தலாம் என்றார்.

‘‘கல்யாண நிகழ்ச்சியில் வரிசை தட்டு, ஆரத்தி தட்டு அலங்கரிப்பது இப்போது வழக்கமாக உள்ளது. அதற்கு பதில் மெழுகு கிராஃப்ட்களை நாம் பயன்படுத்தலாம். மேலும் புதிதாக உணவகங்கள் மற்றும் ஸ்வீட் ஸ்டால் ஆரம்பிக்கும் போது அவர்கள் கடையின் யுனிக் உணவினை இதில் செய்து வரவேற்பறையில் வைத்து அசத்தலாம்.

பார்க்க வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும். சிலர் இந்த மெழுகினால் செய்த உணவு பொருட்களை ஆர்டர் கொடுத்து வாங்கிட்டுப் போறாங்க. நிஜ சாப்பாட்டை வைத்தால் ஈ மொய்க்கும், கெட்டுப் போய்விடும் ஆனால் இதை ஒரு முறை வாங்கி வைத்தால் எத்தனை வருடமானாலும் அப்படியே இருக்கும். தூசி பட்டால் கூட நீரில் கழுவி துடைத்து வைத்துக் கொள்ளலாம்.

ஏன் பிரபல டயாபடீஸ் ஹாஸ்பிட்டலில் கூட என்னிடம் ஆர்டர் கொடுத்து வாங்கி சென்றார்கள். என்ன உணவு சாப்பிடலாம் (சுண்டல், இடியாப்பம்) மாதிரி, என்ன சாப்பிடக் கூடாது (பர்கர், பீட்சா) என்பதை தனித் தனியே பிரித்து செய்து கொடுக்க சொன்னார்கள். அதை மக்களிடம் புரிய வைக்க எளிமையாகவும், விழிப்புணர்வு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்றனர்.

அது எனக்கு மிக ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்தது. இவற்றை நம் வீட்டு வரவேற்பறையிலும், நவராத்திரி சமயங்களில் மெழுகு பொம்மை, உணவு பண்டங்களையும் வைத்து இன்னும் அழகுபடுத்தலாம். வித்தியாசமான பரிசு பொருட்கள் கொடுப்பதற்கு முதல் சாய்ஸ் இது’’ என்றவர் இதற்கான முதலீடு அதிகமில்லை என்றார்.

‘‘முதலீடு குறைவு என்றாலும், பொறுமையும், கற்பனைத் திறனும் அதிகம் வேண்டும். மெழுகில் சிப்ஸ் வேக்ஸ், பார் வேக்ஸ், ஜெல் வேக்ஸ் என வகைகள் உள்ளன. இவை செய்ய சிப்ஸ் வேக்ஸ் பயன்படுத்தலாம். ஒரு கிலோ மெழுகு ரூ. 250- 300 வரை விற்கப்படுகிறது. ஒரு கிலோ மெழுகில் ஸ்வீட் அளவை பொறுத்து 20- 25 ஸ்வீட் செய்யலாம்.

அதே கேக் என்றால் நடுத்தர அளவு செய்யலாம். மெழுகை அலுமினிய பாத்திரத்தில் போட்டு குறைந்த தணலில் அடுப்பில் வைத்து உருக்கி இறக்கி மெழுகு கலர் சேர்த்து சிறிது ஆறவிட்டு கைபொறுக்கும் சூட்டில் அனைத்தையும் செய்ய வேண்டும் இதில் வண்ணம் சேர்ப்பது ஒரு கலையே. தவறாக கூடவோ, குறைத்தோ சேர்த்து விட்டால் என்ன பொருள் என அடையாளம் தெரியாமல் வீணாகி விடும். எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும்.

டிபன் காம்போ 500 ரூபாய்க்கும், ஒரு ஐஸ்கிரீம் 250 ரூபாய் என பிரித்தும் விற்கலாம். முழு செட் ரூ. 5000 – ரூ. 7000, வரை சைஸ் பொறுத்து விற்பனை செய்யலாம். பேசிக் லெவல் வகுப்புக்கு ஒரு நாள் போதும். அட்வான்ஸ் கோர்சிைன இரண்டு, மூன்று நாட்களில் கற்றுக் கொள்ளலாம். எனக்கு அதுக்கெல்லாம் நேரமே இல்லன்னு சொல்றவங்க அரை மணி நேரத்தில் ஐஸ்கிரீம் மட்டுமே கற்றுக் கொள்ளலாம். மூலப்பொருட்கள் அனைத்தும் பாரிஸ் கார்னர் கந்த கோட்டம் அருகில் வரிசையாக அனைத்து கடைகளிலும் மொத்த விலைகளில் கிடைக்கிறது.

இக்கலையைக் கற்றுக்கொண்டால், வகுப்புகள் எடுத்தும், ஆர்டர்கள் பிடித்தும் சுலபமாக குறைந்தது ரூ10,000 மாதம் சம்பாதிக்கலாம்’’ என்றவர்
இந்த கைவினைப் பொருட்கள் ெசய்வதால் ஒருவித மனநிறைவு ஏற்படுவதாக கூறினார்.‘‘எனக்கு பலவிதமான கைவினைப் பொருட்கள் செய்ய தெரிந்து எல்லாவற்றுக்கும் வகுப்புகள் எடுத்தாலும் சில கைவேலை செய்து முடித்தவுடன் ஒரு இனம் புரியாத சந்தோசம், மன நிறைவு ஏற்படும். அப்படி ஒரு கொண்டாட்டம்தான் இந்த மெழுகு பொம்மை செய்யும் போதும். ஏன் சில நேரம் ஆர்டர் கொடுத்ததை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க கூட மனசு வராது. அதன் அழகு அப்படி இருக்கும்.

ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள சிறப்பு உணவை செய்ய சொல்லி பள்ளிக்கூட ப்ராஜக்ட்டுக்கு வாங்கி செல்வார்கள். அதில் முழு மதிப்பெண் மாணவ, மாணவிகள் ெபறும் போது அவர்களை விட நான் தான் ரொம்பவே சந்தோஷமடைவேன். பணம் சம்பாதிப்பது ஒரு புறம் இருந்தாலும் கைவேலை செய்வதால் மன உளைச்சல் ஏற்படாது. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்… என நாமக்கல் கவிஞரின் சொல்படி நடந்து முன்னேறலாம்’’ என்றார் சுதா செல்வக்குமார் தனக்கே உரித்தான தன்னம்பிக்கையுடன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோலா வுட் கலைப்பொருட்கள் தயாரிக்கலாம்..நல்லதொரு வருமானம் ஈட்டலாம்!! (மகளிர் பக்கம்)
Next post சோம்பேறிக் கண்!! (மருத்துவம்)