குழந்தைகளின் வாயில் துர்நாற்றம் வீசக் காரணம் என்ன? (மருத்துவம்)
பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளின் வாயில் துர்நாற்றம் வீசக் காரணம் என்ன? இருவேளை பல் துலக்கினால் இரவில் வாயில் கிருமிகளின் தாக்கம் இருக்காதா? குழந்தைகளை இருவேளை பல் துலக்க வைக்க என்னதான் செய்வது?
பல் மருத்துவர் மணிகண்டன் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் கழிப்பிட வசதிகள் சரியாக இல்லாததால் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதில்லை. வாட்டர் பாட்டில் காலியாகாமல் அப்படியே வீட்டுக்கு வரும். இதனால் வாயில் உணவுத் துகள்கள் தேங்கி, பாக்டீரியா சேர்ந்து வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும், சிறுநீர் கழிக்கவும் முறையாகப் பழக்கப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
இரவு சாப்பாட்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 12 மணி நேரம் இடைவெளி இருக்கிறது. பல் துலக்காவிட்டால் வாய்ப்பகுதியில் உள்ள உணவுகள் ஒட்டிக் கொண்டு கிருமிகள் தாக்க ஆரம்பிக்கும். ஒட்டும் தன்மையுள்ள சாக்லெட் போன்றவற்றை சாப்பிடும் போது இந்த பாக்டீரியாக்களின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். பிரஷ் செய்வதன் மூலம் அவற்றை விரட்டலாம். அப்படிச் செய்யாமல் விட்டால் பல் அரிப்பு ஏற்பட்டு சொத்தை வரும்.
இன்று மோட்டாரைஸ்டு பிரஷ்கள் கிடைக்கின்றன. செல்போன் சார்ஜ் செய்வது மாதிரி அதையும் சார்ஜ் செய்து உபயோகிக்கலாம். அதை குழந்தைகளுக்குக் கொடுப்பது பல் துலக்குவதை வேடிக்கையாக, விளையாட்டானதாக மாற்றும். டாம் அண்ட் ஜெர்ரி, பென்டென் போன்ற உருவங்களில் பிரஷ் வாங்கித் தருவதும் பலனளிக்கும். குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்ட்ராபெர்ரி மாதிரியான ஃப்ளேவர்களில் டூத் பேஸ்ட் வாங்கிக் கொடுப்பது இன்னொரு வழி.
Average Rating