டீம் வொர்க்… ட்ரீம் வொர்க்!! (மருத்துவம்)
கற்பித்தலும் கற்றலும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியவை. ஆசிரியர் வகுப்பின் நடுவில் நின்று கொண்டு ரிங் மாஸ்டர் உத்தரவு இடுவதுபோல பாடங்களை நடத்துவதால், அவர் கூறும் தகவல்களை அப்படியே மண்டைக்குள் திணித்துக் கொள்ளும் மனநிலையிலேயே குழந்தைகள் இருப்பார்கள். மாறாக மாணவர்களை பல்வேறு குழுக்களாகப் பிரித்து சமூகம் சார்ந்த பிரச்னைகளைப் பற்றி விவாதம் செய்யச் சொல்லும் போது தன்னிச்சையாக செயல்படுபவர்களாகவும், முடிவெடுக்கும் திறன் உடையவர்களாகவும் உருவாகிறார்கள். பின்னாளில் பணியிடங்களிலும் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள முடியும்.
“ஆசிரியர் தலைமையின் கீழ் பயிலும் குழந்தைகளைக் காட்டிலும் குழுவாக இணைந்து செயல்படும் குழந்தைகள் முடிவெடுக்கும் திறனுடையவர்களாக இருக்கிறார்கள்” என்று அமெரிக்க இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின்தலைமை ஆராய்ச்சியாளரான ஸின்ஜாங் கூறுகிறார். குழந்தைகள் சிறந்த சிந்தனையாளர்களாக வரவேண்டுமெனில் அவர்களை பள்ளி நேரங்களில் குழுவாக இணைந்து செயல்படும் வகையில் ஈடுபடுத்த வேண்டும். அப்போது அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முடியும் என்கிறார் ஸின்ஜாங்.
760க்கும் அதிகமான ஐந்தாம் வகுப்பு குழந்தைகளை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவு மாணவர்களுக்கு வழக்கமான பாணியில் பாடம் எடுக்கச் செய்தோம். இரண்டாவது பிரிவு மாணவர்களை குழுக்களாக பிரித்து, ‘தெருக்களில் தொந்தரவு செய்யும் நாய்களை கொல்ல ஆட்களை பணியமர்த்தலாமா’ என்ற சமூகப் பிரச்னையை 6 வார பாடத் திட்டமாகக் கொடுத்தோம். அந்த மாணவர்கள் அந்தப் பிரச்னையை சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் கொள்கை போன்ற பல கோணங்களில் ஆராய்ந்தனர். அவர்களிடமிருந்து சரியான பதில்களைப் பெறுவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக அவர்களிடத்தில் சமூகப்பொறுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். தங்கள் ஆய்வு முடிவை இரு கட்டுரைகளாக எழுதித் தரும்படி கூறினோம். ஒரு கட்டுரையில் நாய்களைப் பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று தங்கள் தனிப்பட்ட விருப்பத்தை விளக்கியிருந்தனர். மற்றொன்றில் தங்களுக்குள் நடந்த விவாதங்களைப் பற்றி கதை போலச் சமர்ப்பித்தனர். அந்தக் கட்டுரையை படித்த போது அவர்களுடைய வித்தியாசமான சிந்தனைகளை அறிய முடிந்தது” என்று கூறினார்.
Average Rating