ட்வின்ஸ்!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 23 Second

ரெண்டு குழந்தைங்களுக்கும் ஒரே நாள்ல பர்த் டே வருமா?’’ – ட்வின்ஸ் பற்றிய எரிச்சலூட்டும் அபத்தக் கேள்விகளில் ஒன்றாக கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தேன். வெவ்வேறு நாட்களில் கூட ட்வின்ஸ் பிறந்த நாள் வரும் என்கிறது லேட்டஸ்ட் நியூஸ் ஒன்று.

சான்டியாகோவை சேர்ந்த மேரி வலேனிகா என்கிற பெண்ணுக்கு 2015ம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ல் பிரசவம். இரட்டைக் குழந்தைகள்! ஜேலின் வலேனிகா என்கிற பெண் குழந்தை டிசம்பர் 31 இரவு 11:59க்கும், லூயிஸ் வலேனிகா என்கிற ஆண் குழந்தை 12:01க்கும் பிறந்தனர். அதாவது, 2015ம் ஆண்டு ஒருவரும், 2016ம் ஆண்டு இன்னொருவரும்! மேரிக்கு ஜனவரி மாதம்தான் மருத்துவர்கள் தேதி கொடுத்திருந்தார்களாம். ஆனாலும், குழந்தைகளின் தலை திரும்பாமல் இருந்ததால் மருத்துவர்கள் அவசரமாக பிரசவம் பார்த்துக் குழந்தைகளை எடுத்தார்களாம். ஜேலின்- லூயிஸ் இரட்டையரை 2015-16ன் அதிசயக் குழந்தைகளாக உலகமே கொண்டாடுகிறது!

ரெண்டு குழந்தைங்களும் ஒரே நாள்ல பிறக்கும்னுதான் எதிர்பார்த்தோம். இப்போ ரெண்டு பேருக்கும் வேற வேற நாட்கள்ல பிறந்தநாள் கொண்டாடணும்… ரெண்டு நாள்… ரெண்டு பர்த்டே பார்ட்டி… பயங்கர த்ரில்லா இருக்கப் போகுது…’ என கமெண்ட் அடித்திருக்கிறார் அதிசயக் குழந்தைகளின் அப்பா லூயிஸ்.

கற்பனைக்கே கண்ணைக் கட்டுதே..!

என் இரட்டையருக்கு முதல் 5 வயது வரை கேக் வெட்டி, நண்பர்கள், உறவினர்கள் சூழ பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாடி இருக்கிறோம். இருவருக்கும் ஒரே மாதிரி உடை அணிவித்து, ட்வின் கேக் ஆர்டர் செய்து இருவரையும் இணைந்து கேக் வெட்டச் செய்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொள்கிற அந்தக் காட்சி காணக் கிடைக்காதது!

ஏண்டா ரெண்டு பேரும் ஒரே நாள்ல பிறந்தீங்க? உங்களுக்கு ஒண்ணு போல கிஃப்ட் வாங்கறதுக்குள்ள நாங்க படற பாடு போதும் போதும்னு ஆயிடுது…’’ – குழந்தைகளிடம் கிண்டலாகச் சொன்னார் தோழி ஒருவர். அவரது தரப்பில் அது நியாயம்தான் என்றாலும் சின்னதாக வலித்தது. 6வது வருடத்தில் இருந்து கொண்டாட்டங்களை நிறுத்தினோம். இரட்டையர் பிறந்தநாள் என்பதும் மற்ற எல்லோருடையதைப் போலத்தான், ஒருவருக்கு பதில் இருவர் விழா நாயகர்கள் என்பதைத் தவிர. ஆனாலும், அந்த பிறந்தநாளைக்கு அழைக்கப்படுகிறவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிற சில விஷயங்களையும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்ததும் இருவருக்கும் தனித்தனி நண்பர்கள் இருப்பார்கள். அவர்களை பிறந்த நாளைக்கு அழைக்கிற போது, ஒருத்தர்தானே என் ஃப்ரெண்ட்… அப்போ ஒரு கிஃப்ட் வாங்கினா போதுமா இல்லை ரெண்டு பேருக்கும் சேர்த்து வாங்கணுமா?’ என்கிற மிகப்பெரிய கேள்வி கிளம்பும்.

நம்ம ஃப்ரெண்டுக்கு மட்டும் நாம வாங்கிட்டுப் போவோம்’ என ஒரு அன்பளிப்புடன் வந்தால், பார்ட்டி முடிந்த பிறகு நடக்கப் போகிற அடிதடிகளுக்கு எந்த நிறுவனமும் பொறுப்பேற்காது!தோழியின் இரட்டையர் பிறந்த நாள் விழாவுக்கு நான் அழைக்கப்பட்ட போதுதான் நடைமுறை சிக்கல்கள் எனக்கே புரிந்தது. என்ன வாங்குவது? ஒரே பொருளை இரண்டு வாங்கலாமா? இருவருக்கும் வேறு வேறு பொருட்களாக வாங்கலாமா? இப்படிக் குழம்பித் தவித்து, கடைசியில் இருவர் மட்டுமே சேர்ந்து விளையாடக் கூடிய Puzzle Games வாங்கித் தந்து தப்பித்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அப்படிச் செய்ய முடியாது. அனுபவத்தில் உணர்ந்ததில் அடுத்தவர்களுக்கும் கொஞ்சம் டிப்ஸ்…

இருவருக்கும் ஒன்று போல ஒரே மாதிரியான அன்பளிப்புகள்தான் கொடுப்பது என்பதில் உறுதியாக இருந்தால் அப்படியே செய்யலாம். அவற்றில் நிறமோ, டிசைனோ வேறுபாடு இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. கலர் கூட மாறக் கூடாது என அடம்பிடிக்கிறவர்களுக்கு ஒரே கலர், ஒரே டிசைனில் தேட வேண்டியது உங்கள் பாடு!

என் இரட்டையரின் பிறந்த நாளைக்கு ஒருவன் ஓட்ட, இன்னொருவன் உட்கார்ந்து செல்கிற மாதிரியான சைக்கிளும், இரட்டை படுக்கையுடன் கூடிய மெகா சைஸ் கட்டிலும், ஒன்றை ஒன்று கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் குரங்கு பொம்மையும் அன்பளிப்பாக வந்தன. இவற்றை இருவரும் பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதால் பிரச்னை வரவில்லை. அப்படிப்பட்ட அன்பளிப்புகள் தேடினால் நிச்சயம் கிடைக்கும்.

குழந்தைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்றால் அவர்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப இருவருக்கும் வேறு வேறு அன்பளிப்புகள் தரலாம். குறிப்பாக ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமான இரட்டையருக்கு அவரவர் தேவை மற்றும் பயன்பாட்டுக்கேற்ற பொருட்களே சிறந்த தேர்வாக இருக்கும்.

குழந்தைகளுக்கு சீக்கிரம் அலுத்துப் போகக்கூடிய பொம்மைகள், கேம்ஸ் போன்றவற்றை ஒன்று போல இரண்டு வாங்குவதைத் தவிர்க்கவும். இத்தனைக்குப் பிறகும் என்ன வாங்குவதென்றே தெரியவில்லை என்கிறவர்கள், குழந்தைகளுக்கு கிஃப்ட் கூப்பன் வாங்கித் தரலாம். அவர்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள உதவியாக இருக்கும்.

பணமாகக் கொடுப்பதற்குப் பதில் இருவருக்கும் உண்டியலாக வாங்கித் தருவதன் மூலம் அந்தச் சிறு வயதிலேயே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ஏதுவாக அமையும். பிள்ளைகள் ஓரளவு வளர்ந்த பிறகு இருவரையும் தனித்தன்மையை உணரச் செய்ய வேண்டியது அவசியம். வாழ்க்கையில் எப்போதும் இருவருக்கும் எல்லாம் ஒன்று போலவே கிடைத்துவிடாது என்கிற யதார்த்தத்தை அந்த வயதிலேயே அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

சஸ்பென்ஸ் சிஸ்டர்ஸ்!

கர்ப்பம் உறுதியானதும் செய்யப்படுகிற முதல் ஸ்கேனிலேயே கருவிலுள்ள குழந்தைகள் ஒருவரா, இருவரா எனத் தெரிந்துவிடும். சிலருக்கு மூன்று மாதங்களில் தெரியும். சிலருக்கு இன்னும் கொஞ்சம் தள்ளி 6 மாதங்களில்கூடத் தெரிவதுண்டு. சென்னையைச் சேர்ந்த ஆனந்தியின் விஷயத்தில், அது அப்படியே தலைகீழ்! இரட்டையரை சுமக்கிற எண்ணமோ, அனுபவமோ அவருக்கு வாய்க்கவே இல்லை. பிரசவத்தின் போதுதான் அந்தப் புதிர் அவிழ்ந்ததாகச் சொல்கிறார் ஆனந்தி.

எனக்கு முதல்ல ருத்ராஸ்ரீனு ஒரு பெண் குழந்தை. அவளுக்கு 1 வயசிருக்கும்போதே அடுத்த கர்ப்பம் தங்கிடுச்சு. முதல் ஸ்கேன்ல ஒண்ணும் சொல்லலை. அஞ்சாவது மாசம் எனக்கு பயங்கரமான இடுப்பு வலியும் வயித்து வலியும் வந்தது. முதல் குழந்தைக்கு அப்படியெல்லாம் இல்லையேனு சந்தேகம் வந்தாலும், அதை ட்வின்ஸோட சம்பந்தப்படுத்திப் பார்க்கணும்னு தோணலை. வயிறும் பெரிசா தெரியாததால அதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தலை. டெலிவரிக்காக ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிட்டேன். நார்மல் டெலிவரியில முதல்ல ஒரு பெண் குழந்தை பிறந்தா. அப்பதான், ‘வயித்துல இன்னொரு குழந்தை இருக்கிற மாதிரித் தெரியுது’னு சொன்னாங்க டாக்டர்ஸ். 15 நிமிஷ இடைவெளியில இன்னொரு பெண் குழந்தை பிறந்தா.

எப்படிம்மா இவ்ளோ நாள் இது தெரியாம இருந்தே’னு திட்டினாங்க. நான் செக்கப் எல்லாம் மாமியார் வீட்ல பார்த்துக்கிட்டு, டெலிவரிக்கு அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். ஒருவேளை என்னை செக்கப் பண்ணின டாக்டர், ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறதால, அடுத்து ரெண்டு பெண் குழந்தைங்கன்னா, ஏதாவது பண்ணிடுவோமோனு நினைச்சு மறைச்சாங்களா என்னனு தெரியலை. கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நேரத்துல ரெண்டு பொம்பிளைக் குழந்தைங்க பிறந்த சந்தோஷத்தை என்னால முழுமையா அனுபவிக்க முடியலை. ரெண்டு பேரும் சேர்த்து மொத்தமே ஒன்றரை கிலோதான் எடை இருந்தாங்க.

பிழைச்சா போதும்னு ஆயிடுச்சு. பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லிட்டாங்க. அங்கே ரெண்டு பேரையும் கண்ணாடிப் பெட்டிக்குள்ள வச்சிருந்தாங்க. அப்புறம் ஓரளவு உடம்பு தேறின பிறகுதான் வீட்டுக்கு வந்தோம். கீர்த்தனா, கீர்த்திகானு பேர் வச்சோம். குழந்தைங்களையும் என்னையும் பார்த்துக்க வீட்ல ஆட்கள் இருந்தாலும், அவங்களை வளர்க்கறதுல கஷ்டப்பட்டேன். முதல் குழந்தைக்கும், இவங்களுக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம். இவங்க பிறந்ததும் மூத்தவ ஏங்க ஆரம்பிச்சிட்டா. அவ மனசளவுல பாதிக்கப்படக்கூடாதுனு பாட்டி வீட்ல விட்டுட்டேன்.

பால் கொடுக்கிறதை நிறுத்தற வரைக்கும் நான் வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போகலை. இப்ப மூணு பேரும் பார்க்கறதுக்கு ஒரே மாதிரி இருக்காங்க. ஒற்றுமையா இருக்காங்க. ரெண்டு நாள் பிரசவ வலியை அனுபவிச்சதுதான் ஒரே வருத்தம். மத்தபடி பிரசவத்துல எனக்குக் கிடைச்ச சஸ்பென்ஸை வாழ்க்கை முழுக்க மறக்க முடியாது. வீடு கொள்ளாம பெண் குழந்தைங்க இருக்கிறதே ஒரு வரம்தானே…’’ என்கிறார் ஆனந்தி தன் தேவதைகளை வாரி அணைத்தபடி.

ட்வின்ஸ் பிறக்கறது அதிர்ஷ்டம்னா, அதுலயும் ரெண்டும் பெண் குழந்தைங்களா பிறந்தா பேரதிர்ஷ்டம்னு சொல்லலாம். பாசத்தையும் படிப்பையும் மட்டும் அளவில்லாம கொடுத்து வளர்த்துட்டீங்கன்னா, அவங்க உங்களைக் கடைசி வரைக்கும் கண் கலங்காமப் பார்த்துப்பாங்க. அவங்கதான் உங்க தேவதைகள்… தெய்வங்கள்!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியமான முறையில் நூடுல்ஸ் சமைக்க என்ன வழி? (மருத்துவம்)
Next post பெற்றோருக்கு 20 விஷயங்கள்! (மருத்துவம்)