பழைய புடவைகளுக்கு புதிய பளீச்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 36 Second

பல நாட்களாக பீரோவில் தூங்கும் உங்களின் பழைய புடவைகளுக்கு புதிய வடிவை தருகிறார், சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் வசுமதி. ‘வஸ்திரங்கம்’ என்ற பெயரில் ப்ளாக் பிரிண்டிங் செய்யும் இவர், தன் வீட்டின் மேற்தளத்திலேயே இதற்கான யூனிட்டை அமைத்து செயல்படுத்தி வருகிறார்.அம்மா கட்டிய சேலை, பாட்டி பரிசாக கொடுத்த சேலை எனத் தூக்கிப்போடவும் மனமிருக்காது.

அதே சமயம் அதை உடுத்தவும் முடியாது. அந்த புடவைகளை எல்லாம் சீரமைத்து புதுவாழ்வு தருகிறார். எந்த துணியை அவரிடம் கொடுத்தாலும், ப்ளாக் பிரிண்டிங் மூலம், அந்த துணியின் அமைப்பையே மாற்றி, அதற்கு புதிய டிசைன்கள், வர்ணங்கள் தந்து, லேட்டெஸ்ட் டிரெண்டியாக மாற்றி விடுகிறார் வசுமதி. அவரிடம் கொடுக்கும் போது இருந்த பழைய புடவையின் சாயலை முற்றிலும் மாற்றி நம் கண்களையே ஆச்சரியப்பட வைக்கிறார்.

வஸ்திரங்கம் தொடங்கியது எப்படி?

நான் பிறந்து வளர்ந்தது மும்பையில். திருமணமானதும் சென்னையில் வந்து செட்டிலாகிட்டோம். 28 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறோம். என் நெருங்கிய தோழி, ப்ளாக் பிரிண்டிங் செய்து வந்தார். சேலைகள் மீது டிசைன் பிரிண்ட் செய்ய, சுமார் 22 அடி நீளம் கொண்ட டேபிளில், சேலையை இழுத்து, விரித்துத்தான் அச்சிட முடியும். அவரிடம் ஒரு டேபிள்தான் இருந்தது. இதனால், அவருக்கு உதவியாக இருக்குமே என்று நானும் டேபிள் வாங்கி, இருவருமாக இதை ஆரம்பித்தோம். ஆனால், எனக்கு குழந்தை பிறந்த பின், சில வருடங்கள் உடல் நிலை காரணமாக பிரேக் எடுத்துக்கொண்டேன். மேசை, Wooden Blocks எல்லாமே பத்திரமாக இருந்தது. சில வருடம் கழித்து, பிள்ளைகள் வளர்ந்தபின், மற்றொரு தோழி, மேசை, பிளாக்ஸ் எல்லாம் இருக்கே, நாம் இருவரும் பார்ட்னர்ஷிப் முறையில் மீண்டும் இதை தொடங்கலாமே எனக் கூறினார். அப்போது ஆரம்பித்ததுதான் இது. சில வருடங்களில் இருவரும் பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலகி, எங்கள் பிஸினசை பிரித்து, வாடிக்கையாளர்களையும் பிரித்துக்கொண்டோம். என் வீட்டின் மேற்தளத்திற்கே என் பணிநிலையத்தை மாற்றி, அதற்கு வஸ்திரங்கம் (Vastrankhm) என்று பெயரும் வைத்து தொடங்கினேன். சமஸ்கிருதத்தில் வஸ்திரங்கம் என்றால் வஸ்திரத்தில் (துணியில்) அங்கி (உடுப்பு) என்று பொருள்.

பழைய சேலைகளை புதிதாக்கும் யுத்தி…

பழைய சேலைகள் மட்டுமில்லாமல் வேட்டியில் படுக்கை விரிப்புகள், தலையணை, சுடிதார், துப்பட்டா, திரைச்சீலைகள் என பல டிசைன்கள் உருவாக்குவோம். இது தான் இந்த ப்ளாக் பிரிண்டிங்கின் ஸ்பெஷல். எந்த துணியையும், எப்படி வேண்டுமென்றாலும் மாற்றலாம். நிறைய டிசைன்களை நானே பரிசாக என் நண்பர்களுக்கு செய்து கொடுத்திருக்கேன். தினமும் தொடர்ந்து நின்றபடி அச்சிடுவது கடினமான வேலை. அதற்கு தசை வலிமை அதிகம் வேண்டும் என்பதால், உதவிக்கு இரண்டு பேர் இருக்காங்க. என் வேலை, வாடிக்கையாளர்களுடன் தொடர்பிலிருப்பது. அவர்கள் தேவையை கச்சிதமாக செய்து தருவது.

இந்த பிஸினஸ் பொறுத்தவரை கொஞ்சம் மார்க்கெட்டிங் பண்ணனும். அதனாலேயே நான் அவ்வளவு வேலைகள் எடுத்துக்கொள்வது இல்லை. வீட்டிற்கு மேலேயே, சின்னதாக வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு தான் சப்ளை செய்கிறோம். சில நாட்கள் வெளியிலிருந்து ஆர்டர் வராது. வேலை ஆட்கள் இருந்தும் வேலையே இருக்காது. அந்த சமயத்தில்தான், என் சேலைகளையே எடுத்து, அதில் புதிதாக டிசைன்கள் அமைத்தோம். இது அப்படியே தொடர்ந்தது. அடுத்து நண்பர்களுக்கு டிசைன் செய்து தருவது என மாறி, கடைசியில் அதையும் எங்கள் சேவைகளில் ஒன்றாக இணைத்துக்கொண்டோம். அப்படித்தான் பழைய சேலைகளை புதுப்பிக்கும் வழக்கம் தொடங்கியது. இது மக்களிடம் கொஞ்சம் வரவேற்பும் பெற்றது. உடை வாங்கி ஒரு வருடம் கூட ஆகியிருக்காது. அதற்குள் அது பழசாகிவிடும் அல்லது பாழாகிவிடும். அந்த துணியை தூக்கிப் போடவும் மனசிருக்காது. டிசைனை மாற்றி பழைய துணியை புதுப்பிக்கும் முறை அவர்களுக்கு பிடித்துவிட்டது.

இதை பிஸினஸாக ஆரம்பிப்பது சுலபமா?

இந்த தொழில் ஆரம்பிப்பது ரொம்பவே சுலபம்தான். நீளமான மேசையை பொருத்த ஒரு அறையும், வண்ணங்கள் தயாரிக்க கொஞ்சம் இடமும், துணிகள் காயவைக்க வெயில் வரும் திறந்த வெளியும் இதற்கு அவசியம். இதில் ஒரு முறை முதலீடு செய்தாலே போதும். அடுத்து, வண்ணங்கள் வாங்கவும், டிசைன்கள் கொண்ட மரத்துண்டுகள் வாங்கவும் தான் பணம் தேவை. சொந்த இடமாக இருந்தால் இன்னும் சுலபம். மாதம் வாடகை செலுத்தும் தொல்லையும் இல்லை. உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் கூட கூரை போட்டு இதை ஆரம்பிக்கலாம். இந்த தொழிலை தொடங்க விரும்புவோர், சொந்தமான இடமும், கையில் ஒன்றரை லட்சம் பணமும் இருந்தால் போதும், சுலபமாக தொடங்கிவிடலாம். அருகிலிருக்கும் Boutiqe கடைகள், இதர நிறுவனங்களுடன் டை-அப் வைத்து, சுலபமாக செய்யலாம். மேலும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விளம்பரம் செய்து வந்தாலும், அனைவரும் இதை விரும்புவர்.

இதற்கு சிறப்பு பயிற்சி இருக்கா?

சிறப்பு பயிற்சி மையங்கள் உள்ளது. அதில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் ஃபேஷனில் அப்டேட்டா, வண்ணங்கள் பற்றிய புரிதலுடன் இருக்க வேண்டும். மற்றபடி வாடிக்கையாளர்களே, அவர்களுக்கு பிடித்த கலரையும், டிசைனையும் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். அதற்கு ஏற்றது போல தயாரித்துக்கொடுத்தாலே போதும். அதே சமயம் இப்போது மார்க்கெட்டில் இருக்கும் வர்ணங்கள், டிசைன்கள் பற்றி அனைத்து விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும். வுட்டன் பிளாக்சிலும் அவ்வப்போது டிசைன்கள் மாறிக் கொண்டே இருக்கும். அது பற்றி தெரிந்து கொண்டு லேட்டஸ்ட் டிசைன்கள் வுட்டன் ப்ளாக்ஸ்களையும் தயாரித்து வாங்கி கொள்ள வேண்டும்.

என்னதான் வண்ணங்கள் பற்றி புரிதல் இருந்தாலும், அதனை மிக்சிங் செய்யவும் தெரியணும். எந்த கலருடன் எந்த நிறத்தை மிக்ஸ் செய்யணும் என்பது எல்லாம் ஒரு கணக்கீடு தான். எந்த அளவில் எதைக் கலந்தால் நாம் விரும்பும் வர்ணம் கிடைக்கும் என தெரிந்து இருப்பது அவசியம். ஒருமுறை துணியில் அச்சிட்டதும், பிடிக்கவில்லை என்றால் அதை நீக்கவே முடியாது. அதை மறைக்க மேலே வேறு டிசைன் மூலம் கவர் செய்யலாம். மற்றபடி, தொழிலாக இறங்கும் போது அதை நாம் அனுபவத்திலேயே பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

தொடர்ந்து பேசிய வசுமதி, “துணிகள் மீது அச்சிட்டதும், அதைக் குறைந்தது இரண்டு நாட்கள் காயவைக்க வேண்டும். மொத்தமாக துணிகளில் அச்சு போடும் கம்பெனிகள், ஆடைகளை ஸ்டீமர் மூலம் காயவைப்பார்கள். ஆனால், ஆர்டரின் பேரில் செய்தால் நாங்க ஸ்டீமர் பயன்படுத்துவதில்லை. சென்னையில் வெயிலுக்கா பஞ்சம், அதனால் நேரம் ஆனாலும் இயற்கையான முறையில் தான் ஆடைகளை ஆறவைக்கிறோம். பின் இஸ்திரி செய்துவிட்டால் டிசைனும், கலரும் அழகாக துணியில் ஒட்டிக்கொள்ளும். இதை ரசாயனம் அதிகம் இல்லாத சோப்புத்தூள் கொண்டு கைகளால் துவைக்கலாம். பொதுவாக அனைத்து துணிகளையுமே அதிகம் ரசாயனம் இல்லாத துணி துவைக்கும் பவுடர் கொண்டே அலசவும்” என்று டிப்ஸ் கொடுத்தார் வசுமதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விளம்பரம் வடிவமைத்து சம்பாதிக்கலாம்!! (மருத்துவம்)
Next post மரச்செக்கு எண்ணை தயாரிக்கலாம்!! (மகளிர் பக்கம்)