ட்வின்ஸ்! (மருத்துவம்)

Read Time:15 Minute, 55 Second

எந்த ஸ்கூலில் அட்மிஷன் வாங்குவது? எந்த போர்டில் படிக்க வைப்பது? இந்தக் கவலைகள் எல்லாம் கடந்து, என் இரட்டையர் விஷயத்தில் மிகவும் யோசிக்க வைத்த ஒன்று… இருவரையும் ஒரே செக்‌ஷனில் சேர்ப்பதா? வேறு வேறு செக்‌ஷனிலா என்பதே!

பள்ளியில் சேர்ப்பது பற்றிய பேச்சைத் தொடங்கியதுமே, என்னைத் தேடி வந்து குழப்பின ஆலோசனைகளும் அறிவுரைகளும்…ஸ்கூல்ல சேர்க்கிறபோதே ரெண்டு பேரையும் தனித்தனி செக்‌ஷன்ல சேர்த்துடுங்க… இல்லைனா பின்னாடி பிரிக்கிறது கஷ்டம்’ எனச் சிலரும்… ட்வின்ஸை பிரிக்கவே கூடாது. ரெண்டு பேரையும் ஒரே செக்‌ஷன்ல சேர்த்துடுங்க… ரெண்டு பேரும் பக்கத்துல இல்லைனா ஏங்கிடுவாங்க…’ – இப்படிச் சிலரும்…

சின்ன கிளாஸ்ல ஒண்ணா படிக்கட்டும். அப்புறம் வேற வேற செக்‌ஷன்ல மாத்துங்க…’ என்கிற மாதிரி சிலருமாக ஆளுக்கொரு அபிப்ராயம் சொன்னார்கள்.‘எதையும் கேட்க வேண்டாம்… பள்ளிக்கூட நிர்வாகத்தின் பொறுப்பிலேயே விட்டுவிடுவோம்’ என்கிற இறுதி முடிவுடன் அட்மிஷன் வாங்கினோம். நாங்கள் எதுவும் கேட்காமலேயே இருவருக்கும் ஒரே செக்‌ஷனில் அட்மிஷன் கொடுத்தார்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என ஏற்றுக் கொண்டோம். வகுப்பறையில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த காட்சியை தினமும் ஆனந்தமாக ரசிப்பேன்.

நான் இனிமே ஸ்கூலுக்கு போக மாட்டேன்…’ – திடீரென ஒருநாள் காலையிலேயே மக்கர் செய்தான் இளையவன். முதல் நாளே டாட்டா காட்டிவிட்டு குஷியாக வகுப்பினுள் ஓடியவன் அவன்தான். உடம்பு சரியில்லையா… மிஸ் திட்டினாங்களா?’ என எந்தக் கேள்விக்கும் அதெல்லாம் ஒண்ணுமில்லை’ என்றே சொன்னான். தோண்டித் துருவி விசாரித்த பிறகு, `ரெண்டு பேரையும் தனித்தனியா உட்கார வச்சிட்டாங்க. நான் ஃபர்ஸ்ட் ரோ… அவன் எனக்கு பேரலல் ரோ… அதான்…’ என அழுதான். அன்றே வகுப்பாசிரியரை சந்தித்து விஷயத்தைச் சொல்லி, இனிமே ரெண்டு பேரையும் ஒண்ணாவே உட்கார வைக்கிறேன்’ என அவர் உத்தரவாதம் தந்த பிறகே உள்ளே நுழைந்தான் அடம்பிடித்தவன்!

ச்சே… நாம கூட ட்வின்ஸா பிறந்திருக்கக்கூடாதா? எவ்ளோ பாசமா இருக்காங்க?’ என அன்று முழுக்க அந்த நினைப்பிலேயே நான் உருகி மருகியது வேறு கதை.இந்தச் சம்பவம் நடந்து மிகச் சரியாக 5 வருடங்கள் கழித்து இன்னொரு சம்பவம் நடந்தது. அதற்கும் அடுத்த இதழில் நாம் பேசப் போகிற விஷயத்துக்கும் தொடர்பிருப்பதால் அந்தக் கதை இங்கே வேண்டாம்! இரட்டையரை ஒரே பள்ளியில் ஒரே வகுப்புப் பிரிவில் சேர்க்க வேண்டியது ஏன் அவசியம் என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

பிறப்பதற்கு முன்பிலிருந்தே இரண்டு பேரும் ஒன்றாக இருந்தவர்கள். பிறந்த பிறகும் முதல் சில வருடங்களுக்கு ஒரே சூழலில் ஒரே மனிதர்களின் அருகாமையில் ஒன்றுபோல வளர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களை பள்ளியில் தனித்தனியே பிரித்தால் அது அவர்களை மனம் தளரச் செய்யும். இருவருக்கும் இடையில் ஊக்கமும் உற்சாகமும் குறையும். பொறாமை உணர்ச்சி தலைதூக்கலாம். ஒரே வகுப்பில் ஒன்றாகப் படிக்கிற போது அதை அவர்கள் ரசிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

– இருவரையும் ஒரே வகுப்பில், ஒரே பிரிவில் சேர்ப்பதென்பது பெற்றோருக்கு மிகப்பெரிய ஆறுதலைக் கொடுக்கும் விஷயமும்கூட. இன்னும் சொல்லப் போனால் இரட்டையரைப் பெற்றவர்களுக்கு இது மிகவும் சாதகமானதும்கூட. இருவருக்கும் ஒரே மாதிரியான பாடங்கள், வீட்டுப்பாடங்கள், அசைன்மென்ட்டுகள் என அவர்களை ஒரே நேரத்தில் கவனிப்பது எளிதாகும்.

– இன்னொரு விஷயத்திலும் இது பெற்றோருக்கு சாதகமாகிறது. ஒரே வகுப்பில் படிக்கிற போது, இருவருக்குமான பள்ளிக்கூட விசிட், ஆசிரியர் சந்திப்பு போன்றவற்றை ஒன்றாக முடித்துவிடலாம். வேறு வேறு வகுப்புகள் என்றால் இருவருக்குமான நேரங்கள் வித்தியாசப்படும். வேலைக்குச் செல்கிற பெற்றோருக்கு இது நடைமுறையில் சிரமத்தையே தரும்.

– இரட்டையருக்கு இடையிலான உறவு என்பது மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதது. இருவரும் ஒன்று போல இருப்பவர்கள்… ஆனாலும், வேறு வேறானவர்கள். இருவரில் ஒரு குழந்தை எல்லா விஷயங்களிலும் சுட்டியாக இருக்கலாம். இன்னொன்று சற்றே பலவீனமாக இருக்கலாம். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பார்கள். இந்த மாதிரி வேறுபாடுகள் உள்ள இரட்டையரை வேறு வேறு வகுப்புகளில் சேர்க்காமல், ஒன்றாகவே வைத்திருப்பதுதான் இருவருக்கும் தன்னம்பிக்கை தரும்.

– ஆணும் பெண்ணுமாகப் பிறக்கும் இரட்டையர்களில் அவர்களது பாலினத்தை வைத்தே போட்டிகள் அதிகமிருக்கலாம். ஒரே பாலின இரட்டையராக இருந்தால் போட்டிகள் இருக்காது. அதே நேரம், ஒரே வகுப்பில் படிக்கிறபோது, ஒருவரைப் பார்த்து இன்னொருவர் ஊக்கம் கொள்ளவும் அதிக கவனத்துடனும் சிரத்தையுடனும் படிக்கவும் தூண்டப்படுவார்கள்.

– இருவரையும் ஒரே வகுப்பில் சேர்க்கிற போது, ஒருவரின் கவனம் இன்னொருவரின் மீதே இருக்கும் வாய்ப்புகளும் அதிகம். அது அவர்களது கவனத்தை சிதறச் செய்யலாம் என்றாலும், இருவரையும் தனித்தனி பிரிவுகளில் சேர்க்கிற போது, அந்த கவனச் சிதறல் இன்னும் அதிகமாகும். தன் பக்கத்தில் இல்லாத உடன்பிறப்பு என்ன செய்கிறான்(ள்) என்கிற தேடல் அதிகமாகும். அதைவிட ஒரே வகுப்பில் சேர்ப்பது சிறந்தது.

– இருவரில் ஒருவர் வகுப்பறையில் பாடங்களை சரியாக கவனிக்கா விட்டாலோ, எழுதாவிட்டாலோகூட இன்னொருவரின் நோட்டு புத்தகங்களை வைத்து இருவருக்கும் சொல்லிக் கொடுப்பதும் பெற்றோருக்குச் சுலபமாகும்.

– பள்ளிக்கூடத்தைத் தாண்டி, இருவருக்கும் மன அழுத்தம் கொடுக்கும் வேறு சில விஷயங்களும் இருக்கலாம். உதாரணத்துக்கு பெற்றோரின் விவாகரத்து, நெருங்கிய உறவினரின் திடீர் மரணம், புது சூழல் போன்றவற்றால் ஏற்கனவே வாடிப் போயிருக்கிற இரட்டையருக்கு, பள்ளிக்கூடத்தில் ஒரே ஆதரவான தனது உடன்பிறப்பைப் பிரிவதென்பது மிகப்பெரிய மன உளைச்சலைத் தரும்.

– ஏற்கனவே சொன்னது போல இரட்டையருக்கு இடையிலான பந்தத்தை மற்றவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. அது தனித்துவம் வாய்ந்த அன்யோன்யம். அது அவர்கள் இருவருக்கும் காலத்துக்கும் தொடரக்கூடியது. நட்பு, திருமணம், குழந்தை பிறப்பு போன்றவற்றை எல்லாம் கடந்தும் அந்த அன்பு அவர்களுக்குள் தொடரும். சேர்ந்திருக்கும் போது அதிக பலசாலிகளாக தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவே உணர்வார்கள்.

என் சந்தோஷ தேவதைகள்!

அம்மாவான ஆனந்தத்தில் அகமகிழும் ஷோபா, தன் அம்மாவின் நினைவுகளில் அழுது கரைகிறார்.ஹரிணி, ஹர்ஷினி என இரட்டை இளவரசிகளின் அணைப்பிலும் அன்பிலும் உருகிக் கொண்டிருப்பவர், ஒவ்வொரு நொடியிலும் தன் தாயை நினைக்கத் தவறுவதில்லை.

கல்யாணமாகி 8 வருஷங்களுக்கு எங்களுக்குக் குழந்தைங்க இல்லை. எனக்கோ, என் கணவருக்கோ அது ஒரு குறையா தெரியலை. என் கணவர் சிவில் இன்ஜினியர். அவரோட வேலையில நானும் உதவியா இருந்தேன். முதல் அஞ்சு வருஷங்கள் எந்தப் பிரச்னையும் இல்லை. அப்புறம் ஒவ்வொருத்தரா குழந்தையைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. வார்த்தைகளால குத்திக் காயப்படுத்தினாங்க. அதுலேருந்து தப்பிக்கவே ட்ரீட்மென்ட் எடுக்கறதுனு முடிவு பண்ணினோம். எனக்கு ஏற்கனவே நாலு முறை அபார்ஷன் ஆயிருந்தது. டாக்டர்கிட்ட காட்டினபோது, கர்ப்பப்பை வாய் சின்னதா இருக்கிறதுதான் பிரச்னைனு சொல்லி ட்ரீட்மென்ட்டை தொடங்கினாங்க. கன்சீவ் ஆனேன்.

கர்ப்பம் உறுதியானதுமே மூணு குழந்தைங்க இருக்கிறதா சொன்னாங்க டாக்டர். சந்தோஷத்தை விடவும் பயம்தான் அதிகமா இருந்தது. முழுக்க முழுக்க பெட் ரெஸ்ட்லயே இருந்தேன். வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டிருக்கிற மாதிரினு சொல்வாங்களே… அந்த அனுபவத்தை அப்படியே உணர்ந்தேன்னு சொல்லலாம். மூணு குழந்தைங்க இருக்கிறதா சொன்னபோதே, ‘அதுல ஒரு கருவை அழிக்கணும்’னும், ‘மூணு மாசத்துக்குப் பிறகுதான் அது சாத்தியம்’னும் சொன்னாங்க.

சரியா மூணரை மாசத்துல ஒரு குழந்தையை எடுத்துட்டாங்க. மூணு குழந்தைகளையும் வளர விட்டா, மூணுமே எடை குறைவா பிறக்கும்… ரிஸ்க் அதிகம்னு சொல்லி, மருத்துவக் காரணங்களைப் புரிய வச்சாங்க. அதனால வேற வழியில்லாம அதை ஏத்துக்கிட்டேன். அதுக்கப்புறமும் என் பயம் குறையலை. ஒவ்வொரு நிமிஷத்தையும் திக் திக் மனநிலையோட தான் கடந்தேன். திடீர்னு நடு ராத்திரியில ப்ளீடிங் ஆகும். அந்த நேரத்துல கால் டாக்சி வரவழைச்சு ஆஸ்பத்திரிக்கு போவோம். அட்மிட் பண்ணி சரியாக்கி அனுப்புவாங்க.

இது மாசம் தவறாம நடந்ததுல இன்னும் பயமும் பதற்றமும் அதிகமாச்சு. ஒருவழியா 9 மாசம் முடிஞ்சது… சுகப்பிரசவம் ஆகட்டும்னு 5 மணி நேரம் வெயிட் பண்ணிப் பார்த்தாங்க. அதுக்கு வாய்ப்பில்லைனு தெரிஞ்சதும் சிசேரியன்ல குழந்தைங்களை எடுத்தாங்க. பிரசவத்துக்குப் பிறகு ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லாமப் போனதுல மறுபடி டென்ஷன்… அவளை அதுலேருந்து மீட்டுக் கொண்டு வந்தோம். எல்லா பெண்களுக்கும் கர்ப்ப காலத்துலயும் பிரசவத்துக்குப் பிறகும் அம்மா பக்கத்துல இருக்கிறது பெரிய தைரியம் கொடுக்கும். என் விஷயத்துல அது நடக்கலை.

சொத்துப் பிரச்னை காரணமா எனக்கும் எங்கம்மாவுக்கும் உறவு சுமுகமா இல்லை. கர்ப்பமா இருந்தப்பவும் சரி, குழந்தைங்க பிறந்த பிறகும் சரி… இப்போ வரை எங்கம்மா வந்து என்னையோ, குழந்தைங்களையோ பார்க்கலை. அந்த வருத்தத்தை என்னால சாதாரணமா எடுத்துக்க முடியலை. என் வீட்டுக்காரர் பக்கமும் உறவுனு சொல்லிக்க ஆளில்லை. வேலைக்கு ஆளை வச்சுதான் சமாளிச்சோம். அம்மாவுக்கு நிகரா எனக்கு எல்லாமாகவும் இருந்து பார்த்துக்கிட்டார் என் கணவர். இதோ இப்ப என் குழந்தைங்களுக்கு 5 வயசாகுது.

யு.கே.ஜி. படிக்கிறாங்க. ரெண்டு பேர்ல ஒருத்தி எல்லா விஷயங்கள்லயும் ரொம்ப ஃபாஸ்ட். இன்னொருத்தி ரொம்ப ஸ்லோ. ரெட்டைக் குழந்தைங்கள்ல இப்படி இருக்கிறது சகஜம். ரெண்டு பேரும் ஒண்ணு போல இருக்கணும்னு எதிர்பார்க்காதீங்க. குறிப்பிட்ட வயசு வரைக்கும் அப்படித்தான் இருக்கும்’னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. வாழ்க்கையில எத்தனை கஷ்டங்கள், வலிகள் இருந்தாலும் அத்தனையையும் மறக்க வச்சு, வேற ஒரு உலகத்துக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க என் குழந்தைங்க… அவங்க என் குழந்தைங்க இல்லை… என்னை சந்தோஷத்துல திளைக்க வைக்க வந்த தேவதைகள்…’’ – ஷோபா ஆனந்தக் கண்ணீர் வடிக்க, அன்புடன் அதைத் துடைக்கிறார்கள் அவரது தேவதைகள்.

ஷோபாவின் டிப்ஸ்

கர்ப்பமா இருக்கிறபோது தாயோட மனநிலை எப்படி இருக்கோ, அது குழந்தைங்கக்கிட்ட பிரதிபலிக்கும். பர்சனலா நமக்கு ஆயிரம் பிரச்னைகள் இருக்கலாம். அதை மனசுக்குள்ள போட்டு அழுத்தி, அந்த உணர்வுகள் குழந்தைங்களை பாதிக்காமப் பார்த்துக்க வேண்டியது அவசியம். குறிப்பா கர்ப்பிணிகள் அழவே கூடாது…’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேஸ்ட் பாட்டிலை அலங்கரித்து வருமானம் பார்க்கும் டிகோபேஜ் கலை!! (மகளிர் பக்கம்)
Next post மொபைல் போன் விதிகள்!! (மருத்துவம்)