ஆனந்தவல்லி புத்தக மதிப்புரை!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 7 Second

‘ஆனந்தவல்லி’ என்ற தனது முதல் நாவலின் வழியாக புனைவு இலக்கியத்திற்குள் களமிறங்கியிருக்கிறார் எழுத்தாளர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன். பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தின் மீது தனது புனைவை ஏற்றி எழுதியிருக்கிறார். பிரிட்டிஷாரின் ஆதிக்கமும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியுமாக இருந்த பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி காலகட்டத்தை பிரதிபலிக்கிறது நாவல். மராட்டிய அரசர்கள் குறித்த சில நூல்களை தான் வாசித்தபோது தென்பட்ட ஒரு கடிதம் என்னை வியக்கவும், அதிரவும் வைத்தது என்கிறார் இவர்.

வெளிநாடுகளுக்கு அடிமைகள் விற்கப்பட்டதுதான் இதுவரை அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் உள்ளூரிலேயே அடிமை முறை இருந்திருக்கிறது. அதில் பெண்களையும் விற்றிருக்கின்றனர். அப்படி விற்கப்பட்ட பெண் ஒருவரை மையப்படுத்தியே முழு நாவலையும் எழுதியிருக்கிறேன் என்கிறார் நூலின் ஆசிரியர். ஆனந்தவல்லி என்ற பெண்ணுக்கு சிறிய வயதிலேயே திருமணம் நடக்கிறது. அது ஒரு பால்ய விவாகம்.

திருமணத்திற்கு பிறகு கணவன் வேலைத் தேடி வெளியூருக்கு சென்று விட, ஆனந்தவல்லிக்கு திருமணம் ஆனதை மறைத்து அரண்மனையில் விற்றுவிடுகிறார் அவருடைய தந்தை. ஊருக்குத் திரும்பி வரும் கணவன், மனைவி ஆனந்தவல்லியை மீட்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்கிறார். மனைவியைத்தேடும் கணவன் அரண்மனையிலும், பிரிட்டிஷ் அலுவலர்களிடமும் தொடர்ந்து முறையிடுகிறான். உச்சபட்சமாக மதராஸ் மாகாணத்தின் கவர்னருக்கு அந்தக் கணவன் எழுதிய கடிதம் ஒன்றை படிக்க நேர்ந்த கணமே இந்த நாவல் என் மனதில் உதித்தது என்கிறார் ஆசிரியர்.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண் தன் மனைவியை, அவள் விற்கப்பட்ட பின்னும், அவள் சமூகத்தின் பார்வையில் கற்புடனிருக்க வாய்ப்பில்லை எனும் போதும்கூடத் தேடி அலைந்திருக்கிறான் என்பதே ஒரு வியப்பான செய்தி. அந்தக் கடிதத்தின் பின்னால் இருக்கும் அன்பும், நம்பிக்கையும் என்னை உருக வைத்தது. அபகரிக்கப்பட்ட மனைவியை தன் சொந்த வீரத்தைக் காட்டவே மீட்டேன் என்று அந்தக் கணவன் சொல்வதாகக் கூறும் ஆசிரியர், ஊரார் முன் தீக்குளிக்கச் சொன்ன ராமனை விடவும் அந்த எளிய மனிதனே ஒரு காவியத் தலைவனாகும் தகுதியுள்ளவன் எனத் தோன்றுகிறது என்கிறார்.

பொதுவாக நம் நாட்டிலிருந்து மனிதர்களை மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடிமைகளாக விற்ற தைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் உள்ளூருக்குள்ளேயும் அடிமை முறை இருந்திருக்கிறது என்பது பெரிய அளவில் பேசப்படவே இல்லை. குறிப்பாக பெண்களை விற்பது என்பது பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் நூற்றாண்டிலும் மும்முரமாகவே நடந்து வந்திருக்கிறது என்றவர், தமிழகத்தில் கடைசியாக நடந்த உடன்கட்டை ஏறுதல் நிகழ்வையும், உயர்குடி பெண்களுக்கும், அடிமையாக இருந்த பெண்களுக்கும் என்ன பிரச்சனை இருந்தது என்பதையும் இந்த நாவல் வழியாகப் பேசுகிறார்.

எழுத்தாளர் பக்கங்கள்…

கல்லூரிக் காலம் முதலே கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என இலக்கியத் துறையில் தொடர்ந்து இயங்கி வருபவர் ஆசிரியர் லஷ்மி பாலகிருஷ்ணன். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் இவரின் சொந்த ஊர். சிறப்புக் குழந்தையை (ஆட்டிசம்) வளர்ப்பதன் அனுபவத்தை மற்றவர்களுக்கும் பயன்படும் நோக்கில், ‘எழுதாப் பயணம்’ என்கிற தலைப்பில் ஏற்கனவே புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொடரும் குழந்தையின்மை… தம்பதியர்களே அலர்ட்! (மருத்துவம்)
Next post கேக் எடு மகிழ்வான நிகழ்வினை கொண்டாடு! (மகளிர் பக்கம்)