அன்பான கவனிப்பும் சிறப்பான மருத்துவமும் வாழ்வை மீட்டுத்தரும்!(மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 33 Second

இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய், புற்றுநோய். குறிப்பாக இது பெண்களை மார்பகப் புற்றுநோய் வடிவில் தாக்குகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடமும் ஒரு பெண்ணுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அந்தளவுக்கு இந்நோயின் தாக்கம் இந்தியப் பெண்களிடையே அதிகரித்துவிட்டது. அத்துடன் இந்நோயின் இறுதிகட்டத்தில் பரிசோதனைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

இந்தியாவிலுள்ள 28 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. ‘‘மார்பகப் புற்றுநோயைக் கண்டு அஞ்ச வேண்டாம். மனதில் உறுதியும், தைரியமும் இருந்தால் இதை விரட்டியடித்து விடலாம். இதற்கு நானே சாட்சி’’ என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்தார் பானு இக்பால்.
‘‘என்னுடைய டீன் ஏஜில் மார்பகப் புற்றுநோய் குறித்தும், அது சம்பந்தமான சுய பரிசோதனைகள் பற்றியும் ஒரு வார இதழில் படித்தேன்.

அந்தக் கட்டுரை எனக்குள் ஒருவித விழிப்புணர்வை உண்டாக்கியது. அன்றிலிருந்து பாதுகாப்பு உணர்வு காரணமாக மாதத்திற்கு ஒரு முறையாவது என் மார்பகத்தை தடவிப்பார்த்து, கட்டி ஏதும் உள்ளதா என பரிசோதித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இந்த சுய பரிசோதனை பல வருடங்களாக ஒரு பழக்கம் போல் என் வாழ்க்கையில் தொடர்ந்தது. இந்தப் பழக்கத்தினால் தான் கடந்த 2021- ம் ஆண்டு மே மாதம் ஒரு நாள் இரவு என் மார்பக கட்டியை கண்டுபிடித்தேன். கொஞ்சம் கூட தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவர் மற்றும் புற்றுநோயியல் மருத்துவரைச் சந்தித்தேன். அவர்களின் வழிகாட்டுதலில் அனைத்து விதமான மருத்துவப் பரிசோதனை முறைகளையும் செய்தேன்.

புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேக மனநிலை ஒருவித அச்ச உணர்வைக் கொடுத்தது என்பது நிஜம். ஆனால், எல்லா வகையிலும் என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருந்தது. அந்த உறுதுணையால் கிடைத்த மன திடத்துடன் பரிசோதனைகளை எதிர்கொண்டேன். பரிசோதனைகளின் முடிவில் எனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதியானது. பரிசோதனைகளைப் போலவே அதன் முடிவையும் தைரியமாக எதிர்கொண்டேன். எந்தச் சூழலிலும் துவண்டு போகவில்லை.

எல்லாவற்றையும் நேர்மறையாகவே அணுகினேன். அடுத்த சில நாட்களில் மார்பகப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையையும், புற்றுநோய் சிகிச்சையையும் எடுத்துக்கொண்டேன். எல்லாவிதமான பெரிய சிகிச்சைகளும் நல்லபடியாக முடிந்துவிட்டது. இப்போது அடுத்தக்கட்ட சிகிச்சைகள் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. இதுவும் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும். புற்றுநோய் சிகிச்சை ஆரம்பிக்கும்போது 68 கிலோ இருந்தேன். இப்போது 79 கிலோ இருக்கிறேன். சிகிச்சையின் போது எடை ஏறாமல் பார்த்துக் கொள்வதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது’’ என்றவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட போது அவருக்குள் ஏற்பட்ட மனப்போராட்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

‘‘புற்றுநோய் என உறுதியானபின் அச்சம் மறைந்து, ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். சிகிச்சைக்கான நல்ல மருத்துவரை உடனடியாக கண்டு
பிடிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக வரும் பின்னடைவைச் சமாளிக்க வேண்டும், குறிப்பாக யாருக்கும் தொந்தரவாக மாறாமல் இருக்க என் உடலை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை எனக்குள் வகுத்துக்கொண்டேன். அடுத்து நல்லுணவு, நல்ல மன நிலைக்கான சூழல், முறையான ஓய்வு, அவ்வப்போது உடற்பயிற்சி என என் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தேன். என் கணவர், மகன் மட்டுமல்லாமல் என்னைச் சார்ந்தவர்கள் எல்லாரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர்.

எந்த வகையான புற்றுநோயாக இருந்தாலும் சரி, ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம். புற்றுநோய் என்ற சொல்லைக் கேட்டாலே நம் மனதில் ஒரு வித அச்சம் ஏற்படும். அது நம்மை பாதிக்காத வண்ணம் நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். அச்சத்தை வென்றெடுத்து வாழ்வில் நாம் உச்சங்களை அடைந்திட வேண்டும். மன உறுதியும், மருத்துவ முறைகளும் புற்றுநோயை வெற்றி கொள்ள சிறப்பான காரணிகள் ஆகும். இவ்வளவு தான் வாழ்க்கை, இவ்வளவு தான் நாம் என்று எண்ணாமல் நம்பிக்கையுடன் நோயை எதிர்கொள்ள வேண்டும். முனைப்போடு புற்றுநோய்க்கு எதிராக போராட வேண்டும்.

‘‘உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்…’’ என்ற திருமூலரின் வாக்குப்படி உடலை பராமரித்து உயிரைக் காத்திட வேண்டும். இந்த நேரத்தில் சிரிக்க முடியாது தான். ஆனால், சிரிக்க வேண்டும். சாப்பிட முடியாதுதான்.ஆனால், சாப்பிட வேண்டும். தூங்க முடியாது தான். ஆனால், மனதை நிலைப்படுத்தி தூங்க வேண்டும். எதிர்கால திட்டங்களை மனதில் வரைய முடியாதுதான். ஆனால், மன ஆணிவேரை மையப்படுத்தி மருத்துவ வேரை இறுக்கிப்பிடித்து திட்டங்களை வரைய வேண்டும்.

உடை அளவு கூடவும் செய்யவும், குறையவும் செய்யும். வானத்தை கூட அறிவியலால் அளக்கிறார்கள். மனித வாழ்க்கையை கூட்டித் தர மாட்டார்களா என்ன..? தருவார்கள். உடையாத மனமும், நெகிழாத அறிவும், திடமான நம்பிக்கையும், அழகான சூழலும், அன்பான கவனிப்பும், சிறப்பான மருத்துவமும் வாழ்வை மீட்டுத்தரும்’’ என்ற பானு இக்பால் மார்பகப் புற்றுநோய் குறித்து ‘மனப்பொழிவின் மாய வாசனை’ எனும் புத்தகத்தினை எழுதியுள்ளார். இதில் தான் எதிர்கொண்ட அனுபவங்களை பகிர்ந்தது மட்டுமில்லாமல் ஒவ்வொரு புற்றுநோய் பாதிப்பாளரும் எவ்வாறு அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரும் மருந்தாகும்!(மருத்துவம்)
Next post கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!(மகளிர் பக்கம்)