ஜனாதிபதி பதவி விலகலுக்கு சாத்தியமுண்டா? (கட்டுரை)

Read Time:14 Minute, 54 Second

ஜனாதிபதி உரையாற்றுகிறார் என்றவுடனேயே எல்லோரும் பதவிவிலகும் அறிவித்தலைத்தான் சொல்லுவார் என்று எண்ணுமளவுக்குத்தான் நிலைமை இருந்தது. வாழ்க்கைச் சுமை அதிகரித்துவிட்டது. யார் எதனைச் செய்யமுடியும் என்றே இருக்கிறது.

ஒரு சமூகமோ நாடோ, வெறுமனே வசதி படைத்தவர்களை மாத்திரமோ, சாதாரண மக்களை மாத்திரமோ கொண்டதல்ல. அதில் நடுத்தர மக்களும்தான் உள்ளடங்குகிறார்கள். இதில் யாருக்குத் திண்டாட்டம், யாருக்கெல்லாம் பெரும் திண்டாட்டம் என்று யாரும் கணக்குக் போட முனைவதில்லை.

நாட்டுக்குள் கேள்விக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன உரிமை, மனித உரிமை மீறல் விடயங்கள், சர்வதேசத்திலிருந்து வரும் மனித உரிமைப் பிரச்சினைகள் ஒருபுறம், அழுத்தங்கள் மறுபுறம், வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவது தொடர்பான பிரச்சினை, எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தித்தல் என பல பிரச்சினைகளை நாடு இப்போது எதிர் கொண்டுள்ளது.

இவற்றினை எவ்வாறு சீர் செய்வதென்று தெரியாத நிலையில் அவசர அவசரமாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு, இந்தியாவுக்கு நிதி அமைச்சர் விஜயம், ஒப்பந்தம் கைச்சாத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு என்று நடவடிக்கைகள் விரியத் தொடங்கின. ஆனால், எதிர்க்கட்சியினரின் ஒருங்கிணைந்த எதிர்ப்புப் போராட்டம் காரணமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பு நடைபெறுமா என்பது சந்தேகமாக இருந்த நிலையில் எதிர்க்கட்சியினரின் போராட்டம் காரணம் காட்டப்பட்டு பிற்போடப்பட்டதாகவே சொல்லப்படுகிறது. அப்படியானால் எதிர்க்கட்சியினரின் போராட்டம் ஜனாதிபதியை குழப்பிவிட்டதாகவே அர்த்தம் கொள்ளமுடியும்.

எதிர்க்கட்சியினரின் போராட்டத்திற்கு மறுநாள் நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி உரையாற்றினார். ஒவ்வொரு தடவையிலும் ஏதோ ஒன்றைச் சொல்லி, மக்களை சரி செய்வதற்கு அவருக்கு என்ன தேவையிருக்கிறது என்பதுதான் இந்த இடத்தில் கேள்வி.
அப்படியானால் ஜனாதிபதிக்கு தன்னுடைய முடிவுகளில் தனது அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மீது எதிர்க்கட்சியினரும் எதிர்த் தரப்பினரும் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் சரியானதும் யதார்த்தமானவையும் என்பதே அர்த்தமாகும்.

தனது உரையின் போது, “உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன்.

அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொண்டு, தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என்ற கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களிடம் விடுத்தார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து உருவான அதிர்ச்சியானது அதிர்வு சிங்கள மக்களிடம் ஏற்படுத்திய மீண்டுமொரு பயங்கரவாத அச்சுறுத்தல் என்ற பெரும் இனத் துவேசம் புதிய ஜனாதிபதிக்கான கதவைத் திறந்துவிட்டது.

குழப்பங்கள், சிக்கல்களுடன் இருந்த நல்லாட்சி அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. அவரது பதவியேற்புக்குப்பின்னர், இந்த அரசாங்கம், ஆட்சிப் பொறுப்பினை ஏற்கின்ற வேளையிலேயே உலகில் கொவிட்-19 பரவல் ஆரம்பித்துவிட்டிருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடனேயே ஆரம்பிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான திட்டங்கள், ஒரு லட்சம் கிலோ மீற்றர் காபட் வீதிகள் திட்டம், விவசாயத்துக்கான இரசாயன கிருமிநாசினிகளுக்கான தடை, இரசாயனப் பசளை இறக்குமதித் தடை என உலகின் நிலைமைகள் அறியாது முன்னெடுக்கப்பட்ட திட்டங்களால் நாட்டு மக்களின் உற்பத்தித் துறையை வீழ்த்தியதுடன், மக்களின் வாழ்வாதாரங்களில் சம்மட்டியால் அடித்துவிட்டது என்றே சொல்லலாம்.

கால ஓட்டங்களுக்கு ஏற்ப திட்டங்களை முன்வைக்கின்ற நிலைமைகளைப் புரிந்து கொண்டு அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் சாதாரண தனிமனித வாழ்க்கையிலேயே சாதாரணமானவைகளாகும். அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்ற ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு முரண்பாடுகள் இருந்தாலும் நாம் எடுக்கின்ற முடிவுகள் எல்லாம் சரியானவையே என்ற இறுமாப்பு, நாட்டை உலக நிலைமையை காண்பித்து ஏமாற்றுவதற்கான தேவையை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கொள்ளலாம்.

உணவு உண்ணும் அளவுகளில், உணவு முறைகளில் கூட மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எரிவாயு இல்லாது விறகு அடுப்புகள் வீடுகளுக்கு வந்துவிட்டன. சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை மிகுந்த பாதிப்புடையதாக மாற்றமடையவில்லை. ஆனால், நடுத்தர மக்களின் வாழ்க்கையும் வசதி படைத்தவர்களின் நிலைமைகளுமே மோசமடைந்திருக்கின்றன.

“நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் ஒரு சில சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண இன்று நான் கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளேன். அதற்கு உதவ தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஓர் ஆலோசனைக் குழுவையும் நியமித்தேன்” என்று கூறியுள்ள ஜனாதிபதி, இதற்கு முன்னர் நிறுவிய ஆலோசனைக்குழுக்கள் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பற்றிச் சிந்தித்திருக்கிறாரா என்பது தெரியாத ஒன்று. குடி மூழ்கிப் போனதன் பின்பும் இவ்வாறான குழுக்களை நியமிப்பதில் என்ன பயன் இருக்கும் என்பதுதான் பொது மக்களிடம் உள்ள கேள்வியாகும்.

இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்பு, இனி வரும் எத்தனை வருடங்களுக்குப் பிரதிபலிக்கப்போகிறதோ என்பது அறிய முடியாததே. ஆட்சியிலிருக்கும் இந்த அரசாங்கத்தால் மாத்திரமல்ல இனி ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கத்தாலும் வீழ்ச்சியடைந்துவிட்ட நாட்டை அவ்வளவு இலகுவாகத் தூக்கி நிறுத்திவிட முடியாது என்பதே உண்மை.

நாடு அதள பாதாளத்துக்குள் வீழ்ந்துவிட்ட போதும் தான் எடுக்கும் முடிவுகள் திட்டங்கள் செயற்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கும் நிலையிலேயே ஜனாதிபதி இருக்கிறார். எடுத்த முடிவுகளில் தவறிருக்கிறதா என்பதனை அவர் ஆராய முற்படவில்லை. அதனைப்பற்றிய சிந்தனையும் அவருக்கில்லை. அந்த வகையில், 69 இலட்சம் மக்களினதும் விருப்பம் தான் எடுக்கும் முடிவுகளே என்று அம் மக்களின் மனங்களில் வெறுப்பும் கோபமும் உருவாகி விட்டபோதும் அவருக்கிருக்கும் நம்பிக்கையைப் பாராட்டவே வேண்டும்.

ஆனால், பெரும்பான்மையான மக்களிடம் இருக்கின்ற நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு ஆட்சி மாற்றம் ஒன்றுதான் தீர்வா என்று கேட்டால். இல்லையென்றுகூட பதிலைச் சொல்லிவிட முடியுமாக இருந்தாலும், அது மாத்திரம் உண்மையில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

ஆனாலும், ஜனாதிபதியின் உரையில் நாங்கள் எதிர்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் போரில் சிக்கிய அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்துகொண்டு, அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது என்ற கருத்தானது அவர்களிடமுள்ள இந்தப் பயங்கரவாதம், இனத் துவேசச் சிந்தனை எவ்வளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதனையும், இன்னமும் அவர்கள் இருக்கின்ற இந்த உணர்வினையும் அச்சத்தினையும் பயன்படுத்த முனைகிறார் என்பதும் நன்கு தெரிகிறது.

அந்த வகையில்தான் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டவர்கள் அதனைக் கைவிடவேண்டிய நிலைக்கு வந்துவிடவேண்டும். நாட்டு மக்களின் நலன்களைக் கவனத்திலெடுக்க வேண்டிய அரசாங்கம், இது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று கையை விரிப்பதானது, கஜானாவில் ஒன்றுமில்லாதிருக்கின்றபோதே நடைபெறும். அந்த வகையில் கஜானா காலியானதற்கான காரணங்கள் என்ன என்பதே நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டியதாகும்.

காலத்துக்கு ஏற்ப கட்டாயத் தேவையானதை விடுத்து, அதிவேக நெஞ்சாலை, காபற் வீதிகள் என நினைத்ததற்கெல்லாம் செலவு செய்துவிட்டு கொவிட்-19 நோய்த் தொற்றினால் அதிகரித்த கப்பல் கட்டணங்கள், பொருட்களின் விலை அதிகரிப்பு, பொருட்களின் தட்டுப்பாடு போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் மஞ்சள் இறக்குமதித் தடை, உழுந்து போன்ற பொருட்களுக்கான தடை என மக்களிடமிருந்த பெருந்தொகைப் பணம் வீணாக்கப்பட்டது. மஞ்சள் இறக்குமதி தடை செய்யப்பட்ட வேளையில்தான் கொவிட்-19 தாக்கத்தினைக் குறைப்பதற்கான தொற்று நீக்கியாக மஞ்சள் இருந்தது. அதனைக் கொள்வனவு செய்வதில் மக்கள் பெருந்தொகைப் பணத்தினைச் செலவு செய்யவேண்டி ஏற்பட்டது. இப்போதும் அந்த விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடவில்லை.

இவ்வாறு உணவை விடுத்து, முக்கிய தேவைகளை விடுத்து வேறு விடயங்களுக்கு மக்களை வீணாகத் திசைதிருப்பி மக்களின் நலன்கள் வீணடிக்கப்பட்டன.
மானியத்தினை வழங்கவேண்டிய நிலையில் மக்கள் வடித்துத் துடைத்து எடுக்கப்படுகின்றனர். அரச உத்தியோகம் செய்பவர்கள் முதல், அன்றாடத் தினக்கூலி வரையில் யாரும் எல்லாவற்றையும் எதிர்கொண்டே வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலையில் நாடு இருக்கிறது.

இவ்வாறு, “எதுவும் தம் கையில் இல்லை” கட்டுப்பாட்டில் இல்லையானால் எதற்காக அரசாங்கம் என்று ஒன்று தேவை என்ற கேள்வி அனைத்து மக்களிடமும் தோன்றியிருக்கிறது. மக்கள் நலன், இந்த இடத்தில் எவ்வகையில் கவனத்தில் எடுக்கப்படும் என்பது கேள்வி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!(மகளிர் பக்கம்)
Next post தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஆபத்து…!(மருத்துவம்)