நான் மினிமலைஸ்ட் வித்யாதரணி!!(மகளிர் பக்கம்)
ஒரு ஹைஃபையான வாழ்க்கை வாழ்ந்து சட்டென தெருவுக்கு வந்த வாழ்க்கை என்னுது எனப் பேச ஆரம்பித்த வித்யாதரணி தன்னை மினிமலைஸ்ட் என அடையாளப்படுத்திக் கொண்டார். திருவண்ணாமலையில் வசிக்கும் வித்யாதரணியை பலருக்கும் தெரிந்திருக்கும். காரணம், தனது சைக்கிள் வண்டியில் புத்தகங்களுடன் பயணிப்பவர், கிடைக்குமிடத்தில் சைக்கிளை நிறுத்தி அதையே ஸ்டாலாக்கி புத்தக விற்பனையில் சட்டென இறங்கிவிடுகிறார். மினிமலிசம் குறித்து அவரிடம் பேசியபோது…
‘‘வறுமையை மினிமலிசமாகப் பலரும் இங்கே போட்ரெய்ட் செய்கிறார்கள். இல்லாதவன் சொல்வதே மினிமலிசம் எனவும் பலர் தவறாய் நினைக்கிறார்கள். ஒரு பொருள் எனக்குத் தேவை. ஆனால் அது 50 கோடி விலை என்றாலும் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து நான் வாங்கிக் கொள்வேன். தேவையில்லையெனில் தேவையில்லைதான். அது 50 காசு பொருளாக இருந்தாலும் எனக்கு அது வேண்டாம். இதுவே மினிமலிசம் என்றவர், கைபேசியில் உள்ள ஆப்களில்(app) சில ஆப்கள் பயன்படாமலே இருப்பதுபோல், பல பொருட்களையும் நாம் மாதக் கணக்கில் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். தேவையற்ற ஒரு பொருள் யாரோ ஒருவருக்கு தேவையெனில், அதைத் தூக்கிக் கொடுக்கும் மனநிலையை நாம் வளர்க்க வேண்டும். இதுவும் மினிமலிசம் என்கிறார்.
எனக்கு ஊர் மதுரை. வளர்ந்தது கம்பத்தில் இருந்த பாட்டி வீட்டில். அது ஒத்தவீடு. வீட்டைச் சுற்றிலும் ஏக்கர் கணக்கில் பாட்டிக்கு நிலமிருந்தது. மனித நடமாட்டம் குறைந்த அங்கே விலங்குகளோடு நிறைய பழகினேன். மதுரையில் இருப்பதிலே மிகப் பெரிய பள்ளியான டிவிஎஸ் பள்ளியில் அப்பா என்னை படிக்க வைத்தார். வார இறுதியில் தனியாகக் கிளம்பி பாட்டி வீடு இருக்கும் கம்பத்திற்குச் செல்வேன். அப்போது எனக்கு வயது ஆறுதான் இருக்கும். பயணங்களும் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. அப்பா எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்தார் என்றால், அம்மா எனக்கு தைரியத்தை கொடுத்தார்.
அப்போது என் வீட்டில் பத்து கார்கள் இருந்தது. பணத்தின் மதிப்பு தெரியாமலே வளர்ந்தேன். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் பாக்கெட் மணியாகச் செலவழிப்பேன். திடீரென அப்பா இறந்ததும், காரில் சென்று பள்ளியில் இறங்கிய நிலை மாறி, அரிசி வாங்க ரேஷன் அட்டையை வீட்டில் தேடினோம். அப்போது என் கைகளில் 10 ரூபாய்தான் இருக்கும். ஒரு டிக்கெட் 3 ரூபாய். பள்ளி செல்ல 4 தடவை பஸ் ஏறி இறங்கனும். அதற்கு தினம் 12 ரூபாய் தேவைப்படும். இதற்காகவே 7 கிலோ மீட்டர் நடக்க ஆரம்பித்தேன். படிச்சிட்டா வாழ்க்கையில ஜெயிக்கலாம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் பள்ளிக்கூட பெயிலியர் லிஸ்டில் என் பெயர் எப்பவுமே இருக்கும். பிறகு பொருளாதாரத்தில் எம்.ஏ. முடித்தேன்.
சாதியக் கட்டமைப்புக்குள் இருந்த குடும்பத்தில் வளர்ந்த எனக்கு பறக்க சுதந்திரம் கிடைத்தாலும், திருமணம் என வரும்போது, அம்மா என் சிறகை வெட்டவே நினைத்தார். எவ்வளவுதான் நீ பறந்தாலும் கடைசியில் சமைக்கவும், பிள்ளை பெறவும்தான் பெண் என்பதை மறைமுகமாக உணர்த்த ஆரம்பித்தார். என்னை அடிமையாக்கும் முயற்சிகள் அரங்கேறின. நான் 9 வது படிக்கும்போதே தட்டுத் தாம்பூலத்துடன் பெண் கேட்டு தினம் தினம் உறவினர்கள் வரிசையாய் வர ஆரம்பித்தார்கள். என் வயது பிள்ளைகளுக்கு 15 வயதிலே திருமணமாகி, திருமணம் செய்து கொடுக்கும் வயதில் அவர்களுக்குப் பிள்ளைகளும் இப்போது இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறைப் பெண் பார்க்க வரும்போதும் என்னை அலங்கரிக்கனும். பலகாரங்கள் தயாராகும். அதை கொண்டுபோய் கொடுக்க வேண்டும். இப்படியே போனது. ஒரு பெண் எப்படி வாழக்கூடாது என்பதை சித்தி, அத்தை, பெரியம்மா என என் வீட்டுப் பெண்கள் மூலமாகவே உணர ஆரம்பித்தேன். அம்மா சொல்வதைக் கேட்டு தலையாட்டினால், என் வாழ்க்கையை அம்மாதான் கெடுத்துவிட்டார் என்று பின்னால் எண்ணத் தோன்றும். அப்படி நடக்கக் கூடாது என நினைத்தேன். கல்யாணமாகி குழந்தை பெற்றுக்கொள்ளும் நார்மலான பெண்கள் வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை.
பொன்னியின் செல்வன், வேல்பாரி போன்ற கதைகள் எனக்கு எப்போதும் படிக்கப் பிடிக்கும். ஏனெனில் நான் எப்பவுமே மேஜிக்கல் பிக்ஷனில் வாழும் ஒரு பெண். எனக்குன்னு ஒரு நல்ல கணவன் வருவான். அவன் பெண்களை மதிப்பவனாகவும், நல்லவனாகவும் இருப்பான். எனக்கு சமைக்கப் பிடிக்கவில்லை எனில், அவனே எனக்கும் சமைப்பான் என நினைக்கத் தொடங்கினேன். அந்த மேஜிக் என் வாழ்வில் நடந்தது. அது 2017ம் ஆண்டு போராட்டத்திற்கான வருடம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி பல போராட்டங்களில் நானும் பங்கேற்றேன். அங்குதான் கார்த்திகேயனையும் சந்துருவையும் சந்திக்கிறேன். அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். நாங்கள் மூவரும் நண்பர்களாகச் சந்தித்து பிறகு கிளம்பிவிட்டோம். மீண்டும் மதுரை சித்திரை திருவிழாவில் அவர்கள் இருவரையும் சந்திக்கிறேன்.
10 நாள் திருவிழாவை புகைப்படம் எடுக்க வந்தவர்களோடு இணைந்து நானும் கோயிலைச் சுற்றுகிறேன். எங்கள் நட்பு பலப்பட்டு, மூவருக்குள் ஒரு புரிதல் வந்தது. மூவரும் எங்களின் வாழ்க்கையை நாங்களே முடிவு செய்து ஒரே வீட்டில் நண்பர்களாகத் தொடர்ந்தோம். பார்ப்பவர்களுக்கு எங்களின் நட்பு புரியாதுதான். ஒருவர் சினிமா படம் எடும்பதை கனவாகக் கொண்டு பயணிக்கிறார். ஒருவர் எழுத்தாளராகப் பயணிக்கிறார். நான் மினிமலைஸ்டாகவும், அனிமெல்ஸ் கேர் டேக்கராகவும் அவர்களோடு என் பயணத்தை தொடர்ந்தேன். பிடித்த ஊர்களுக்கும் சென்றுவரத் தொடங்கினேன். புதிய புதிய தொலைதூரப் பயணங்களையும் மேற்கொண்டேன்.
தேவைப்படும்போது மட்டுமே பணம் ஈட்டினேன். என்னை எப்போதும் நான் கம்பெர்ட் ஜோனுக்குள் வைத்துக்கொள்வதில்லை. என்னைச் சுற்றி இருப்பதை எப்படி பயனுள்ளதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என யோசித்து பயன்படுத்துவேன். வாழ்க்கை பல புதிய அனுபவங்களை எனக்குக் கொடுக்கத் தொடங்கியது. எனக்கும் கார்த்திகேயனுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடித்தது. அதை சந்துருவிடம் நாங்கள் தெரிவித்தோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு துருவம்.
இருவரின் மோசமான பக்கங்களை ஒருவரிடத்தில் ஒருவர் சொல்லியே இணைந்தோம். நான் சராசரிப் பெண்ணாய் சமைத்துக் கொடுத்து, பிள்ளை பெற்றுக் கொடுக்க மாட்டேன் என்றேன். அவன் நானும் சராசரி ஆணாக சம்பாதிச்சுக் கொடுத்து, டிவி வாங்கிக் கொடுக்க மாட்டேன் என்றான். இதோ ஐந்தாண்டு ஆகிவிட்டது. 2017 ஜனவரி 16ல் சந்திச்சோம். 2022 ஜனவரி 16ல் எங்கள் திருமணம். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பனஓலை கொண்டு மிக எளிமையாக நானே உருவாக்கிக் கொண்டேன். என் கனவை நானும் அவன் கனவை அவனும் சுமந்து ஒன்றாக வாழ்ந்தாலும் தனித்தனியாகவே பயணிக்கிறோம்.
ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என நினைத்தேனோ அதன் மொத்த உருவம் அவன். பெண் அடிமைகளை உருவாக்குவது பெரும்பாலும் பெண்கள்தான். ஆனால் கார்த்தியை பொறுத்தவரை, பெண்ணை மதி என ஒரு பெண்ணாய் அவரின் அம்மா அவருக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார். இப்பவும் நான் மேஜிக்கை நம்புறேன். அந்த மேஜிக் என் வாழ்வில் நடக்குது. அதற்குத் தேவை நம்பிக்கை. மனசுக்குள்ள நீங்க எதையாவது நம்பி எதிர்பார்த்தால் அந்த மேஜிக் தானாகவே நடக்கும்.
எங்களுக்குள் என்னோட ஆசை உன்னோட ஆசை என்பது மறைந்து இப்போது நம்மளோட ஆசை என்றானது. நாடோடி வாழ்க்கைதான் எங்களுடையது. நாங்கள் இப்போது திருவண்ணாமலையில் வசிக்கிறோம். எல்லா நாட்டு மக்கள் வந்து தங்கிச் செல்கிறார்கள். அப்படி வருபவர்கள் இயற்கையையும்.. விலங்குகளையும்.. தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களையும் தெய்வமாய் பார்க்கிறார்கள். எங்கள் வீடு சத்திரம் மாதிரி. மூவருமாய் பெரியவீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளோம். எப்போதும் எங்கள் வீட்டுக் கதவுகள் திறந்தே இருக்கும்.
யார் வேண்டுமானாலும் எங்கள் வீட்டிற்கு வரலாம். அவர்களுக்கான சாப்பாடு கண்டிப்பாக திருவண்ணாமலையில் கிடைக்கும். ஆனால் என் வீட்டில் அடுப்படி கிடையாது. சமையலுக்கான வேலையும் எங்களுக்கில்லை. எங்கள் கையில் இருப்பது கொஞ்சமாகப் புத்தகங்கள், ஒரே ஒரு கை பை, தேவைக்கான கொஞ்சம் துணிகள், அப்படியே எங்களால் காப்பாற்றப்பட்ட சில உயிரினங்கள் அவ்வளவே. ஆனால் 20 பேர் ஒரே நேரத்தில் வந்தாலும் எங்கள் வீட்டில் தங்கலாம்’’ என்கிறார் மினிமலைஸ்ட் வாழ்க்கையை அனுபவித்து வாழும் வித்யா.
இயல்பான வாழ்க்கை வாழ்பவன் 25 நாள் சண்டை போடுவான். 5 நாள் குடும்பத்தோடு சுற்றுலா சென்று சம்பாதித்தது அனைத்தையும் செலவழிப்பான். நாங்கள் 25 நாளும் யாருக்கும் அடிமையில்லாமல் சுதந்திரமாய் சுற்றுகிறோம். அடிபணியாத சுதந்திரம் எங்களுக்கு இருக்கு. எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் வருவோம். எந்த நண்பர்கள் கூப்பிட்டாலும் செல்வோம். 5 நாட்கள் மட்டுமே சம்பாதிச்சு தேவையான வருமானத்தை ஈட்டுவோம். மினிமலிசம் என்பது சந்தோஷமான வாழ்க்கை. வளமையான வாழ்க்கை…
விடை கொடுத்தார் வித்யாதரணி.
Average Rating