ஃபேஷன் A – Z!!(மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 52 Second

ஒவ்வொரு பெண்களின் முக்கிய பிரச்னை என்ன என்று கேட்டால்… அனைவரும் கோரசாக சொல்வது உள்ளாடைகள். ஆடைகள் போல் வெளிப்‌ பார்வைக்கு தெரியாமல்‌ பெண்‌களின்‌ உடலோடு ஒட்டி உறவாடும்‌ உள்ளாடைக்கான முக்கியத்துவத்தை பெண்கள்‌ வழங்குவதில்லை. பல பெண்களுக்கு இதை எப்படி பயன்படுத்த வேண்டும்‌ என்றும் தெரியவில்லை. சிலர் உடலை இறுக்கிப் பிடிக்கும் உள்ளாடைகளை அணிந்திருப்பார்கள்.

ஒரு சிலரின் உள்ளாடையின் பட்டை தோள்பட்டையில் சரியாக பொருந்தாமல் வழுக்கிக் கொண்டே இருக்கும். எப்போது வீட்டிற்கு போவோம் சங்கடம் தரும் இதனை கழட்டி வீசுவோம் என்றுதான் பல பெண்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் விஷயம். பெண்கள் அன்றாடம் இதனுடன் வாழ்ந்து வந்தாலும், அது குறித்து பேசத் தயங்குகிறார்கள் என்பதுதான் மறுக்கப்படாத உண்மை. இந்த இதழில் உள்ளாடைகளின் வகைகள் மற்றும் அதை எவ்வாறு தேர்வு செய்து அணிய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

“உள்ளாடை அணிவது பெரிய விஷயம்‌ இல்லை. காரணம்‌, இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே உள்ளாடைகளை அணியத்தான்‌ செய்கிறார்கள்‌. ஆனால்‌, ஒவ்வொருவரும்‌ தங்கள்‌ உடலுக்கு ஏற்ற வகையில்‌ சரியான அளவைத்தான்‌ தேர்ந்தெடுத்து அணிகிறார்களா என்பதுதான் கேள்வியே. உள்ளாடை கடைகளில் பல விதமான டிசைன்கள் மற்றும் பிராண்ட்களில் கொட்டிக் கிடக்கின்றன. அதாவது வாரில்லாத உள்ளாடைகள், பேடேட், புஷ்-அப், முழுமையாக மறைக்கக்கூடியவை… இப்படி பல டிசைனகள் உள்ளன. அதில் மார்க்கெட்டில் என்னென்ன வகை உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பேடேட் உள்ளாடைகள் : இந்த வகை உள்ளாடைகள் உங்களின் மார்பகங்கள் அழகாகவும் வடிவத்துடனும் எடுத்துக்காட்ட உதவும். இவை வயர்ட் மற்றும் வயர்ட் இல்லாமலும் கிடைக்கிறது. வயர்ட் அமைப்பு கொண்ட பேடேட் உள்ளாடைகள் உங்களின் மார்பகங்கள் தளர்வாக இல்லாமல் எடுப்பாக எடுத்துக்காட்டும். வயர்ட் இல்லாத பேடேட் உள்ளாடைகளை நாம் அன்றாடம் பயன்படுத்தலாம். அதே சமயம் பேடேட் உள்ளாடைகளை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. அதில் இருந்து வெளியாகும் வெப்பத்தினால் மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏ டி-ஷர்ட் உள்ளாடைகள் : இவை பேடேட் பிராக்கள் போன்றவை. மிருதுவாகவும், சீம்லெஸ் கப் வடிவங்கள் கொண்டதால், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகள் அணிந்தாலும், அதில் எந்தவித தழும்புகளும் ஏற்படுத்தாது. டி-ஷர்ட் மற்றும் உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைக்கு ஏற்றது. அண்டர்வயர்ட்

உள்ளாடைகள் : இந்த வகைகளில் பெரும்பாலும் கப் வடிவம் முழுதும் வயர் செய்யப்பட்டு இருக்கும். மேலும் சிலவற்றில் பேடேட் அமைப்பும் கொண்டிருக்கும். அண்டர்வயர்ட் அமைப்பு கொண்ட உள்ளாடைகள் மார்பக அமைப்பினை மேலும் எடுத்துக்காட்டும் என்பதால், தளர்வான மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கு இது ஏற்றது. ஒருவரின் அளவு என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப இந்த உள்ளாடையினை தேர்வு செய்ய வேண்டும். இல்லை என்றால் காலப்போக்கில் மார்பகத்தில் வலி மற்றும் அதன் தசைகளில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

புஷ்-அப் உள்ளாடைகள் : மார்பகங்களை மேலே தூக்கி கொடுப்பது மட்டுமில்லாமல், சரியான வடிவமைப்பும் கொடுக்கும். இந்த வகை பெரும்பாலும் அண்டர்வயர்ட் செய்யப்பட்டு வருவதால், தளர்வான மார்பகங்களுக்கு ஒரு மென்மையான உணர்வினை கொடுக்கும். இவற்றை தினசரி பயன்படுத்தக்கூடாது. மார்பகங்களை இறுக்கிப் பிடிப்பதால், அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பிராலெட் : கிராப் டாப் மற்றும் உள்ளாடை இரண்டுக்கும் இடைப்பட்டது. வயர்ட் மற்றும் பேடேட் அமைப்பில்லாதவை என்பதால் இதனை எளிதாக அணிந்து கொள்ள முடியும். டீன் ஏஜ் பருவ பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு இந்த பிராலெட் உள்ளாடைகள் ஏற்றது. பால்கொனேட் உள்ளாடைகள் : உள்ளாடைகளை இணைக்கக் கூடிய பட்டைகள் அகண்ட அமைப்பு கொண்டதாகவும், மேலும் பரந்த தோள்பட்டை வடிவம் கொண்டுள்ள பெண்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

பிளஞ்ச் உள்ளாடைகள் : ஒன்றில் மூன்று பங்கு மட்டுமே மார்பகங்களை மறைக்கக்கூடிய உள்ளாடை தான் இந்த பிளஞ்ச் வகை. லோ நெக்லைன் கொண்ட உடைகளுக்கு ஏற்றது.

ஸ்போர்ட்ஸ் உள்ளாடை: விளையாடும் போது மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது அணியப்படும் உள்ளாடை தான் ஸ்போர்ட்ஸ் உள்ளாடை. இதில் லோ இம்பாக்ட், மீடியம் இம்பாக்ட் மற்றும் ஹெவி இம்பாக்ட் என மூன்று வகை உள்ளது. நீங்கள் உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடும் போது மார்பகங்கள் அசையாமலும் அசவுகரியம் ஏற்படுத்தாமல் இருக்க இதனை பயன்படுத்தலாம்.

பிகினர் உள்ளாடைகள்: இது சாதாரண உள்ளாடைகள். வயர்ட், பேடேட் மற்றும் உள்ளாடையினை இணைக்கக் கூடிய பட்டிகளும் இதில் இருக்காது. பூப்படைந்த பெண்கள் முதன் முதலில் உள்ளாடைகள் அணிய பழகிக்கொள்ள இதனை பயன்படுத்தலாம். ஆண்கள் அணியும் பனியன் போன்ற அமைப்பினைக் கொண்டது.உள்ளாடைகள் பல வகை இருந்தாலும், அதனை சரியாக தேர்வு செய்வது அவசியம். நான் சரியான அளவு கொண்ட உள்ளாடையினை தேர்வு செய்து இருக்கேனா என்ற கேள்வியினை ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். காரணம் மார்பகத்தின் அளவிற்கு ஏற்ப உள்ளாடைகளின் கப்பின் அளவு மற்றும் அதன் பட்டியும் பொருந்தி இருப்பது அவசியம் என்பதால், எவ்வாறு அதனை தேர்வு செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

முதலில் மார்பக அளவினை பார்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதன் அமைப்பு மாறுபடும். சிலருக்கு மார்பகத்தின் தசைகள் அதாவது ஒருவரின் மார்பகத்தின் எடை எந்த பகுதியில் அதிகமாக இருக்கிறது என்பதை கணிக்க வேண்டும். உங்களின் மார்பக எடை முளைக்காம்பின் கீழ் பகுதியில் அதிகமாக இருந்தால் அதனை ஃபுல் ஆன் பாட்டம் மார்பகங்கள் என்று குறிப்பிடுவோம். இந்த அமைப்பிற்கு பால்கோனெட் உள்ளாடைகள் அணிந்தால், மார்பகங்களின் எடையினை சமமாக தாங்கிப் பிடிக்கவும் முழுமையாக மறைக்கவும் உதவும்.

மார்பகங்களின் திசுக்கள் மேல் கவனம் செலுத்தும் போது அதை ஃபுல் ஆன் டாப் என்று குறிப்பிடப்படும். இவற்றில் திசுக்களின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் டெமி கப் அல்லது ஹை ஏபெக்ஸ் உள்ளாடைகள் அணியும் போது அது முழுமையாக மறைப்பது மட்டுமில்லாமல் அதனை தாங்கிப் பிடிக்கவும் உதவும். வட்டமாகவும், மேல் மற்றும் கீழ் சமமாக நிரம்பியதாகவும் இருக்கும்.மார்பகங்கள் உங்கள் சருமத்தில் உராய்வு ஏற்படாமல் இருக்க முக்கோண வடிவம் கொண்ட எடை குறைவான உள்ளாடைகளை பயன்படுத்தலாம்.

மார்பகங்களின் வடிவங்கள்

ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதேபோல் தான் மார்பகங்களும் அனைவருக்கும் ஒரே வடிவத்தில் இருப்பதில்லை. இரு மார்பகத்தின் முளைக்காம்பும் எதிர் பக்கமாகவும் இரண்டு மார்பகங்களுக்கு இடையே அதிக இடைவேளை இருந்தால் அது கிழக்கு மேற்கு வடிவ மார்பகம். இந்த வடிவத்திற்கு சாதாரண டி-ஷர்ட் உள்ளாடைகள் அணியலாம். இரண்டு மார்பகங்களையும் சமமாக நடுவில் இணைத்து பார்க்கும் போது ஒரு அழகான தோற்றத்தினை கொடுக்கும். சரியான வடிவம் கொண்ட மார்பகம் என்றால், எந்த வகையான உள்ளாடைகளும் உங்களுக்கு பொருந்தும். கிழக்கு மேற்கு வடிவ மார்பகம் வடிவத்தில் இருப்பது போல் மார்பகம் வெவ்வேறு திசைகளில் இருந்தால் பால்கொனேட் உள்ளாடைகள் மிகவும் கச்சிதமாக பொருந்தும். இவை தடிமனான பட்டியுடன் வருவதால், மார்பகங்களை தாங்கிப்பிடிக்கவும் அதே சமயம் சரியான நிலையில் இருக்கவும் உதவும்.

டியர் டிராப் வடிவம்…

இவை மார்பகத்தின் மேல் பகுதி மெல்லியதாக இருந்தாலும் வட்ட வடிவத்தில் இருக்கும். இவர்கள் அண்டர்வயர்ட் உள்ளாடைகளை அணியும் போது, அது மார்பகத்தினை மேலே உயர்த்தி முழுமையான தோற்றத்தினை அளிக்கும். ஒல்லியான உருவம் கொண்ட பெண்கள் நீண்ட மார்பகங்கள் கொண்டிருப்பார்கள். இவர்கள் அண்டர்வயர்ட் பிளஞ்ச் பேடேட் உள்ளாடைகளை அணியலாம். வயர்ட் இருப்பதால் மார்பகம் தளராமல் பாதுகாக்கும். மேலும் பிளஞ்ச் மார்பகத்தின் இடையே உள்ள இடைவெளியை மறைத்து அழகாக தோற்றமளிக்க உதவும். மார்பகத்தின் மேல் பகுதி குறுகியும், கீழ்ப்பகுதி அகண்டு காணப்பட்டால் அவர்கள் டி மற்றும் டி+ அளவு கொண்ட உள்ளாடைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் மார்பகத்தினை முழுமையாக மறைக்க உதவும்.

உள்ளாடை அணியும் ஸ்டைல்

* தளர்வான மற்றும் உடலை இறுக்கிப்பிடிக்கக்கூடிய உள்ளாடைகள் அணியக்கூடாது. உள்ளாடையில் உள்ள பின்பட்டை நேராகவும் அதே சமயம் இரண்டு விரல்கள் உள்ளே நுழையக்கூடிய இடைவெளி இருக்க வேண்டும்.

* மெல்லிய நிறம் கொண்ட உடைகளுக்கு சரும நிறம் கொண்ட உள்ளாடைகளை அணிய வேண்டும். அதே சமயம் வெள்ளை நிற உடைக்கு வெள்ளை நிற உள்ளாடையினை அணிவதை தவிர்ப்பது நல்லது.

* உங்களின் மார்பக அளவு எவ்வளவு குறைவாக இருந்தாலும், அதற்கான சரியான அளவு உள்ளாடைகளை தேர்வு செய்து அணிவதை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

* நம்மூர் வெயில் காலம் என்பதால் பருத்தி உள்ளாடைகள் மிகவும் சிறந்தது.

* இரவு உறங்கும் போது, உள்ளாடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது. காரணம் இவை உடலுடன் உராயும் போது, அதனால் சருமத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

* உள்ளாடைகளை வாஷிங் மெஷினில் துவைக்காமல் கைகளால் துவைத்து வெயிலில் காயவைக்க வேண்டும். இதனால் பங்கசினால் ஏற்படும் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சரியான தேர்வு அவசியம்

ஒரு உடையை தேர்வு செய்யும் போது சரியான அளவு பார்த்து எவ்வாறு தேர்வு செய்கிறோமோ அதேபோல் தான் உள்ளாடைகளையும் சரியான அளவில் தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக உள்ளாடைகளுக்கு அதன் பாண்ட் மற்றும் கப் அளவுகள் தான் மிகவும் முக்கியமான அளவுகள். இவை இரண்டும் தான் ஒருவரின் அளவினை நிர்ணயம் செய்யும். பாண்ட் அளவு மார்பகம் கீழ் உள்ள பகுதியில் இஞ்ச் டேப் கொண்டு அளக்க வேண்டும். இரட்டைப்படை எண்ணாக இருந்தால், அதுதான் உங்களின் பாண்ட் அளவு. ஒற்றைப்படை எண்ணாக இருந்தால், அருகில் உள்ள இரட்டைப்படை எண்ணை அளவாக கணக்கிட வேண்டும்.

கப் அளவு : மார்பகத்தை சுற்றி இஞ்ச் டேப் கொண்டு அளக்க வேண்டும். பிறகு பாண்ட் அளவினை கப் அளவில் இருந்து கழிக்க வேண்டும். இது தான் உங்களின் உள்ளாடையின் கப்பின் அளவு. அதாவது கழித்த எண் 1 என்றால் AA என்பது கப்பின் அளவு. அதேபோல் 2 – A, 3 – B, 4 – C, 5 – D, 6 – DD, 7 – E, 8 – F.உதாரணத்திற்கு பாண்ட் அளவு 32, மார்பக அளவு 34 என்று வைத்துக் கொள்வோம். இதனை கழித்தால் 2 வரும்.

உங்களின் உள்ளாடையின் அளவு 32 A என்று கணக்கிட வேண்டும். சரியான அளவினை தேர்வு செய்து அணியும் போது, அது உங்களுக்குள்ளே ஒரு தன்னம்பிக்கையினை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் எந்த உடை அணிந்தாலும், அது கன கச்சிதமாக பொருந்தும். எல்லாவற்றையும் விட ஒவ்வொரு உள்ளாடையும் தனிப்பட்ட நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. உங்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கேற்றவற்றை தேர்வு செய்வது அவசியம். காரணம், ஒவ்வொருவரின்‌ மன நலமும்‌, உடல்‌ ஆரோக்கியமும்‌ அடங்கியிருக்கிறது.

சரியான அளவினை தேர்வு செய்யவில்லை என்றால், தலைவலி, கழுத்து வலி, உடல் அமைப்பில் மாற்றம், சரும பிரச்னை, மார்பக தளர்வு மற்றும் மார்பக திசுக்களில் பாதிப்பு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எல்லாவற்றையும் விட உங்களின் தோற்றத்தில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும். அதனால் சரியான உள்ளாடைகள் ஒவ்வொரு பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கவசம் என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் மினிமலைஸ்ட் வித்யாதரணி!!(மகளிர் பக்கம்)
Next post தாத்தா சட்டையை ரீமேக் செய்தேன்! (மகளிர் பக்கம்)