ஷாம்பூ: மேக்கப் பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 52 Second

பாமர மக்கள் கூட வேண்டாம் என நிராகரிக்க முடியாத ஒன்று ஷாம்பூ. இயற்கையான முறையில் சீயக்காயை அரைத்து தேய்க்க வேண்டும் என்று நினைத்தாலும் நாம் வாழும் இந்த அவசர வாழ்க்கையில் அது சாத்தியப்படுவதில்லை. மேலும் வாகனங்களால் ஏற்படும் புழுதி, ஹெல்மெட் பயன்பாடு, கோடைகால வெப்பம்… இவை எல்லாவற்றையும் எளிதான முறையில் சமாளித்து தலைமுடியினை பாதுகாக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்காக எளிமையான, பட்ஜெட்டுக்குள் அடங்கும் ஒரே தீர்வு ஷாம்பூதான். அதை நாம் சரியான முறையில் பயன்படுத்துகிறோமா என்பதை விளக்குகிறார் அரோமாதெரபிஸ்ட் கீதா அசோக்.

‘‘முதலில் இயற்கையான முறையால் முடி வளரும், அடர்த்தியாகும் என்பதே ஒரு மாயைதான். காரணம் எந்த சீயக்காயும், ஷாம்பூவும் நமக்கு முடி வளர்க்கத் தகுந்த காரணிகளைக் கொடுக்காது. முடிக்கு பாதுகாப்பானது மற்றும் ஆபத்தினை ஏற்படுத்தாது என்பதை மட்டுமே கவனிக்க வேண்டும். முடி ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்துக்கள், வாழ்க்கை முறை, மேலும் குடும்ப ஜீன்கள் போன்றவை தான் தீர்மானிக்கும். சீயக்காய் இயற்கையானது என்பதால் தலைமுடிக்கு ஆபத்துகளை விளைவிக்காது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சீயக்காயை அரைத்துப் பொடி செய்து பயன்படுத்துவது முடியாத காரியம். அதனால் தான் எல்லாரும் ஷாம்புவிற்கு மாறிட்டாங்க. பிறவியில் கிடைத்த முடியினை முடிந்தவரை பாதுக்காக்க என்ன ஷாம்பூவை தேர்வு செய்யலாம், எப்படி பயன்படுத்தலாம் என்பதை கவனிக்க வேண்டும்.

முன்பு வசதியானவர்கள் மட்டுமே ஷாம்பூ பயன்படுத்திய காலம் மாறி ஒரு ரூபாய் சாஷேக்கள் கிடைக்க ஆரம்பித்த நாள் முதல் ஷாம்பூக்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறத் துவங்கியது. அறிவியல் முன்னேற்றத்தால், முடி உதிர்தல் பிரச்னை, பொடுகு பிரச்னை, முடி உடைவது… என பிரச்னைகளின் தீர்வாக ஷாம்பூக்களின் வகைகள் பெருகிவிட்டன. ஆண், பெண், குழந்தைகள் இப்படி தனித்தனியாக ஷாம்பூக்கள் வந்தது போக இப்போது ஒவ்வொருவர் தலைமுடியின் தன்மை, பிரச்னைக்கு ஏற்ப ஷாம்பூக்கள் கிடைக்கிறது.

ஷாம்பூக்களில் SLS (Sodium Laureth Sulphate), பாரபீன் (Paraben), செயற்கையான வாசனையில் இருக்கும் வோலடைல் காம்பவுண்ட்ஸ் (The volatile compounds), பினாக்ஸி எத்தனால் (Phenoxy Ethanol) போன்ற ரசாயனங்கள் அடங்கியுள்ளன. இதில் எல்லாவற்றையும் நிராகரிக்க முடியாது, குறைந்த பட்சம் SLS இல்லாத ஷாம்பூக்களை பயன்படுத்தவும். SLS முடிந்தவரை முடியை வறட்சியாக்கி, தற்காலிகமாக பஃப் லுக் கொடுக்கும்.

சென்சிட்டிவ் சருமம் உள்ளவங்களுக்கு பாரபீன் இல்லாத ஷாம்பூ எடுத்துக்கொள்வது நல்லது. இல்லையேல் அரிப்பு வரும். அடுத்து அதிக வாசனை கொண்ட ஷாம்பூக்களில் இருக்கக் கூடிய வோலட்டைல் நம்முடைய எண்டோக்ரைனை பாதிக்கச்செய்யும். இதைவிட அதீத பிரச்னை பினாக்ஸி எத்தனால் கொண்ட ஹேர் கலர் ஷாம்பூக்கள், முடி ஸ்டிரைட்டனிங் ஷாம்பூ, ஹேர் கலரை தக்க வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் ஷாம்பூக்கள் என இவைகள் நரம்பு மண்டலம், நுரையீரல்கள், சுவாச உறுப்புகள் துவங்கி ஹார்மோன் பிரச்னைகள் வரையிலும் கூட உண்டாக்கும்.

ஷாம்பூ என்றாலே பிரச்னைதான் எனினும் அதில் குறைந்த பிரச்னையுள்ள ஷாம்பூக்களை எப்படி தேர்வு செய்யலாம்? முடிந்த வரை வாசனை அதிகம் கொண்ட ஷாம்பூக்களை தேர்வு செய்யாமல் இருப்பது நல்லது. போலவே SLS கொண்ட ஷாம்பூகளையும் தவிர்க்கலாம். ஹேர் கலர் ஷாம்பூக்கள், ஸ்டிரைட்டனிங் ஷாம்பூக்கள் என இவைகளை நிச்சயம் தவிர்க்கவும். பல காலமாக மார்க்கெட்டில் இருக்கும் ஷாம்பூக்களை அல்லது சிறுவயதில் நாம் பயன்படுத்தியபோது பிரச்னை கொடுக்காமல் இருந்த ஷாம்பூக்களையே வாழ்நாள் முழுக்க தொடரலாம். நம் சருமம், முடியின் தன்மை என்ன என்பதை மருத்துவர்கள், நிபுணர்களின் ஆலோசனை பெற்று அவர்கள் கொடுக்கும் ஷாம்பூக்களை பயன்படுத்தலாம்.

ஷாம்பூக்களை வாரந்தோறும் பயன்படுத்தலாம். ஆனால் ஷாம்பூ பயன்பாட்டுக்கு முன் சிறிது தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து 10 – 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ கொண்டு குளிக்க வேண்டும். சிலருக்கு குளித்தவுடன் கண்களின் அரிப்பு உண்டாகும். அவர்கள் குளிப்பதற்கு முன்பு சிறிது விளக்கெண்ணெயை தலை மற்றும் முகத்தில் தேய்த்து பிறகு குளிக்கலாம். ஷாம்பூக்களை ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று முறையென திரும்பத் திரும்ப பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. எப்போது தலை அலசினாலும் சரி குளித்து முடித்தவுடன் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.

உறுதியான கூந்தலுக்கு விட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. முட்டையில் புரோட்டீன், விட்டமின் பி 12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. கேரட்டில் பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. பாதாம், நிலக்கடலை, வால்நட், முந்திரி இவைகள் முடி வளர்ச்சியோடு சேர்த்து சருமத்திற்கும் நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நியூஸ் பைட்ஸ்: கட்டணமில்லா பயணத்தில் 91.85 கோடி பெண்கள் பயன் !!(மகளிர் பக்கம்)
Next post ஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா!!(அவ்வப்போது கிளாமர்)