உங்கள் குழந்தை வெஜிடபிள் மாதிரி… ஒரே இடத்தில்தான் இருப்பான்! (மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 33 Second

மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் என் மகன் குமரன் பிறந்தான். எனக்கு கிடைத்த மிகப் பெரிய பிறந்தநாள் பரிசு அவன். ஏனெனில், எனக்கும் அவனுக்கும் பிறந்தநாள் ஒரே தேதியில் அமைந்தது. அது ஜூலை 6. ஆனால் அவன் மற்ற குழந்தைகளைப்போல் நார்மலான குழந்தை இல்லை என்பது எனக்கு அப்போது தெரியாது. எட்டு மாதங்களுக்குப் பிறகே அவன் ஒரு சிறப்புக் குழந்தை என எங்களுக்கு தெரிய வந்தது என பேசத் தொடங்கினார் மனநல ஆலோசகரும் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வருபவருமான குமரன் குமணனின் அம்மா கற்பகம் குமணன்.

பிறப்பிலே மூளை முடக்கு வாதத்தால் பாதிப்படைந்து சிறப்புக் குழந்தையாய் பிறந்தவர் குமரன். அவரின் அம்மா கற்பகம் குமணன், அப்பா இளங்கே குமணன். இவர்
கள் குடும்பத்தினர் அனைவருமே திரைப்படத்துறை சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகின்றனர். குமரனின் சித்தப்பா பிரபல குணச்சித்திர நடிகர் இளங்கோ குமாரவேல். பெற்றோர்களின் தொடர் விடாமுயற்சி மற்றும் குடும்பத்தினரின் அன்பினாலும் குமரன் இன்று சிறந்த மனநல ஆலோசகராக செயல்படுவதோடு, மற்றவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார். மேலும் திரைத்துறை சார்ந்து பாடல்களை எழுதிவருகிறார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய குமரனின் அம்மா கற்பகம், நான் அமைதியா ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு. வீட்டிற்கு நான் ஒரே பெண்ணும்கூட. காதலுக்கு மரியாதை படத்தில் வருகிற மாதிரி எனக்கு மூன்று அண்ணன்கள். வீட்டில் ஒரு வேலையும் என்னை செய்யவிடாமல் அண்ணன்கள் எனக்கு நிறையவே செல்லம் கொடுத்தார்கள். என் கடைசி அண்ணன் மூலம் எனது கணவர் இளங்கோ குமணன் நட்பாய் எனக்கு பழக்கமானார். ‘சத்யா’ படத்தில் வரும் கமல் மாதிரி எங்கு தப்பு நடந்தாலும் கோபத்தோடு அடிதடியில் இறங்கி தட்டி கேட்கும் ரகம் அவர். மேலும் திரைத்துறை சார்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்.

எனக்கு அவரையும், அவருக்கு என்னையும் பிடிச்சிருந்தது. எனது அப்பா அரசாங்க வேலை செய்யிற மாப்பிள்ளைக்குதான் என் பொண்ணை கல்யாணம் செய்து கொடுப்பேன் என உறுதி காட்டினார். எட்டு வருடம் காத்திருப்புக்குப்பின் எங்கள் காதல் ஒரு நல்ல நாளில் இருவீட்டார் சம்மதத்தோடு நிறைவேறியது. அப்போது எனக்கு வயது 23. அவர் அகில இந்திய வானொலி அறிவிப்பாளராய் மத்திய அரசு பணியில் இருந்தார். எங்கள் இல்வாழ்க்கை நாகர்கோவிலில் தொடங்கியது.

வாரத்தின் ஆறு நாட்களும் நாங்கள் சேர்ந்தே தியேட்டர் தியேட்டராக ஏறி இறங்கி சினிமா பார்த்து சுற்றுவோம். வார இறுதி மட்டுமே சினிமாவுக்கு லீவு. முதல்நாள் சம்பளம் வாங்கியதும் பெரிய ஹோட்டலில் இருந்து தொடங்கும் எங்கள் கொண்டாட்டம், மாதக் கடைசியில் சாலையோர உணவகத்தில் வந்து நிற்கும். எங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும் சந்தோசமுமாய் கடந்தது. இந்த நிலையில் நான் தாய்மையுற்றேன். என் மகன் குமரன் 7வது மாதத்தில் முன்கூட்டியே பிறந்துவிட்ட (premature) குழந்தை. அவன் பிறந்த அன்று அவனின் அப்பா மொத்த மருத்துவமனைக்கும் இனிப்பு வழங்கி மகனின் பிறப்பை திருவிழாவாய் கொண்டாடினார். பிறந்தபோது அவனின் எடை 1.8 கிலோ மட்டுமே.

தொடர்ந்து இங்குபேட்டரில் மருத்துக் கண்காணிப்பில் இருந்தான். மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பியபோது, மருத்துவர் என்னிடம் சொன்னது ‘இந்த குழந்தைகிட்ட நீங்க நிறைய பேசனும். பேசிக்கிட்டே இருக்கனும்’ என்பது மட்டுமே. மருத்துவர் எதற்கு அப்படி சொன்னார் என எனக்கு அப்போது எதுவுமே தெரியாது.

நான் அதிகம் பேசாத அமைதியான கேரக்டர். ஆனால் என் மகன் குமரன் பிறந்ததில் இருந்து அவனோடு ஒரு நிமிடம் விடாமல் பேசிக்கொண்டே இருந்தேன். குழந்தைகள் அந்தந்த மாதத்தில் செய்யும் இயல்பான வளர்ச்சி குமரனிடத்தில் இல்லை. என் மாமியார் புனிதவதி இளங்கோவன், சென்னை வானொலியில் டிராமா புரொடியூஷராக பணியில் இருந்தவர். எட்டு மாதத்தில் குமரனைப் பார்க்க வந்தவர், குழந்தை இயல்பாய் இல்லை என்பதைக் கண்டுபிடித்து சொன்னபோது ரொம்பவே குழம்பிப் போனோம். அதன் பிறகே குமரனுக்காக சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தோம்.

முதலில் குமரனை கோடம்பாக்கத்தில் இருந்த பெண் மருத்துவர் ஒருவரிடத்தில் காண்பித்தபோது, இந்தக் குழந்தை ஒரு வெஜிடபிள் மாதிரி. ஒரே இடத்தில் அப்படியேதான் இருப்பான். எனவே அடுத்த குழந்தைக்கு முயற்சியுங்கள் என சட்டெனச் சொல்லிவிட்டார். நாங்களிருவரும் உடைந்து போனோம். உலகமே எங்களுக்கு இருட்டானது. தொடர்ந்து குழந்தைகள்நல மருத்துவரை அணுகியபோது, அவரும் உங்கள் குழந்தை இயல்பான குழந்தையில்லை என்று சொல்விவிட்டு, ஆனால் மற்ற குழந்தைகள் பேனாவில் எழுதுவதை உங்கள் மகன் கம்ப்யூட்டரில் எழுதுவான் என்றார். நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ளுங்கள் என்றார். தொடர்ந்து நரம்பியல் மருத்துவர் ஒருவரையும் அணுகினோம். அவர்தான் உங்கள் மகனுக்கு இருப்பது மூளை முடக்குவாதம் (cerebral palsy) எனச் சொல்லி விரிவாக விளக்கினார். அதன் பிறகே நானும் அவருமாக மூளை முடக்குவாதம் குறித்த தகவல்களை தேடி, படித்தும், மருத்துவர்களை அணுகியும் முழுமையாகத் தெரிந்துகொண்டோம்.

இதைச் செய் அதைச் செய்யாதே என நம் மூளை இடும் கட்டளைகளை செலிபிரள் பால்ஸியால் பாதிப்படைந்த குழந்தைகளால் செய்ய முடியாது. மூளை இவர்களுக்கு கட்டளை இடும். அந்த கட்டளையை செயல்படுத்த முடியாமல் முடங்கிவிடுவார்கள். இதில் ஒவ்வொரு குழந்தைக்கும் பாதிப்பு வேறுபடும். சிலரால் பேச முடியாது. சிலரால் நடக்க முடியாது. சிலருக்கு வலிப்பு ஏற்படும். என் மகன் குமரனுக்கு ஒரு நிமிடம் எழுந்து நிற்கவோ தானாக நடக்கவோ இயலாது. எங்கு செல்லவும் அவனுக்கு வீல்சேர் தேவைப்படும். மற்றபடி சிந்தனை செயல்கள் அனைத்தும் நம்மைப் போலவே நார்மலானவைதான். சாதாரணக் குழந்தைகள் இயல்பாகச் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிறப்புக் குழந்தைகளை தெரபி மூலமாகவே செய்ய வைக்க வேண்டிய நிலை. இதற்காக தொடர்ந்து அவர்கள் பிஸியோ தெரபி சிகிச்சை முறையில் இருக்க வேண்டும்.

குமரனின் வளர்ச்சிக்காக நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் என் கணவரும் பக்க பலமாக இருந்தார். தெரபி கொடுப்பதற்கு மட்டுமே எங்களுக்கு மாதம் மிகப் பெரிய தொகை செலவானது. மகனின் சிகிச்சைக்காக தனக்கு மிகவும் பிடித்த வானொலி அறிவிப்பாளர் வேலையை விட்டுவிட்டு, அதிகம் வருமானம் ஈட்டுவதற்காக சுயமாகத் தொழில் செய்ய களமிறங்கினார் குமரனின் அப்பா.

குமரனின் விரல்கள் எப்போதும் அவன் உள்ளங் கைகளுக்குள் குவிந்து மூடிய நிலையிலே இருக்கும். விரல்களை அவனாக நீட்டி மடக்குவதே இல்லை. தொடர்ந்து தெரபி மூலமாகவே அவனின் ஒவ்வொரு விரலையும் வெளியில் நீட்டினோம். தரையில் உட்காருவதற்கு முடியாத அவனை உட்கார வைக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்டது. பிஸியோ தெரபி அவன் வாழ்வில் முக்கிய அங்கமானது. ஒருநாள் கொடுக்கவில்லை என்றாலும் விரல்களும் கை கால்களும் விரைத்துக் கொள்ளும்.

இரண்டரை வயது வரை குமரனுக்கு பேச்சும் வரவில்லை. ஸ்பாஸ்டிக் சொசைட்டி, மைலாப்பூரில் இருந்த தெரபி சென்டர், கேகே நகர் அரசு மருத்துவமனை பிஸியோ தெரபி சென்டர் என மாறி மாறிப் பயணித்து அவனுக்கு சிகிச்சைகளை வழங்கினோம். காலை 8 மணிக்குத் தொடங்கும் பிஸியோதெரபி சிகிச்சை மதியம் 1 மணி வரை நீடிக்கும். இதுவே தினம் தினம் தொடர்கதையானது. ஒரு மருமகளாய் நான் என் கணவரின் குடும்பத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்றே சொல்வேன். ஏனெனில் என்னோட மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டே அவரின் குடும்பம்தான். அமைதியான சுபாவம் கொண்ட நான் இத்தனை உறுதியோடு துணிச்சலாய் எழுந்து நிற்க அவரின் குடும்பத்தினரின் அரவணைப்பும் அன்புமே முழுக் காரணம்.

குமரனை எனது மாமியார், நாத்தனார், மைத்துனர் என மாறிமாறி கவனித்துக் கொண்டார்கள். சுற்றியிருந்து அன்பாலே அவன் வாழ்வை நிரப்பினார்கள். என் மாமியார் புனிதவதி குமணன் குமரனின் வளர்ச்சிக்கு மிகமிக முக்கிய காரணம். திருக்குறளில் தொடங்கி தேவாரம், திருவாசகம் என தினமும் படிக்கச் சொல்லிக் கொடுப்பார். அவன் தமிழில் சிறப்பாக எழுதவும் படிக்கவும் முழுக்க முழுக்க அவரே காரணம். நெகடிவ் தாட் என்பதே எங்கள் குடும்பத்தில் ஒருபோதும் இல்லை. அதனால் குமரனும் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பான். ஒருநாளும் தன்னை நினைத்து அவன் வருத்தப்பட்டு யாரிடமும் பேசியதில்லை. அவனைச்சுற்றி எப்போதும் அன்பானவர்களே சூழ்ந்ததால் அவன் உலகத்தில் அவன் மகிழ்ச்சியாய் இருக்கிறான். ராமனை பரதன் கவனித்ததுபோல் குமரனை அவன் தம்பி கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களின் அடுத்த மகனுக்கு பரதன் குமணன் என பெயர் வைத்தோம்.

5ம் வகுப்பு வரை குமரன் மற்ற குழந்தைகளோடு நார்மலான பள்ளியில்தான் படித்தான். ஆனால் அதற்கு மேல் அவனால் படிப்பை தொடர முடியவில்லை. ஏனெனில் பள்ளியின் கட்டமைப்பு அவனுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. படிப்பு தடைபட்டது. கூடவே நண்பர்கள் வட்டமும். அதன் பிறகு நேஷனல் ஓப்பன் பள்ளியில் 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளை முடித்து, தொடர்ந்து அஞ்சல் வழியாக சென்னை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.ஸி கவுன்சிலிங் சைக்கலாஜி முடித்தான். எம்.எஸ்.ஸி கவுன்சிலிங் சைக்காலஜியில் பட்ட மேற்படிப்பை முடித்ததுடன், தற்போது அவன் பிஎச்டி மாணவன். அடலசென்ட் சைக்கலாஜியில் க்யூ அண்ட் ஐ க்யூவில் ஆய்வு செய்து அதற்கான பேப்பரினை தயார் செய்து வருகிறான். அதன் பிறகு, நாங்கள் அவனை டாக்டர் குமரன் என பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம் என்கிறார் புன்னகைத்து.

‘ப்ராக்டோ’(practo) செயலி மூலம் ஆன்லைன் வழியாகவும், நேரிலும் நிறைய பேருக்கு மனநல ஆலோசனைகளை குமரன் வழங்கி வருகிறான். அவன் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு நோயாளிகளின் உறவினர்களிடத்தில் இருந்து நல்ல ஃபீட் பேக் எங்களுக்கு கிடைக்கிறது. சிலர் தேடி வந்து அவனை வாழ்த்தி பரிசுகளை வழங்கிச் செல்கின்றனர். என்னையும் அழைத்து வாழ்த்துகின்றனர். ஒரு அம்மாவாக என் மகனை நினைத்து நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன் என்றவர், எனக்கு மட்டும் ஏன் இப்படி என நான் என்னை ஒரு நாளும் குறைத்து மதிப்பிட்டு யோசித்ததே இல்லை. இப்படி நடந்துவிட்டதே என ஒரு நாளும் நான் கவலைப்பட்டதும் கிடையாது.

என் மகனின் நிலை இது. இந்த நிலையில் அவனை எப்படி மகிழ்ச்சியாய் வாழவைப்பது என்பதை மட்டுமே நான் முதலில் இருந்து யோசித்து வந்தேன். இப்போதும் அதையே யோசித்து வருகிறேன் என்றவர்..குமரனுக்கு சினிமா மற்றும் கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் இருக்கிறது. திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறான். ஏற்கனவே எல்.கே.ஜி. படத்திற்காக ஒரு பாடல் எழுதி அந்தப் பாடல் வெற்றிகரமாக வெளியாகிவிட்டது. ‘நண்பன் ஒருவன்’ என்ற படத்திற்காக தற்போது மேலும் 3 பாடல்களை எழுதியிருக்கிறான். மூன்று பாடல்களும் ரொம்பவே சிறப்பாய் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தொடர்ச்சியாக வெப் சீரிஸ்களுக்கும் பாடல்கள் எழுதி வருகிறான்.

குமரன் சிறந்த மனநல ஆலோசகர் என்பதைத் தாண்டி கண்டிப்பாக ஒரு நல்ல லிரிஸ்க்டாகவும் வருவான் என்றவர், அவன் இதுவரை மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளான். தமிழில் ‘ஆனந்த தாண்டவம்’ என்ற நூல் அவனுடைய ஆட்டோ பயோகிராஃபியாக வெளியானது. ‘ராஜநடை’ என்கிற கவிதை தொகுப்பையும் எழுதி வெளியிட்டான். ஆங்கிலத்தில் CP to CP அதாவது (Cerebral Palsy to Counselling Psychology) என்கிற புத்தகத்தை எழுதி இருக்கிறான்.

வெளி உலகம் உணராமல் பாசத்திலும் செல்வாக்கிலும் வளர்க்கப்பட்ட பொண்ணு நான். குமரன் சிறப்புக் குழந்தையாய் எங்களுக்குப் பிறந்த பிறகு, அவனின் தொடர் சிகிச்சைக்காகவும், அவனின் கல்விக்காகவும் தைரியத்தோடும் துணிச்சலோடும் எனக்கான முடிவுகளை நானே துணிந்து எடுத்தேன். குமரனின் பயணத் தடைகளை கடக்க அவனுக்காகவே துணிந்து கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன். குமரன் முன்பாக என்னை நான் எப்போதுமே பாசிட்டிவாகவே வெளிப்படுத்துவேன். குமரனைப் பொறுத்தவரை அம்மா ரொம்ப ஸ்ட்ராங்.

சிகிச்சைகளுக்கு நடுவில் அவனை அலயான்ஸ் பிரான்சைஸ் (alliance francaise) அழைத்துச் சென்று பிரெஞ்ச் மொழி கற்க வைத்தேன். தி.நகரில் உள்ள ஹிந்தி பிரச்சார் சபாவில் சேர்த்து ஹிந்தியில் எம்.ஏ. பட்டதாரியாக்கினேன். குமரன் இன்று பிரெஞ்சும், ஆங்கிலமும், ஹிந்தியும் சரளமாகப் பேசுவான். அவனின் மொழி லாவகத்தை பார்த்து வெளிநாட்டவர்களே
வியந்திருக்கிறார்கள்.என் மகன் குமரனின் உலகம் எப்போதும் வீல்சேரில்தான். அவனால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. அவனை வெளியில் அழைத்துச் செல்வது எங்களுக்கு அத்தனை சுலபமில்லைதான். ஏனெனில் நம்நாட்டின் கட்டமைப்பு சிறப்புக் குழந்தைகளுக்கானதில்லை. எனவே அவன் வீட்டுக்குள் முடங்கக் கூடாது என்பதில் உறுதி காட்டினோம். அதற்காகவே வெளிநாட்டு பயணங்களை ஏற்படுத்திக் கொண்டோம். ஏனெனில் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் வீல்சேர் ப்ரெண்ட்லியானவை.

குமரனை தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், துபாய், கனடா, அமெரிக்கா என அழைத்துச் சென்று சுற்றியிருக்கிறோம். இன்னும் அவன் பார்க்காத நாடு ஸ்விட்சர்லாந்து மற்றும் பாரிஸ். அதையும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்பதே பெற்றோரான எங்களின் மிகப் பெரிய ஆசை.

எந்த மருத்துவர் என் மகன் குமரனை வெஜிடபிள் மாதிரி ஒரே இடத்தில்தான் இருப்பான் எனச் சொன்னாரோ, அந்த வார்த்தைகளை மாற்றிக் காட்டியிருக்கிறோம். என்னுடைய 30 வருட வாழ்க்கை அவனுடனே கழிந்திருக்கிறது. அம்மாவாக நான் அவனுக்காகவே வாழ்ந்திருக்கிறேன். எனது புகைப்படம் கூட என்னிடத்தில் தனியாக இல்லாமல், குமரனோடுதான் இருக்கும் என்றவர், சிறப்புக் குழந்தையை பெற்ற தாயாய் சொல்கிறேன்.. குழந்தைகளின் பிறப்பு என்பது நமது கைகளில் இல்லைதான். ஆனால் அவர்களின் வளர்ச்சி நம் கைகளில்தான் இருக்கிறது. நமது குழந்தை எந்த நிலையில் பிறந்தாலும், அவர்களை ஒதுக்காமல் அவர்களுக்கான வாழ்க்கையை அவர்களின் நிலையிலே அமைத்துக் கொடுத்தால் அவர்களும் சாதனையாளர்களே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post உச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்!!(அவ்வப்போது கிளாமர்)