சிறுகதை-கணக்குல வீக்கு! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 20 Second

எப்போதும் போல பால்காரன் அழுத்திய காலிங் பெல் சத்தம் எழுப்ப கண்விழித்தாள் சாரதா. ‘‘அக்கா! தேதி நாலாச்சு!” வழக்கமாக வாங்கும் 700 மில்லி பாலை சாரதா கொண்டு வந்த பாத்திரத்தில் ஊற்றியபடியே பால்காரன் நினைவுபடுத்தினான்‌.‘‘அதெல்லாம் நல்லா நினைவிருக்கு.. போன மாசம் ரெண்டு நாள் வெளியூர் போயிட்டோம்.. நீ ஒரு நாள் பால் ஊத்தலை.. மொத்தம் அஞ்சு தடவை ஊத்தலை.. ஆக மொத்தம் மூணரை லிட்டர் கழிச்சு முப்பத்தி எட்டரை லிட்டருக்கு நாப்பது ரூபாய் வச்சா 3850 ஆச்சு.. இந்தா.. எண்ணிப் பாத்துக்கோ எதுக்கும் நீ ஒரு தடவை உன் கணக்கு சரியா பாரு! ” என்று சொல்லி தயாராக வைத்திருந்த பணத்தை நீட்டினாள்.

‘‘நீங்க சொன்னா சரியாத்தான்கா
இருக்கும் ” என்றபடி கிளம்பினான் பால்காரன் பால்ராஜ்.
அதற்குப்பின் அன்றைய பணிகள்
சாரதாவை தனக்குள் இழுத்துக் கொண்டன. இரண்டு அடுப்புகளில் சாதமும் குழம்பும் கொதித்துக் கொண்டிருக்க, இண்டக்‌ஷன் ஸ்டவ்வில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருக்கையில்,‘‘அந்த பச்சை
சட்டையை அயன் பண்ண கொடுக்கலையா சாரதா? ” என்றபடி வந்தார் அவளது கணவர் பன்னீர்செல்வம்.

‘‘ஐயோ! மறந்துட்டேங்க.. ”
‘‘வர வர மறதி ஜாஸ்தி ஆயிருச்சு
உனக்கு” என்று கடிந்து கொண்டார் பன்னீர்செல்வம்.

‘‘அம்மா அம்மா! இந்தக் கணக்கு கொஞ்சம் சொல்லி தாயேம்மா.. ” என்றபடி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சாரதாவின் மகன் வந்து நிற்க… ‘‘உங்க அம்மா ஏற்கனவே கணக்குல ரொம்ப வீக்கு.. அதுவும் போக மறதி வேற ஜாஸ்தி ஆயிருச்சு.. அவகிட்ட போய் கேட்டுக்கிட்டிருக்க.. கொண்டா.. எனக்குத் தெரியுதான்னு பார்ப்போம்.. ” என்றபடி சமையலறையில் நின்றிருந்த வினீத்தை அழைத்துச் சென்றார் பன்னீர்செல்வம்.

அவர் வேலைக்குக் கிளம்பும் நேரத்தில் சரியாக கேஸ்காரன் வந்து நிற்க, ‘‘சாரதா, கேஸ் புக் பண்ணினப்ப உன் செல்லுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்குமே.. அதுல ஓடிபி இருக்கும்.. பாத்துச் சொல்லு ” என்று பன்னீர்செல்வம் குரல் கொடுக்க,‘‘அதுவாங்க! லேசா ஞாபகம் இருக்கு.. 7857ன்னு நினைக்கிறேன்.. சொல்லிப் பாருங்க..” என்று சமையலறையில் இருந்தபடியே பதில் கொடுத்தாள் சாரதா. அது சரியாகவே இருந்தது.

மகனும் கணவரும் கிளம்பும் பரபரப்பான நேரத்தைக் கடந்து, தானும் காலை உணவை முடித்து விட்டு துவைப்பதற்காக சாரதா துணிகளை அள்ளிய போது அவளது ஃபோன் சத்தமிட்டது.‘‘அம்மா எப்பவும் நாலு பேருக்கு தான் கரெக்டா சாதம் வைப்போம்.. இன்னைக்கு வெஜிடபிள் பிரியாணிக்கு காய் நறுக்கி வச்சிருக்கேன்.. மூணு விருந்தாள் வந்துட்டாங்க.. எவ்வளவு அரிசிம்மா போடணும்? எவ்வளவு தண்ணி ஊத்தணும்?” என்று கேட்டாள் மகள் அனு. புதிதாக திருமணமாகி ஒரு மாதம் இருக்கும் அவளுக்கு. ஒரு நாளைக்கு எப்படியும் மூன்று முறையாவது ஏதாவது சமையல் குறிப்பு கேட்பதற்கென்று அம்மாவை அழைத்துவிடுவாள்.

‘‘ஆளுக்கு முக்கால் மாணிப்படி கணக்கு.. நா முக்கால் மூணு.. (4*¾) ஏற்கனவே உங்க 4 பேருக்கும் 3 தேவைப்படும்.. இப்ப புதுசா மூணு பேர் வந்துருக்காங்கன்னு சொல்ற.. அவங்க சாப்பிடுற அளவு நமக்குத் தெரியாது.. இல்ல அதனால எதுக்கும் இன்னொரு மூணு மாணிப்படி அரிசி போட்டுரு.. வழக்கம்போல ஒரு பங்கு தண்ணி, ஒரு பங்கு தேங்காய்ப் பால் ஊத்தணும்.. ”

‘‘தேங்காய் கம்மியா தான்மா இருக்கு.. ” ‘‘அப்பா ஒண்ணரை பங்கு தண்ணியும் அரைப்பங்கு தேங்காய்ப் பாலும் ஊத்துனா போதும்..

ஒன்பது மாணிப்படி தண்ணியும் மூணு மாணிப்படி தேங்காய்ப்பாலும் சரியா வரும்..” ‘‘ஒரு விசில் வச்சுட்டு அஞ்சு நிமிஷம் சிம்ல வைக்கணும்.. அப்படித்தானேம்மா.. ” ‘‘சின்ன குக்கர்னா அந்தக் கணக்கு சரியா வரும்.. அஞ்சு லிட்டர் குக்கர் தானே வைப்ப.. அதனால ஒரு விசில் மட்டும் வச்சுட்டு ஆஃப் பண்ணிடு.. அந்த சூட்டுலேயே வெந்துரும் ” என்றாள் சாரதா.

துவைத்த துணியை உலர்த்துவதற்குள் கணவரிடம் இருந்து ஃபோன்.‘‘ஏன் சாரு! வீட்டுத் தீர்வை இந்த தடவ 5600 போட்டிருக்காங்க.. போன தடவை எவ்வளவு கட்டினோம்.. ஞாபகம் இருக்கா? ” ‘‘போன தடவை 3900 கட்டினோம்.. நினைவில்லையா? சங்கர்ட்ட 4000 கொடுத்துவிட்டோம், அவன் மிச்ச 100 ரூபாயும் ரசீதும் கொண்டுவந்து தந்தானே.. ” என்று சாரதா நினைவுபடுத்த, ‘‘அதெல்லாம் யாருக்குடி நினைவிருக்கு.. சரி சரி அந்தப் பச்சைச் சட்டையை இன்னிக்காவது துவைச்சியா இல்லையா?” என்றார் பன்னீர்செல்வம்.

‘‘இதோ! கரெக்டா இப்பதான் அந்த சட்டையைக் காயப் போடப் போறேன்.. நைட் நாமே அயர்ன் பண்ணிரலாம் ” மாலையில் பள்ளி விட்டு வந்த மகன் ஸ்மார்ட் டிவியைப் போட்டு விட்டு, ‘‘அம்மா ப்ரைம் வீடியோக்கு செக்யூரிட்டி லாக் ஏதோ வச்சோமே.. என்னன்னு ஞாபகம் இருக்கா.. ” என்று கேட்க, ‘‘குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது, பெரியவங்க மட்டும் தெரிஞ்சுக்கணும்னு தான் செக்யூரிட்டி லாக்கே.. அப்புறம் எங்கள்ட்ட கேட்டுக் கேட்டு நீயே போடுற.. அதுக்கு எதுக்கு ஒரு செக்யூரிட்டி லாக்.. பேசாம அதை எடுத்து விடுடா.. 753081 தான்னு நினைக்கிறேன்.. அடிச்சுப் பாரு” என்று சாரதா கூற, ‘‘அம்மா அது உன்னோட ஃபோன் கீபோர்ட் லாக் இல்லை? ” என்றான்.

‘‘அது லைட்டா வேற நம்பர்டா 753071 வரும்.. இதுல 81 .” சற்று நேரத்தில் ப்ரைம் வீடியோ பார்த்து அலுத்து விட்டது போலும். ‘‘அம்மா அம்மா! ஸ்போர்ட்ஸ் சேனல் பேக்கேஜ் முடிஞ்சிடுச்சும்மா.. சப்ஸ்கிரைப் பண்ணி விடும்மா..”‘‘உனக்கு இதே வேலையாப் போச்சு.. சரி நீயே கேபிள்காரனுக்கு ஃபோன் பண்ணு.. உங்க ஃபோன் குடுங்கம்மா ” எனக்கு. ‘‘அது சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு.. சார்ஜ் போட்டு இருக்கேன்.. லேண்ட் லைன்ல போன் பண்ணு.. 234455 இதான் நம்பர்.. போன் பண்ணி ஒரு மாசத்துக்கு மட்டும் ஸ்போர்ட்ஸ் சேனல் போடச் சொல்லுடா. அப்படியே போன தடவை கூடுதலா நூறு ரூபா வாங்கிட்டுப் போனான்… அதுல இது கழிச்சுக்கச் சொல்லு.. இந்த தடவை தனியா பணம் கேட்டு வரக் கூடாதுன்னு சொல்லிடு ” என்றாள்.

பழக்கமான வேலைகளுடன் அன்றைய மாலைப்பொழுது விரைந்தோட இருள் கவியும் நேரம் வந்தது. மாடி வீட்டில் இருந்து ஓடி வந்த சிறுவன், ‘‘ஆன்ட்டி, ஆன்ட்டி! ஸெப்டிக் டேங்க் க்ளீனிங் என்னிக்கு பண்ணனும்.. அப்பா கேட்டுட்டு வரச் சொன்னாங்க ” என்று சொன்னான்.‘‘கரெக்டா 42 நாள் ஆச்சு பாலா.. இன்னும் ஒரு வாரத்தில் பிளான் பண்ணா கரெக்டா இருக்கும்.. ஐம்பது நாளைக்கு ஒரு தடவை தான் பண்றோம்.. அடுத்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை வரணுமான்னு சொல்லு.. சரியா இருக்கும் ” என்று கூறி அனுப்பினாள். இரவு படுக்கைக்கு அனைவரும் தயாராக, ‘‘போங்கப்பா! அந்த கணக்குக்கு இன்னும் ஆன்சர் வரவே மாட்டேங்குது” என்றான் வினீத்.

பாத்திரம் கழுவி வைத்துவிட்டு வந்து, அக்கடா என்று சாய்ந்த சாரதா, ‘‘கொண்டா காலையிலேயே சொன்னியே.. இப்பவாவது என்னன்னு பாக்குறேன்” என்க, அதற்கு அவகாசம் கொடுக்காமல் அவளுடைய அலைபேசி கூப்பிட்டது. ‘‘பாரத பிரதமருக்குக் கூட இத்தனை போன் வருமான்னு தெரியாது.. உனக்கு விடிஞ்சதுல இருந்து அடையிற வரைக்கும் ஃபோன் வருதுடி!” என்று பன்னீர்செல்வத்தின் கிண்டலைக் காதில் வாங்காமல் அழைப்பை ஏற்று, ஃபோனை காதுக்கு கொடுத்தாள் சாரதா.

‘‘சொல்லுங்கப்பா” என்று சொன்னாள்.‘‘ஏன்மா அம்மாவுக்கு மூட்டுவலிக்கு தைலம் ஏதோ ஆர்டர் போடணும்னு சொன்னியாம்ல.. ஆர்டர் போட்டு இருக்கியா? ” என்று சாரதாவின் தந்தை கேட்க,‘‘ஆர்டர் போட்டாச்சு.. ரெண்டு நாள்ல வந்துரும்.. நாளைக்கு அம்மாவுக்கு பிறந்த நட்சத்திரம் வருது. வெள்ளிக்கிழமை.. 10.30 டூ 12 ராகுகாலம்.. அதனால பத்தரை மணிக்குள்ள அம்மாவைக் கூட்டிட்டுப் பக்கத்து கோயில்ல போயி அர்ச்சனை பண்ணிட்டு வந்துருங்கப்பா ” என்றாள் சாரதா.‘‘சரிம்மா.. மாப்பிள்ளை கிட்ட குடு.. ஒரு வார்த்தை பேசிர்றேன்” என்று அவளது அப்பா கூற, ஃபோனை பன்னீர்செல்வத்திடம் நீட்டி விட்டு பாயை, தலையணையை எடுத்துப் போட்டாள் சாரதா.

‘‘சொல்லுங்க மாமா!”

‘‘என்ன மாப்ள.. எப்படி இருக்கீங்க.. என்ன செய்றீங்க? பேரன் என்ன செய்றான்?”‘‘உங்க பேரன் எதோ கணக்கு சரியா வரலன்னு சொல்லிட்டு பார்த்துக்கிட்டு இருக்கான் மாமா ” என்று பன்னீர்செல்வம் கூறியதற்கு, ‘‘கணக்கா! நல்லா கவனமா படிக்கச் சொல்லுங்க மாப்ள.. பிறகு அம்மாவை மாதிரியே மகனும் கணக்குல வீக்கா வந்துரப் போறான்” என்றார் சாரதாவின் அப்பா. ‘‘ஹா! ஹா! ” என்ற பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல சிரித்த பன்னீர்செல்வம், ஃபோனைத் துண்டித்துவிட்டு,‘‘வினீத்!

இங்கே பாருடா! உங்கம்மா கணக்குல வீக்குங்குற விஷயம் உலகத்துக்கே தெரியுது” என்று சொன்னார்,‘‘ஆமாடா! எனக்கு என்னமோ கணக்குன்னாலே அலர்ஜி.. இனிமே நான் படிச்சு என்ன செய்யப் போறேன்.. அப்பா சொன்ன மாதிரி மறதியும் ஜாஸ்தி ஆயிடுச்சு.. ஏங்க.. உங்க பச்சை சட்டையை டேபிள் மேல வச்சிருக்கேன்.. காலையில ஞாபகமா எடுத்துக்கோங்க.. அப்புறம் காலையில வினீத்துக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்.. போன தடவை கட்டுன ஃபீஸ்ல 25% கழிச்சுக்கறேன்னு சொல்லி இருக்காங்க.. அப்படிப் பார்த்தா 7 ஆயிரத்து 600 கழிக்கணும். 13000 கொடுத்தா போதும். இப்பவே எடுத்து வச்சுக்குங்க.. சரியா? தூக்கம் வருது. நான் தூங்குறேன் ” என்று கண்மூடினாள் சாரதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சட்டங்கள் அறிவாய் பெண்ணே!(மகளிர் பக்கம்)
Next post இது அமர்க்களமான டயட்!(மருத்துவம்)