உங்க ஸ்கின் என்ன டைப்? 5 வகை சருமத்துக்கான டிப்ஸ்!(மருத்துவம்)

Read Time:10 Minute, 12 Second

நமது சருமம் ஒரே மாதிரியானது அல்ல. ஒவ்வொருவருடைய சருமமும் ஒவ்வொரு விதமானவை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஐந்து வகையான  சருமம் இருக்க வாய்ப்பு உள்ளது. சாதாரண சருமம், வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம், சென்சிடிவ் சருமம், வறட்சி மற்றும் எண்ணெய் பசை கலந்த சருமம் என்று சருமத்தை ஐந்து வகையாகப் பிரிக்கிறோம். ஒருவருக்கு எந்த மாதிரியான சருமம் என்று தெரிந்தால் மட்டுமே சருமத்தை முறையாக ஆரோக்கியமாகப் பராமரிக்க முடியும்.
சாதாரண சருமம் (Normal skin)

இந்த வகையினருக்கு சீபம் சுரக்கும் அளவு சராசரியாக இருக்கும். சீபம் வெளிவரும் சருமத்தில் உள்ள நுண்ணிய துளைகள் இயல்பான அளவில் இருக்கும். சருமத்தின் சுருங்கி விரியும் தன்மையும் இயல்பாக இருக்கும். இவர்கள் வெளியே செல்லும்போது சருமத்தில் எந்தவித எரிச்சலோ, அரிப்போ இருக்காது. இவர்களுக்கு காலநிலை, ஹார்மோன்கள் மாற்றம், படபடப்பு, மன அழுத்தம், சருமத்தில் சூரிய ஒளியின் தாக்கம் ஆகியவற்றைப் பொறுத்து சீபம் சுரக்கும் அளவு அதிகரிக்கும் அல்லது குறையும்.வெப்பமான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சரும வறட்சி, எரிச்சல், அரிப்பு ஆகியவற்றைத் தடுக்க, சீபம் அதிகமாகச் சுரக்கும். குளிரான பகுதிகளில் வாழ்பவர்களுக்கு குறைவாக சுரக்கும்.

வறண்ட சருமம்  (Dry skin)

சீபம் குறைவாகச் சுரக்கும். இதனால், சருமம் இறுகிவிடும். பசைத்தன்மை இல்லாமல் போவதால், சருமத்தின் சுருங்கி விரியும் தன்மை குறைந்திருக்கும். இவர்களுக்கு, சருமத்தில் உள்ள நுண்துளைகள், இயல்பு நிலையைக் காட்டிலும் சிறியதாக இருக்கும். முகத்தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கப்பட்டால், அவை  அதிகம் விரிந்து சுருங்கும். இதனால், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு வலியும் எரிச்சலும் ஏற்படும்.

பனிக்காலத்தில் இவர்களுக்கு மூக்கு, உதடுகளின் ஓரம், கன்னம் ஆகிய பகுதிகளில் அதிகமாகச் சரும வெடிப்புகள் காணப்படும். பிறப்புறுப்பின் இடுக்குப் பகுதிகள், அக்குள், கால் முட்டியின் பின்புறம் ஆகிய பகுதிகளில் உள்ள தோல், தினசரி வேலைகளின்போது அதிகம் சுருங்கி விரிவதால், வரி வரியாகச் சருமப் பிளவு ஏற்படும்.

சரும வறட்சியைப் போக்க, லோஷன்களைக் காட்டிலும் கிரீம்கள் சிறந்தவை. மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இவற்றை உபயோகிப்பது தவறு. இவர்கள் அதிக நேரம் வெந்நீரில் குளிக்கக் கூடாது. அதனால் தோல் வறட்சி அதிகரிக்கும்.தரமில்லாத சோப்களைப் பயன்படுத்தினால் சரும வறட்சி அதிகரிக்கும். காய்கறி, பழங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதுடன்,  போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

எண்ணெய்ப் பிசுக்கான சருமம் (Oily skin)

சீபம் அதிகமாகச் சுரக்கும். சீபம் வெளிவரும் சருமத்தின் நுண்ணிய துளைகள் இவர்களுக்குச் சராசரியைவிடப் பெரியதாக இருக்கும். முகம் எப்போதுமே அதிக எண்ணெய்ப் பசையுடன் இருக்கும். வெளியிடங்களுக்கு இவர்கள் செல்லும்போது, காற்றில் உள்ள தூசு இந்தத் துளைகளை அடைத்துக்கொள்ளும். இதனால், இவர்களுக்குக் கன்னம், மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில் கரும்புள்ளிகள், சிறு சிறு கட்டிகள் உருவாகும். இவை எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். இந்தக் கட்டிகளில் சீழ் பிடிக்கும்.

எண்ணெய்ப் பிசுக்கான சருமம் உடையவர்கள், எண்ணெய் வடியாமல் இருக்க, அடிக்கடி முகம் கழுவுவது தவறான பழக்கம். இதனால் முகத்தில் இருக்கவேண்டிய குறைந்தபட்ச எண்ணெய் அகற்றப்படுகிறது. குறிப்பிட்ட இடைவேளைகளில், ஒருநாளில் 2 அல்லது 3 முறை முகத்தைக் கழுவலாம்.சருமத் துளைகளை அடைத்து, சீபத்தை வெளியேற விடாமல் தடுக்கும் முகப்பொலிவு கிரீம்கள் மற்றும் டால்கம் பவுடர்களைப் பயன்படுத்தக் கூடாது.தோல் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் அதீத எண்ணெய் மற்றும் வியர்வையை உறிஞ்சும் பவுடர்களைப் பயன்படுத்துவது நல்லது.

செபேசியஸ் சுரப்பிகள் செய்யும் மேஜிக்!

நமது உடல் முழுவதும் உணர்ச்சிமிக்க மெலிதான ரோமங்கள் இருக்கின்றன. ஹேர் ஃபாலிக்கிள்தான் (hair follicle) இவற்றின் வேர்ப்பகுதி. இதனை ஒட்டி இருபுறமும் செபேசியஸ் சுரப்பிகள் (sebaceous glands) அமைந்து இருக்கும். இந்தச் சுரப்பிகள் ‘சீபம்’ (sebum) எனும் எண்ணெய் போன்ற திரவத்தைச் சுரக்கும். இந்தச் சீபம், சரும வறட்சியைத் தடுப்பது மட்டுமல்லாமல், சருமத்தின் சிறந்த லூபிரிகென்ட்டாகவும் செயல்படுகிறது. சீபம், சருமத்தின் விரிந்து சுருங்கும் தன்மையை அதிகரிக்கிறது. சரும செல்கள் வறண்டு உடையாமல் பாதுகாக்கிறது. உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகளில் சீபம் இருக்காது. உடல் முழுக்கச் சீபம் சுரந்தாலும், தலைமுடியின் வேர்ப்பகுதி (scalp), முகம் ஆகிய இரு இடங்களிலும் அதிகமாக சுரக்கும்.  முகத்தில், குறிப்பாக நெற்றி, கன்னங்கள், மூக்கு ஆகிய பகுதிகளில் சீபம் அதிகம் சுரக்கும். இந்த சீபம் சுரப்பை அடிப்படையாகக்கொண்டே சருமத்தின் தன்மையை முடிவு செய்ய முடியும்.

சென்சிடிவ் சருமம் (Sensitive skin)

சென்சிடிவ் அல்லது உணர்ச்சிமிக்க சருமம், சிறிய ஒவ்வாமையைக் கூடத் தாங்கிக் கொள்ளாது. வறண்ட சருமம், எண்ணெய்ப் பிசுக்கான சருமம் போன்று ஒருசாராருக்கு மட்டும் வருவது அல்ல இது. திடீரென மாறும் காலநிலை, வாகனம், தொழிற்சாலை புகை, தூசு ஆகியவற்றால்  யாருடைய சருமமும் உணர்ச்சிமிக்க சருமமாக மாறலாம். இதனால், சருமத்தில் ஆங்காங்கே வெள்ளை மற்றும் சிவப்புப் புள்ளிகள் ஏற்பட்டு ஒவ்வாமை, அரிப்பு ஏற்படலாம். இவர்கள், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சன் ஸ்க்ரீன் லோஷன்களைப் பயன்படுத்தலாம். இவர்கள் மட்டுமின்றி, இரண்டு வயது குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் கோடை காலத்தில் கட்டாயம் சன் ஸ்க்ரீன் லோஷன்களைப் பயன்படுத்த வேண்டும்.எந்தவித லோஷன் பயன்படுத்தினாலும், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை நன்றாகக்  கழுவி, மீண்டும் தடவ வேண்டும். அலுவலகம், வீடு என எங்கிருந்தாலும் இந்தப் பழக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வறட்சி மற்றும் எண்ணெய்ப் பிசுக்கு ஆகிய இரண்டும் கலந்த சருமம் (combination skin)

இவர்களுக்கு மூக்கு, நெற்றி, கன்னம் ஆகிய பகுதிகள் எண்ணெய்ப் பிசுக்கோடும் மற்ற பகுதிகள் வறட்சியாகவும் காணப்படும். மருத்துவர்கள் வறண்ட பகுதிக்குத் தனியாகவும், எண்ணெய்ப் பிசுக்கோடு இருக்கும் பகுதிக்குத் தனியாகவும் லோஷன்களைப் பரிந்துரைப்பார்கள்.சில சமயம், இரண்டுக்கும் பொதுவான லோஷன்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்துவார்கள். இந்த வகையான சருமம் உள்ளவர்களுக்கு, ஒரு சில இடங்களில் சருமத்துளைகள் பெரியதாகவும் சிறியதாகவும் திறந்திருக்கும்.

பாத்திரங்கள் கழுவும்போதும், துணி துவைக்கும்போதும், இந்தியாவில் பெரும்பாலான இல்லத்தரசிகள் வெறும் கைகளைப்  பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்படலாம். இவர்கள், கிச்சன் கிளவுஸ் அணிந்துகொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், பொதுவாகவே குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் தனித்தனி சோப், சீப்பு, டவல் பயன்படுத்துவது நல்லது.         

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அவசியம்! (மருத்துவம்)
Next post கண்ணாடிப் பூங்கா ! (மகளிர் பக்கம்)