கண்ணாடிப் பூங்கா ! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 48 Second

‘பூங்கா’ என்றதும்… கண்களை குளிரச் செய்யும் வண்ண வண்ண பூக்கள் தான் நம் நினைவிற்கு வரும். அது மட்டுமில்லாமல், வார விடுமுறை நாட்களோ, பள்ளி விடுமுறை நாட்களோ, குடும்பத்துடன் பொழுது போக்க நாம் விரும்பும் இடங்களில் ஒன்று பூங்கா. இப்படி மனதை ரிலாக்சாக வைக்கும் பூங்காவிலும் நமக்கு தெரியாத பிரமாண்டங்கள் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட சிறப்பம்சம் உண்டு. உதாரணத்திற்கு அமெரிக்காவிற்கு நயாகரா நீர்வீழ்ச்சி, பிரான்சிற்கு பைசா கோபுரம், துபாய் புர்ஜ் கலீஃபா.. இப்படி ஒவ்வொரு நாடு, மாகாணம் மற்றும் நகரத்திற்கு என குறிப்பிட்ட இடங்களை சுட்டிக்காண்பிக்கலாம்.

நாம் அந்த ஊருக்கு சென்று வந்ததாக கூறினால் போதும், உடனே பலர் கேட்பது அந்த இடத்திற்கு போனியா என்பது தான். இவை அனைத்தும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் இடங்கள். ஆனால் அதையும் தாண்டி சில குறிப்பிட்ட பிரமாண்டங்கள் அந்தந்த ஊர்களில் உள்ளது. அதைப் பற்றி அங்கு காலம் காலமாக வசித்து வருபவர்களுக்கே மட்டுமே தெரியும். அப்படி இருந்தும் கூட பலர் அந்த இடங்களை பார்க்க தவறி இருப்பார்கள். அப்படிப்பட்ட இடம் தான் அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள ‘சிகுலி கார்டன் அண்ட் கிளாஸ்’ கண்ணாடிப் பூங்கா அருங்காட்சியகம். கண்ணாடியில் இப்படி ஒரு கலைநயம் காட்ட முடியுமா என்று நம் அனைவரையும் வியப்பிற்கு ஆழ்த்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் முழுதும் ‘ஸ்பேஸ் நீடில்’ (Space Needle) அமைப்பு கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அப்படி என்ன பிரமாண்டம் இதில் உள்ளது என்று நினைக்க தோன்றும்.

இந்த பூங்கா முழுதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கலைநயம் என்று சொல்லிட முடியாது. அதற்கும் மேல் ‘கனவு காணும் நயம்’ என்று தான் ெசால்ல வேண்டும். எத்தனை வண்ணங்கள், என்ன ஒரு தோற்றப் பொலிவு, தத்ரூபமாக செதுக்கப்பட்ட ஓவியர் திறமை இவையெல்லாம் நினைத்துப் பார்க்கவே அசாத்தியமாகத் தோன்றும். இத்தகைய கண்ணாடி ஓவியங்களை ‘டேல் சிகுலி’ (Dale Chihuly) என்பவர் உள் அலங்காரத்தில் அறிமுகம் செய்தார்.

அதற்கென பிரத்யேகமாக பல பட்டங்களைப் பெற்றதுடன், பத்தாண்டுகளுக்கு மேலாக பயிற்சி மேற் கொண்டார். அதன் பிறகு ‘வெனிஸ்’ ல் உள்ள ‘வெனினி’ கண்ணாடி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்குதான் கண்ணாடி ஓவியங்களின் நுணுக்கங்களையும், அதன் நுட்பமான அமைப்பையும் ஆராய்ந்து அறிந்தார். கண்ணாடி ஓவியங்கள் குறித்து தனக்கு தெரிந்த அனைத்தும் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் எனபதற்காகவே கண்ணாடிப் பயிற்சி பள்ளி ஒன்றை ‘வாஷிங்ட’னில் தொடங்கினார்.

அதன் பின் கண்ணாடி சிற்பங்களை கொண்டு பூங்கா அமைப்பதில் தன்னை ஈடுபடுத்த ஆரம்பித்தவர் இந்த விந்தையான வடிவங்களை வடிவமைப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பலதரப்பட்ட கண்ணாடி அருங்காட்சியங்களை அமைத்தார். உலகம் முழுவதும் கண்ணாடிச் சிற்பங்களை அறிமுகப்படுத்தி பல விருதுகளைக் குவித்த அவருக்கு 12 கௌரவ டாக்டர் பட்டங்களும், சிகுலி என்ற அவரின் பெயருக்கு மேலும் மெருகூட்டின. தேசிய அளவில் கண்ணாடி சிற்பங்களை அமைப்பதற்காக அவரின் கலைக்கு நன்கொடை கிடைத்தது.

சிலிண்டர், கூடைகள், கடல் அலைகள், தொங்கும் சர விளக்குகள் என இவரின் கண்ணாடி சிற்பங்கள் ஆரம்பித்து 2000ல் பாரிஸில் ‘கண்ணாடிக் கலை’ ஓவியங்களுக்காக மாபெரும் கண்காட்சியாக நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து பின்லாந்து, அயர்லாந்து, மெக்ஸிகோ போன்ற இடங்களிலும் இவர் அமைத்த கண்ணாடி கண்காட்சிகள் நிறுவப்பட்டது. ‘ஜெருசலேத்தின்’ ஒளியில் ‘சிகுலி’ என்ற கண்காட்சி பத்து லட்சம் பார்வையாளர்களை அதிசயிக்க வைத்தது. லண்டனின் ‘விக்டோரியா’ மற்றும் ‘ஆல்பெர்ட்’ அருங்காட்சியகம் அவரின் கண்ணாடி ஓவியங்களை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டன.

‘சிகுலி’ யின் வாழ்நாள் சாதனையான ஓவியங்கள் அனைத்தும் ‘பொடானிக்கல் கார்டன்’ உருவில் உருவாயின. உலகம் முழுவதிலும் காணப்படும் ‘பொடானிக்கல் கார்டன்’களில் சிகுலியின் கண்ணாடி ஓவியங்களைக் கண்டிப்பாக காணமுடியும். கண்ணாடியா, வேறு ஏதாவது உலோகம் கண்ணாடி போல் காணப்படுகிறதா என்று கூட நமக்குள் வியப்பு ஏற்படலாம். புதுப் பொலிவுடன் பளபளக்கும் தத்ரூபமான ஒரு மனிதன் தான் உருவாக்கியுள்ளானா? அல்லது கடவுள்தான் இப்படி ஒரு உருவில் உலகிற்கு ‘சிருஷ்டி’ அளிக்கிறாரா என்று அந்த கண்ணாடி தோட்டத்தினை பார்க்கும் போது நம்மை வியப்பில் ஆழ்த்தி திக்குமுக்காட வைக்கும்.

அடர்ந்த காட்டுப் பகுதி போன்ற இடங்களில் நாகப் பாம்புகள் அங்கங்கே படம் எடுத்து ஆடி, வளைந்து செல்வது போன்ற கண்ணாடி உருவங்களைக் கண்டால், நிஜமான பாம்பு உருவங்கள் கூட தங்கள் ஜாதிதான் என்று நினைக்கும் அளவிற்கு வியப்பை ஏற்படுத்துமென்றால், அது மிகையாகாது.

அழகிய படகு போன்ற உருவங்களில், மக்கள் அமர்ந்து செல்வது போன்ற ஓவியங்கள் கண்ணைக் கவர்வன. அதில் காணப்படும் ஒவ்வொரு பொருளும் தீர்க்கமான பார்வையைக் கொண்டு அமைந்துள்ளது. நூறுக்கும் மேற்பட்ட டிசைன்கள். ஒவ்வொரு ஓவியத்தின் வண்ணக் கலையும் நம் கண்களை அகலச் செய்யும். அதை பாதுகாப்பது என்பதே அற்புதமான செயல். மேலும் ஓவியத்தை மேலும் மெருகூட்ட அதற்கான அலங்காரப் பொருட்களை கண்கவர் வண்ணங்கள் கொண்டு அமைத்துள்ளனர்.

உதாரணமாக, ஒரு கண்ணாடி உருவம் என்றால் அதன் முன் அழகிய மலர்க் கொத்தினைக் கொண்டு அலங்கரித்துள்ளார்கள். மலர்க் கொத்தின் ஒவ்வொரு இதழும், அதில் காணப்படும் மகரந்தத்தின் தோற்றமும் கூட அப்படி ஒரு அற்புதம். கண்ணாடியில் வண்ணத்தையும் புகுத்துவது என்பது மற்றொரு கலை! கலையை பார்வையால் மட்டுமே பார்க்காமல், அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, வண்ணங்கள் அமைக்கப்பட்ட விதம் குறித்து, அனைத்து விவரங்களும் இதில் தந்துள்ளார்கள்.

வண்ண வண்ண கார்ப்பெட்டுகளை அடுக்கித் தொங்க விட்டுள்ளது போன்ற காட்சி, இந்த பூங்காவில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை கண்களுக்கு மட்டுமல்ல மனதிற்கும் விருந்து அளிக்கின்றன. ஆயிரக் கணக்கு அடி உயரத்தில் நிற்கும் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தால் அதிசயம். அதையே மேலிருந்து கீழே பார்த்தால், பயத்தில் பாதாளத்திற்கே அழைத்துச் செல்லும். அத்தகைய ‘ஸ்பேஸ் நீடில்’ கோபுரம் உள்ளது.

‘ஸ்பேஸ் நீடிலுடன்’ சேர்ந்து இணைக்கப்பட்டுள்ள கண்ணாடி அருங்காட்சியகம், இங்கு வருபவர்கள் மனதைவிட்டு நீங்காத இடம். இருட்டான இடத்தில், வண்ண விளக்குகளாக ஜொலிக்கும் கண்ணாடி ஓவியங்கள் சொர்க்கலோகமாக காட்சி தருகிறது. அப்படி ஒரு அழகை பார்க்கவே முடியாது. ஒவ்வொரு இடமும் ‘இது வேறு ஒரு உலகமோ’ என்றுதான் நினைக்கத் தோன்றும். மாடமாளிகை முதல் கோபுரங்கள் வரை ஜொலிக்கும் கண்ணாடிச் சிற்பங்கள் நம் கண்களுக்குள் வண்ணங்களை புகுத்தினார்களோ என்று நம்மை வியக்க வைக்கின்றன.

பூங்காவின் ஒவ்வொரு பகுதியிலும் அழகான வடிவங்கள் கொண்ட உருவங்களுடன், அதற்கேற்ப கண்ணாடியால் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட உருவங்கள் அனைவரையும் பிரமிக்கச் செய்கிறது. அருங்காட்சியகத்தின் முகப்பு முதல் கடைசி வரை தோரணங்கள் போன்றும், செடி கொடிகள் போன்றும் வண்ண ஜாலங்கள் கண்ணாடிகளில் பிரதிபலிக்கின்றன. ‘ஸ்பேஸ் நீடில்’ மற்றும் சிகுலி அருங்காட்சியகம் நல்ல ஒரு பொழுது போக்கு இடம்.

1962ல் உலகத் திருவிழா நடைபெற்ற போதே ‘ஜகானின் ஸ்பேஸ் நீடில்’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ‘ரைட் குடும்பத்தினர்’ ஆர்வத்துடன் ‘சிகுலி’யை வரவேற்று, கண்காட்சியகத்தில் அருமையான கண்ணாடி ஓவியங்களை கலையம்சத்துடன் செய்வித்து அழகிற்கு மகுடம் வைத்தனர். கண்களுக்கு மட்டும் விருந்தளிக்காமல், கலையை கற்க விரும்புபவர்களுக்கும், நுணுக்கங்களை கற்க ஆசைப்படுபவர்களுக்கும் இது ஒரு அறிவுப் பசியை தூண்டும் பள்ளிக் கூடம் என்றுதான் சொல்ல வேண்டும். எட்ட முடியாத இடத்தையும், நினைக்க முடியாததை நிஜத்தில் பார்க்கக் கூடியதுமான இரட்டையிடங்களை ஒன்றாகக் கண்டுகளிக்கும் வாய்ப்பு இங்குள்ளது.

கண்ணாடி வீடு என்று சொல்லுமளவுக்கு நடுப்பகுதி தோட்டம் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம். 40 அடி உயரத்தில் கண்ணாடி மற்றும் தகடு அமைப்புக் கொண்ட 4500 சதுர அடி கொண்ட விளக்குகள் நிறைந்த பகுதி ‘சிகுலி’யின் வாழ்நாள் உழைப்பின் பாராட்டு என்று கூட சொல்லலாம். அதை ஒட்டிய சிற்ப ஓவியங்கள்… சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் தேன் நிறங்களில் பள பளக்கும் காட்சி நம் கண்களை மேலும் ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஓவியங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இயற்கையான பகல் வெளிச்சத்தில் பளபளப்பதும், இரவில் ஜொலி ஜொலிப்பதும் ஆகும். தோட்டத்தின் ஒரு தூண்கள் விளக்குகள் போன்று உயரமான நீல, வயலட் நிறங்களில் நிற்பது, இருட்டில் நடப்போர்க்கு வெளிச்சம் காட்டுவதாக உள்ளது.

உலகின் அனைத்து ‘பொடானிகல் கார்டன்’களிலும், ‘சிகுலி’ தன் கண்ணாடி ஓவியங்களை, கற்பனைத்திறத்துடன் வண்ணக் கலவையை, சிற்பங்களாக காட்டியுள்ளார். தோட்டத்திலுள்ள செடிகளின் அமைப்பும், அவரின் ஓவிய அமைப்புடன் ஒத்துப் போகும் விதத்தில் அமைந்துள்ளது. இயற்கைப் பூக்களும் கண்ணாடியில் செதுக்கப்பட்ட பூ ஓவியங்களும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு அழகான சூழலை ஏற்படுத்தித் தருகிறது. மொத்தத்தில் கண்டு களிப்பவர்க்கு மற்ற இடங்கள் போல் அல்லாமல் ஒரு புதிய அனுபவத்தையும் மனதை விட்டு நீங்கா இடமாகவும் திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

பூங்காவில் உள்ள திரையரங்கத்தில், ‘சிகுலி’யின் வேலைத் திறமை, அவரைப் பற்றிய ஆவணப் படங்கள், பேட்டிகள், கண்ணாடியை அவர் வடிவமைப்பது குறித்த அனைத்தும் வீடியோக்களாக வெளியிடப்படுகின்றன. “நான் ஒரு சிற்பியாகவோ, ஒரு ஓவியராகவோ ஆகாமல் இருந்திருந்தால், ஒரு திரைத்துறை இயக்குனராகவோ, ஒரு கட்டட வடிவமைப்பாளராகவோ ஆகி இருப்பேன்” என்று ‘சிகுலி’ தன் எண்ணத்தை பிரதிபலித்துள்ளார்.

விளக்குகள் தான் எத்தனையெத்தனை விதங்கள்! ஒரு கண்ணாடிப் பந்தலில் கொலு போன்று வீற்றிருக்கும் பொருட்களின் சுருள் இயற்கையோடு கலந்த கண்ணாடிச் செடிகளும் நீரில் மிதக்கும் பந்து போன்ற உருவங்களும் நமக்குக் கண்ணாடிதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டி வரும். தீப்பிழம்பு போன்ற ஜ்வாலையில் என்ன ஒரு அழகான சிற்பம். பாம்புகள் நிற்பது போன்ற ஒரு தத்ரூபமான ஓவியத்தின் பிரம்மாண்டம் தான். அலை அலையாகத் தொங்கும் பிரம்மாண்ட வண்ண சரவிளக்குகள். ஓங்கி வளர்ந்த பனைமரம் போன்று தோட்டத்தின் நடுவே காட்சி தரும் உயர்ந்த கண்ணாடி மரம்… இவ்வாறு அவரின் சிற்பங்கள் விவரித்து குறிப்பிட்டாலும்… அதனைக் கண்டுகளித்து ரசிப்பது என்பது தனி சுகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உங்க ஸ்கின் என்ன டைப்? 5 வகை சருமத்துக்கான டிப்ஸ்!(மருத்துவம்)
Next post ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி… ஒழுங்காக்கும் ‘நச்’ டிப்ஸ்!(மகளிர் பக்கம்)