கோடையை இதமாக்கும் மோர்!!(மகளிர் பக்கம்)
நம் முன்னோர்கள் வீட்டிற்கு யாராவது வந்தால் மோர்தான் குடிக்க கொடுப்பார்கள். மேலும் பால் பொருட்களிலேயே மோர் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
*குடித்த உடனேயே புது தெம்பையும், தாகத்தையும் தீர்க்கும் சக்தியையும் கொண்டது மோர்.
*மோரில் லெசிதீன் எனும் ஒருவகை சத்து இருக்கிறது. இச்சத்து கல்லீரல், சிறுகுடல் முதலியவைகளை பலப்படுத்தும்.
*வெயிலில் அலையும் சிலருக்கு வியர்வை மற்றும் சிறுநீர் போன்றவை சரியாக பிரியாது. அப்படிப்பட்டவர்கள் தினமும் மோர் குடிக்க வேண்டும்.
*பசு மோர் உடலுக்கு நல்லது. தாகத்தை தீர்ப்பதோடு சூட்டை தணிக்கும். மூளை சூடு குறையும்.
*பசு மோருடன் தோல் நீக்கிய இஞ்சியை துண்டு துண்டாக வெட்டிப்போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது நல்லது.
*மோர் சாதமானது உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உடம்பில் தோன்றும் எரிச்சலை நீக்கும்.
*பானை நீரில் தயிரை கடைந்து சிறு துண்டு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், ஒருபிடி கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
*புளிக்காத தயிரில் சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்றாக ஆற்றி ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட குளுமையாக இருக்கும்.
*மோரில் கிர்ணிப் பழத்தையும், இஞ்சி விழுது, மிளகாயையும் சேர்த்து உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.
*தயிரை கெட்டியாக தயார் செய்து வெள்ளரித்துண்டுகளை நறுக்கிப் போட்டு சாப்பிட ஜில்லென இருக்கும்.
*கோடைக்கு மோர் மற்றும் தயிர் இரண்டுமே உடலை குளிர்ச்சி செய்யும். வயிற்றுப்புண், வாய்ப்புண் வராது தடுக்கும்.
*நீர் மோர் துவர்க்காமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்த்தால் போதும்.
*தயிர் ஒரு கப் எடுத்து அதில் பச்சை திராட்சை துண்டுகளைப் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிட கோடையே தெரியாது.