கண்ணைக் கட்டிக்கொள்ளாதே! உங்கள் பார்வை சரியாக உள்ளதா?(மருத்துவம்)

Read Time:13 Minute, 32 Second

சராசரியாக தினமும் ஒரு நபராவது கண் தகுதிச் சான்றிதழுக்காக (Vision certificate) என்னிடம் வருவதுண்டு. நேற்று ரயில்வே பணிக்கான தேர்வில் வெற்றிபெற்றுவிட்டு, உடல்தகுதி பரிசோதனைக்காகக் காத்திருக்கும் ஓர் இளைஞரைச் சந்தித்தேன். அந்தப் பணிக்கென கொடுக்கப்பட்டிருக்கும் வரையறைகளின்படி தன் கண்பார்வை சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்வதற்காக வந்தார். பரிசோதனை செய்துவிட்டு ஃபிட் என்று சான்றிதழ் வழங்கினேன். அதில் குறிப்பிட்டிருக்கும் மருத்துவக் கலைச் சொற்களுக்கான விளக்கத்தைக் கேட்டார் அந்த இளைஞர்.

தூரப் பார்வை (Distant vision) 6/6 என்றால் என்ன? கிட்டப்பார்வை (Near vision) N6 என்றால் என்ன? கலர் விஷன், ஃபீல்ட் ஆஃப் விஷன் என்றால் என்ன? என்று அவருக்குப் பல கேள்விகள். ஸ்னெல்லன்ஸ் சார்ட் (Snellen’s chart) என்று அழைக்கப்படும் அட்டவணையில் பெரிய சைஸ் எண் முதல் சிறிய சைஸ் எண் வரை எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலான சார்ட்களில் முதலில் இருக்கும் 2 அல்லது A என்ற பெரிய எண்ணை தெளிவான பார்வையுடைய ஒரு நபரால் 60 மீட்டர் தூரத்தில் இருந்தும் பார்க்க முடியும்.

அதற்கடுத்த வரிசையில் இருக்கும் இரண்டு எண்களையும் 36 மீட்டர் தூரத்தில் இருந்து பார்க்க முடியும். அடுத்தடுத்த வரிசைகளை முறையே 24, 18, 9, 6 மீட்டர் தூரங்களில் இருந்து பார்க்க முடியும். பரிசோதனை செய்ய வேண்டிய நபரை அந்த அட்டவணையில் இருந்து சரியாக ஆறு மீட்டர் தூரத்தில் அமர வைத்திருப்போம். அந்த நபரால் கடைசி வரிசையைக் கண்ணாடியின் உதவியின்றி தெளிவாகப் படிக்க முடிகிறது என்றால் அதனை 6/6 (without glass) என்று சொல்வோம். கண்ணாடியுடன் தெளிவாகப் படிக்கிறார் என்றால் 6/6 (with glass) என்று சொல்வோம்.

கடைசிக்கு முந்தைய வரி வரை மட்டுமே அவரால் படிக்க முடிகிறது; கடைசி வரை தெரியவில்லை என்பதை 6/9 என்று குறிப்பிடுவோம். அதிக அளவில் பார்வைக் குறைபாடு உடைய சில நபர்களுக்கு சார்ட்டில் மேலே இருக்கும் பெரிய எண் மட்டுமே தெரியும். 60 மீட்டர் தூரத்தில் இருந்து தெரிய வேண்டிய ஒரு எண்ணை ஆறு மீட்டர் தூரத்தில் இருந்துதான் அவர் பார்க்கிறார் என்பதைக் குறிக்க அவரது‌‌ பார்வை அளவை 6/60 என்று எழுதுவது வழக்கம். கணினி மற்றும் எழுத்து அவசியமாக இருக்கும் பணிகளில் சேர, கண்ணாடியுடன் 6/6, 6/9 அளவை நன்றாகப் படிக்க முடிந்தால் போதுமானது.

விமான ஓட்டிகள், காவல்துறையினர், ராணுவத்தினர் இவர்களுக்கு கண்ணாடியின் உதவியின்றி மிகத்துல்லியமாகப் படிப்பது அவசியம். அதனால் மிகக்குறைவான குறைபாடு இருந்தால்கூட ஒரு நபரை இந்த வேலைகளுக்குத் தகுதியானவராக எடுத்துக்கொள்ள முடியாது. இது தூரப்பார்வைக்கான அளவுகோல் என்றால் கிட்டப்பார்வை அதாவது வாசிப்புக்கு கிட்டப்பார்வை சார்ட்டைப் பயன்படுத்துவோம். அதிலிருக்கும் மிகச்சிறிய எழுத்தினை, ஓர் அடி (30 செ.மீ) தூரத்தில் காகிதத்தைப் பிடித்தபடி வாசிக்க முடிந்தால் N6 என்போம். மிகச் சிறிய எழுத்துத் தெரியவில்லை; அதை விட சற்றே பருமனான எழுத்து தெரிகிறது என்றால் N8 என்போம். 40 வயதை தாண்டியவர்களால் நிச்சயம் கண்ணாடியின் உதவியுடனே N6 வரியை வாசிக்க முடியும்.

அடுத்து வருவது வண்ணங்களைப் பிரித்தறியும் பரிசோதனை. இஷிஹாரா சார்ட் (Ishihara chart) என்ற புத்தகத்தில் இருக்கும் ஏடுகளைப் (colour plates) புரட்டி, ஒரு வட்டத்திற்குள் புள்ளிகளுக்கு ஊடாகத் தெரியும் எண்களைக் கண்டுபிடிக்கச் சொல்வோம். கண்ணின் விழித்திரையில் மூன்று விதமான கோன்களும் சரியாக இருப்பவரால் இதை சரியாகப் படித்துவிட முடியும். அதனை ‘நார்மல் கலர் விஷன்’ என்று குறிப்பிடுவோம். முழுவதுமாக எந்த வண்ணத்தையும் சரியாக படிக்க முடியாதவருக்கு குறைபாடுடைய பார்வைத் திறன் ( ) என்று குறிப்பிடுவோம். சில ஏடுகளைப் படிக்கிறார்; சிலவற்றைப் படிக்க முடியவில்லை என்றால் பாதிக் குறைபாடு (Partially defective) என்று குறிப்பிடுவோம்.

அடுத்து வருவது ஃபீல்டு ஆஃப் விஷன் (Field of vision) என்ற சோதனை. நேர்பார்வை மட்டுமில்லாமல், பக்கவாட்டுப்பார்வை சரியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதற்காக இது செய்யப்படுகிறது. மருத்துவரின் நாற்காலியில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் போடப்பட்டிருக்கும் ஒரு நாற்காலியில் நோயாளி அமர்ந்துகொள்வார். மருத்துவர் பக்கவாட்டில் விரல்களைக் காட்ட, அதை அந்த நபர் சரியாகச் சொல்ல வேண்டும். ஸ்னெல்லன்ஸ் சார்ட்டை வாசிக்க முடிகிறது, ஆனால் பக்கவாட்டுப் பார்வை தெரியவில்லை என்ற நிலை இருந்தால் விழித்திரை பிரச்சனைகள், கண் அழுத்த நோய் இவை இருக்கிறதா என்பதற்காக அடுத்த நிலை பரிசோதனைகள் தேவை.

முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல் அனைவருக்கும் வழக்கமாக பரிசோதிக்க வேண்டிய ஒன்று கண் அழுத்தம். உடற்தகுதிச் சான்றிதழ் வேண்டுவோருக்கு சிறு வயதானாலும் கூட கண் அழுத்தத்திற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துவிட்டே சான்றிதழ் வழங்குவோம்.இறுதியாக விழித்திரைப் பரிசோதனை. கண்ணில் சொட்டு மருந்து ஊற்றி சுமார் அரைமணி நேரம் அமரச்செய்த பின் நோயாளியின் விழித்திரையை Ophthalmoscope கருவியால் பரிசோதிப்போம். விழித்திரையின் ரத்த நாள அமைப்பு, கண் நரம்பின் ஆரோக்கியம், போன்ற சில அளவுருக்களை (parameters) பரிசோதித்துவிட்டு அவை சீராக இருந்தால் Fundus Normal என்று அறிக்கையில் குறிப்பிடுவோம்.

இந்த எல்லா பரிசோதனைகளும் சீராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு பார்வைத் திறன் க்ரேடு ஒன் (Standard of Vision Grade 1) என்று சான்றிதழ் கொடுப்போம். நேற்று வந்த இளைஞருக்கு இவை ஒவ்வொன்றையும் பற்றி விளக்கி, அவருடைய ஆர்வத்துக்குப் பாராட்டும் தெரிவித்தேன். தான் செல்லப்போகும் வேலைக்கான தகுதி என்ன என்று தெரிந்துகொள்வது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

பலருக்கு அந்தப் புரிதல் இல்லை. புதிய டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்காக, காலாவதி ஆகிவிட்ட லைசன்ஸைப் புதுப்பிக்க, புதிதாகப் பணியில் சேர்வதற்காக, பள்ளியில் எல்லாரையும் தகுதிச் சான்றிதழ் கேட்டார்கள் என்று பல்வேறு காரணங்களுக்காக சான்றிதழ் தேவைப்படுகிறது. விரைவுப் போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்து சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். உயர் அதிகாரி முதல் ஆரம்ப நிலைக் காவலர் வரை காவல்துறையின் அனைத்துக் காவலர்களுக்கும் இந்த விதி இருக்கிறது.

சான்றிதழ் பெற வரும் நபர்களில் பலர் ஒருவித சலிப்புடன் வருவதையும் கவனித்திருக்கிறேன். ‘‘இப்பதான் போன வருஷத்துக்கான சர்டிபிகேட் கொடுத்து மூணு மாசம் ஆச்சு, அதுக்குள்ள இந்த வருஷம் பொறந்திடிச்சு.. இன்னொரு தடவை சர்டிபிகேட் கொடுக்கணும்” என்பார்கள்.இந்த சான்றிதழ் பெற வேண்டியது அந்த தனிப்பட்ட நபருக்கும் சமூகத்துக்கும் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதைச் சொல்கிறேன். பிறவி முதலே மாறுகண் இருக்கும் 30 வயது நபர் ஒருவர் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார். அவரது கண்ணை கவனித்த விட்டு, குறைபாடு இருப்பது போல் தெரிகிறது, கண் மருத்துவரிடம் தகுதிச் சான்றிதழ் பெற்று வாருங்கள் என்று அனுப்பியிருக்கிறார்கள். அவர் பல மருத்துவமனைகளில் முயன்றிருக்கிறார். தகுதி இல்லை என்றே எல்லா இடங்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.

என்னிடம் வந்தவர், ‘‘ஏன் எனக்கு லைசன்ஸ் கொடுக்கக்கூடாது? நான் சிறு வயது முதலே வாகனங்கள் ஓட்டுகிறேன், இதுவரை விபத்து எதுவும் நடந்ததில்லையே, இவ்வளவு நாள் உரிமம் வைத்துக்கொள்ளவில்லை; இப்போது உரிமம் கேட்கிறேன் அவ்வளவுதான்” என்றார். அவருக்கு பார்வை மிகவும் குறைவாகவே இருந்தது.

‘நீங்கள் செய்த புண்ணியத்தாலோ, நீங்கள் வண்டியில் சென்ற போது எதிரில் பயணித்த மற்றவர்களது நல்ல நேரத்தாலோ இதுவரை உங்களுக்கு விபத்து எதுவும் நடக்கவில்லை. சீரான பார்வை இருந்தால்தான் ரோட்டில் இருக்கும் மேடு- பள்ளம், கண்ணாடியில் பார்க்கும் பொழுது பின்னால் வரும் வாகனம், இரவு நேர சாலை இவற்றை அனுசரித்து வாகனம் ஓட்ட முடியும். கண் பார்வைக் குறைபாட்டை சரி செய்ய முயலுங்கள் அல்லது வாகனம் ஓட்டுவதைத் தவிருங்கள்” என்றேன்.

சில ஆண்டுகள் முன்பு வரை ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கான விதிகள் ஏட்டளவிலேயே இருந்தன. இப்போதும் நிலைமை முழுவதாக சீராகி விடவில்லை. நேரில் செல்லாமலேயேகூட ஒருவரால் ஓட்டுநர் உரிமத்தை ‘வாங்கி’ விட முடியும். அப்படி ‘வாங்கிய’ ஒரு ஓட்டுநர், பள்ளி வாகனம் ஒன்றை ஓட்டி விபத்து ஏற்படுத்தி, அதில் ஒரு குழந்தை இறந்து போன சோக சம்பவத்தையும் என்னிடம் சான்றிதழுக்காக வந்த நபருக்கு விளக்கி அனுப்பினேன்.

முதலில் வருத்தப்பட்டாலும் பின் உண்மை புரிந்து ஏற்றுக் கொண்டார்! ‘கறை நல்லது!’ என்று சொல்வதைப் போல, சான்றிதழ் கேட்பதும் நன்மைக்கே! வழக்கமான பரிசோதனைக்கென வருகையில் பலருக்கு தீவிர நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்திருக்கிறோம்; அதனால் பலருக்கு நிரந்தர பார்வை இழப்பும் தடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, அடுத்த இதழில் விவாதிப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…!!(அவ்வப்போது கிளாமர்)
Next post நீர் மருத்துவம் 10 டிப்ஸ்! (மருத்துவம்)