நீர் மருத்துவம் 10 டிப்ஸ்! (மருத்துவம்)
நீர் மனித வாழ்விலிருந்து நீக்க முடியாத அமிர்தம். உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை மட்டுமல்ல அடிப்படையான பல தாது உப்புக்களையும் நுண்ணூட்டச்சத்துக்களையும் நம் உடலில் சேர்ப்பது நீர்தான். இந்த நீரை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் பயன்படுத்தி நாட்பட்ட நோயாளிகளுக்கு நல்ல தீர்வை வழங்குவதே ஹைட்ரோ தெரப்பி எனப்படும் நீர் மருத்துவம்.
*ஜெர்மனியின் செபாஸ்டியன் நீப் என்ற இயற்கை மருத்துவர்தான் இதனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வடிவமைத்தார்.
*ஹைட்ரோ தெரப்பியில் உட்புறச் சிகிச்சைகள் மற்றும் வெளிப்புறச் சிகிச்சைகள் என இரண்டு நிலைகள் உள்ளன.
*நீரை வெளிப்புறமாகப் பயன்படுத்தி மூலம், மூட்டுவலி, இடுப்புவலி தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது வெளிப்புற சிகிச்சை.
*நீரைப் பருகச் செய்வதன் மூலம் மேலே சொன்ன பிரச்சனைகள் மற்றும் பசியின்மை, அஜீரணக்கோளாறு, வாயுத்தொல்லை, கருப்பை நீர்க்கட்டிகள், ஹார்மோன் சமமின்மை, தூக்கமின்மை, சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்குத் தீர்வு காண்பது உட்புறச் சிகிச்சை.
*நீர் மருத்துவத்தில் குளிப்பதற்கு குளிர்ந்த நீரையும் பருகுவதற்கு சூடான நீரையும் பயன்படுத்துகிறார்கள்.
*தினசரி குளிர்ந்த நீரால் இருபது நிமிடங்கள் நன்றாக நீராடும்போது உடலின் வெப்பச் சமநிலை சீராகிறது என்கிறார்கள்.
*அதேபோல் குளிர்ந்த நீரை அல்லது சாதாரண நீரைப் பருகுவதால் உடலில் தேவையில்லாத கொழுப்பும் கழிவுகளும்தான் சேரும். அதுவே வெந்நீரைப் பயன்படுத்தினால் உடலில் தேவையில்லாத கொழுப்பும் கழிவுகளும் நீங்கி உடல் நச்சு நீக்கம் அடையும் என்கிறார்கள்.
*மூட்டுவலிக்காரர்களுக்கு வாட்டர் ஸ்டெப்பிங் என்றொரு தெரப்பியைப் பரிந்துரைக்கிறார்கள். உடலின் வெப்பச் சமநிலையைப் பராமரிக்கும் முறை இது.
*நீர் மருத்துவத்தில் உடலின் நீர்ச்சத்து, காற்றோட்டம், ஆரோக்கிய உணவு முறை, உடற்பயிற்சிகள், மூலிகைகள் ஆகியவற்றை சரியாகப் பராமரிப்பதன் மூலம் நல்ல விளைவுகளை காணலாம்.
*காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து டம்ளர் மிதமான சூட்டில் வெந்நீர் பருக வேண்டும். அறையின் வெப்பநிலைக்கு ஏற்ற சூட்டில் இருப்பது நலம். நீர் பருகிய நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடக்கூடாது.