
பட்டுச்சேலை பராமரிப்பு!(மகளிர் பக்கம்)
ஆசையாய் பார்த்து பார்த்து அதிக விலை கொடுத்து பட்டுச் சேலைகளை வாங்குகிறோம். திருமணம் போன்ற விசேஷங்களுக்குத்தான் அச்சேலைகளை நாம் உடுத்துகிறோம். எனவேதான் பட்டுச்சேலைகளை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. பட்டுச்சேலை பராமரிப்பது என்பதே ஒரு கலைதான். அவற்றை துவைப்பது, காய வைப்பது, மடிப்பது என்று ஒவ்வொன்றையும் கவனமாக கருத்தோடு செய்தால் தான் பல வருடங்களுக்கு அச்சேலைகளை புதியதுபோல் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும்.
*விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுச்சேலையை களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விடவேண்டும் அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.
*எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. சோப்போ அல்லது சோப்புப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.
*ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி 5, 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டும்.
*பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக் கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.
*அயர்ன் செய்யும்போது ஜரிகையைத் திருப்பி அதன்மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக் கூடாது.
*பட்டுச்சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப்பையில் வைக்கலாம். அதேபோல் ஹேங்கர்களில் தொங்க விடவும் கூடாது. அப்படி செய்தால் நாளாவட்டத்தில் இழைகள் விலகி துணி பாழாகி விடும்.
*அயர்ன் செய்த பட்டுப்புடவையை ஒரே மாதிரி மடிப்புடன் நீண்ட நாட்கள் வைத்திருந்தால் மடிப்பு உள்ள இடங்களில் கிழிந்துவிடும். எனவே புடவையை சுருட்டி வைப்பதோ, மாற்றி மடித்து வைப்பதோ வேண்டும்.
*ஜரிகை அதிகமுள்ள புடவையாக இருந்தால் ஜரிகை உட்புறம் இருக்குமாறு மடித்து வைக்க வேண்டும். இல்லையென்றால் ஜரிகையின் உலோகம் காற்று பட்டு மங்கிவிடும்.
*ஜரிகை அதிகமுள்ள புடவைகளுக்கு சாரி ஃபால் தைப்பது நல்லது.