உடல் சூட்டை தணிக்கும் 7 எண்ணெய்கள்!(மருத்துவம்)
கோடை முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால், சிலருக்கு உடல் உஷ்ணம் அதிகமாகிவிடுகிறது. இப்படி உடல் உஷ்ணம் அதிகரிக்கும்போது, உடலில் பல்வேறு பிரச்னைகள் தோன்றுகின்றன. உதாரணமாக, நீர்ச்சுருக்கு, அல்சர், வயிற்று வலி, தலைவலி, முகப்பரு போன்றவற்றைச் சொல்லலாம். உடல் சூட்டைத் தணிக்க உதவும் ஏழு எண்ணெய்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
நல்லெண்ணெய் : வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய்யை தேய்த்துக் குளித்துவர, உடல் உஷ்ணம் குறைந்து, உடல் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
விளக்கெண்ணெய்: இரவு தூங்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணெய் தேய்த்துவிட்டு தூங்கினால் உடல் சூட்டைத் தணிக்கலாம் அல்லது வாரத்தில் இருமுறை இரவு உறங்குவதற்கு முன் தொப்புளில் இரு துளிகள் விளக்கெண்ணெய் வைத்துவிட்டு உறங்கலாம். இவ்வாறு செய்வதினால் உடல் சூடு நன்கு குறையும்.
தேங்காய் எண்ணெய்: வெயிலில் அதிகம் அலையும் வேலையில் இருப்பவர்களும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் அடிக்கடி உடல் உஷ்ணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், இவர்கள் தினசரி தலையில் தேங்காய் எண்ணெய் தடவுவதைக் கட்டாயமாகப் பின்பற்றினால் உடல் உஷ்ணத்தைக் குறைக்கலாம்.
லாவண்டர் எண்ணெய்: லாவண்டர் எண்ணெய்யை உள்ளங்கைகளில் தடவி சூடு பறக்க தேயுங்கள். நெற்றியில் தேய்த்தாலும் உடல் உஷ்ணம், தலைவலி நீங்கும். லாவண்டர் நறுமணம் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவும்.
சந்தன எண்ணெய்: வாரத்தில் ஒருமுறை சந்தன எண்ணெய்யை உடலில் தடவி ஊறவைத்துக் குளித்துவர உடல் சூடு தணியும்.
யூக்கலிப்டஸ் எண்ணெய்: இரவு தூங்குவதற்கு முன்பு யூக்கலிப்டஸ் எண்ணெயை பாதங்கள் முழுவதும் படும்படி தடவி வந்தால் உடல்சூடு தணியும்.பெப்பர் மின்ட் எண்ணெய்: குளிப்பதற்கு முன்பு பெப்பர் மின்ட் எண்ணெயை பாதங்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால் உடல் சூடு குறைந்து புத்துணர்ச்சியாக இருக்கும்.