கண்ணைக் கட்டிக்கொள்ளாதே வண்ண வண்ணக் கண்கள்!!(மருத்துவம்)

Read Time:13 Minute, 11 Second

‘என்ன உங்க கண்ணு மஞ்சளா இருக்குது?‘, ’கண்ணாடியில் பார்த்தீர்களா… கண்ணு சிவப்பா இருக்கே! தூசி எதுவும் விழுந்துடுச்சா?’, ’உங்களுக்கு இரண்டு கண்ணும் வீக்கமாக இருக்கிற மாதிரி இருக்கே?’… இப்படி உங்களை சில பேர் கேட்டிருப்பார்கள். நீங்களும் கண்ணாடியைப் பார்த்துவிட்டு மருத்துவரிடம் விரைந்திருப்பீர்கள். இந்த அனுபவம் உங்களுக்கு நேர்ந்திருக்கிறதா? மருத்துவரைப் போய் பார்த்தீர்களா? அவர் என்ன கூறினார்?

கண்ணில் தென்படும் சில அறிகுறிகளுக்குக் கண் பிரச்சனை காரணம் இல்லை. சிறந்த உதாரணமாக மஞ்சள் காமாலையை எடுத்துக்கொள்ளலாம். சமீபத்தில், ‘பத்து நாட்களாகக் காய்ச்சல். வெளியூரில் இருந்தேன். அதனால் சுயமருத்துவம் மட்டுமே செய்துகொண்டேன்’ என்றபடி என்னிடம் வந்தார் ஒரு இளைஞர்.

அவரைப் பார்த்தவுடனேயே அவரின் கண்ணின் மஞ்சள் நிறம் முதன்மையாக பளிச்சென்று தெரிந்தது. வாந்தி இருக்கிறதா? சாப்பிட முடிகிறதா? என்று கேட்டு, நாக்கை உட்புறமாக மடித்துக் காட்டுங்கள், விரல் நகங்களைக் காட்டுங்கள் என்று சிற்சில பரிசோதனைகளையும் செய்தபின் அவருக்கு வந்திருப்பது மஞ்சள் காமாலை என்று சொன்னேன். ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் அதை உறுதிசெய்தன.

‘இத்தனை நாளும் நான் கவனிக்கவே இல்லையே… ஆனால் எனக்கு கண்ணு நல்லா தெரியுதே டாக்டர்?” என்று கேட்டார் அவர். கண்ணின் வெள்ளை நிறப் படலமான விழி வெண்படலம் (Sclera) மெலிதானது. லேசான தசைநார்களால் ஆனது. ஓரளவுக்கு ஒளி ஊடுருவும் தன்மையும் அதற்கு உண்டு. வேறு காரணங்களால் அதன் பரப்புக்கு அடியில் படிந்துவிடும் நிறமிகளை அதனால் வெளிக்காட்ட முடியும், ஒரு கனமான பாலித்தீன் பையைப் போல.

மஞ்சள் காமாலை நோயில் அடிப்படை பிரச்சனை கல்லீரல் பாதிப்பு. கல்லீரலில் உருவாகும் பித்த நீர், முழுமையாக குடலைச் சென்று சேராமல் தேக்கம் ஏற்படுவதால், பித்த நீரின் நிறமிகள் ரத்தத்தில் கலந்து, உடலெங்கும் பரவி மெல்லிய தசைகள் வழியே தன் இருப்பைக் காட்டுகிறது.

பச்சிளம் குழந்தைகளுக்கு, பிறந்து மூன்றாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை உடலும், கண்களும் லேசான மஞ்சள் நிறத்தில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கையில் அதன் ரத்த ஓட்டத்துக்கு உதவுபவை சிவப்பணுக்கள் (Fetal Red Blood Cells). குழந்தை பிறந்தவுடன் வேறுவிதமான ரத்த ஓட்டம் துவங்கி விடுவதால் பழைய செல்கள் மொத்தமாக அழிந்துவிடுகின்றன. அழிந்த செல்களை கழித்தொழுக்கம் செய்வது கல்லீரலின் பணி.

இந்தப் பணியின் போதும் நிறமிகள் ரத்தத்தில் கலந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகம் வழியே வெளியேறும். அதுவரைக்கும் குழந்தையின் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மஞ்சள் காமாலை தானாகவே சரியாகிவிடும் என்ற போதிலும் அவ்வப்போது குண்டு பல்பிற்குக் கீழே படுக்க வைக்கச் சொல்வார்கள். மருத்துவமனையில் இருக்கும் போது போட்டோ தெரபி மெஷினில் குழந்தையைப் படுக்க வைப்பார்கள்.

காய்ச்சல் மட்டுமல்லாது புற்றுநோய், பித்தப்பையில் கற்கள், கணையத்தில் பாதிப்பு போன்ற பல காரணங்களாலும் பித்த நீரில் உள்ள நிறமி செல்கள் ரத்தத்தில் கலந்து மஞ்சள் நிறத்தை உருவாக்கக் கூடும். கண்களின் மஞ்சள் நிறமே உடலுக்குள் இருக்கும் பெரிய நோயை வெளிக்காட்டும் கண்ணாடியாக பல சமயத்தில் அமைகிறது. சில இனத்தவர்களுக்கு (Caucasians) அவர்களது தோலின் வெண்மை நிறத்தினால், கண்கள் மற்றும் நாக்கில் மட்டுமில்லாமல் தோல் முழுவதும் மஞ்சள் நிறம் படர்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.

கண்ணின் நிறமாற்றத்தால் பார்வைக்கு எதுவும் ஆபத்து நேருமோ என்ற பயம் வேண்டாம். விழிவெண்படலத்தின் கீழ் மட்டுமே மஞ்சள் நிறத் திட்டுக்கள் படிந்திருக்கின்றன என்பதால் கண்ணுக்குள் எந்த பாதிப்பும் இல்லை. அதனால் பார்வையில் பிரச்சனை வராது.

நம்மில் சிலருக்கு ஆற்றில், குளத்தில் குளித்தால் கண் சிவந்துவிடும். சிலருக்கு தூக்கமின்மை அல்லது அதிக நேர உறக்கத்தால் கண் சிவப்பாக மாறும். உறுத்தல், எரிச்சல் இவை இருக்காது. எனக்கு மட்டும் எப்பொழுதும் கண் சிவப்பாகவே இருக்கிறது என்று நினைத்து வருந்துபவர்கள் பலர்.

சென்ற மாதத்தில் என்னை சந்தித்த நபர் ஒருவர்,” எனக்கு எப்பவும் கண் சிவப்பாகவே இருக்குது, அதனால எந்தத் தொந்தரவும் இல்லை ஆனால் பார்க்கிறவங்க தண்ணி அடிச்சியான்னு கேக்குறாங்க.. எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. இதனால் வெளியே போகவே வெக்கமா இருக்கு.. ஒரு தடவை இன்டர்வியூக்கு போன இடத்துல இதைப் பார்த்துட்டு வேலை கொடுக்கலை” என்றார்.

இத்தகைய கண்சிவப்பு நிறைய பேருக்கு சாதாரணமாகவே இருக்கக்கூடிய ஒன்று தான். அவர்களது கண்களில் உள்ள ரத்த நாளங்கள் தண்ணீர் காற்று தூசு போன்றவற்றுக்கு அதிகப்படியாக எதிர்வினை ஆற்றுவதே இத்தகைய நிறமாற்றத்திற்குக் காரணம். இதை அறவே நீக்க முடியாது. ஒருமுறை மருத்துவரிடம் காட்டி உறுதி செய்துகொண்ட பின், தன்னியல்பே இதுதான் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

‘கண்ணு ரத்தமா இருக்கு.. என்னன்னு பாத்து சொல்லுங்க’ என்று வரும் கிராமத்து மக்கள் நிறைய பேருக்கு கண்கள் ரத்த நிறத்தில் இருப்பதில்லை. லேசான மண்ணின் நிறத்தில் இருக்கும் (muddy conjunctiva). புழுதி, வெக்கை அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், வயல் வேலை, கட்டிட வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இமையிணைப்படலமான conjunctivaவின் நிறமே லேசான பிரவுன் நிறத்திற்கு மாறியிருக்கும். இதுவும் பார்வையை எந்த விதத்திலும் பாதிக்காது.

நீண்ட நாட்களாக கண்களில் ஒவ்வாமை பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் லேசான சாம்பல் நிறத்தில் இருக்கக்கூடும். ஒவ்வாமை பிரச்சினை குணமாகிவிட்ட பின்னரும் இந்த சாம்பல் நிறம் அப்படியே இருக்கலாம் சிறுவயதில் ஏற்பட்ட விட்டமின் ஏ குறைபாட்டினால் விளைந்த பழைய சாம்பல் நிறப் புள்ளிகளையும் (Bitot’s spots) முதியவர்கள் பலரின் கண்களில் காண முடிகிறது.

என் குழந்தையின் கண்ணில் கறுப்பாக ஏதோ இருக்கிறது என்ற சந்தேகத்துடன் பெற்றோர் வருவதுண்டு. பெரும்பாலான நேரங்களில் அது சாதாரண மச்சமாகவே (naevus) இருக்கும். உடலின் பிற பகுதிகளில் ஏற்படும் கறுப்பு மச்சத்தைப் போன்றதே இது. கண்ணின் வெள்ளை நிறப் பின்னணியால் பிற மச்சங்களை விட இவை பளிச்சென்று தெரியும். இதுவும் எந்தத் தொந்தரவும் தராதவை தான். வெகு சிலருக்கு நடுத்தர வயதைக் கடந்த பின் இந்த கறுப்பு மச்சங்கள் திடீரென்று அளவில் பெரிதாக மாறினால், வலி, வீக்கம் இருந்தால் பரிசோதனை தேவை.

இன்னும் சில வண்ணங்களையும் நாம் கண்களில் காண முடியும். அவற்றில் சில தீவிரமான உடல் நோய்களின் வெளிப்பாடாகவும் அமைந்துவிடும். உதாரணமாக பச்சிளம் குழந்ததைக்கு விழி வெண்படலம் நீலநிறமாக (blue sclera) இருந்தால் அது Osteogenesis imperfecta என்ற தீவிர எலும்பு நோயின் ஒரு அறிகுறி. இளம் வயதில் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்படும் சில நோயாளிகளை குடல்- இரைப்பை நிபுணர் கண் பிரிவுக்கு அனுப்பி வைப்பார். நோயாளியின் கருவிழியைச் சுற்றிய limbus பகுதியில் தங்கநிறமும் பிரவுன் நிறமும் கலந்த ஒரு வளையம் (KF ring) காணப்பட்டால் அது வில்சன் டிசீஸ் என்ற மரபணு நோயாக இருக்கலாம்.

வெள்ளை விழியை விடுங்கள், கருவிழியானது ஒவ்வொருவருக்கும் பல நிறங்களில் இருக்கிறதே.. உதாரணமாக ஐஸ்வர்யா ராய்க்கு நீலமும் பச்சையும் கலந்த ஒரு வண்ணத்திலும், சில ஹாலிவுட் ஹீரோக்களுக்கு நல்லெண்ணெய் நிறத்திலும் கருவிழி இருக்கிறதே.. ஏன்? என்று கேட்கிறீர்களா? கருவிழிக்குப் பின்புறம் உள்ள கிருஷ்ணபடலத்தின் நிறத்தையே நாம் கருவிழியின் வழியே காண்கிறோம். இந்த வகையில் Cornea என்ற ஆங்கிலப் பெயருக்கு கருவிழி என்ற தமிழ்மொழிபெயர்ப்பு பொருந்தாது என்றே கூறலாம்.

இந்த நிற அமைப்பு மரபணு சார்ந்து வருவது. குரோமோசோம் எண் 15ல் இருக்கக்கூடிய OCA2, HERC2 ஜீன்கள் கிருஷ்ணபடலத்தின் மேற்பரப்பில் படியும் மெலனின் செல்களின் அடர்த்தியைத் தீர்மானிக்கிறது. இதனால்தான் நீலம், பச்சை, Hazel, பிரவுன், கறுப்பு, சாம்பல், ஆம்பர் என்று பல்வேறு வண்ணங்களில் கிருஷ்ணபடலம் இருக்கிறது. உலகின் 55- 79% மக்களின் கண்கள் பிரவுன் நிறத்தில் இருக்கிறது. ஐந்து முதல் பத்து சதவீதம் மக்களுக்கு ஐஸ்வர்யா ராய் போன்ற கண்கள் உண்டு.

வெகு அரிதாக ஒரே கண்ணில் பல்வேறு வண்ணங்களையும் நாம் பார்க்க முடியும். ஒரே நபரின் வலது கண்ணுக்கும் இடது கண்ணுக்கும் இடையில் நிறமாற்றம் ஏற்படுவதும் உண்டு. மரபணு, காயங்கள், சில கண்நோய்கள் இதற்குக் காரணமாக அமையலாம். ஆல்பினிசம் போன்ற நிறமி செல்களின் குறைபாடு உடைய நபர்களுக்கு முயல்களினுடையதைப் போல பிங்க் நிறத்தில் கிருஷ்ணபடலம் இருக்கும். கண்களால் உலகில் உள்ள பல வண்ணங்களை நாம் காண்கிறோம்.. நம் மருத்துவர் கண்ணின் மேற்புறத்தில் தெரியும் பலவித வண்ணங்களை வைத்தே நிறைய நோய்களைக் கண்டறிகிறார் என்பது சுவாரசியமான விஷயம்தானே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)
Next post ஆஸ்டியோபொரோசிஸ் தடுக்க… தவிர்க்க!(மருத்துவம்)