
ஆஸ்டியோபொரோசிஸ் தடுக்க… தவிர்க்க!(மருத்துவம்)
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று, எலும்பு பலவீனம். மார்பகப் புற்றுநோய், இதயநோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் நோய்களைவிட எலும்பு பலவீனம்தான் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. பெண்களில் 50 சதவிகிதம் பேர் எலும்பு பலவீனம் காரணமாக எலும்பு முறிவு, ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு அடர்த்திக் குறைதல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
எலும்பு பலவீனம் ஏன் ஏற்படுகிறது?
ஆண்களைவிட பெண்கள் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிப்படைய காரணம், பெண்களுக்கு எலும்புத் திசுக்களின் அடர்த்தி ஆண்களைவிடக் குறைவு என்பதுதான். வயதுக்குப் பின், ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவிகிதம் என்ற அளவில், எலும்பின் அடர்த்திக் குறையும். 60 வயதுக்குள், 30 முதல் 35 சதவிகிதம் அளவுக்கு எலும்பின் அடர்த்தி குறைகிறது. வயதான பெண்களுக்கு உடலில் ஏற்படும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களால் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பு பலவீனத்துக்கு ஒரு முக்கியக் காரணம்.
எலும்பு பலவீனம் தடுக்க… தவிர்க்க!
கால்சியம் சமநிலையில் இருந்தால் எலும்பு பலவீனத்தைத் தவிர்க்கலாம். எலும்புகள் உறுதியாகவும் தரமானதாகவும் இருக்க கால்சியம், வைட்டமின் டி முக்கியம்.தினமும் 20 நிமிடங்கள் காலை சூரியன் உடலில் படும்படி வேலைகளோ பயிற்சிகளோ செய்யலாம். நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகள் மூலம் தசைகள் மட்டும் அல்லாமல், எலும்புகளும் வலுவடைகின்றன.
மீன், பசும்பால், புரோகோலி, நட்ஸ், ஆரஞ்சு, கேழ்வரகு, பாலாடைக் கட்டி ஆகியவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். காபி, டீ, மது, புகை பழக்கங்களைக் கைவிடுதல் நல்லது. சீரற்ற மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.மாதவிலக்கு நின்ற மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களும், மரபியல் காரணமாக எலும்பு பலவீனம் உள்ள பெண்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால், எலும்பு அடர்த்திக் குறைவதைத் தடுக்கலாம்.