வீடு தேடி வரும் வைரம்!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 5 Second

‘எல்லா பெண்களுக்கும் கழுத்து நிறைய நகை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். நானும் அப்படித்தான். எனக்கும் அழகான நகைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையுண்டு’’ என பேசத் துவங்குகிறார் சுஷ்மிதா. இவர் அடிப்படையில் குழந்தைநல மருத்துவர். நகை வடிவமைப்பது மேல் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக அதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.‘‘எனக்கு அழகாக டிரஸ் செய்து கொள்ள பிடிக்கும். குறிப்பா அதற்கு ஏற்ப மேட்சிங் நகைகள் போட்டுக் கொள்ள பிடிக்கும். அதுவும் புதுவிதமா இருக்கணும்ன்னு நினைப்பேன். அதனால் தான் என்னுடைய கல்யாணத்திற்கு நானே எனக்கான நகைகளை வடிவமைச்சேன்.

அதற்காக நான் இது குறித்து தனிப்பட்ட படிப்பு எல்லாம் படிக்கல. எனக்குள் தோணும் இப்படி டிசைன் செய்தா நல்லா இருக்கும்ன்னு. அதன்படி நானே ஒரு ஸ்கெட்ச் செய்வேன். அதன் பிறகு அதை நகை நிபுணர்களிடம் கொடுத்து வடிவமைக்க சொல்வேன். என் திருமணத்தின் போது, என் நகைகளைப் பார்த்து, எங்க வாங்கினன்னுதான் பலர் கேட்டாங்க. நானே டிசைன் செய்தேன்னு சொன்னதும் உறவினர்கள், நண்பர்கள்ன்னு எல்லாரும் எனக்கும் டிசைன் செய்து கொடுன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. அதனால் அவங்க கேட்கும் போது மட்டும் டிசைன் செய்வேன். அதை நான் பெரிய அளவில் எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.

ஆர்டர் வரும் போது மட்டும் சிறிய அளவில் செய்து வந்தேன். மேலும் நான் மருத்துவ துறையிலும் ஈடுபட்டு வந்ததால், என்னால் நகை வடிவமைப்பில் பெரிய அளவில் ஈடுபடமுடியவில்லை. இந்த சமயத்தில் தான் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிச்சாங்க. அப்ப எல்லாரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடைகள் இல்லை என்பதால், வீட்டில் விசேஷங்களுக்கு நகைகளை வாங்கவும் முடியவில்லை. இந்த நேரத்தில் தான் பலர் என்னிடம் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் பலர் இதையே ஏன் நீ ஒரு பிராண்டாக அறிமுகம் செய்யக்கூடாதுன்னு கேட்டாங்க. எனக்கும் அது ஒரு நல்ல யோசனையாகத் தான் இருந்தது. அப்படித்தான் இதை ஆரம்பிச்சேன். என்னுடைய லாக்டவுன் பேபின்னு சொல்லலாம்’’ என்றவர் இதற்கான குழு அமைத்தது குறித்து விவரித்தார்.

‘‘என்னுடைய திட்டம் குறித்து என் கணவரிடம் பேசிய போது… அவரும் நல்லா இருக்கு செய்ன்னு சொல்லி என்னை ஊக்குவித்தார். அதன் அடுத்த கட்டமாக ‘வியானா’ உருவானாள். வியானான்னு பெயர் வைக்க ஒரு காரணம் இருக்கு. நான் கருவுற்ற போது எனக்கு மகள் பிறந்தா இந்த பெயர் தான் வைக்கணும்ன்னு முடிவு செய்திருந்தோம். மகன் தான் பிறந்தான். ஆனால் இது என்னுடைய இரண்டாவது குழந்தை. பெண்களுக்கு பிடித்தமானவள் என்பதால், அந்த பெயரையே தேர்வு செய்தேன். நான் என் திருமணத்திற்கு நகை வடிவமைத்த போது, எனக்கென்று சில வடிவமைப்பாளர்கள் இருந்தாங்க. அவங்க மூலமாக ஒரு குழுவினை அமைச்சிருக்கேன்.

எல்லாருமே திறமையானவர்கள் மற்றும் என்னுடைய யோசனைக்கு ஏற்ப நகையினை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்கள். நான் ஒரு நகை இப்படித்தான் இருக்கணும்ன்னு அவுட்லைன் மட்டும் தான் கொடுப்பேன். அதற்கு அழகான உருவம் கொண்டு வருவாங்க. பொழுதுபோக்காகத்தான் நான் நகையினை வடிவமைக்க ஆரம்பிச்சேன். ஆனால் டாக்டர் ெதாழிலைப் பொறுத்தவரை… சின்ன வயசில் இருந்தே நான் பிறந்ததே டாக்டராகத்தான்னு நினைச்சேன். என்னுடைய கனவும் அது தான். டாக்டர் வேலை ஒரு பக்கம் என்றால், நகை வடிவமைப்பதும் இப்போது எனக்கு பிடித்த வேலையாக மாறிவிட்டது. இரண்டையும் சமமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் என் நோக்கம்.

வியானா முழுக்க முழுக்க வைர நகைகள் தான். இதில் எல்லா விதமான நகைகளும் அடங்கும். சாதாரணமாக அலுவலகம் செல்லவும், சின்ன விழாக்களுக்கான நகைகளும் மற்றும் மணப்பெண்களுக்கான நகைகள் என அனைத்தையும் செய்து வருகிறோம். மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைசும் செய்து தருகிறோம்’’ என்றவர் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று தங்களின் நகைகளை கொடுத்து வருகிறார்.

‘‘இப்ப எனக்கு கடை ஒன்று திறந்து அதில் ஈடபடவேண்டும் என்ற எண்ணமில்லை. காரணம் நான் பார்க்கும் டாக்டர் தொழிலுக்கு நிறைய நேரம் செலவு செய்யணும். மேலும் என்னுடைய மகனுக்கு இப்போது தான் எட்டு வயசாகிறது. அதனால் அவனையும் பார்த்துக்கணும். கடை என்று ஆரம்பித்தால் அதில் முழு கவனம் செலுத்தணும். அங்கு அதிக நேரம் இருக்க வேண்டி இருக்கும். அதனால் தான் வாடிக்கையாளரை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு பிடித்த நகையினை வடிவமைத்தும் தருகிறோம்.

அதே சமயத்தில் எங்களின் தனிப்பட்ட டிசைன்களையும் காண்பிக்கிறோம். அவர் எது வேண்டும் என்றாலும் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், நாங்க ஒரு முறை வடிவமைத்த டிசைன்களை மறுபடியும் செய்வதில்லை. ஆனால் ஒரு சிலர் அந்த டிசைன் தான் வேண்டும் என்று கேட்டால் அதை டிசைன் செய்தும் தருவோம். அடுத்து ஒருவருக்கு ஹாரம் மற்றும் கம்மல் வாங்க வேண்டும் என்றால், நாங்க ஏற்கனவே வடிவமைத்த டிசைன்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட டிசைன்களை கொண்டு செல்வோம். அதை அவர்கள் அணிந்து அழகு பார்த்து தேர்வு செய்தவுடனே, அந்த நகைக்கான பணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். கஸ்டமைஸ் செய்யப்படும் நகைகளை அவர்கள் சொல்லும் தேதியில் கொடுப்பது எங்களின் மற்ெறாரு ஸ்பெஷாலிட்டி.

நான் கடந்த ஐந்து வருஷத்திற்கு மேல் இதில் ஈடுபட்டு வந்தாலும். கடந்த மாதம் கிரவுன் செலிபிரேஷன் தலைமையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் இதற்கு பெயர் சூட்டு விழா நடத்தினோம். அந்த விழாவில் ஃபேஷன் ஷோவில் வந்த மாடல்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் நான் வடிவமைத்த நகையினை தான் அணிந்து நடந்து வந்தார்கள். இது நாள் வரை என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே வடிவமைத்து வந்தேன். இந்த ஃபேஷன் ஷோ மூலமாக எனக்கு பல புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாகி இருக்காங்க. இது எனக்கு இன்னும் நிறைய டிசைன்களை வடிவமைக்கணும்னு ஊக்கத்தை கொடுத்திருக்கு’’ என்றார் உற்சாகமாக சுஷ்மிதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சரும அழகு பெற அரோமா ஆயில்!!(மகளிர் பக்கம்)
Next post திருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது!! (அவ்வப்போது கிளாமர்)