
சரும அழகு பெற அரோமா ஆயில்!!(மகளிர் பக்கம்)
அரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசனை மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்துக் கடை மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். சருமத்தை மெருகேற்ற பார்லரை விட கூடுதல் பலன் தரக் கூடியது அரோமா ஆயில். இந்த ஆயில் உதவியுடன் வீட்டிலேயே தேக வனப்பை மீட்டெடுக்கலாம்.
கிளன்சிங் கவர்ச்சி: தினமும் முகத்தைக் கழுவும் போது, சோப்பு அல்லது பேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக் கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தை கழுவவும். இதனால் சரும துவாரங்களில் அடைத்துள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன் லேமன் கிராஸ் எண்ணையின் நறுமணம் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.
நீராவி பியூட்டி: எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து நன்கு கொதிக்க வைத்து அதில் பெப்பர்மின்ட் ஆயில், லாவெண்டர் ஆயில், மின்ட் ஆயில் தலா இரண்டு சொட்டுகள் விட்டு முகத்துக்கு நீராவி பிடித்தால், முகத்தில் சுரக்கும் அதிக எண்ணெய்ப் பசையை கட்டுப்படுத்துவதுடன், சருமத்தில் படிந்துள்ள அழுக்கை வெளியேற்றி பொலிவாக்கும்.
வறண்ட சருமத்தினர்: ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் லாவெண்டர் ஆயில், யலாங் ஆயில் தலா இரண்டு சொட்டுகள் விட்டு மூடிக் கொதிக்க விடவும். கொதித்த பின் நீராவி பிடித்தால், முகத்தின் இறந்த செல்களை நீக்குவதுடன் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்.
சரும அடுக்கு : பொதுவாக பொலிவிழந்த சருமத்தை உடனடியாக பளிச்சென காட்டவும், அந்த பொலிவு அதிக பட்சம் மூன்று நாட்கள் நிலைக்கவும் பேஸ்பேக் உதவி செய்யும். ஆனால் கரும்புள்ளி, பரு, மங்கு போன்ற சருமத்தின் 2-வது அடுக்கின் பிரச்னைகளையும், சுருக்கம், கோடுகள், வயதான தோற்றம், சருமத்தளர்வு போன்ற சருமத்தின் மூன்றாவது அடுக்கின் பிரச்னைகளையும் சரி செய்வது அரோமா ஆயிலின் தனிச் சிறப்பு.
இதற்கு லாவெண்டர் ஆயில், லைம் ஆயில், பச்சோலி ஆயில், சீடர் வுட் ஆயில், யலாங் ஆயில் இவற்றில் ஏதாவது இரண்டு ஆயில்களில் தலா இரண்டு சொட்டுகளை பேஸ் பேக் போடும் முன் அதில் கலந்து முகத்தில் தடவவும். அரோமா ஆயிலின் மூலக் கூறுகள் சருமத்தின் துவாரங்களை விட மிகச் சிறியது. அதனால் பேஸ்பேக் போட்ட 2 முதல் 20 விநாடிகளுக்குள் இந்த ஆயில் சருமத்தின் மூன்றாவது அடுக்குவரை ஊடுருவி சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும். மொத்தத்தில் அரோமா ஆயில் சரும அழகை மெருகூட்டும்.