கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 45 Second

வாழ்க்கையின் நீண்ட தூரப் பயணம். அதுதான் பள்ளி வாழ்க்கையின் பதினான்கு ஆண்டு கால பயணமாக, நம் பிள்ளைகளின் அடிப்படை வாழ்க்கையின் அடித்தளம் என்று சொல்லலாம். ‘கல்லை’ சிலையாக செதுக்குவது போன்று, மூன்று வயதில் அழுது கொண்டு வரும் குழந்தைகள், பதினேழு வயதில் இளம் வாலிபர்களாக வெற்றி நடை போடுவது இப்பள்ளி பருவத்தில்தான். இத்தகைய காலகட்டத்தில், ஒவ்வொரு வகுப்பிற்கும் உயர்ந்து செல்லும்போது, அவர்களின் பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ மாற்றங்களைக் காணமுடிகிறது.

அறிவு முதிர்ச்சியில் பலப்பல மாற்றங்களையும் காண முடிகிறது. இதற்கிடையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பிள்ளைகளிடமும் நாம் காணும் அறிவு பூர்வமான நடைமுறை மாற்றங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. சில சமயங்களில் அந்நிகழ்வுகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். கோபம் வரவழைக்கும். மண்டை உடையும் அளவுக்கு சண்டைகள் அவர்களுக்குள் நடக்கும்.

அனைத்தையும் எதிர் கொண்டு, யாருக்கும் மனம் கஷ்டப்படாதவாறு, பிள்ளைகளின் தவறையும் உணர்த்தி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் எதிர் கொண்டு, பிள்ளைகள் மனதில் நாம் இடம் பிடித்து விட்டால், நல்ல ஒரு ஆசானாக அமைந்துவிட முடியும். வாழ்க்கை எப்பொழுதுமே சுகமாகவோ, எப்பொழுதுமே துக்கமாகவோ இருக்க முடியாது. இரண்டும் மாறிமாறித்தான் வந்து போகும். துக்கமான காலகட்டத்தில், சுகமான காலகட்டத்தையும், சுகமான நேரத்தில் ‘நமக்கும் துக்கம் வரலாம்’ என்கிற விழிப்புணர்வையும் கருத்தில் கொண்டுதான் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

தினம் தினம் பிள்ளைகளின் வாழ்வில் நிகழும் பின்புலங்களை நடைமுறையில் கண்டறியும் பொழுதுதான் ‘நாம் மிகவும் பாக்கியசாலி’ என்னும் எண்ணம் கூட பலருக்கு ஏற்படும். ஒரு சில மோசமான நிகழ்வுகளை காண நேரிடும் பொழுது, நம் குறைகள் கூட நமக்கு நிறைவாகவே நினைக்கத் தோன்றும். சிறிய டவுனில் அமையப்பட்ட பள்ளியாக இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களிலிருந்து நிறைய பிள்ளைகள் படிப்பதற்காகவே நகரங்களுக்கு வந்து, வீடு எடுத்து தங்குவதுண்டு.

அதற்கு வசதிப்படாதவர்கள் அரசு பஸ் மூலம் பயணித்து தினந்தோறும் தவறாமல் பள்ளிக்கு வந்து விடுவார்கள். அப்படியாக ஒரு சிறுமி தினமும் பயணித்து படிக்க வந்திருக்கிறாள். ரொம்பவும் சுறு சுறுப்பாக இயங்குவாள். கொஞ்சம் கூட பயணித்து வந்த களைப்பை காட்டிக் கொள்ள மாட்டாள். தலையை எண்ணெயிட்டு வாரி, இரட்டைப்பின்னல் போட்டு தலையில் பூ வைத்துக் கொண்டு வருவாள். சொல்லிக் கொடுப்பதை ‘கிளிப்பிள்ளை’ போன்று ஒப்புவிப்பாள். யார் என்ன கேட்டாலும் எல்லோருக்கும் உதவ முன்வருவாள். எல்லாமே நல்ல முறையில் நடந்தாலும், நோட்டுப் புத்தகத்தில் பாடங்கள் எழுத தயங்குவாள்.

கரும்பலகையில் ஆசிரியர் எழுதும் பாடங்களை அனைவரும் எழுதி முடித்து விடுவார்கள். அவள் மட்டும் இரண்டு வரிகள் எழுதியவுடனே கையை உதறுவாள். பெரிய பளுவான பொருளை தூக்கியது போல் வலதுகையை உதறிக் கொள்வாள். அவளின் இந்த செய்கையை பாடம் நடத்தும் ஆசிரியைகள் அனைவருமே கண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட வகுப்பு முடியும் வரை எழுதுவது போன்று செய்வாள்.

பெல் அடித்தவுடன் நோட்டை மூடி விடுவாள். எந்தப் பாடமுமே முழுவதும் எழுதப்பட்டிருக்காது. அத்தனை பாடப்பகுதியும் அவள் மனதில் மட்டும் பதியப்பட்டிருக்கும். எழுதி முடிக்கப்படாத காரணத்தால், தேர்வுகளில் அவளின் மதிப்பெண் குறைந்து விடும். எழுதும் வரை ஒரு தப்பில்லாமல் எழுதி முழு மதிப்பெண் எடுப்பாள். மீதி மதிப்பெண் எழுதாமல் விடப்பட்டிருக்கும். சிறிய வகுப்புகளில் பரவாயில்லை, பெரிய வகுப்புகளுக்குச் சென்றால் அவள் என்ன செய்வாள் என்பது பலருக்கும் கேள்வியாக இருந்தது. இதை அப்படியே விடக் கூடாது. அவளுக்கு ஏன் எழுத முடியவில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்து, சரி செய்ய ஏதாவது யுக்தி கையாள வேண்டும் என்று நினைத்து ஆசிரியைகள் அவளைத் தனியே அறைக்கு அழைத்தனர்.

மெல்ல பேசிக் கொண்டே ஒரு ஆசிரியை அவளை தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்தினார். வேகமாக அனைத்தையும் எழுதி முடித்து விட்டால். அவள் தான் வகுப்பில் முதல் மாணவி என்பது உறுதியாகி விடும். ஏதேனும் கைவலி ஏற்படுகிறதா, எங்காவது வலது கையில் அடிபட்டுள்ளதா, அதனால்தான் வேகமாக எழுத முடியவில்லையா என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றை புரிந்து கொண்டாற்போல, சிறுமி தன் வலக்கையைப் பிரித்துக் காட்டினாள். என்ன ஒரு அதிர்ச்சி அனைவருக்கும்! கை முழுவதும் சிவப்பான வரி வரியான கோடுகள் காணப்பட்டன. உள்ளே ஓடும் ரத்தம் அப்படியே தெரியுமளவுக்கு சதைகள் தேய்ந்து காணப்பட்டன.

கை முழுவதும் ஒரே புண்போல் காணப்பட்டது. சின்ன பெண்ணுக்கு ஏன் அப்படியொரு பாதிப்பு ஏற்பட்டது என்பதை அறிய அனைவரும் ஏக்கத்தோடு பார்த்தனர். அவர்கள் குடும்பம் கிராமத்தில் பால்பண்ணை வைத்துள்ளார்களாம். கூட்டுக் குடும்பமாம். அனைவரும் ஆளுக்கொரு வேலை செய்வார்களாம். வீடு வீடாக பால் ஊற்றுவது, பாத்திரங்களை துலக்குவது, மாட்டுக் கொட்டகை சுத்தம் செய்வது என பெண்கள் தங்கள் வேலைகளாக செய்வார்களாம்.

ஆண்கள் மாடுகளை பராமரிப்பார்களாம். தினமும் கிடைக்கும் மாட்டு சாணத்தை இந்த குட்டிப் பெண்தான் ‘விரட்டி’ தட்டுவாளாம். அதாவது சாணத்தை உருட்டி சுவற்றில் சிறிது சிறிதாக தட்டி வைப்பார்களாம். அவை காய்ந்தபின் எடுத்து அடுக்க வேண்டுமாம். பின் விலைக்குக் கேட்பவர்களுக்கு எண்ணித் தருவார்களாம். இந்த ‘விரட்டி’ என்பது அடுப்பு ஊதி சமைத்த காலத்தில்தான் அதிகமாகப் பயன்பட்டிருக்கிறது. குட்டிப் பெண் தினமும் கையில் சாணம் எடுத்து வேலை செய்திருக்கிறாள். அதுவே அவள் கை முழுவதும் ‘புண்’ணாகி சிவந்து எரிச்சலைத் தருவதாக நம்மால் உணரமுடிகிறது. அதனால்தான் சிறுமி எழுதுவதற்கு அப்படி சிரமப்பட்டிருக்கிறாள்.

அதை சொல்லவும் தெரியாமல், அதுதான் காரணமென்றும் தெரியாமல், எழுதுவதிலிருந்து தப்பிக்கவே முயற்சி செய்திருக்கிறாள். தொடர்ச்சியாக ஒரு குழந்தைக்கு பிரச்னை என்றால், தாய், தந்தைக்கு அடுத்து ஆசிரியர் அதனை எளிதாக கண்டுபிடித்து தீர்வு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் உண்மை. வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வது என்பது நல்ல விஷயம்தான். அது நம் உடல் நிலையை பாதிக்கும் அளவுக்கு தேவையா என்று தான் யோசிக்க வேண்டும். அதிலும் படிக்கும் பிள்ளைகளின் வாழ்வு எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதுதான் நம் நோக்கம். அதனால் தான் அரசு படிக்கும் பிள்ளைகளை தொழிற்சாலைகளில் வேலை செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.

சட்டம் இயற்றியுள்ளார்கள்.மேலே குறிப்பிட்ட பெண் தன் வீட்டு வேலையைத்தான் இஷ்டப்பட்டு செய்திருக்கிறாள். அதன் பின் விளைவு அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதால், குறிப்பிட்ட வேலையை அவள் நிறுத்தி விட்டாள். மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வெகு சீக்கிரமாகவே பாடங்கள் எழுதுவதில் அதிவேகமாக செயல்பட்டாள். இதுபோல் எத்தனையோ பிரச்னைகளை காணுமிடம் பள்ளிக் கூடம்தான். வருடங்கள் ஓடினாலும், இத்தகைய நிகழ்வுகள் நம் குடும்ப சம்பவங்கள் போன்றே மனதை விட்டு அழியாதது. இப்படித்தான் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்கிற உறவு முறை காணப்பட்டது.

வீட்டில் சில சமயங்களில் குறும்பு செய்யும் பிள்ளைகளை, பெற்றோர் ஆசிரியரிடம் நன்கு அடித்துக் கண்டியுங்கள் என்பார்கள். ஒரு சிறுவன் உறவுக்காரர் கொடுத்த ஒரு ‘அணா’வில் தாயிடம் சொல்லாமல் மிட்டாய் வாங்கி சாப்பிட்டானாம். தாய் கோபமடைந்து கையில் கிடைத்த குச்சியை அவன் மேல் எறிந்திருக்கிறார். அவன் நெற்றிப் பொட்டில் அடிபட்டு தையல் போடும் நிலை ஏற்பட்டதாம். ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்காக அந்தப் பையன் இரண்டு அடையாளங்கள் குறிப்பிட வேண்டியிருந்தது.

அவன் அத்தகைய ஒரு தழும்பை அடையாளமாகக் குறிப்பிட்டிருந்தான். மனது கஷ்டப்பட்டாலும் அப்படியான சில சம்பவங்களும் அந்தக் காலத்தில் நடந்திருக்கின்றன என்பதை நம்பத்தான் வேண்டியுள்ளது. பிள்ளைகளும் சிரமப்பட்டு படித்திருக்கிறார்கள். பெற்றோரும் மிக கண்டிப்பாக இருந்திருக்கிறார்கள். இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள் விஞ்ஞான யுகத்தைச் சேர்ந்தவர்கள். இயற்கை உணவை உண்டு வாழ்ந்தவர்களுக்கு இருக்கும் உடல் ஆற்றலும், திடகாத்திர தெம்பும் அதற்கடுத்த தலைமுறையில் உள்ளவர்களுக்கு கிடையாது. இப்பொழுது அனைத்திலும் துரிதம் காணப்படுகிறது. துரிதமாக கிளம்பி துரித வண்டியைப்பிடித்து ஓடி துரித உணவையும் உண்டு என்பது வரை அனைத்திலும் வேகம்.

இந்த வேகம் எங்கு போய் முடியும் என்பது கூட நம்மால் கணிக்க முடியவில்லை. இயற்கைக்கே இது தாங்காமல் தானோ என்னவோ இத்தகைய ‘கொரோனா’ வந்து அனைவர் வாழ்க்கையையும் முடக்கியுள்ளது. எவ்வளவோ ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடைபெற்றாலும், பிள்ளைகள் ஆசிரியர் தொடர்பு நேரிடையாக தடைபெற்றதால், மீண்டும் எப்பொழுது பழைய மாதிரி பள்ளிக்குச் செல்வோம், பிள்ளைகளுடன் அரட்டையடிப்போம், மரத்தடியில் கூடுவோம், பேப்பர் பந்து ஆட்டம் தொடங்குவோம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். சிலர் பல்வேறு வகுப்புகளில் சேர்ந்து, தன்னை பழைய நிலைக்கு தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

சில பெற்றோர் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். வகுப்பிற்காக வலைத்தளம் அமைத்துத் தந்தால், வட்டமான ஓட்டைகளுடன் கூடிய ரவாதோசை தான் வேண்டுமென ‘யூட்யூப்’ல் கவனம் செலுத்துகிறார்கள் என ஆதங்கப்படுகிறார். என்ன செய்வது? தேவைகள் அனைத்தும் நாம் பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் எந்த ஒரு பொருளுக்கும் நாம் அடிமையாகக் கூடாது. இதை பிள்ளைகளுக்கும் புரிய வைக்க வேண்டும்.

அவர்கள் போக்கிலேயே விட்டு, நடைமுறை சிக்கல்களை மனம் கோணாதவாறு எடுத்துரைக்க வேண்டும். முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தாலும், நம் மனதை கட்டுப்படுத்தி ஒரு நிலைப்படுத்துவது என்பது நம் ஒவ்வொருவர் கையிலும் தான் இருக்கிறது. அந்தக் காலத்தில் அடி உதை வாங்கிப் படித்த பிள்ளைகள் தன்னைத் திருத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அவை என்பதை தாங்கள் ஒரு குடும்பத் தலைவனாகவும், தலைவியாகவும் ஆன பிறகு சொல்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை சமாளிக்கும் பொழுது, வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். பள்ளித் தாளாளர் ஒருவருக்கு ‘மணி விழா’ ஏற்பாடு செய்திருந்தார்கள். தெரு முழுவதும் அலங்கார பந்தல். ஊரே திரண்டிருந்தது. மேடையில் மணி விழா பெற்றோர் அமர்ந்திருக்க, திடீரென தீப்பொறி பறந்தது போல் இருந்தது. சிறிது நேரத்தில் நெருப்புப் பிழம்பு சூழ, குழந்தைகள் ‘வீல் வீலென்று’ கத்த அனைவரையும் காப்பாற்ற எல்லோரும் தள்ளிக் கொண்டு ஓடினார்கள்.

இன்றும் காதுகளில் ‘ரீங்காரம்’ ஒலிக்கிறது. அலங்காரப் பந்தலில் தீப்பிடித்து தெருவே எரிந்ததை பார்க்க முடிந்தது. இப்படியாக தீ விபத்து தொடங்கி, நாட்டு வெடிகுண்டு புரளி வரை அனைத்தையும் பிள்ளைகளுடன் கண்டு அனுபவிக்கும் ஒரு வாழ்க்கை கற்பிப்பவர்க்கு மட்டுமே அமைய முடியும். ஆண்டில் இரு நூறு நாட்கள் முதல் இருநூற்று இருபது நாட்கள் வரை, அதிலும் குறிப்பாக பகல் பொழுது முழுதும் பிள்ளைகள் பள்ளிகளில்தான் செலவிடுகிறார்கள்.

அனைத்து வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள். பள்ளியின் அடித்தளம் தான் அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்தாலும், வீட்டுச் சூழலும் அவர்களுக்கு தெளிந்த நீரோடையாக தென்பட்டுவிட்டால், எதையும் எதிர்கொண்டு வெற்றிநடை போடுவார்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பாராட்டி, தட்டிக் கொடுத்து ஊக்கமளிக்கும் போது தனக்காக எல்லோரும் இருக்கிறார்கள் என்கிற நல்ல சூழலே அவர்களை நல்வழிப்படுத்த உதவும்.

“எனக்கே களைப்பாக இருக்கிறது… இப்ப வந்து நீ சந்தேகம் கேட்கிறாயே!” என்று கூறிவிட்டால் கேட்க வந்த பிள்ளைகள் மனம் நிராசையாகப் போகும்! கடினமான சூழல்கள் நமக்கு இருந்தாலும், அவ்வப் பொழுது குடும்பத்துடன் கலந்து பேசி சுக துக்கங்களை பகிர்தல் அவசியம். தனி அறை பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டோமே என்றில்லாமல், எல்லோரும் பேசி, சிரித்து அவ்வப்பொழுது குடும்பத்துடன் ஓரிடத்தில் உறங்குவதும் கூட பிள்ளைகள் மனதை லேசாக்கும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழ் தீம்களில் காபி கோப்பைகள்!! (மகளிர் பக்கம்)
Next post ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன? (அவ்வப்போது கிளாமர்)