தமிழ் தீம்களில் காபி கோப்பைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 58 Second

காபி மக்குகள், நோட்டு புத்தகங்கள் போன்ற டிசைனர் ஸ்டேஷனரி பொருட்களைப் பள்ளி மாணவர்களைத் தாண்டி வேலைக்கு செல்லும் இளைஞர்களும் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள். வண்ணமயமான டிசைனர் நோட்டு புத்தகங்களில் கைப்பட எழுதுவதன் மூலம் இவர்களுக்கு ஏதோ இனம்புரியாத புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்காகத் தமிழ் மொழியில் ஸ்டேஷனரி பொருட்களை உருவாக்கி கவனத்தைப் பெற்றுள்ளார் தீபிகா வைஷ்ணவி.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். இங்கேயே பி.காம் முடித்து, டெக்ஸ்டைல் டிசைனிங் படித்தேன். சின்ன வயசில் இருந்தே ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். கல்லூரி படிப்பு முடிந்ததும், சில நாட்கள் ஒரு பொட்டிக்கில் வேலை செய்தேன். எனக்கு கலை மீது எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதே அளவு சுயமாக ஒரு தொழிலைச் செய்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. எனக்கு ஒருவரின் கீழ் வேலை செய்வதில் ஆர்வம் இல்லை.

பி.காம் படித்ததில் ஒரு தொழிலை எப்படி செய்வது என்பதைக் கற்றுக்கொண்டேன். அடுத்து டெக்ஸ்டைல் டிசைனிங் படித்ததால் கலையை எப்படி தொழிலாக மாற்றுவது என்பதை தெரிந்து கொண்டேன். படிப்படியாக என்னுடைய ‘டிராமா டிசைன்ஸ்’ நிறுவனத்தை தொடங்கி, அதில் நானே டிசைன் செய்யும் ஸ்டேஷனரி பொருட்களை விற்கத் தொடங்கினேன்.

பொதுவாகவே இளைஞர்கள் பயன்படுத்தும் காபி கோப்பைகள், நோட் புத்தகங்கள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள் மேற்கத்திய மயமாகத்தான் இருக்கும். ஹாலிவுட் படங்கள், சூப்பர் ஹீரோ பாத்திரங்கள் அல்லது மிஞ்சிப் போனால் பாலிவுட் சாயலில் இந்த பொருட்கள் சந்தையில் கிடைக்கும். ஆனால் எனக்கு நம்ம தமிழ் மக்கள் தினமும் பேசி, நம்மை இணைக்கும் சாயலில் பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக நான் முதலில் தேர்ந்தெடுத்திருப்பது ஆத்திச்சூடி. இதில் இருந்து சில வரிகளை மட்டும் எடுத்து அதை கலர்ஃபுல்லாகவும், மார்டனாகவும் காபி கோப்பைகளில் டிசைன் செய்தேன். தமிழ் கோப்பைகளை வெறும் தமிழர்கள் தான் வாங்குவார்கள் என முதலில் நினைத்தேன். ஆனால் பஞ்சாப், ஷிம்லா போன்ற வட மாநிலங்களிலிருந்தும் தமிழ் தீம் பொருட்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்க வேண்டும் என நான் விரும்புவேன். இந்த சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக்கொள்ள, நமக்கு பிடித்த பொருட்களை பயன்படுத்தலாம்’’ என்றவர் தன் கலைநயத்தில் சந்தையில் விற்பனையாகும் பொருட்களைப் பற்றி விவரித்தார்.
‘‘நான் முதலில் ஆரம்பித்தது டிசைனர் யோகா மேட் விற்பனை தான்.

பொதுவாகவே டிசைனர் பொருட்களின் விலை சந்தையில் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு அதிக விலையில் விற்பதில் ஆர்வம் இல்லை. தரமான பொருளை நியாயமான விலையில் விற்க வேண்டும் என்று நினைத்தேன். யோகா மேட்டில் தரமான பொருட்களைக் குறைந்த விலையில் கொடுப்பது கடினமாக இருந்தது. அதனால் அதை தொடர்ந்து செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் தான் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் பரிசுப்பொருட்கள், ஸ்டேஷனரி பொருட்கள் போன்ற டிசைனர் பொருட்களை உருவாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அதற்கான பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அப்படியே காபி கோப்பைகள், சோபா மெத்தைகள் போன்ற பொருட்களில் கவனம் செலுத்தி வருகின்றேன்.

என்னுடைய பொருட்களை ‘டிராமா டிசைன்ஸ்’ என்ற என் நிறுவன இணையதளத்தில் இருந்தும் வேறு பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இருந்தும் வாங்கிக் கொள்ளலாம். நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்க வேண்டும் என நான் விரும்புவேன். நாம் உடுத்தும் உடை, பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே நம்மை பற்றிய தகவல்களை பரிமாற்றி, பிம்பத்தை உருவாக்குகின்றன. அவை நம்முடைய கதையைக் கூறுகின்றன. உங்களுடைய கதையை, பிம்பத்தை மகிழ்ச்சியானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் மாற்ற நான் உருவாக்கும் பொருட்கள் பயன்படும்.

இந்த நிறுவனம் தொடங்கி ஐந்து வருடமாகிறது. இந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டது விடாமுயற்சியும், நிலைத்தன்மையும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்பதைத்தான். சில சமயம் திடீரென பொருட்கள் விற்பனை ஆகாமல் அப்படியே தேங்கிவிடும். ஆனால் அடுத்த மாதமே மொத்த பொருட்களும் விற்றுத் தீரும். ஒவ்வொரு நாளும் நம்பிக்கையை இழக்காமல் புத்துணர்ச்சியுடன் புதிய முயற்சிகளை செய்து வந்தால், படிப்படியான முன்னேற்றமும் வெற்றியும் நிச்சயம் கிடைக்கும்” என்கிறார் தீபிகா.

தீபிகா இப்போது பல நிறுவனங்களுக்கு, ஊழியர்களுக்குக் கொடுக்கும் டைரி, நோட்டு புத்தகங்கள், ஸ்டேஷனரி பரிசு பொருட்களை மொத்தமாகப் பெரிய ஆர்டர்களாக வாங்கி தன்னுடைய டிசைனில் உருவாக்கி கொடுக்கிறார். எதிர்காலத்தில் இன்னும் பல தமிழ் சார்ந்த பொருட்களையும், அயல்நாட்டின் தாக்கம் இல்லாமல் உள்ளூரில் மக்கள் விரும்பக்கூடிய தீம்களில் பல பொருட்களை உருவாக்க வேண்டும் எனும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்!! (மருத்துவம்)
Next post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)