ஆளுமைப் பெண்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 44 Second

ஆடை வடிவமைப்பாளர் ராஜி பாற்றர்சன்

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்ற Alliance Creative Community Project (UNECOSOC)  என அழைக்கப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பெண்களுக்கான பிரிவில் பணிப்பாளராக கடமையாற்றுவதோடு, அந்நிறுவனத்தின் ஐக்கிய நாடு சபைக்கான ஜெனீவா மற்றும் நியூயார்க் அலுவலகத்திற்குரிய சர்வதேச பணியின் தலைவராகவும் பணியாற்றுகிறார் ராஜி பாற்றர்சன். கனடாவில் ஆடை வடிவமைப்பாளராக பல வடிவமைப்பாளர்களோடு இணைந்து பணியாற்றும் இவர் ஆளுமைப் பண்புகள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘நான் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தை சொந்த இடமாக கொண்டவள். தமிழ் ஈழத்தில் தமிழ் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தினாலேயே பல தமிழர்கள் பட்ட இன்னல்களை நானும் அனுபவித்தேன்.  இடப்பெயர்வுகள் மட்டுமல்ல அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே எனது இளமைக்கால கல்வியை குப்பி விளக்கிலும், நிலா வெளிச்சத்திலும் தொடர்ந்தேன். பத்து வயதில் கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தூரத்தை நடந்தும் மிதிவண்டியிலும் சென்றே கல்வியை தொடர வேண்டி இருந்தது. எமது மாவட்டம் இலங்கையிலேயே மிகவும் பின்தங்கிய ஒரு மாவட்டமாக இருந்தது.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமாகையால் விமானக்குண்டு வீச்சுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் அச்சத்துடன் பாடசாலை சென்ற நாட்கள் அவை. அந்த சமயத்தில் பதுங்கு குழிக்குள் அடைக்கலம் புகுந்துள்ளோம். பொருளாதாரத்தடை காரணமாக உணவுக்கே போராடவேண்டிய நிலை இருந்தது. அரசு போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்த காலம். அப்படியான ஒரு கடினமான காலத்தில் தான் நான் வாழ்ந்தேன்.

பதின்மூன்று வயது நிறைவடைந்த நேரம். ஒருநாள் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தோம். இலங்கை ராணுவத்தின் விமானம் ஒன்று எமது பாடசாலை மீது குண்டு மழை பொழிந்தது. எமது வகுப்பறையின் மீது விமானக்குண்டு விழுந்து வகுப்பறை தரைமட்டமாக நாங்க அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். இதற்கு முன்பு பல தடவை எமது பாடசாலை வளாகத்தில் விமானக்குண்டுகள் விழுந்து வெடித்திருந்தாலும் அன்றைய அந்த சம்பவம் என் பெற்றோர்களுக்கு  மிகவும் அச்சமூட்ட, எனது பாடசாலைக்கல்வி பத்தாம் வகுப்புடன் நிறுத்தப்பட என்னுடைய பாதை முற்றிலும் மாறிப்போனது.

ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு படிப்பு இன்மையால் வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். சிறிய வயதில் இருந்தே படித்து எதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த எனக்கு எல்லாமே ஏமாற்றமாக  அமைந்தது. சிறு வயதில் இருந்தே வாசிப்புப்பழக்கத்தை கொண்ட நான் எங்கள் கிராமத்தில் இருந்த சிறிய நூலகத்தில் நேரத்தை கழிக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில்தான் “உன்னால் முடியும்”போன்ற உந்துசக்தி கொடுக்கக்கூடிய புத்தகங்களை படித்த போது, ஏன் என்னால் முன்னேற முடியாது என்னும் கேள்வி எனக்குள் எழுந்தது. அந்த மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஏங்கினேன்.

அவ்வேளையில் எனது உணர்வுகளை புரிந்துகொண்டு என் தங்கை என்னை ஊக்குவித்தாள். பத்தாவது வரை மட்டுமே படித்துவிட்டு, ஏழு ஆண்டுகள் கழித்து தேசிய அளவில் நடைபெறும் சாதாரணதரப் பரீட்சையில் என்னால் தேர்ச்சி பெற முடியுமான்னு நினைக்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. என் தங்கைதான் என்னை ஊக்குவித்து இந்தத் தேர்விலும் அதனைத் தொடர்ந்து உயர் கல்வி தேர்விலும் தேர்ச்சி பெற உதவியாக இருந்தாள்.

வெற்றி பெற்ற கையோடு ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் தயங்கிய போது, அந்த சமயமும் எனக்கு தோள் கொடுத்தது என் தங்கைதான். ‘அக்கா நீ டீச்சரா வந்தா எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கும் தெரியுமா?’ என்ற என் தங்கையின் இந்த வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் பாடசாலை சென்ற முதல் நாள் உயிரினும் மேலான, எனது முன்னேற்றத்துக்கு காரணமான என் ஒரே தங்கையை பார்த்த இறுதி நாளும் அது தான். அவளின் இறப்பு எனக்கு பேரிடியாக இருந்தாலும், அவளுக்காகவே பின்தங்கிய எங்க கிராமத்தில் இருந்து ஒரு ஆங்கில ஆசிரியராக உருவானேன்” என்றவர் தன் வாழ்க்கை இணையினை சந்தித்த தருணங்களை பகிர்ந்து கொண்டார்.

“கிளிநொச்சியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச ஆங்கில பாடசாலையில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது சமாதான பேச்சுவார்த்தை காலம். பல்லாயிரக்கணக்கான உயிர்களை சுனாமி அலைகள் பறித்துக்கொண்டதுடன், எமது தாயகத்தையும் அலங்கோலமாக்கி விட்டு சென்றிருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் கனடாவில் இருந்து மனிதாபிமான பணிகளுக்காக எனது கணவர் கிளிநொச்சிக்கு வந்திருந்தார்.

இருவருக்கும் மனம் ஒத்துப்ேபாக திருமணம் செய்து கொண்ேடாம். பதினைந்து வருட திருமண வாழ்க்கையில் எங்களுக்கு அழகான மூன்று பெண் குழந்தைகள் உள்ளார்கள். 2010 இறுதியில் நாங்க குடும்பத்துடன் கனடாவுக்கு  குடிபெயர்ந்தோம். எனது மூன்றாவது குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும் ஃபேஷன் குறித்து டிப்ளமோ பயின்றேன். அங்கு ஒரு பட்டம் பெற வேண்டும் என்ற என் ஆசையும் நிறைவேறியது.

கனடாவில் ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்ற கனவுடனேயே கால் பதித்தேன். தையல் கலையும் கற்றதால், என் கணவர் “Pattern Making” குறித்த நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஊக்குவித்தார். ஆரம்பத்தில்  கடினமானதாக இருந்தது. நான் ஒவ்வொரு கடைகளுக்கு ேபாகும் போது, அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் உடைகள் எல்லாம் எப்படி டிசைன் செய்து இருக்காங்கன்னு பார்ப்பேன். அதை அப்படியே வீட்டில் வந்து தைத்துப் பார்ப்பேன். பெண்களுக்கான ஆடைகள் தான் என்னுடைய முதல் டார்கெட்டாக இருந்தது.

அந்த சமயத்தில் ஒரு இசைக்குழுவினர் அவர்களின் நிகழ்ச்சிக்கான ஆடையினை வடிவமைக்க கேட்டனர். முதன் முதலில் ஆண்களுக்காக உடை வடிவமைத்தேன். நல்ல பெயர் கிடைத்தது மட்டுமில்லாமல் என்னால் எல்லாருக்கும் உடை வடிவமைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. அதனை தொடர்ந்து ‘BomberJacket’, ‘blazers’ உட்பட மேற்கத்திய திருமண ஆடைகள், நீச்சலுடைகள், மாலை விருந்து உடைகள், காற்சட்டைகள், கிளப் ஆடைகள் மற்றும் வெளிப்புற ஆடைகள் என பட்டியலிடலாம். அதில் Adele’ tribute’ பாடகருக்கு ஆடை வடிவமைத்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது” என்றவர் தன் எதிர்கால லட்சியம் பற்றி தெரிவித்தார்.

‘‘எனக்கு சிறு வயதில் இருந்தே சமூகப்பணிகளில் ஆர்வம் அதிகம். அன்றிலிருந்து இன்று வரை பெண்களின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த பங்களிப்பினை செய்து வருகிறேன். எதிர்காலத்தில் பெண்கள் தமது சொந்தக்காலில் நிற்க அவர்களை ஊக்குவிப்பதோடு, வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களை பொருளாதாரத்தில் வளரக்கூடிய வகையில் வழிகளை உருவாக்குவதே எதிர்கால கனவாக உள்ளது. வறுமை இம்மண்ணை விட்டு அகல வேண்டும். ஒவ்வொரு  கிராமமும் பொருளாதாரத்தில் முன்னேறினால் நமது நாடு முன்னேறும் என்பது என்னுடைய நம்பிக்கை” என்றார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், “ஒரு பெண் குடும்பம் என்ற பந்தத்திற்குள் நுழைந்துவிட்டால், தனது கனவுகளை தொலைத்துவிடவேண்டும் என்றில்லை. குழந்தை வளர்ப்பில் முழு நேரத்தை செலவிட்டாலும், குழந்தை பாடசாலை செல்லும் பருவத்தில் நமது கனவுகளை மீண்டும் தொடரலாம். பகுதி நேர கல்வி, வேலை மற்றும் சுயதொழில் என நமக்கு பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து சாதிக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் கல்வியை மட்டும் கை விடாதீர்கள். தேடலும் கல்வியும் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது.  முயன்றால் முடியாதது என்று ஒன்றில்லை. எண்ணங்களை சீர்படுத்தினால் சுதந்திர வானில் நிச்சயமாக சிறகடித்து பறக்கலாம்” என்றார் உற்சாகமாக ராஜி பாற்றர்சன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைக்கு மாந்தமா! கருவேப்பிலை இருக்கு கவலையை விடுங்க!! (மருத்துவம்)
Next post நெயில் ஆர்ட்!! (மகளிர் பக்கம்)