பஸ்சில் ஏறுங்க… ஷாப்பிங் செய்யுங்க! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 13 Second

உடைகளை கைகளால் தொட்டுப் பார்த்து வாங்கினால் தான் ஒரு சிலருக்கு திருப்தியாக இருக்கும். ஆனால் கோவிட் காலம் எல்லாரையும் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாற்றியது. ஆன்லைன் பொறுத்தவரை புகைப்படத்தில் இருக்கும் நிறம் வேறாகவும், நாம் ஆர்டர் செய்த பின் நம் கையில் கிடைக்கும் உடையின் நிறம் வேறாகவும் இருக்கும். இது ஒரு வித அதிருப்தியை கொடுத்தாலும், மக்கள் இப்போதும் அதிக கூட்ட நெரிசலில் செல்வதை விரும்புவதில்லை. இவர்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்டதுதான் பிக் பிக் (PIKBIG) பேருந்து. என்னது பேருந்தில் ஷாப்பிங்கா?!

‘‘ஆமாம்…. உங்களுக்கு தேவையான உடைகள் அனைத்தையும் சுமந்து கொண்டு எங்க பேருந்து நீங்கள் இருக்கும் இடத்திற்கு வரும். உங்கள் விருப்பம் போல் ஷாப்பிங் செய்யலாம்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த கார்த்திக்.

‘‘என்னுடைய சொந்த ஊர் நாகர்கோயில். எம்.பி.ஏ படிச்சிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்தேன். ஆனால் எனக்கு அந்த துறையில் வேலைப் பார்க்க விருப்பமில்லை. அதனால் சொந்தமா தொழில் செய்யலாம்ன்னு ஈ-காமர்ஸ் துறையை தேர்வு செய்தேன். அந்த சமயத்தில் என் தந்தை தவறியதால், என்னால் ஆரம்பித்த தொழிலில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. அப்பா பார்த்துக் கொண்ட தொழிலை நான் பார்க்க ஆரம்பித்தேன். அதில் வந்த வருமானத்தைக் கொண்டு வேறு தொழில் செய்ய விரும்பினேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே விவசாயம் மற்றும் ஃபேஷன் துறைகள் மேல் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது.

அதனால் முதலில் விவசாயத்தில் என்னை ஈடுபடுத்த ஆரம்பித்தேன். விவசாயம் என்றால், வயல் வெளியில் நெல் பயிரிடுவதில்லை. நர்சரி போன்ற அமைப்பு. இங்கு பூச்சடி மட்டுமில்லாமல் காய்கறி, பழங்கள் மற்றும் தோட்டம் அமைக்க விதைகள் எல்லாம் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். சிலரிடம் நிலம் இருக்கும் அதில் தோட்டம் அமைத்து தரச் சொல்லி கேட்பாங்க. அவங்களின் விருப்பத்திற்கு ஏற்ற பூச்செடிகள் மற்றும் பழ மரங்கள், தென்னந்தோப்பு போன்றவற்றை அமைத்து தருவேன். சிலர் தங்களின் வீட்டைச்சுற்றி புல்வெளியினை அமைத்து தரச்சொல்வார்கள். அதுவும் செய்து தருகிறேன்’’ என்றவர் நான்கு வருடம் முன்புதான் இந்த துணிக்கடையினை துவங்கியுள்ளார்.

‘‘விவசாயம் எப்படி என்னுடைய விருப்பமோ அதே போல்தான் ஃபேஷனும். இதற்காக நான் தனிப்பட்ட முறையில் எல்லாம் படிக்கல. எல்லாம் அனுபவம் மூலமாக தான் தெரிந்து கொண்டேன். சாதாரணமாகவே எனக்கு கலரிங் காம்பினேஷன் குறித்த அடிப்படை விஷயங்கள் தெரியும். அதன் பிறகு துணிகளின் தரம் மற்றும் அதன் தன்மை பற்றியும் தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் தான் நாகர்கோயில் மற்றும் சென்னையில் எங்களின் துணிக்கடையான பிக் பிக் (PIKBIG) இயங்க ஆரம்பித்தது. இங்கு குறிப்பிட்ட டிசைன்கள் மட்டும் தான் இருக்கும். காரணம் அனைத்து டிசைன்களும் நாங்க ரொம்பவே பார்த்து பார்த்து தேர்வு செய்கிறோம்.

இதற்காக எனக்கு தனிப்பட்ட ஃபேஷன் குழுவினர் இருக்காங்க. அவங்க தில்லி, மும்பை, காஞ்சிபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத், பூனா, சூரத் போன்ற இடங்களுக்கு சென்று வாங்கி வருவார்கள். அதில் இருந்து நான் தேர்வு செய்வேன். மேலும் ஒரு டிசைன் என்றால் அதில் அனைத்து சைஸ்களிலும் இருக்கும். முதலில் ஆரம்பித்த போது ஆன்லைன் கடையாகத்தான் ஆரம்பித்தோம். பொதுவாக ஆன்லைன் உடைகள் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் இருப்பது போல் இருக்காது. ஆனால் எங்களின் உடைகள் புகைப்படத்தில் என்ன பார்க்கிறீர்களோ அதே போலதான் நேரிலும் இருக்கும். ஆன்லைனில் வாங்கியவர்கள் நேரிலும் வாங்க விரும்பியதால் தான் இந்த கடையினை துவங்கினோம். சென்னை மட்டுமில்லாமல் நாகர்கோவிலிலும் எங்களின் கடை இருக்கு. என்னுடைய கடையின் அடுத்த கட்டம்தான் பஸ் ஐடியா.

இந்த திட்டத்தைப் பற்றி வீட்டில் சொன்ன போது, எல்லாருமே அது சரியா வராதுன்னுதான் சொன்னாங்க. நான் தான் பிடிவாதமா பஸ்சில் ஒரு துணிக்கடை கான்செப்ட்டினை கொண்டு வர நினைச்சேன். இதற்காக தனியாக சேமிக்க ஆரம்பித்து, இதனை அமைத்தேன். இந்த திட்டம் நான் கடையினை துவங்கும் போதே இருந்தது. ஆனால் கோவிட் பாதிப்பு ஏற்பட்ட போது தான் இந்த திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த விரும்பினேன். காரணம் அந்த சமயத்தில் நிறைய பேர் கூட்டத்தில் செல்ல தயங்கினாங்க.

அவர்களின் வீட்டிற்கே துணிக்கடையினை கொண்டு செல்ல விரும்பினேன். அதற்காகவே இந்த பஸ்சினை அமைத்தேன். ஆனால் கோவிட் காலத்தில் என்னால் இதனை முழுமையாக அமைக்க முடியவில்லை. விவசாயத்தில் வரும் வருமானத்தை கொண்டுதான் இந்த பஸ்சினை உருவாக்க ஆரம்பித்தேன். பணம் கிடைக்க கிடைக்க கொஞ்சம் கொஞ்சமாக பஸ்சை தயார் செய்ததால், நான் நினைத்த நேரத்தில் முழுமையாக முடிக்க முடியவில்லை. ஆனால் பஸ் அமைத்த பிறகு அதைப் பார்த்து நிறைய பேர் கடைக்கும் வர ஆரம்பிச்சாங்க’’ என்றவர் பஸ்சின் செயல்பாட்டினைப் பற்றி விவரித்தார்.

‘‘பஸ்சைப் பொறுத்தவரை அது நிறுத்த கொஞ்சம் வசதியாகவும் பெரிய இடம் வேண்டும். டிராபிக் நிறைந்த தெருவில் நிறுத்த முடியாது. பெண்கள் உடைகளை அணிந்து பார்த்து தான் தேர்வு செய்வார்கள். அதனால் பஸ் குறைந்தபட்சம் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் ஒரு மணி நேரமாவது நிற்க வேண்டும். அப்போது தான் டென்ஷன் இல்லாமல் ஷாப்பிங் செய்ய முடியும். ஆரம்பத்தில் நிறுத்த இடம் வேண்டும் என்பதால், பெரிய பங்களா மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தோம். அதன் பிறகு நடுத்தர வர்க்க மக்களும் தங்களின் குடியிருப்பில் பஸ்சினை கேட்க ஆரம்பிச்சாங்க. இப்போது பல அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கேட்டெட் கம்யூனிட்டிகளுக்கும் எங்க பஸ் போகிறது.

எங்களுக்கான உடைகளை டிசைனர்கள் தேர்வு செய்தாலும், அதில் 20% நாங்களே வடிவமைக்கவும் செய்கிறோம். கூடிய விரைவில் எங்களின் தனிப்பட்ட பிராண்ட் பெயரில் உடைகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம். மேலும் இந்தியா முழுக்க சென்று வாங்குவதால், பலவித டிசைன்களில் உடைகளை கொடுக்க முடிகிறது. சொல்லப்போனால் தற்போது எங்களிடம் 300க்கும் மேற்பட்ட டிசைன்களில் உடைகள் உள்ளன. பஸ்சைப் பொறுத்தவரை ஒரு கஸ்டமர் வேண்டும் என்று கேட்டாலும் அவர்களின் இல்லத்திற்கு எடுத்து செல்கிறோம்.

எங்களிடம் இப்போது ஒரு பஸ்தான் இருப்பதால், அப்பாயின்ட்மென்ட் முறையில் மட்டுமே எடுத்து செல்ல முடிகிறது. சென்னை முழுக்கவே நாங்க செல்வதற்கு குறைந்தபட்சம் மூன்று பஸ்களாவது அவசியம். அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு முழுக்க எங்களின் பஸ் இயங்கும்’’ என்றார் கார்த்திக்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சட்டங்கள் அறிவாய் பெண்ணே! (மகளிர் பக்கம்)
Next post தாய்மை வரம் தரும் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை!! (மருத்துவம்)