தாய்மை வரம் தரும் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 21 Second

பெண்களில் சிலருக்கு ஹார்மோன் பிரச்னை காரணமாக அல்லது கருமுட்டை உருவாவதில் சிக்கல், ஆண்களின் குறைபாடு, கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையைத் தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது கண்டுபிடித்துள்ள நவீன மருத்துவத்தின் மூலம், இதயம், கல்லீரம், சிறுநீரகம் போன்றவற்றை உறுப்பு மாற்று செய்வதைப் போன்று, மாற்று கர்ப்பப்பையை பொருத்தி, அவரை கருவுறச் செய்து தாய்மையை உணர செய்ய முடியும் என்கிறார் தலைமை மகப்பேறு மருத்துவரான பத்மபிரியா. இது குறித்து அவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

“பொதுவாக உலகில் ஐந்தாயிரத்தில் ஒரு பெண் கர்ப்பப்பை இல்லாமல் பிறக்கிறார். ஆனால், அவருக்கு சினைப்பை நன்றாக இருக்கும். ஒரு பெண் கருத்தரிக்க இந்த சினைப்பையில் இருந்துதான் கருமுட்டை உருவாகும். பொதுவாக, கர்ப்பப்பை இருந்தும், ஏதோ காரணத்தினால் கருத்தரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்ணுக்கு அவரது சினைப்பையில் உருவாகும் கருமுட்டையை எடுத்து ஐவிஎப் முறையில் கருத்தரிக்கச் செய்ய முடியும்.

ஆனால், பிறப்பிலேயே கருப்பையே இல்லாமல் பிறந்திருந்தாலோ அல்லது கருப்பை சரியாக வளர்ச்சி அடையாமல், பயனற்ற நிலையில் இருந்தாலோ அல்லது புற்றுநோய் காரணமாக கருப்பை நீக்கப்பட்டிருந்தாலோ அந்த பெண்ணுக்குக் குழந்தைப்பேறு என்பது சாத்தியமில்லாத ஒன்று. இந்நிலையில் இருப்பவர்களுக்கு இதயம், கல்லீரம், சிறுநீரகம் போன்றவற்றை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்வது போன்று, கர்ப்பப்பையை அந்தப் பெண்ணின் தாயிடம் இருந்தோ அல்லது அவரது ரத்த சொந்தங்களில் யாரிடமிருந்தாவதோ தானமாகப் பெற்று அறுவைசிகிச்சை மூலம் அவரது உடலில் பொருத்துவோம். இதுதான் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை. இவ்வாறு அறுவைசிகிச்சை மூலம் கர்ப்பப்பையைப் பெற்றபின் அவரால் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெற்று எடுக்க முடியும்.

இது யாருக்குகெல்லாம் பொருந்தும் என்றால், சிகிச்சை செய்து கொள்ள விரும்புபவர் திருமணமானவராக இருக்க வேண்டும். 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எந்தவித நோயின் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். அதுபோன்று கருப்பை தானம் செய்பவரும் திருமணமாகி குழந்தை பேறு எல்லாம் முடிந்த நிலையில் இருக்க வேண்டும். தானம் பெறுபவருக்கு தாய், அக்கா, சித்தி, அத்தை என ரத்த சொந்தமாக இருக்க வேண்டும். இவர், 35- 60 க்குள் இருக்க வேண்டும். இவரும் எந்தவித நோய் தாக்குதலும் இல்லாமல் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான், கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியும்.

ஏன் இந்த கருப்பை மாற்று என்று கேட்டால், செயற்கை முறையில் கருத்தரிப்பதோ அல்லது வாடகைத் தாய் மூலமோ குழந்தைப் பெற்றுக் கொள்வதைவிட, அந்தப் பெண் மாற்று கருப்பை மூலம் தானே சொந்தமாக கருத்தரித்து தாய்மை அடைய முடியும். இதன் மூலம், தன்னால் குழந்தையை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற பெரிய மன அழுத்தத்திலிருந்து அவர் விடுபடுகிறார். மேலும், இந்த அறுவைசிகிச்சை குழந்தை பிறப்பிற்காக மட்டுமே செய்யப்படுகிறது. குழந்தையற்ற ஒரு தம்பதிக்கு அவரது தலைமுறையை உருவாக்கும் வரம்தான் இந்த கருப்பை மாற்று அறுவைசிகிச்சை.

இதுவரை உலகளவில் 96 கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சைகள்தான் செய்யப்பட்டிருக்கின்றன. 2013 -இல் ஸ்வீடன் நாட்டில்தான் முதல் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதுவரை 5 முதல் 6 நாடுகளில்தான் இந்த கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்திருக்கிறார்கள். இந்தியாவைப் பொருத்தவரை, புனேயில்தான் முதல் அறுவைசிகிச்சை நடைபெற்றது. அதன்பின் இப்போது இரண்டாவதாக நமது தென்னிந்தியாவில் முதல்முறையாக நாங்கள்தான் இந்த அறுவைசிகிச்சை நடத்தியுள்ளோம். இதுவரை, உலகளவில் நடந்துள்ள 96 அறுவை
சிகிச்சைகளில் 49 குழந்தைகள் பிறந்துள்ளன. இன்னும் 15 – 20 பேர் கர்ப்பமாக இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள், வாடகைத் தாய் முறையைத்தான் நாடுவார்கள். ஆனால், தற்போது வாடகைத் தாய் முறைக்கு பல சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால், பலரும் இந்த கருப்பை மாற்று அறுவைசிகிச்சையை நாடத் தொடங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கருப்பை இல்லாமல் பிறந்த இரண்டு பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். இவர்கள் இருவருக்குமே அவரவர் தாய்தான் கருப்பையை தானமாக வழங்கியுள்ளனர். சுமார் 16 மணி நேரம் இந்த அறுவைசிகிச்சை நடைபெற்றது. தற்போது தானம் பெற்றவர்களும், கொடுத்தவர்களும் நலமாக உள்ளனர்.

இந்த மாற்று கருப்பை மூலம், கருத்தரித்தவர்கள் சிசேரியன் மூலம் மட்டும்தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இவர்களால் நார்மல் டெலிவரி செய்ய முடியாது. அதுபோன்று தானமாக பெற்ற கருப்பை 5 ஆண்டு காலம் வரைதான் செயல்பாட்டில் இருக்கும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சம் செயலிழந்து கெட்டுப்போய்விடும். எனவே, அந்தக் கருப்பையை அவரது உடலில் இருந்து நீக்கிவிடுவோம். இந்த 5 ஆண்டுகாலத்திற்குள், அந்தப் பெண் இரண்டு குழந்தை வரை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த அறுவைசிகிச்சையைப் பொருத்தவரை, பெறுபவர் மற்றும் வழங்குபவர் இருவரின் ரத்தக் குழாயை எடுத்து இணைக்கப்படும் என்பதால், நன்கு பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவரின் உதவியுடன் மட்டும்தான் இந்த அறுவைசிகிச்சைச் செய்ய முடியும். அந்த வகையில், தற்போது, இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சையை கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் தலைமை மருத்துவரான ஜாய் வர்கீஸ் துணையுடன் ஒரு பெரிய மருத்துவ குழுவே சேர்ந்துதான் முதன் முறையாக நமது தென்னிந்தியாவில் செய்திருக்கிறோம். இது நம்பிக்கை தரும் அறுவை சிகிச்சை. குழந்தை வரம் வேண்டி ஏங்கும் தம்பதியர் பலருக்கும் கிடைத்த வரபிரசாதமாகும்” என்றார்.

தலைமை கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மருத்துவர் ஜாய் வர்கீஸ் இது குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:“பொதுவாக கருப்பை மாற்று அறுவைசிகிச்சை என்னும்போது, என்னதான் அவரது தாயின் கர்ப்பப்பையே பொருத்தியிருந்தாலும், அது அவரது சொந்த கர்ப்பப்பை இல்லை அல்லவா? அதனால், உடல் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளாது. வாடகையிருப்பது போன்றுதான் உணரும்.

எனவே, அதை வேலை செய்ய வைப்பதற்காக, இவர்களுக்கு கர்ப்பப்பைப் பொருத்தியதிலிருந்து இம்முனோ சப்ரசண்டல் (Immuno suppresantal) என்ற மருந்தைச் செலுத்தி அவரது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து வைத்திருப்போம். அவர் கருத்தரித்த பின்னர், அவரை கூடுதல் கண்காணிப்பில் வைத்து கவனித்து வருவோம். ஏனென்றால், நார்மலாக கருத்தரிப்பவர்களே கர்ப்பக் காலத்தில் பலவிதப் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். எனவே, இவர்களை கூடுதலான கண்காணிப்பு கொடுப்போம். ஒன்பதாவது மாதத்தில் குழந்தையை சிசேரியன் மூலம் டெலிவரி செய்து விடுவோம்.

தற்போது நாங்கள் இங்கே தமிழகத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கும், ஆந்திராவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவருக்கும் இந்த அறுவைச் சிகிச்சை செய்து முடித்துள்ளோம். இது மிகவும் சவாலான அறுவைசிகிச்சையாகும். ஏனென்றால், பொதுவாக எல்லாருக்கும் இந்த அறுவைச் சிகி்ச்சை செய்து விட முடியாது. அதுபோன்று எல்லாருடைய உறுப்பையும் மாற்றிவிட முடியாது. பெறுபவர், கொடுப்பவர் இருவருக்கும் உடல்வாகு ஒன்றாக பொருந்திவர வேண்டும்., அப்போதுதான் பெற்ற தாயாக இருந்தாலும் அவரது கருப்பையைக் கொடுக்க முடியும்.
இதில் நாங்கள் சந்தித்த பெரிய சவால் என்னவென்றால் அறுவைசிகிச்சை செய்து கொண்ட இரு பெண்களில் ஒருவருக்கு சிறு பொருந்தாமையும் இருந்தது.

ஆனால் அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். எனவே, இவருக்கு பிளாஸ்மா மாற்றம் என்ற டெக்னீக்கைப் பொருத்தி பின்னர், அறுவைசிகிச்சையை மேற்கொண்டோம். இதுவரை உலக அளவில் நடைபெற்ற 96 கருப்பை மாற்று அறுவைசிகிச்சையில் இதுதான் முதல் முறையாக பிளாஸ்மா எக்ஸ்சேஞ்ச் செய்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சையாகும். இவரும் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார்.

இந்த அறுவைசிகிச்சை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு நிறைய வர வேண்டும். என்னைப் பொருத்தவரை, அதற்கு முதலில் அந்த அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு இந்த துறை சார்ந்த மருத்துவர்களுக்கு வரவேண்டும். அப்போதுதான், அவர்களால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இப்போது இது புதுமையான, சவாலான அறுவைசிகிச்சையாக இருந்தாலும், இன்னும் சில காலங்களில் பரவலாக வந்துவிடும் என்பது என் கருத்து.

உதாரணமாக, ஆரம்பத்தில், இதய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இப்படிதான் புதுமையாக பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதுபோன்று எந்த மாற்று அறுவை சிகிச்சையும் நாளடைவில் சாதாரணமாகிவிடும். இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவரின் உதவியுடன் தற்போது இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பஸ்சில் ஏறுங்க… ஷாப்பிங் செய்யுங்க! (மகளிர் பக்கம்)
Next post வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்! (மருத்துவம்)